பத்தாவது ஆண்டினைக் கடந்து தெய்வ ஒளி வீசிக்கொண்டிருக்கும் மெல்பேர்ன் South Morang ஸ்ரீ விஷ்ணு துர்க்கா ஆலயம்.


உலகம் பூராவும் இந்து ஆலயங்களின் தோற்றங்களும், அவற்றின் வளர்ச்சியையும் அன்றாடம் இணையத்தளங்கிளின் ஊடாக அறிந்து கொண்டிருக்கின்றோம். புலம் பெயர்நாடான அவுஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் இந்து ஆலயங்களின் தோற்றங்கள் வரவேற்கத்தக்க அளவில் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிள்றோம். இந்து மக்களின் சனத்தொகைக்குயின் தேவைக்கு மேலதிகமாக இந்து ஆலயங்கள் உருவாக்கம் பெறுகின்றது என்பது ஒருசாரார் உடைய கருத்தாகவும் இருப்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.




மெல்பேர்ன் South Morang ஸ்ரீ விஷ்ணு துர்க்கா ஆலயம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர்
Childs Road, Millpark. என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. காலத்தின் ஓட்டம் மாற்றங்கள் ஏற்பட்டு தற்பொழுது மேற்குறிப்பிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் தெய்வ அருள் ஒளியை வீசிக்கொண்டிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் மூலவிக்கிரகம் எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீ விஷ்ணு துர்க்காதேவி, சுற்றுப்பிரகார மூர்த்திகளாக விநாயகப் பெருமான், வள்ளி, தெய்வநாயகியோடு சுப்பிரமணியசுவாமிகள், சிவன், பார்வதிதேவி சமேதரராய், நடராஜப்பெருமான், ஸ்ரீ இராமபெருமான், லக்சுமனன், சீதாதேவி, ஆஞ்ஞநேயர் ஆகியோர் எழுந்தருளப்பெற்றிருக்கின்றார்கள். ஆலயத்தில் நித்திய பூசைகளும், விஷேச அலங்கார பூசைகளும் நடைபெற்று வருகின்றன. பிரதி செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகள் தோறும் இரவு விஷேசமான பூசைகள் நடைபெற்று வருகின்றன. தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, மாசிமகம், பங்குனிச் செவ்வாய், சித்திராபௌர்ணமி, வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடிச்செவ்வாய், ஆடி அமாவாசை, ஆவணி ஓணம், புரட்டாதிச்சனி, கந்தசஷ்டி, ஜப்பசி வெள்ளி, நவராத்திரி, கார்த்திகைத் திங்கள், மார்கழி திருவெம்பாவை, விநாயர் கதை என அனைத்து தினங்களிலும் விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீ துர்க்காதேவி அடியார்களின் பங்களிப்புடன் செவ்வனே யாவும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பூர்த்தி சித்திரை மாதத்தில் வருவதால்
ANZAC தினத்தில் அதாவது விடுமுறைநாளாகவும் இருப்பதால் அன்றைய தினம் அதனைக் கொண்டாடி வருகின்றார்கள். அந்த வகையிலே கடந்த சித்திரை 23ம் திகதி 23.04.2013 செவ்வாய்க்கிழமை பத்தாவது ஆண்டினைப் பூர்த்தியடைந்ததையிட்டு,
ANZAC Day தினமான வியாழக்கழமை 25.04.2013 கொண்டாடப்பட்டது. ஆலயத்தில் இடவசதி போதாமையின் நிமித்தம்



Community Hall,  No 2, Snugburgway. Epping என்ற இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் யாவும் நடந்தேறியது. 
அன்றைய தினம் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மாளுக்கு 108 சங்குகளால் அபிஷேகம், பூசைகள், தீபாராதனைகள், வேதபாராயணம், தேவபாராயணம் நடைபெற்றன. நிறைவாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தின் பிரதமகுருக்கள் சிவஸ்ரீ.இரமேஸ்வரக்குருக்கள் சகல கிரியைகளையும் முறைப்படி நடாத்தி வைத்தார். இவருடைய அயராத உழைப்பு இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஆலய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது. அவருடைய சேவையைப் பாராட்டியதோடு சிவஸ்ரீ.இரமேஸ்வரக்குருக்கள் அவர்களை திரு.தெய்வேந்திரம் அவர்கள் பொன்னாடை போர்த்தி, திரு.மயில்வாகனம் மதனன் (மதி) அவர்கள் மலர்க்கொத்து வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சகல அம்மன் அடியார்களும் வருகை தந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கையின் அனுக்கிரகங்கள், கிருபா கடாட்சங்கள் யாவும் பெற்றுச் சென்றனர். அடியார்களின் ஒத்துழைப்புடன் மிகவிரைவில் ஆலயம் நிரந்தரமான ஓரிடத்தில் அமைக்கப்டவேண்டும் என்பது அனைவரதும் அவா.
ஆ ( ஆன்மா ) + லயம் ( ஒடுங்குவது ) ஸ்ரீ ஆலயம் ஆன்மா ஒடுங்குவது என்று பொருள்படுகின்றது. அப்படிப்பட்ட ஆலயங்கள் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம் என்றும் சிறு வயதில் படித்ததையும் நினைவு படுத்த விளைகின்றேன். எது எவ்வாறிருப்பினும் இன்றைய காலப்பொழுதில் தமிழ் இனம், மதம், தமிழ் மொழி, கலை, பண்பாடு, கலாச்சாரங்கள் பற்றி பல மேடைகள் அமைக்கப்பட்டு அறிஞர்கள் தமது ஆராய்ச்சியின் பிரகாரம் பெற்றுக் கொண்ட கருத்துப் பரிமாற்றங்களை முன்வைத்து வாதப்பிரதிவாதங்களையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருப்பதையும, நாம் அன்றாடம் அறிகின்றோமல்லவா?. எனவே ஒரு ஆலயத்தின் தோற்றம் மொழியையும், மதத்தனையும் வளர்ப்பதாகக் கூறுகின்றார்கள். எதையும் கதைப்பதோடு விட்டுவிடாமல் அவற்றினை செயற்படுத்தக் கூடியளவுக்கு திட்டமிடலும் வேண்டும். எனவே ஸ்ரீ விஷ்ணு துர்க்கா ஆலயத்திற்கு தமிழ் மக்களின் உதவியையும், ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றார்கள் அம்மன் அடியவர்கள்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேர்ன்.