இலங்கைச் செய்திகள்


'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' கண்டியில் துண்டுபிரசுரங்கள்

ஆஸி. செல்ல முயற்சித்த 40 சிறுவர்கள் உட்பட 97 பேர் கைது

இலங்கையர் மீதான வன்முறைகள் அதிகரித்தால் இங்குள்ள தமிழகத்தவர்களை விரட்டியடிப்போம்

காலத்தை இழுத்தடிக்கும் தந்திரமாக இருக்கக்கூடாது

வன்னித் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமா?



=======================================================================

'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' கண்டியில் துண்டுபிரசுரங்கள்


27/03/2013 கண்டி, மடவளை மற்றும் வத்துகாமம் பகுதிகளில் 'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' என்ற தலைப்பில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

'சிங்கள தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள்' என்ற அமைப்பு (சிங்களயே செபே உரிமக்காரயோ) இந்த துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளது. அதன் விபரம் வருமாறு,

சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்!


பத்துமாதங்கள் தன் வயிற்றில் சுமந்து இவ் உலகிற்கு குழந்தை ஒன்றை ஈன்று அளிப்பவள் தாய். அவளது உதிரத்தை பாலாக மாற்றி பருகத் தருகிறாள். தாயானவள் சகல சுமைகளையும் தானே சுமந்து கொள்ளும் உயர் ஸ்தானத்தில் இருப்பவள். இதற்கு சமமான நிலையில் இருப்பது தாய் நாடும் தான் பிறந்த ஊருமாகும்.

ஆனால் நவீன உலகில் எதுவித குளிர்கால யுத்தமுமின்றி முஸ்லிம் இராஜ்யம் பற்றி முஸ்லிம்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார, சமய, அதிகாரங்களை தம்வசப் படுத்திக் கொண்டு போனால் கூடிய கெதியில்; முஸ்லிம்களின் கையின் கீழ் சிங்களவர்கள் வாழவேண்டிய நிலை ஏற்படும். அப்பொழுது சிங்களவர்களுக்கு வெளியேறுவதற்கு ஒரு நாடோ பின்பற்றுவதற்கு சமயமோ இல்லாது கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நடக்காது முளையிலே கிள்ளி எரிய வேண்டிய காலம் சிங்களவர்களுக்கு உதயமாகியுள்ளது. 

இலங்கை இன்னும் 20- 30 வருடங்களில் இஸ்லாமிய மயதாவதற்கு முஸல்மான்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

1996இல் மாலைத் தீவில் ஒன்று கூடிய முஸ்லிம் நாடுகளின் பிரதி நிதிகள் 2020 இல் கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தான் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் நாட்டை உருவாக்கவும் பின்னர் முழு நாட்டையும் முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கு வரைபடம் (பிலேன்) வரையப்பட்டுள்ளது.(திட்டம் தீட்டப்பட்டுள்ளது)

தற்கால சனத்தொகை விபரத்தை (குடிசன மதிப்பீடு) அரசு இன்னும் வெளியிடாது இருப்பதற்குக் காரணம் முஸ்லிம்களின் சனத் தொகை வளர்ச்சி வீதம் 100 சதவீதமாக இருப்பதாலும், முஸ்லிம் நாடுகள் கொடுக்கும் பெருந்தொகை வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு அதற்குக் கைமாறாக அதனை மறைப்பதுமாகும். முஸ்லிம் சனத்தொகைப் பெருக்கம் அமைதியானதாயினும் அது மிகக் மிகக் கொடூரமானது. 

நாட்டில் முஸ்லிம் சனத்தொகை 50 சதவீதமானதும் அவர்கள் ஷரீஹா சட்டத்தை அமுல் படுத்தி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவர்கள்.
நன்றி வீரகேசரி 






ஆஸி. செல்ல முயற்சித்த 40 சிறுவர்கள் உட்பட 97 பேர் கைது
27/03/2013 புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 97 இலங்கையர்கள் அம்பாறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் ஒலுவில் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் 39 ஆண்களும், 18 பெண்களும், 40 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, அம்பாறை, சிலாபம், நீர்கொழும்பு, பதுளை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி வீரகேசரி 









  இலங்கையர் மீதான வன்முறைகள் அதிகரித்தால் இங்குள்ள தமிழகத்தவர்களை விரட்டியடிப்போம்

Pothupalasena1உதயகார்த்திக்: ஐ. பி. எல். கிரிக்கெட்  போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதை தமிழ் நாட்டு  அரசியல் வாதிகள் அரசியல் ஆக்கக் கூடாது. தமிழ் நாட்டில் உள்ள இலங்கையர்கள் மீதான வன்முறை அதிகரித்தால் இலங்கையிலுள்ள தமிழ் நாட்டவர்களை  நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என பொதுபலசேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொடஹத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும்  நடவடிக்கைகள் குறித்து  கேட்டபோதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.
இது  பற்றி அவர் மேலும் கூறுகையில் ;

தமிழ் நாட்டு அரசியல்  வாதிகள் இன்று  நேற்றல்ல காலங்காலமாக இலங்கை அரசிற்கு இடையூறாகவே இருந்து வருகின்றனர். இலங்கை ஒரு தனிநாடு என்பதை இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும்  மறந்துவிட்டன போலும்.  அதனால்  தான் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட்டு வருகின்றது.

இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் இந்தியா தலையிடுவதை பௌத்த  சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற வகையில் நாம் எமது கண்டனத்தைத்  தெரிவிக்கின்றோம்.

தமிழ் நாட்டு   அரசியல் வாதிகள் மேலும்  மேலும் இலங்கை மக்களுக்கு இடையூறு விளைவித்தால் இலங்கையில் உள்ள தமிழ் நாட்டு மக்களை நாட்டிலிருந்து விரட்டி விடுவோம்.
அதுமட்டுல்லாது தமிழ் நாட்டில்  உள்ள  பிரதான விமான நிலையங்களை இலங்கையர்கள் பயன்படுத்தக் கூடாது என்ற பிரசாரத்தை எமது மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நட்புறவு இல்லையெனக் கூறும் தமிழ்நாடு எமக்குத் தேவையில்லை.

சென்னையில் நடைபெறவுள்ள ஐ. பி. எல்.  போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கெடுக்கக்கூடாது என தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும், மாணவர் அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன.

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு முக்கியமான அறிவுரையொன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சினைகளை விளையாட்டில் புகுத்த வேண்டாம். விளையாட்டு என்பது பிரச்சினைகளை நிவர்த்தி செய்து ஒற்றுமையை கற்றுக்கொடுக்கும் பாடமாகும்.  அதனை சுயலாபத்துக்காக அரசியலாக்க வேண்டாமெனவும் தெரிவித்தார்.  நன்றி தினக்குரல்





 காலத்தை இழுத்தடிக்கும் தந்திரமாக இருக்கக்கூடாது

கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறதா ?  அல்லது பூதத்தை வெளியில் விடுவதற்காக கிணறு தோண்டப்படுகிறதா? என்பதைப் போன்றதொரு  புதிராகவே  வட மாகாண சபைக்கான தேர்தல் விவகாரம் காணப்படுகிறது.  வட மாகாண சபை அமைக்கப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி இன்னமும் விடுக்கவில்லை. ஆதலால் இல்லாத ஒரு சபைக்கான தேர்தலை தேர்தல் திணைக்களத்தால் நடத்த முடியாது என்று தேர்தல் திணைக்கள ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

2006  இல் வட கிழக்கு மாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டிருப்பதாக வர்த்தமானி மூலம் பிரகடனம் வெளியிடப்பட்டதாகவும் ஆனால் , அது போன்றதொரு பிரகடனம் வட மாகாண சபை உருவாக்கப்பட்டமை  தொடர்பாக இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் இல்லாத ஒரு சபைக்கு தேர்தலை எவ்வாறு நடத்துவது ? என்ற வாதத்தை  தேர்தல் ஆணையாளர் முன் வைத்திருப்பதாகத் தென்படுகிறது.  யுத்தம் முடிவடைந்த பின்னர் வட மாகாணத்தில் ஜனாதிபதித் தேர்தல் , பாராளுமன்றத் தேர்தல் ,  உள்ளூராட்சி சபைத் தேர்தல் போன்றவை நடத்தப்பட்டுள்ளன.

ஆனால்,  வட மாகாண சபைக்கான தேர்தல் மட்டும் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்கின்றது. ஆனால்,  வட மாகாண சபைக்கு  அரசியல் அமைப்பின் பிரகாரம் ஆளுநர் ஒருவர் செயற்பட்டு வருகிறார். ஆளுநர் அலுவலகம் நிர்வாக விடயங்களை கவனித்து வருகிறது. இந்நிலையில் வட மாகாண சபை ஒன்று அமைக்கப்பட்டதற்கான ஜனாதிபதியின் வர்த்தமானிப் பிரகடனம் வெளியிடாததால் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் திணைக்களம் கூறுகிறது. கடந்த வருடம் இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான இந்துவுக்கு அளித்த பேட்டியில், 2013 செப்டெம்பரில் வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  தெரிவித்திருந்தார். 

கடந்த வியாழக்கிழமை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்திலும் செப்டெம்பரில் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்று  பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.  நாட்டின் ஏனைய  8 மாகாணங்களிலும் தேர்தல்களை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், வட மாகாண சபைக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமலிருப்பதற்கு  புதிய வாக்காளர்கள் இடாப்பு தயாரிப்பதை காரணமாக கூறப்பட்டது.

ஆனால், இப்போது அந்தப் பணியும் பூர்த்தியடைந்து விட்டது.  ஆனால், இந்தக் காரணத்தை வட மாகாண மக்களும் அவர்களில் பெரும்பாலானவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க்  கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் ஏற்றுக் கொள்வதற்கோ அல்லது நம்புவதற்கோ தயாரில்லை என்பது தொடர்ந்தும் பகிரங்கமாகவே வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. 2010 ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் 2010 ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலிலும் வட மாகாண வாக்காளர்கள் வாக்களித்துள்ள நிலையில் மாகாண சபைக்கான தேர்தலுக்கு மட்டும் வாக்காளர் இடாப்பை சீர்ப்படுத்த வேண்டியிருப்பதால் தாமதம் ஏற்படுகிறது என்று கூறப்பட்ட காரணம் நியாயப்படுத்துவதற்கு வலுவற்றதொன்று என்பது வெளிப்படையானதாகும். முதலமைச்சர் தலைமையிலான மாகாண சபைக்கு அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் அதிகாரங்கள் முழுமையாக பகிர்ந்தளிக்கப்பட்டு அமுல்படுத்தப்படாவிடினும் ஒவ்வொரு மாகாண முதலமைச்சர்களுக்கும் குறிப்பிடத்தக்க சில அதிகாரங்கள் உள்ளன. 

இதன் பிரகாரம் வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு எவர் வெற்றி பெற்றாலும் அங்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்த முடியும்.  அளவுக்கு அதிகமான இராணுவ மயமாக்கலினால் வட மாகாண மக்கள் இயல்பு வாழ்வை முன்னெடுக்க முடியாத அவல நிலை காணப்படுவதாகவும், இராணுவ பிரசன்னத்தை குறைக்குமாறும் வட பகுதி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அங்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்த  நிச்சயமாக உதவும். ஆனால், வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதைத் தொடர்ந்தும் இழுத்தடிப்பதையே அரசாங்கம் விரும்புகின்றது என்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் குறிப்பாக வட பகுதி மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாகாண சபை அமைக்கப்படாததற்கான ஜனாதிபதியின் வர்த்தமானிப் பிரகடனம் வெளியிடப்பட்டதால் தேர்தலை நடத்த முடியாது என்று நுட்ப ரீதியான காரணத்தை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருப்பது தேர்தலை நடத்தாமல் மேலும் காலத்தைக் கடத்துவதற்கான மற்றொரு தந்திரோபாயமான  காய்  நகர்த்தலாக இருக்கக் கூடாது என்பது யாவரினதும் எதிர்பார்ப்பாகும்.      நன்றி தினக்குரல்






வன்னித் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமா?

யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதிப் பாடசாலைகளில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பி எதுவித சிறு தொகை உதவிக் கொடுப்பனவு கூட அற்ற
நிலையில் நீண்ட காலமாகச்
சேவையாற்றி வரும் வன்னித் தொண்டர் ஆசிரியர்களின் அவலநிலை குறித்து எவரும் கவனமெடுப்பதில்லை எனவும் விரைவில் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று நீண்ட காலமாக பொறுப்பு வாய்ந்தவர்கள் கூறி தம்மை ஏமாற்றி வருவதாகவும் தொண்டர் ஆசிரியர்கள் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர்.

வன்னியில் உள்ள மிகவும் பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளில் கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக 600 இற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சேவையாற்றி வருகின்றார்கள். இவர்களில் 539 வன்னித் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிந்தர நியமனம் வழங்குவதற்காக எனக் கூறி 2011 ஆம் ஆண்டு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது. ஆசிரியர் நியமனத்திற்கான பெயர் விபரப் பட்டியல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வி  அமைச்சின் செயலாளரால் தொண்டர் ஆசிரியர்களிடம் காலத்திற்குக் காலம் கூறப்பட்டது.

இதனை இலங்கைத் தமிழர்  ஆசிரியர் சங்கம் கூட 539 வன்னித் தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்கி வன்னி மாணவர்களின் கல்வியை அழியவிடாது காப்பாற்றுவதற்கு உதவுமாறும் கேட்டது. இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்களின் முறையற்ற இடமாற்றங்களைத் தவிர்க்க முடியும் எனவும் தமது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி ஏங்கி நிற்கும் வன்னித் தொண்டர் ஆசிரியர்களுக்கு உதவ முடியும் எனவும் சுங்கம் சுட்டிக்காட்டியது.

இந்நிலையில், 2009  ஆம் ஆண்டு வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தின்÷ பாது முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா வடக்கு, மன்னார்மடு, கிளிநொச்சி, வடமராட்சி கிழக்கு  ஆகிய பகுதித் தொண்டர் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் நியமனம் வழங்கப்படவில்லை. இவர்கள் இதுவிடயமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையீடு செய்யவுள்ளதாகவும் கூறுகின்றார்கள்.கடந்த தேர்தல் காலங்களிலும் எமக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுங்கள்; உங்களுக்கு நியமனம் பெற்றுத்தரலாம்' என்று கூறி இவர்களை வவுனியா செட்டி குளம் நலன்புரி முகாம்களில் இருந்து ஏமாற்றி வரும் அரசியல்வாதிகள் தற்போதும் வடக்கு மாகாண சபை தேர்தலுக்காக பிரசார நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்துவதற்காக அரசினது திட்டத்தின்படி அரசு சார்பு  அரசியல் கட்சிக்காரர்கள் தம்மை சந்தித்துக் கதைத்து வருவதாகவும் வன்னித் தொண்டர் ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

வன்னியில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் நிலை பெருங்கஷ்டம் நிறைந்ததாகவேதான் காணப்படுகின்றது. 13,14 வருடங்களுக்கும் மேலாக தமக்கும் நிரந்தர ஆசிரியர் நியமனம்  கிடைக்கும் என்ற கனவுடன் வாழும் இவர்களில் திருமணமானவர்கள் தமது குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாது அவலப்படுகின்றார்கள். பல தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கிடைத்தால் தான் திருமணம் செய்வது என்ற நிலைப்பாட்டில் திருமண வயதையும் தாண்டிய நிலையில் ஏங்கி நிற்கின்றார்கள். இப்படியான இக்கட்டான நிலைமைகள் காரணமாக விரக்திக்குள்ளாகி ஏங்குவதுடன், அண்மையில் கூட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் கூட நடைபெற்றுள்ளன.

இப்படியாக அவலப்பட்டு அல்லல்படும் வன்னித் தொண்டர் ஆசிரியர்களை தொடர்ந்தும் ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை அழிப்பது என்பது மனித நாகரீகத்திற்கே ஒவ்வாதசெயல் என்று தான் கூற வேண்டும்.

விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று கூறி ஏமாற்றி வரும் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் வன்னித் தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படும் அல்லது வழங்கப்படாது என்று ஒரு உறுதியான முடிவைத் தெரிவித்தால் அவர்கள் தொடர்ந்தும் நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்து தமது வாழ்க்கையை அழிக்காது இனியாவது  வேறு முயற்சிகளில் ஈடுபட முடியும். அரசாங்கம் ஒரு பொறுப்பான, உறுதியான முடிவை இனியாவது விரைந்து வழங்க வேண்டுமென  கண்ணீர் மல்கிக் கலங்குகின்றார்கள் வன்னித் தொண்டர் ஆசிரியர்கள்.    நன்றி தினக்குரல்

No comments: