மங்கல நிகழ்வுகளில் அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் நம்மவரிடையே காணப்படுகின்றது. அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சட் பொடி, மலர்கள் என்பவற்றைச் சேர்த்த கலவை என்பர். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை ‘அறுகரிசி’ எனவும் அழைக்கின்றனர்.
கன்னிகா தானம், தாலிகட்டுதல், ஆசீர்வாதம் ஆகிய முக்கிய நிகழ்வுகளின் போது அட்சதை இட்டு வாழ்த்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. எனினும், ஆசீர்வாதத்தின் போதே பலரும் அட்சதை தூவி வாழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். முழுமைத்துவத்தின் குறியீடாக அட்சதை அமைகின்றது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடு ஆகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு. அறுகு வம்ச விருத்தியின் குறியீடு. ஆனால், தற்காலத்தில் அழகுக்கு முதன்மை வழங்க வேண்டும் என்பதற்காக வெள்ளை அரிசிக்கு மஞ்சள் நிறச் சாயம் பூசி அட்சதையாகப் பயன்படுத்தும் பரிதாப நிலையையும் சில திருமணச் சடங்குகளில் காணமுடிகின்றது.
சங்க காலத்தில்...
திருமண நடைமுறைகள் காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்தாலும் சங்க காலத்தில் நெல்லும் மலரும் தூவி ஆசீர்வதிக்கும் நடைமுறை காணப்பட்டிருக்கின்றது. தற்போது எம்மவர் திருமணங்களில் தாலி கட்டுதலே முக்கிய நிகழ்வு. சங்க காலத் திருமணங்களில் தலைவன், தலைவியின் கூந்தலில் பூச்சூடுதலே முக்கிய நிகழ்வு. இதன்பின் வாழ்த்து நடைபெறும்.
கற்பினில் வாழாஅ நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை ஆகஎன
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றை
என்ற சங்க இலக்கியத்தில் ஒன்றான அகநானூறின் 66 ஆவது பாடல் இதற்கான ஆதாரமாகவுள்ளது.
பெண்ணை வாழ்த்தும் போது கற்பு ஒழுக்கத்தினின்றும் சிறிதும் வழுவாமல் நல்ல பலவாகிய உதவிகளையும் செய்து உன்னை மனைவியாகப் பெற்ற உனது கணவனை நீ பெரிதும் விரும்புகிறவள் ஆகுக" என்று கூறி வாழ்த்துக் கூறினர். பெண்ணின் கூந்தலின் மேல் நெல்லையும் மலர்களையும் தூவி வாழ்த்தினர். வாழ்த்து நிகழ்ச்சியில் முதலில் பெற்றோரே இடம்பெற்றனர்.
கந்தபுராணத்தில்...
சோழர் காலத்தில் எழுந்த கந்தபுராணத்தில் வள்ளியம்மை திருமணப் படலத்தில் ஆசீர்வாதத்திற்காக மலரும் அறுகும் தூவியதாகச் சித்திரிக்கப்படுகின்றது.
புல்லிய குறவர் மாதர் பொருவில் சீர் மருகன் தானும்
வல்லியு மின்னே போல வைகலும் வாழ்க என்று
சொல்லியல் ஆசிகூறித் தூமரறுகு தூர்த்தார்"
என்கிறார் கச்சியப்பர்.
தற்போதைய இந்து திருமணங்களில்...
தற்போதைய இந்துத் திருமணங்களில் அறுகரிசி இடுவதில் பலரும் வெவ்வேறு உத்திகளைக் கையாள்கின்றனர். ஆசீர்வதிக்கும் போது உச்சியில் மட்டுமே அட்சதை இட வேண்டும் என்றும் அறுகரிசியை இரு கைகளாலும் எடுத்து மணமக்களின் சிரசில் தனித் தனியே மூன்று தரம் தூவி ஆசீர்வதித்தலே நன்று என்றும் மூத்தோர் கூறுவர். அந்தணோத்தமர்களின் திருமணச் சடங்குகளில் இந்நடைமுறையே கைக்கொள்ளப் படுகின்றது.
அட்சதையிடும் போது மூன்று இடங்களில் இட வேண்டும் என வாதிப்போரும் உளர். சிரசு, தோள்கள், முழந்தாள்கள் என்பனவே அவ்விடங்களாம்.
இறைவனுக்கான உபசாரங்கள் பாதாதி கேசமாகச் (பாதத்தில் இருந்து தலையை நோக்கி) செய்யப்பெறுதலே மரபு. கோவிலில் தீபம் அர்ப்பணிக்கப்படும் போது பாதத்தில் இருந்து சிரசை நோக்கியே காட்டப்படுகின்றது. திருமணத்தின் போது மணமக்கள் சிவன் அம்மை ரூபமாகப் பாவனை செய்யப்படுகின்றனர் என்பதால் பாதாதி கேசமாக அட்சதை இட வேண்டும் எனச் சிலர் வாதிக்கின்றனர்.
காப்பு நாண் கழற்றிய பின்னரே எம்மவர்களால் ஆசீர்வாதம் மேற்கொள்ளப்படுகின்றது. காப்பு அகற்றப்பட்ட பின்னர் மணமக்கள் மணமக்களே. இவர்களை வாழ்த்துவோர் அனுபவத்தில் பெரியோரே. எனவே கேசாதி பாதமாக (சிரசில் இருந்து பாதம் நோக்கி) அட்சதை இடுதலே சரியானது எனச் சிலர் வாதிக்கின்றனர்.
எது எவ்வாறெனினும் அந்தணணோத்தமர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசீர்வாதம் சிரசில் மட்டும் மூன்று முறை அறுகரிசி இடப்படுவதாக அமைகின்றது. காலில் இருந்து தலையை நோக்கி அட்சதை இடப்படும் செயற்பாடு பிதிர்க்கடமையை நினைவூட்டிவிடும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் சிரசில் மாத்திரம் மும்முறை அறுகரிசி இடுவதே சரியானதாகத் தோன்றுகின்றது.
மக்கட் செல்வம் பெற்ற நிறைவாழ்வுடைய தம்பதியரே முற்காலங்களில் அறுகரிசி இட்டு வாழ்த்தும் தகைமையைக் கொண்டிருந்தனர். ஆண்கள் தம் நிறைவாழ்வின் அடையாளமாகத் தலைக்குத் தலைப்பாகை அணிந்து அட்சதை இடும் காரியங்களில் ஈடுபட்டனர். இன்றைய திருமணச் சடங்குகளில் அட்சதை இடும் செயற்பாடு ஆசி வழங்கும் செயற்பாடு என்பதற்கு அப்பால் வரவு பதிதல் செயற்பாடாகவும் அமைந்திருக்கிறது. திருமணச் சடங்கை ஆவணப்படுத்தும் காணொளிக் (வீடியோ) கலைஞர் அட்சதை இடும் செயற்பாட்டைப் பிரதானமாகப் பதிவுசெய்து கொள்கிறார்.
ஆகவே திருமணச் சடங்கிற்கு வருகை தந்தவர்கள் மணமக்களை அறுகரிசியிட்டு வாழ்த்துவதன் மூலம் தங்கள் வரவைப் பதிவு செய்வதோடு, பரிசுப் பொருட்களையும் வழங்குவதையும் காண முடிகிறது. இந்நிலையில் அவசர உலகில் கைகளில் அகப்பட்ட அரிசியை எப்படியும் இட்டுவிடுவோம் எனப் பலர் துடிக்கின்றனர்.
அட்சதை இடுவதன் தத்துவத்தை மனதிருத்தி மும்முறை சிரசில் மாத்திரம் இடுவதே நலந்தருவதாகும். இந்துக்களின் திருமணச் சடங்குகளில் ஒருமைத்தன்மை பேணப்பட வேண்டும். இதுவே ஆரோக்கியமானது.
Nantri:http://newssmart.in |
No comments:
Post a Comment