மகாஜனக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் செய்திதகவல் பெட்டகங்களாய் இரண்டு தமிழ் நூல்கள்

அறிவியல் தகவல்களையும் சரித்திரப் பதிவுகளையும் இலக்கியமாய்க் குழைத்தெடுத்துத் தமிழில் படைக்கப்பட்டிருக்கும் இரண்டு தமிழ் நூல்களின் அறிமுக விழா மார்ச் மாதம் பதினாறாம் திகதியன்று சிட்னியில் நடைபெற்றது. முன்னைநாள் மகாஜனக் கல்லூரி அதிபரும் தற்போது கனடாவில் வதிபவருமான திரு பொ கனகசபாபதி அவர்கள் எழுதிய 'எம்மை வாழ வைத்தவர்கள்' மற்றும் 'மரம் மாந்தர் மிருகம்' என்ற நூல்களின் அறிமுகம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைநகர் பிராந்தியக் கிளையினரால் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நூல் அறிமுக நிகழ்ச்சிக்கு பழையமாணவர் சங்கத்தின் செயலாளரான கலாநிதி பாலா விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார். நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகளின் கூட்டமைப்பின் பாடநூலாக்கக் குழுவின் தலைவரும் ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையத்தின் அதிபரும் சிறந்த மேடைப் பேச்சாளருமான தமிழ் அறிஞர் திரு தி திருநந்தகுமார் அவர்களும் மகாஜனக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியையும் வலயக் கல்வி அதிகாரியும் தமது மேடை நாடகங்களுக்காகவும் நூல்களுக்காகவும் பல பரிசுகளை வென்றவருமான சாகித்திய மண்டல விருது பெற்ற திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களும் இந்த நூல்களை அறிமுகம் செய்து பேசினார்கள்.

'மரம் மாந்தர் மிருகம்' என்ற நூலை அறிமுக செய்து பேசிய திருமதி கோகிலா மகேந்திரன்இ திரு கனகசபாபதி தமது துறையான விலங்கியல் தாம் கற்ற தாவரவியல் என்பனவற்றுக்கு மேலாகஇ தமது கிராமத்துச் சூழலில் தாம் கண்ட விலங்குகளையும் மரங்களையும் தனித் தனியாகத் தெரிந்தெடுத்து அவை சார்ந்த நுணுக்கமான பல தகவல்களைத் திரட்டித் தந்திருப்பதைச் சுட்டிக் காட்டிப் பேசினார். நாளாந்த கிராமிய வாழ்க்கையில் காரணங்கள் ஆராயப்படாமலே மரங்கள் மற்றும் விலங்குகள் தொடர்பில் மாந்தர்  கைக்கொள்ளும் விடயங்களுக்குப் பின்னால் இருக்கின்ற சூக்குமங்களை இந்நூலில் திரு கனகசபாபதி ஆய்ந்து தொகுத்திருப்பதை திருமதி கோகிலா மகேந்திரன் சிலாகித்தார். ஒரு சிக்கலான அறிவியல் கட்டுரைத் தொகுதியாக இல்லாது இலகுவான தமிழில் நடைமுறை வாழ்க்கையுடனான தொடர்புகளையும் நகைச்சுவையையும் சேர்த்து இந்தக் கட்டுரைகள் பின்னப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிஇ ஒவ்வொரு கட்டுரையும் கையில் எடுத்தால் வைக்க முடியாத வாசிப்பு ஊக்கியாக இருப்பதையும் திருமதி கோகிலா மகேந்திரன் விதந்துரைத்தார்.

திரு திருநந்தகுமார் பேசிய போது 'எம்மை வாழ வைத்தவர்கள்' போன்ற ஒரு நூலின் தேவை எமக்கு மட்டுமன்றி அடுத்த தலைமுறைகளுக்கும் தான் என்று குறிப்பிட்டார். கல்வியைச் செல்வமாகக் கருதும் தமிழர்களுக்குக் கல்விக் கண் திறப்பதில் பல சவால்களுக்கு மத்தியிலும் ஒப்பற்ற பங்களித்த 23 கல்வியாளர்கள் எம்மை வாழ வைத்தவர்கள் தாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு பக்கங்களிலும் பொதி செய்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கிரகித்துப் போகும் போது மனதில் விரியும் விளக்கங்கள்இ கடுமையான பின்னணி ஆய்வுகளின் துணையுடன் ஒவ்வொரு தலைப்பும் எழுதப்பட்டுள்ளமைக்குச் சான்றாக இருக்கின்றன என்றார் திரு திருநந்தகுமார். எமது கடந்த காலம் மறக்கடிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிற தமிழர்கள் தமது தனிப்பட்ட நூல் சேமிப்புகளிலும் பல நூலகங்களிலும் வைத்திருக்க வேண்டிய கல்வியாளர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவு ஆவணம் இது என்றும் அவர் சொன்னார்.

அவசரமான இன்றைய உலகத்தில் பின்னணி ஆராய்வுடன் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள் அருகிவரும் போது அதிபர் கனகசபாபதி அவர்கள் செய்திருப்பது ஒரு மெச்சத்தக்க விடயம் என்று பாலா விக்னேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டார். 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும்இ கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற பாரதி சொல் கேட்டு புகலிடத்து வடிவங்களை இணைத்து அறிவியல் இலக்கியங்களும் ஆவணப்படுத்தல்களும் அதிபர் கனகசபாபதியினால் செய்யப்படிருப்பதைச் சுட்டிகாட்டிய அவர்இ வெண்கட்டியும் அவ்வப்போது பிரம்பும் பிடிக்கும் அதிபர் கை இவ்வாறான ஒரு கனதியான பேனாவையும் பிடிக்கும் என்பது அதிபரது பெரும்பாலான மாணவர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சி தான் என்றும் சொன்னார். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்பதில் அதிபரது மாணவர்களின் சாதனைகள்இ கல்லூரிகள் கண்ட மைல்கற்கள் என்பவற்றுடன் எழுதி வரும் நூல்களும் சேரும் என்றார் பாலா விக்னேஸ்வரன்.

இந்த நூல்களின் சிறப்புப் பிரதிகளை விழா மேடையில் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் கலாநிதி பாலன் தனபாலசிங்கம் இப்பிரதிகளை அவர்களுக்கு வழங்கினார்.

நூல் அறிமுக விழாவைத் தொடர்ந்து பழையமாணவர் சங்கக் கிளையின் அடுத்த ஆண்டுக்கான பன்னிருவர் கொண்ட செயற்குழு தெரிவு நடைபெற்றது. திரு KG பாஸ்கரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இரவு உணவுடன் இந்த விழா நிறைவு பெற்றது.


திரு பொ கனகசபாபதி நூல்கள்

திரு. பொ. கனகசபாபதி அவர்கள் எழுதிய 'எம்மை வாழவைத்தவர்கள்' கனடா ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்த இருபத்துமூன்று தமிழ்க் கல்வியாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும். தாய்வீடு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் மஞ்சரி 'மரம் மாந்தர் மிருகம்' என்ற நூல். கல்விப்பணியிலிருந்து உத்தியோகபூர்வமான ஓய்வு பெற்ற பின்னர் எழுத்துத் துறையில் தீவிரமாக இறங்கிய திரு பொ கனகசபாபதி இலங்கைஇ இந்திய மற்றும் கனடியப் பத்திரிகைகளில் எழுதிவந்திருக்கிறார். அதிபர் ஒருவரின் கூறிய பார்வையில்இ பெற்றோர் - பிள்ளை உளவியல்இ மாறன் மணிக்கதைகள்இ திறவுகோல்இ மனம் எங்கே போகிறது என்பன இவரது மற்றைய நூல்களில் முக்கியமானவையாகும். ஆசிரியராகவும் அதிபராகவும் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி மற்றும் புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரிகளில் பணிபுரிந்த அவர் கனடாவில்
Torontoபாடசாலைகள் சபையின் கல்விசார் ஆலோசகராகவும் பணி புரிந்திருந்தார்.

தமது நூல்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த போது, "இந்த நூல்கள் எவ்வளவு பேரைச் சென்றடைய முடியுமோ அவ்வளவு பேரைச் சென்றடைய வேண்டும்" என்று திரு பொ கனகசபாபதி சொன்னார். இதற்காகவே தமது 'எம்மை வாழவைத்தவர்கள்' 'மரம் மாந்தர் மிருகம்' என்ற நூல்களை கனடா, இங்கிலாந்து நோர்வே, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் எனப் பல நாடுகளில் ஏற்கெனவே வெளியீடும் அறிமுகமும் செய்திருப்பதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது அவர் இலங்கைக்கும் சென்று கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் என இந்த நூல்களை வெளியிட்டிருக்கிறார். இந்த நூல்களைப் பாராட்டி உபவேந்தர்கள் பேராசிரியர்கள் எனப் பல கல்விமான்கள் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். கனடாவில் நடைபெற்ற விழாவில் கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வி ராதிகா சிற்சபேசனும் கலந்து கொண்டு இந்த நூல்களை நயந்து பேசியிருக்கிறார்.

'எம்மை வாழவைத்தவர்கள்' 25 அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் 'மரம் மாந்தர் மிருகம்' என்ற நூல் 15 அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் இரண்டும் இணைந்த தொகுதி 30 அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் கிடைக்கும். தமக்காகவும் தமது அபிமான நூலகங்களுக்காகவும் இவற்றைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் சிட்னியில் உள்ள மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தை மின்னஞ்சலில் (bala.vigneswaran@hotmail.com) அல்லது தொலைபேசியில் (0419 361 273) April மாத முடிவுக்குள் தொடர்பு கொள்ளலாம்.

No comments: