தமிழ் முரசு மூன்றாம் ஆண்டு நிறைவினை ஒட்டி‏- யசோதா

.
புதினத்துளிகளாலான கலைப்பண்பாடு
எழுத்தும் படமும்: யசோதா.பத்மநாதன்

காந்த அலைகளில் நிலைபெறும் புதிய வாழ்வியல்


சமய அனுபவம், கலை அனுபவம் என்னும் இரண்டும் ஒரே அனுபவத்திற்கு இடப்பட்ட இரு பெயர்களாகும்” என்றார் கலாயோகி. ஆனந்தகுமாரசாமி.( Dance of Shiva – p35 – 36)

கலையும் கைத்தொழிலும் எல்லா தேசங்களிலும் அவ் அவ் நாடுகளிற்குரிய சிறப்பியல்புகளோடு திகழ்வன. அக் காலத்தில் நம் தேசத்தில் எப்பொருளும் காட்சிப்பொருளாகச் செய்யப்பட்டதன்று. எல்லாப் பொருள்களும் தினசரி வாழ்க்கையில் உபயோகிக்கவே செய்யப்பட்டன. ஒவ்வொரு பொருளிலும் உபயோகத்தன்மையும் அழகும் ஒன்றுபட்டு விளங்கின. கைவினைஞர்கள் ஒழுக்கமான வாழ்க்கையாலும் சிற்பநூல் புலமையாலும் சமயப்பற்றினாலும் பண்படுத்தப்பட்ட தமது உள்ளங்களில் தாம் எழுதிக் கண்ட அழகு பொருந்திய உருவங்களையே வெளிப்பொருள்களில் அமைத்து மகிழ்ந்தனர். அக்கால கைவினைஞர் தாம் அமைக்கும் வடிவங்களுடன் தம்மை ஒன்றுபடுத்தி நின்றே அவற்றைத் திறம்பட அமைத்தனர் என்பது கலைக்கண் கொண்டு அப் பொருள்களைக் கண்ணுறுவோருக்கு நன்கு புலனாகும்.

கலைப்பண்பு என்பது வெறும் கை சாதுரியத்தினாலும் தொழிற்பயிற்சியாலும் மாத்திரம் ஏற்படுவதன்று. உள்ள மலர்ச்சியின் பயனாய் ஏற்படும் நிலையே கலைப்பண்பாகும். அந் நிலை ஆண்மீகத் தன்மை பொருந்தியது. ஐம்புல இன்பநிலைக்கு அப்பாற்பட்டது. சடத்துவம் எதுவும் இல்லாதது. மாறாக, சடப்பொருட்கள் மூலம் பிரகாசிக்கும் ஆத்மீக இன்பநிலை கலைப்பண்பாகும்.

இக்காரணம் பற்றியே கலைஞன் தியானத்திலும் ஒழுக்க நெறியிலும் தேர்ச்சியடைந்தவனாய் இருக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது. சிறந்த கல்வியும் நற்குணமும் ஒழுக்கவாழ்வும் சாந்தமுடைய மனநிலையும் பொருந்திய ஒருவனே கலைப்பண்பு நிறைந்த ஆற்றலுடயவனாய் விளங்குதல் கூடும். கலையின்பத்தை கலைஞன் தான் அனுபவித்தாலன்றி அதனைப் புறவெளிகளில் விளங்கும் விதத்தில் வெளிப்படுத்த இயலாது. இயந்திரங்கள் மூலம் கலைப்பொருட்களை அமைத்தல் இயலாத காரியம் என அறிஞர் கூறுவதும் இக்காரணம் பற்றியேயாகும்.

எல்லாக் கலையும் தொழிலும் சீவனோபாயத்தை மாத்திரமே நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்னும் கருத்து கலை வளர்ச்சிக்கு இடையூறான மனநிலையாகும். ஆண்மீக இயல்புகளின் பூரணத்துவமே வாழ்க்கையின் முக்கிய நோக்கமென்றும்; தொழில்கள் யாவும் அந் நோக்கத்திற்கு முரண்படாத முறையில் அமைதல் வேண்டும் என்றும்; கொள்ளும் கருத்து நிலைத்தல் வேண்டும். இத்தகைய ஒரு கருத்து சிறந்து விளங்கிய ஒரு காலத்தில் தான் நாம் இன்று காணும் கலைப்பொருட்கள் யாவும் இலங்கையிலும் இந்தியாவிலும் அமைக்கப்பட்டன. ( கலையும் கைத்தொழிலும்; க. நவரத்தினம் 1954)

இந்த அடிப்படையில் இந்தியக்கலையையும் ஐரோப்பியக் கலைகளையும் உற்று நோக்கினால் ‘ஐரோப்பியக் கலையானது இறகுகள் கத்தரிக்கப் பெற்ற பட்சியைப் போல மேலெழாது நிலப்பரப்பிலுள்ள அழகினை மாத்திரமே அறிகிறது. கீழைத்தேயக் கலையோவெனில் பிரபஞ்சாதீத உச்சியுட் புகுந்து மனம் வாக்கிற்கெட்டாத உண்மைப் பொருளின் அழகை நிலவுலகிற்கு இழுக்கப் பிரயத்தனப்படுகிறது’ என்றார் ஹெவல் என்பார். (Indian Sculpture & painting – p; 8 – 9 )

இந்த ஒப்பீட்டை ஆங்கிலக் கலைப்புலவர் ஒருவர் கீழ் வருமாறு விபரிக்கிறார். ’நான் கீழைத்தேசத்தில் இருபத்தைந்து வருட காலம் தங்கி இருந்து இந்திய, சிங்கள, சீன, கம்போடிய, சீய, ஜப்பானிய, ஜாவானிய கலைகளைத் தொடர்ந்து ஆராய்ந்ததன் பயனாக மெல்ல மெல்ல என்னையறியாமலே என்னுள்ளம் மாறுதலடையக் கண்டேன். மனிதனின் உள்ளத்தில் ஒளிர்வதாகிய தெய்வத்தன்மையை கீழை நாட்டுக் கலைகளின் ஆத்மிகத்தன்மை வசீகரப்படுத்துகிறது. இத் தன்மையை கிரேக்க நாட்டுக்கலைகளில் காண்பது அரிது. சில புராதன கிரேக்கக் கலைப்பொருட்களில் காணலாம். இப்பொழுது நான் Elgin Marbles முன்நின்றாவது அல்லது Pergamum ஆலயச் சிற்பங்களின் முன் நின்றாவது அவற்றை நோக்கும் போது, அவற்றில் உருவகப்படுத்தியுள்ள சாதாரண மானுட உறுப்புகளின் அழகினை மாத்திரமே கண்டு வியக்கின்றனன்றி, உள்ளத்திருப்தியுடன் நான் திரும்புவதில்லை. அவ் வடிவங்கள் அழகு வாய்ந்த ஓர் ஐரோபியரை உருவகப் படுத்துவதோடு மாத்திரம் நின்று விடுகின்றன. அவையினிடத்தே எக்காலத்துக்கும் எத்தேசத்துக்கும் பொருந்தும் தெய்வத்தன்மைகள் விளங்குவதில்லை. பார்ப்பவர் உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் தன்மையும் இல்லை. ஆனால், கீழைத்தேசத்து அழகிய கலை வடிவங்களை நான் பார்க்கும் போது என் ஐம்புலனோடு ஆன்மாவும் திருப்தியடைகிறது. என் அகக் கண் தன் இயல்புக்கேற்ப, தூல ரூபத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை கண்டு இன்புறுகிறது. நானும் இந்திரியக் காட்சியால் ஏற்படும் தூல அழகினிற்கு அப்பாற்பட்ட ஓர் அனுபவத்தைப் பெறுகிறேன்’ ( The Culture of South East Asia – Introductory; p;21)

கீழைத் தேசத்திற்கும் மேலைத்தேசத்திற்கும் இடையே இருந்த இந்தக் கலா அனுபவ வேறுபாட்டை மேலே அறிஞர் சொல்லக் கேட்டோம். அது கடந்து போன ஒரு காலம். இன்று தகவல் தொழில்நுட்பப்புரட்சி ஒன்று இடம்பெற்ற காலம் ஒன்றில் நாம் வாழ்கிறோம். அதே காலப்பகுதியில் உலகத்தமிழ் இனம் என்ற ஒரு புதிய அலை ஒன்றும் உலகப்பரப்பில் சமகாலப்பகுதியில் நிலைபெற்றிருக்கிறது. இவை இரண்டும் நீண்ட தமிழ் பண்பாட்டு வரலாற்றில் சமகாலப்பகுதியில் நிகழ்ந்த இரு பெரும் முக்கிய நிகழ்வுகளாகும். மரபுவழிப்பட்ட பண்பாட்டின் சகல கூறுகளையும் இவை புரட்டிப் போட்டன. புதிய உலகப் தமிழ் பண்பாடு ஒன்றை இது நாடுகள் ரீதியாக உருவாக்கி விட்டது. அந்தப் புதிய பண்பாட்டில் இணையத்தளங்கள் கலைவடிவமாய்; ஆவணக்களஞ்சியமாய் பரிபூரண கருத்துச் சுதந்திரத்தோடு பரிநாமம் பெற்றன.
.
மூன்று வருடங்களைப் பூர்த்தியாக்கும் தமிழ்முரசு அவுஸ்திரேலியா என்ற மின்னிதழ் இணையவழி அவுஸ்திரேலியத் தமிழரை உலகுக்கு பிரதிநிதித்துவப் படுத்தி வெளிவரும் ஒரே வாராந்த சமூகப்பத்திரிகை என்ற வகையில் சிறப்புப் பெறுகிறது. செய்திக் கடலான இணையப் பரப்புக்குள் புதிது புதிதாய் அறிமுகமாகின்றன பண்பாடுகள்; வாழ்க்கை முறைகள். அவுஸ்திரேலிய – குறிப்பாக சிட்னி தமிழரின் வாழ்வியல் சிலிர்ப்பினை புகைப்படக் காட்சிப்படுத்தலினூடாகவும் நிகழ்வுப்பகிர்வு மூலமாகவும் வெளிப்படுத்தி ”OZ தமிழ் பண்பாடு” ஒன்றை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் தமிழ்முரசு முன்நிற்கிறது; நம் ‘இருப்பினை’ எதிர்காலத்துக்கு ஆவணப்படுத்திக் கொடுக்கிறது. அதன் பக்கவடிவிலும்; உள்ளடக்கச் சிறப்பிலும்; கண்ணியம் தவறாத இயல்பிலும்; வாரம் தவறாது திங்கள் தோறும் வெளிவரும் அதன் உழைப்பிலும் தன் கலைப்பண்பை நிலைநிறுத்தி வருகிறது. சமூகக் கடமை ஒன்றை நிறைவு செய்வதன் மூலமாக ஆத்மார்த்த வாழ்வனுபவம் ஒன்றை அது பிரதிபலித்து நிற்கிறது.

இனி வரும் காலத்தில் அது குறிப்பாக மொழித் தடை நீக்கிய உள்நாட்டு இலக்கிய படைப்புகளையும் சமூக சிந்தனைகளையும் உலகத்தமிழர் வசம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பது என் அவா. அதற்கு உள்ளூர் இலக்கிய கர்த்தாக்களும் ஆர்வலர்களும் நேர்மையான சிந்தனையோடும் கூர்மையான பார்வையோடும் எதிர்கால கரிசனையோடும் தன்னம்பிக்கையோடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வீரியத்தோடும் உண்மையோடும் வெளிப்படையாகவும் காலத்தைப் பதிவு செய்ய முன் வர வேண்டும்.

காலச் சிக்கலால் நன் நாள் கடந்து போயினுமென்ன? தமிழ்முரசின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் என் வாழ்த்துக்களும் ஆதரவும் என்றும் உரியதாகும்!

             “சேதுவை மேடிறுத்தி வீதி சமைப்போம்”

.

No comments: