அவுஸ்திரேலியா மெல்பேணில்
“தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2013” நினைவு நிகழ்வுகள் கடந்த 21-04-2-13 ஞாயிற்றுக்கிழமை
சிறப்பாக நடந்தேறின.
மெல்பேணில் அமைந்துள்ள
பிறிஸ்டன் நகர மண்டபத்தில் சரியாக 5.10 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கிய
இந்நினைவு நிகழ்வு இரவு 7 மணியளவில் நிறைவடைந்தது, அவுஸ்திரேலியக் கொடியை விக்ரோறிய
ஈழத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. பரமநாதன் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை
திரு. இராஜா இளங்குமரன் அவர்களும் ஏற்றியதைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கான
ஈகச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளரான அன்னை பூபதி, கலாநிதி மகேஸ்வரன்
ஆகியோருக்கும் மாமனிதர்களான திரு தில்லை ஜெயக்குமார், பேராசிரியர் எலியேசர் ஆகியோருக்கும்
அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் ஈகச்சுடரேற்றினர். அதைத்தொடர் ந்து
மலர்வணக்கத்துடனும் அகவணக்கத்துடனும் நிகழ்வுகள் தொடங்கின. நிகழ்வை திருமதி கீதா தொகுத்து
வழங்கினார். நாட்டுப் பற்றாளரினதும் மாமனிதரினதும் நினைவுரையை திரு பரமநாதன் அவர்கள்
நிகழ்த்தினார். மாவீரர்களினதும் நாட்டுப்பற்றாளர், மாமனிதர்களினதும் கனவுகளைச் சுமந்து
நாம் தொடர்ந்தும் உயிர்ப்போடும் துடிப்போடும் செயற்பட வேண்டிய காலச்சூழ்நிலையைத்
தெளிவுபடுத்தி அவரது உரை அமைந்திருந்தது.
அதைத் தொடர்ந்து
கஜன் அவர்களின் ஏதிலிகளின் துன்பங்களைச் சொல்லும் நடனம் இடம்பெற்றது. மேலும் தமிழ்
ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்த பேச்சாளரும், பிரபல ஒஸ்ரேலிய ஊடகவியலாளருமான Trevor
Grant அவர்களின் சிறப்புப் பேச்சு இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் தமிழ் ஏதிலிகள் படும்
இன்னல்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி குழந்தைகள், சிறுவர்கள்,
பெண்களுட்பட பல தமிழர்கள் நிரந்தரமாகவே தடுப்பு முகாம்களில் முடக்கப்பட்டுள்ள அவலம்
என்பவற்றைச் சுட்டிக்காட்டி, அண்மையில் முனைப்புப் பெற்றுவரும் ஏதிலிகளுக்கான தொடர்
போராட்டங்கள் குறித்தும் அவற்றில் தமிழ்ச்சமூகம் மேலும் முனைப்புடன் பங்குபற்ற வேண்டிய
தேவை குறித்தும் அவரது சிறப்புப் பேச்சு அமைந்திருந்தது.
அதைத் தொடர்ந்து
“முள்ளிவாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது.
ச.சாணக்கியன் எழுதிய இந்நூலை திருமதி உஷா சந்திரன் அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்தியதைத்
தொடர்ந்து திரு இராஜரட்ணம் அவர்கள் வெளியிட்டு வைக்க திரு நந்தகுமார் அவர்கள் முதற்பிரதியைப்
பெற்றுக்கொண்டார். “தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக விளங்கிய மக்களின்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான வாழ்வை ஆய்ந்திருக்கும் இந்நூல் தமிழர் ஒவ்வொருவரும்
வாசிக்க வேண்டியது. இதனூடு அம்மக்களின் வாழ்வியல் துன்பத்தையும் மீள எழும் நம்பிக்கையையும்
அறிந்துகொள்ளலாம்” என அறிமுகவுரையில் திருமதி உஷா சந்திரன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நாட்டுப்பற்றாளரினதும்
மாமனிதர்களினதும் தியாகத்தை நினைவுகூர்ந்து சிறுமி அபிதாரணி சந்திரனின் கவிதாஞ்சலி
இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ‘தமிழீழ சுதந்திர
சாசனம்’ பற்றிய விளக்கவுரை தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி திரு. டோமினிக்
சந்தியாப்பிள்ளை அவர்களால் நிகழ்த்தப்பட்டது. “பன்னாட்டு மட்டத்தில் எமது தாயக தாகத்தை
நியாயப்படுத்துவதற்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் இச்சாசனம் முக்கிய மைல்கல்லாக
விளங்கும். இதில் எவ்வளவுக்கெவ்வளவு மக்கள் பங்கெடுத்துக்கொள்கிறார்களோ அவ்வளவுக்கு
இச்சாசனம் உலகமட்டத்தில் பெறுமதி மிக்கதாக விளங்கும்” என்று தனது விளக்கவுரையில் டோமினிக்
அவர்கள் குறிப்பிட்டார். சாசனத்திற்கான விளக்கப் பிரசுரமும், ஆவணமும் இந்நிகழ்வில்
கலந்துகொண்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.
இறுதி நிகழ்வாக
ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வரும் அன்னை பூபதி நினைவுப் பொது அறிவுப் போட்டி இடம்பெற்றது.
இம்முறை மூன்றுபேர் கொண்ட எல்லாளன், சங்கிலியன் அணிகளுக்கிடையில் இப்போட்டி இடம்பெற்றது.
மூன்று சுற்று நடாத்தப்பட்ட இப்போட்டியில் எல்லாளன் அணி வெற்றிபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கான
பரிசில்களை மாமனிதர் பேராசிரியர் எலியேசரின் மகன் திரு. இரட்ணா எலியேசர் அவர்கள் வழங்கியதைத்
தொடர்ந்து கொடியிறக்கலுடனும் உறுதி மொழியுடனும் நிகழ்வுகள் எழுச்சியுடன் மாலை 7
மணியளவில் நிறைவடைந்தன.