வாழ்வை எழுதுதல் ஸ்கைப்பில் பிள்ளை பராமரிப்பு முருகபூபதி
மனிதர்கள் பிறந்து வளர்ந்து முதுமையடைவதற்குள் அவர்களின் உடலில் உணர்வில் சிந்தனையில் மாற்றங்கள் தோன்றுவது இயல்பு. இந்த 21 ஆம் நூற்றாண்டு கணினியில் புதிய பாய்ச்சல்களை அறிமுகப்படுத்திவிட்டதனால் உலகம் நன்றாகச்சுருங்கிவிட்டது.
தங்கள் வாரிசுகளை புலம்பெயரச்செய்துவிட்டு அவர்களையும் அவர்கள் பெற்றெடுத்த பேரப்பிள்ளைகளையும் ஸ்கைப்பில் பார்த்து உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
பேரன் பேத்திகளின் படங்களை மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒளிப்படமாகவும் இறுவட்டுகளாகவும் அந்த புலம்பெயர்ந்த வாரிசுகள் அனுப்பிய காலம் ஓடிவிட்டது. தற்போது குறிப்பிட்ட  ஒளிப்படங்களும் இறுவட்டுகளும் முகப்புத்தகங்களில் ஏற்றப்படுகிறது.
கணினி வசதியுள்ள முதிய தலைமுறை பார்த்து பரவசமடைகிறது.
சமீபத்தில் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் சென்றிருந்தேன். நிறைய சம்பவங்களை அனுபவங்களை நினைவில் சுமந்துகொண்டு அவுஸ்திரேலியா திரும்பும் வழியில் இதனை எழுதுகின்றேன்.

1990 ஆம் ஆண்டில் மல்லிகை 25 ஆவது ஆண்டுமலரில் தலைமுறைகள் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை தற்போது நினைவுக்கு வருகிறது.
இலங்கையில் நீர்கொழும்பில் எங்கள் வீட்டு முற்றத்திற்கு மேயவந்த பன்றி ஒன்றை கல்லால் அடித்து விரட்டும்படி எனது மனைவி மூத்த மகளுக்குச்சொன்னாள். அப்போது அவளுக்கு பத்து வயது. அவள் மறுத்துவிட்டாள். காரணம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் வித்தியாசமானது.
“ பன்றி எங்கள் சிவபெருமான். அவர் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்திருக்கிறார்.” என்று சொன்ன மகள் 1991 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வந்து தற்பொழுது திருமணமும் முடித்து ஒரு பெண்குழந்தைக்கும் தாயாகிவிட்டாள். தலைமுறைகள் கட்டுரையில் நான் பதிவுசெய்த அவளது இளமைப்பருவத்து சிந்தனை பற்றி நினைவுபடுத்தியபோது அவளுக்கு சிரிப்பு வந்தது.
1991 .இல்  அவளுடன் வந்த எனது மகனுக்கு  அப்பொழுது நான்கு வயது.
திருஞானசம்பந்தருக்கு, சீர்காழியில் தேவலோகத்திலிருந்து வந்த சிவபெருமான் மனைவி உமாதேவியார் பால் கொடுத்தகதையை சொல்லி தோடுடைய செவியன் தேவாரமும் மனப்பாடம் செய்ய பயிற்சி அளித்த மனைவியிடம், “ அம்மா அந்த உமாதேவியார் அதாவது மிஸிஸ் சிவபெருமான் சோமாலியாவுக்கும் எதியோப்பியாவுக்கும் சென்று அங்கு பால் இல்லாமல் வாடும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கமாட்டார்களா?” – என்று கேட்டான்.
அவனுக்கு தற்போது 25 வயது. அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புச்சேவையில் பணியிலிருக்கின்றான். அவனிடம் அந்த சம்பவத்தை நினைவுபடுத்தியபோது அவனும் சிரித்தான்
இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏராளமாக நிரம்பியிருக்கலாம்.
அவுஸ்திரேலியாவில் எங்கள் விக்ரோரியா மாநிலத்தில் நடக்கும் வாராந்த தமிழ் வகுப்புக்குச்சென்றுவரும் ஒரு பெண்குழந்தை ஒரு சரஸ்வதி பூசை வைபவத்தில் ஆசிரியரிடம் இப்படிக்கேட்டிருக்கிறது:-
“ தாமரைப்பூவில் தொடர்ச்சியாக பெரியவீணையுடன் காட்சிதரும் அந்த அன்ரி எப்படி பாத்ரூம் போவார்”
 இப்படிக்கேட்ட அந்தப்பெண்குழந்தைக்கு இப்போது 7 வயது இருக்கும். அவள் வளர்ந்தபின்பு இந்தச்சம்பவத்தை நினைவுபடுத்தினால் அவளும் சிரிப்பாள். ஆனால் அவள் கணினி யுகத்தில் வேறு ஒரு பாய்ச்சலை பரவசத்துடன் அவதானிப்பாள்.
இவ்வாறு தமிழர்கள் புலம்பெயர் நாடுகளிலும் அவர்களின் மூத்ததலைமுறையினர் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கை. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா முதலான நாடுகளிலும்  தொழில் நுட்பம் ஒரு புறத்தில் வேகமாக மாறிக்கொண்டிருந்தபோதிலும் மத நம்பிக்கைகளும் வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.
மனித நாகரீகம் தோன்றியபோது தேன்றிய அல்லது மக்களினால் உருவாக்கப்பட்ட தெய்வங்கள் இன்றும் அப்படியே இருக்கிறார்கள். அதே சமயம் இந்த நூற்றாண்டில் அவர்களின் எண்ணிக்கையும் பல்கிப்பெருகிவிட்;டது. நோய்களின் பெயர்கள் அதிகரித்திருப்பதுபோன்று தெய்வங்கள் மற்றும் சாமியார்களும் அதிகரித்துவிட்டனர்.
கடந்த நூற்றாண்டில் எமக்குத்தெரிந்தது, காசநோய். புற்றுநோய், எயிட்ஸ்.
இப்பொழுது டெங்கு, சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல்.
இவற்றுக்கு மத்தியில் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவருக்கு நீரிழிவு, கொலஸ்ரோல், இரத்த அழுத்தம். ஆத்ரைட்டீஸ்….இத்தியாதி. வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் தேநீர். கோப்பிக்கு எத்தனை கரண்டி சீனி? என்பதுதான் முதலாவது கேள்வி. தொடர்ந்து நோய்நொடிகளைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தமது மாத்திரைகளின் பட்டியலை விபரிக்கிறார்கள். அந்த சந்திப்பில் ஒன்றுகூடலில் டொக்டர், தாதியர் வேடம் தரிக்கிறார்கள்.
நீர்கொழும்பில் எனது அக்காவீட்டில் நடந்த ஒரு வைபவத்திலும் உறவினர்கள் இந்த நோய் உபாதைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தபொழுது, வன்னியிலிருந்து வந்த ஒரு உறவினருக்கு பெரிய கோபம் வந்துவிட்டது,
மாத்திரைகளின் பட்டியல் சொன்னவர்களை கடிந்துகொண்டார்.
“ ஏன் அந்த நோய்களையே இப்படி நேசித்துக்கொண்டு  பேசிக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் நீங்கள் ஒரு சுகதேகி என்பதை நம்புங்கள். நோய் இருந்தாலும் அதனை சொல்லவேண்டிய .இடம் மருத்துவமனையில் டொக்டரின் அறைதான். அந்த அறையின் நான்கு சுவர்களுக்குள் இருக்கவேண்டிய சமாச்சாரத்தை ஏன் இப்படி விருந்தினர்கள் கூடும் இடங்களில் பறைசாற்றி அனுதாபம் தேடுகிறீர்கள்?”
இதனைக்கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவரது கூற்றில் உண்மை இருந்ததுபோன்ற உணர்வு வந்தது. அப்படிச்சொன்ன அந்த உறவினர் அடுத்த ஆண்டு பவளவிழா நாயகன். 75 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவருக்கு நான் அறிந்தவரையில் எந்தவொரு உபாதையும் இல்லை.
இந்தச்சுவாரஸ்யங்களின் பின்னணியில்தான் மக்களின் மத நம்பிக்கைகளையும் பார்க்கிறேன்.
எங்கள் ஊரில் நான் பிறந்த 1951 ஆண்டு காலத்தில் கடற்கரைவீதியில் மூன்று கோயில்கள்தான் இருந்தன. அவை சித்திவிநாயகர், சிங்கமாகாளியம்பாள், அம்மன் முதலான தெய்வங்கள் மூலமூர்த்திகளாக எழுந்தருளியிருப்பவை.
1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்று பதினொரு வருடங்களின் பின்னர் திரும்பியிருந்தேன். புதிதாக கருமாரியம்மன் கோயில் உருவாகியிருப்பதாக அம்மா சொன்னார்கள். அழைத்துச்சென்று காட்டினார்கள்.
பின்னர் சிலவருடங்கள் கழித்துச்சென்றபோது அக்கா வீட்டுக்குச்சமீபமாக காமாச்சோடை என்ற இடத்தில் ஒரு புதிய கோயில் ஆலமரநிழலில் உருவாகியிருப்பதைக்கண்டேன். அதன் தோற்றறத்தின் பின்னணி கதையை கேட்டேன்.
அந்தப்பிரதேசம் மீன்கடைகள், இறைச்சிக்கடைகள். கருவாட்டுக்கடைகள் மற்றும் ஒரு கள்ளுத்தவறணை இருந்த இடம். என்னை அந்தக்கோயில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஒரு கத்தோலிக்க மீனவரின் கனவில் காமாட்சி அம்மன் தோன்றியதாகவும். முன்னொருகாலத்தில் அங்கு ஒரு காமாட்சி அம்மன் கோயில் இருந்ததாகவும் அதனால் தனக்கு ஒரு கோயிலை அங்கே உருவாக்குமாறும் அம்மன் கேட்டதையடுத்து அந்த மீனவர் துரிதமாக இயங்கி கோயில் கட்டிவிட்டார்.
எங்கள் இளமைப்பருவத்து கனவுக்கன்னிகள் பெரும்பாலும் நடிகைகள்தான். அந்த மீனவர் கனவில் அம்மன் வந்து அந்தப்பிரதேச மக்களுக்கு கோயிலாகிவிட்டார்.
தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு கோயில் கட்டியவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
அந்தத்தடவை அக்கா அந்த புதிய அம்மன்கோயிலுக்கு அழைத்துச்சென்றார்.
இம்முறை அதாவது 2012 இறுதியில் மீண்டும் தாயகம் சென்று ஊரில் நின்றபோது, எங்கள் பூர்வீகவீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் வசிக்கும் தம்பியின் வீட்டுக்குச்சென்றேன். அந்தப்பிரதேசத்தில்தான் நீர்கொழும்பு திறந்த சிறைச்சாலை (சிறுகுற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்) அமைந்துள்ளது.
அந்தப்பிரதேசத்தில் இராணுவ அதிகாரிகள் சிலர் பங்களாக்கள் அமைத்திருக்கிறார்கள்.
அங்கும் ஒரு அம்மன்கோயிலுக்கான அத்திவாரம் இடப்பட்டிருக்கும் தகவலை தம்பி மனைவி சொன்னார். விரைவில் கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதாகவும் மேலதிக தகவல்.
இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை கூடலாம்.
அவுஸ்திரேலியாவுக்கு நான் சென்ற 1987 ஆம் ஆண்டு காலத்தில் அத்திவாரம் இடப்பட்ட சிவா-விஷ்ணு கோயில் இந்த நாட்டில் பிரம்மாண்டமானது. அந்தக்கோயில் நிருவாகத்தில் குழப்பம் வந்தபின்னர் அங்கிருந்து வெளியேறியவர்கள், முன்னொரு காலத்தில் ஸ்கொட்டிஷ் இனத்தவர்களினால் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட ஒரு தேவாலயத்தை அகற்றிவிட்டு பூமி பூஜை செய்து வக்ரதுண்ட விநாயகர் கோயிலை எழுப்பிவிட்டார்கள்.
சிறிது காலத்தில் அங்கும் நிருவாகத்தில் குழப்பம் வந்தது. பலன் ஒரு முருகன் கோயில் மற்றுமொரு பிரதேசத்தில் உருவாகியது. அங்கும் குழப்பம். நிருவாகத்தில் அங்கம் வகித்த சுமார் 30 குடும்பங்கள் கோபித்துக்கொண்டு வெளியேறி, வேறு ஒரு இடத்தில் நிலம்வாங்கி குன்றத்துக்குமரன் கோயில் எழுப்பி கும்பாபிஷேகமும் நடத்திவிட்டார்கள்.
அதாவது கால்நூற்றாண்டு காலத்துக்குள் அடுத்தடுத்து நான்கு கோயில்கள். தவிர பல பஜனை மடங்கள். கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் அவர்களிடையேயும் பல மதப்பிரிவுகள். தமிழ்நாட்டிலிருந்து அடிக்கடி மதபோதகர்கள் வந்து அற்புதங்கள் காட்டி சொற்பொழிவு செய்கின்றனர்.
இலங்கையிலிருந்து வந்த சிங்களபௌத்த மக்களும் நான் முன்புவசித்த பிரதேசத்தில் ஒரு பெரிய புத்த விகாரையை நிர்மாணித்து அரசமரமும் கொண்டுவந்து பக்குவமாக வளர்க்கிறார்கள்.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்” என்று யாரோ சொன்னதன் விளைவோ என்னவோ, தமிழர்கள் புலம்பெயர்நாடுகள் அனைத்திலும் கோயில்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன.
சில நாடுகளில் ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் அதிகரித்துவிட்டன. இந்த பழைய மாணவர் சங்கங்களினால் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
தாம் முன்பு கற்ற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு, குறிப்பாக மதில் கட்டுதல். நூலகம் அமைத்தல், கட்டிடங்கள் எழுப்புதல், காணிவாங்கிக்கொடுத்தல், போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கு உதவுதல் முதலான அர்த்தமுள்ள பணிகளை செய்துவருகிறார்கள். இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்.
 அதேவேளை ஊரில் கோயில் கும்பாபிஷேகங்களுக்கும் தாராளமாக பணத்தை செலவிடுகின்றனர்.
போரை முடிவுக்கு கொண்டுவந்த அரசின் மறைமுக ஆதரவோடு தமிழ்ப்பிரதேசங்களில் பௌத்தவிகாரைகள் தோன்றுகின்றன. அரசமரம் கண்ட இடத்தில் ஒரு புத்தர் சிலையும் தோன்றிவிடும். வடக்கு, கிழக்கில் வேப்பமரத்தடியில் சூலாயுதமோ அல்லது ஒரு கருங்கல்லோ தோன்றி அதன் முன்பாக சூடம் கொழுத்தப்படுகிறது.
சின்னரோமாபுரி என்று அழைக்கப்படும் எங்கள் ஊரில் சந்திக்குச்சந்தி யேசுநாதர் அல்லது அந்தோனியார், செபஸ்தியார், மடுமாதா, தேவமாதா மின்விளக்கு அலங்காரங்களுடன் காட்சி அளிக்கிறார்கள்.
இஸ்லாமியர்களுக்குச்சொந்தமான மசூதிகளுக்கு பேரினவாதிகளினாலும் பௌத்த மேலாதிக்கவுணர்வுகொண்ட பிக்குகளினாலும் ஆபத்து தோன்றியிருக்கிறது. இஸ்லாமிய அரசியல் கட்சித்தலைமைகள் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றன. சில தமிழ்ப்பிரதேசங்கள் சிங்களமயமாவதற்கு முதலில் தேவைப்படுவது அங்கு ஒரு புத்தர் சிலை. இலங்கையில் தாராளமாக கிடைக்கிறது.
இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் எடுத்துக்கொண்டால் அங்கு மதப்பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டில் கமலின் விஸ்வரூபம் படத்துக்கு வந்த தடை பின்னர் 7 காட்சிகள் நீக்கப்படுவதாக கமலை ஒத்துக்கொள்ளச்செய்து தடைநீங்கிய கதையை இந்தப்பின்னணிகளுடன்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.
வெளியே இத்தனை சமயசமாச்சாரங்கள் நடந்துகொண்டிருந்தபோதிலும் விஞ்ஞான தொழில் நுட்பம் இவற்றைக்கண்டுகொள்ளாமல் தனது பணிகளை வேகமாக தொடருகின்றது.
இந்த ஆக்கத்தின் இறுதியில் ஒரு உண்மைச்சம்பவத்தையும் சொல்லிவிடுகின்றேன்.
நீர்கொழும்பில் வதியும் எனது தங்கைக்கு லண்டனில் ஒருமகள் தனது கணவன் குழந்தையுடன் இருக்கிறாள். தாய்க்கும் மகளுக்கும் இடையே கடிதத்தொடர்புகள் என்றைக்கும்  இல்லை. தொலைபேசி தொடர்புகள்தான்.  குழந்தை பிறந்ததும் குழந்தையின் தோற்றம் வளர்ச்சியை காண்பிப்பதற்காக மகளின் உபயத்தில் தங்கைவீட்டில் கணினியும் ஸ்கைப்பும் வந்துவிட்டது. தற்போது தினமும் ஸ்கைப்பில் உரையாடுகிறார்கள்.
ஒரு நாள் லண்டனில் மகள் தனது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு தாயுடன் உரையாடுகிறாள். குழந்தைக்கு பசிவந்து அழுகிறது. ஸ்கைப்பை நிறுத்தாமலேயே “ அம்மா பிள்ளையுடன் பேசிக்கொண்டிருங்கள். விளையாட்டுக்காண்பியுங்கள். நான் பால்கரைத்துக்கொண்டு வருகிறேன்.” எனச்சொல்லிவிட்டு, எழுந்துசெல்கிறாள். குழந்தையும் பேத்தியாரும் ஸ்கைப்பில் கொஞ்சிவிளையாடுகின்றனர். மகள் பால்கரைத்து எடுத்து வரும்வரையில் இந்தக்காட்சி தொடருகிறது. பின்னர் குழந்தைக்கு அந்த புட்டிப்பாலை புகட்டியவாறே தாயுடன் மகள் உரையாடலை தொடருகிறாள்.
வருங்காலத்தில் இந்த குழந்தை பராமரிப்பைக்கூட (Child Minding) ஸ்கைப்பின் ஊடாக மேற்கொள்ளலாம்.
தெய்வங்கள் குடியிருக்கும் கோயில்கள் எதிர்காலத்தில் மேலும் பல்கிப்பெருகலாம். சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். ஐயப்ப பக்தர்கள், சாயிபக்தர்களின் எண்ணிக்கையும் கூடலாம். இலங்கையில் புத்தர் சிலைகள் பல்கிப்பெருகலாம்.
கணினியில் புதிய பாய்ச்சல்களும் தொடரலாம்.
இந்தப்பின்னணிகளுடன்தான் இந்தப்பூமியும் வெப்பமடைந்துகொண்டிருக்கிறது.
பூமி மட்டுமா? மனித மனங்களும்தான்.
         

              ----0---