நிலைதடுமாறிய ஆஸி இரண்டாவது டெஸ்டையும் பறிகொடுத்தது

.

05/03/2013 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் கடந்த 2ஆம் திகதி ஆரம்பமானது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி மதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதையடுத்து தனது முதலாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி சார்பில் முரளி விஜய், புஜாரா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் (167), புஜாரா (204) 2ஆவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். அத்துடன் டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்சில் (18) 1000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர்கள் வரிசையில் புஜாரா இரண்டாவது இடத்தினையும் பிடித்துள்ளார்.இதனடிப்படையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 503 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

266 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, ஆரம்பம் முதலே இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர் கொள்ளமுடியாது திணறியது.
இந்நிலையில், நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களை எடுத்திருந்தது. எட்கோவன் 26 ஓட்டங்களுடனும் வொட்சன் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
போட்டியின் நான்காம் நாளான இன்று துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சுக்கு திணறி 67 ஓவர்களை எதிர்கொண்டு 131 ஓட்டங்களை எடுத்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் மற்றும் 135 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக எட்கோவன் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் அஸ்வின் முதலாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் புஜாரா தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற அடிப்படையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.  நன்றி வீரகேசரி 

No comments: