அவுஸ்திரேலியாவில் முழுநாள் நிகழ்வாக நடைபெற்ற எழுத்தாளர் விழாஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் 13 ஆவது எழுத்தாளர் விழா கடந்த ஏப்பிரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை சிட்னியில் முழுநாள் விழாவாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிட்னி ஹோம்புஸ் ஆண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவின்போது,  மண்டப வாயிலில் வாழைமரங்கள் நடப்பட்டு, மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, வண்ணக் கோலங்கள் போடப்பட்டு, குத்துவிளக்கு, நிறைகுடம் வைக்கப்பட்டு தமிழ்ப்பண்பாட்டு மணம் கமழும் அழகிய சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.
காலை நிகழ்ச்சிகள் பிரபல எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் தலைமையிலும், மாலை நிகழ்ச்சிகள் சங்கத் தலைவர், பாடும்மீன் சட்டத்தரணி சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் தலைமையிலும் நடைபெற்றன.
காலை 10.00 மணிக்கு விழா ஆரம்பமானது. தமிழ்வாழ்த்து, அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து பிரபல எழுத்தாளர் லெ.முருகபூபதி, கவிஞர், வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி, பிரபல ஓவியர் ஞானம், இலங்கையிலிருந்து வந்திருந்த “ஞானம்” சஞ்சிகை இணையாசிரியர் திருமதி. ஞானசேகரன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றினர்.
நிகழ்ச்சித்தலைவர் மாத்தளை சோமு அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, கவிஞரும் வானொலி ஒலிபரப்பாளருமான சௌந்தரி கணேசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த எழுத்தாளர் விழாவிற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கட்டுரைகள் உள்ளடங்கிய விழாமலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. விழாமலரை வானொலி அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி. சோனா பிரின்ஸ் அறிமுகம் செய்து வைத்து, மலரின் உள்ளடக்கங்கள் பற்றி விதந்துரைத்தார்.

எழுத்தாளர் விழாவின் செயற்பாட்டுக்குழுத் தலைவர் திரு. த. திருநந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாணவர் அரங்கு எல்லோரது கவனத்தையும் மிகவும் ஈர்த்தது. செல்விகள். தர்சனா ஸ்ரீசந்திரபோஸ், மாதுமை கோணெஸ்வரன், கவிஜா விக்கினேஸ்வரன், சஜிந்தா ரவீந்திரன், சாம்பவி கெஜமுகன், சரண்யா தியாகராஜா, தமிழ்நிலா யோகசிங்கம், ஜனனி ஜெகன்மொகன், செல்வன் சாரங்கன் சிவறஞ்சன் அகிய ஒன்பது மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தார்கள். தமிழ்மொழி, தமிழ்க் கல்வி. தமிழ்ப்பண்பாடு என்பவை தொடர்பாக ஒவ்வொருவரும் தெரிந்து எடுத்துக்கொண்ட தலைப்புக்களில் விரிவான உரைகளை நிகழ்த்திய மாணவர்கள், சபையோரிடம் இருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமாகவும், சாதுரியமாகவும், அறிவுபூர்வமாகவும் அளித்த பதில்கள் அவர்களது அதீத திறமையை மட்டுமன்றி, தமிழ்மொழிமேல் அவர்களுக்கிருக்கும் தணியாத பற்றினையும் எடுத்தக்காட்டின. அவர்களில், இலங்கையில் இருந்த அண்மையில் புலம்பெயர்ந்து வந்திருந்த இருவரின் அனுபவப்பகிர்வு சபையோரின் கண்களைக் குளமாக்கி, இதயங்களை நெகிழ வைத்தது.
விழாவுக்கு ஆசியுரை வழங்க வருகை தந்திருந்த மூத்த எழுத்தாளர் திரு எஸ்பொ அவர்கள் தனக்கேயுரிய நகைச்சுவையோடு சில நிமிடங்கள் உரையாற்றி, இந்த 13 அவது எழுத்தாளர் விழாவுக்குத் தனது பூரண ஆசிகளை வழங்குவதாகத் தெரிவித்ததுடன், மாணவர் அரங்கில் கலந்துகொண்ட மாணவ மணிகளின் திறமைகளையும் மெச்சிப் புகழ்ந்துரைத்தார்.
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் குடும்பங்கள் தமிழ்மொழியைத் தமது எதிர்காலச் சந்ததிகளிடம் தக்கவைக்க வேண்டியதன் அவசியத்தையும், அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சித்தரிக்கும் “தமிழ் இனி” என்கின்ற குறும்படமும் திரையிடப்பட்டது. 
மதிய உணவின் பின்னர், நடைபெற்ற கருத்தரங்கில், தெரிவுசெய்யப்பட்ட கட்டுரையாளர்களின் கட்டுரை வாசிப்புக்கள் இடம்பெற்றன. திரு.ம.தனபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பிரபல எழுத்தாளர் திருமதி. கோகிலா மகேந்திரன், திரு.சி.ஸ்ரீநந்தகுமார், திரு.ச.ஜெயக்குமரன், திரு சிவசண்முகம் முனியப்பன், கலாநிதி. ஞானபாரதி குமாரபாரதி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களைச் சமர்ப்பித்தார்கள். மேலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அறிவில் ரீதியான அக்கபூர்வமாக நிகழ்ச்சியாக இந்தக் கருத்தரங்கை இடம்பெறச் செய்தனர்.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மாலை நிகழ்ச்சிகளில் முதலாவதாக நூலரங்கு இடம்பெற்றது. சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், பிரபல விமர்சக எழத்தாளரமான திரு. செ.கிருஸ்ணமூர்த்தியின் “மறுவளம்” என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. திரு. திருநாவுக்கரசு சிறீதரன் நூலாய்வு செய்தார். திருவாளர்கள் சிவக்கொழுந்து சுந்தரலிங்கம், வீரசிங்கம் குணரஞ்சிதன், சுப்பிரமணியம் ஜீவகுமார், நடராசா சின்னையா ஆகியோர் முதற்பிரதிகளைப் பெற்றுச் சிறப்பித்தனர்.
வேவ்வேறிடங்களில் முன்னர் வெளியிடப்பட்ட ஐந்து நூல்கள் இந்த அரங்கில் மீண்டும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த அமரர் கவிஞர் கதிரேசபிள்ளை அவர்களின் “பாரதம் தந்த பரிசு”, தேவராசா முகுந்தன் எழுதிய “கண்ணீரினூடே தெரியும் வீதி”,  சிவராசா கருணாகரன் எழுதிய “ஒரு பயணியின் போர்க்காலக் கறிப்பக்கள்”, “ஞானம்” சஞ்சிகையின் 150 ஆவது இதழாக மலர்ந்த “போர்க்கால இலக்கியங்கள்”, ஞா.பாலச்சந்திரன் எழுதிய “அங்கோர் உலகப்பெருங்கோயில் - பயண இலக்கியம்” ஆகிய நூல்களை முறையே, கலாநிதி. திருமதி. கௌசல்யா அந்தோனிப்பிள்ளை, திரு.லெ.முருகபூபதி, திரு. “ஆவூரான்” சண்முகம் சந்திரன், திரு. ஸ்ரீநந்தகுமார், திரு.வெ.செல்வபாண்டியன் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.
கருத்தரங்கினைத் தொடர்ந்து கவியரங்கம் இடம்பெற்றது. வைத்தியகலாநிதி திரு. இளமுருகனார் பாரதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கவியரங்கில் அவுஸ்திரேலியாவில் வாழும் பிரபல தமிழ்க் கவிஞர்களான செந்தரி கணேசன், ஆ. குமாரசெல்வம், திருமதி மனோ ஜெகேந்திரன், ஆனந்த் பாலசுப்பிரமணியம், திருமதி ஞானா அசோகன், சண்முகம் சந்திரன் (ஆவூரான்), திருமதி ராணி பாலா, கலாநிதி ஆ.இராமநாதன் ஆகியோர் பங்குகொண்டனர்.
சோலைக்குயில் அவைக்காற்றுக் களம் வழங்கிய மஹாகவி உரத்திரமூர்த்தி அவர்களின் “தேரும் திங்களும்” என்ற பாநாடகம் இடம்பெற்றது. நாடகக்கலாவித்தகர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களது நெறியாள்கையில் சிட்னியின் பிரபல நடிகர்கள் பங்கேற்று நடித்த இந்த நாடகம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
அவுஸ்திரேலிய இலக்கியக் கலைச்சங்கத்தின் செயலாளரும் பிரபல எழுத்தாளருமான திரு கே. எஸ். சுதாகர் நன்றியுரை வழங்கினார்.
காலை 10.00 மணிமுதல் இரவு 7.45 வரை நடைபெற்ற இந்த எழுத்தாளர்விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் குறிப்பிடப்பட்டிருந்த நேர அட்டவணைப்படி நிகழ்த்தப்பட்டமையும் விழாவில் நேரக்கட்டுப்பாட்டில் மிகவும் கவனம் செலுத்தப்பட்டு கச்சிதமாக நிகழ்ச்சிகள் கொண்டு நடாத்தப்படமையும் வியந்து பாராட்டத்தக்க அம்சங்களாக இருந்தன. விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கம் காலையிலும் மாலையிலும் சிற்றுண்டியும், மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டதுடன் எவ்வித நுழைவுக்கட்டணமும் இன்றி இலவசமாகவே இந்த மாபெரும் இலக்கிய விழாவை அற்புதமாக நடாத்திய அவுஸ்திரேலிய இலக்கிய கலைச்சங்கத்தினரையும், சிறப்பாக சங்கத்தின் சிட்னி விழாக்குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். முற்றிலும் இலக்கிய மணம் கமழும் நிகழ்ச்சிகளோடு, முழுநாளும் இணைந்திருந்த மகிழ்ச்சியோடு குறித்த நேரத்தில் வீடுதிரும்பிய குதூகலத்திலும் கலந்துகொண்ட அனைவரது இதயங்களும் நிறைந்திருக்கும் என்றால் அது மிகையில்லை.
-    சோனா பிரின்ஸ்