.
கண்ணீரை ஆவியாக்கியபடி
ஒரு காலம்
வறண்டுபோய் கிடக்கிறது..
ஊரெல்லாம்
ஒருபாட்டம் மழைவராதா என்று
மண்ணை இறுகப்பிடித்தபடி
ஈரப்பதன் தேடி
வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன
திசைகளை மூடி
வீசும் அணல்காற்றில்
தீய்ந்து தீய்ந்து
ஒவ்வொரு இலைகளாக
கருகி உதிர்கின்றன
அணலாய் கொதித்துருகும்
எல்லாக்கடல்களில் இருந்தும்
ஆவியாகின்றன
கண்ணீர்த்துளிகள்
இனி முட்டி முடியாமல்
ஒரு திசையில்
விரைவில் இருட்டும்
அப்போ பெய்யும்..
பெய்யத்தானே வேண்டும்
ஒரு பெரும் மழை
பயிர் பச்சை தழைக்க
உக்கிப்போய் கிடக்கும்
உதிரம் காய்ந்த தேசத்தின்
சருகுகளை உரசியபடி
காற்று சடசடவென்று
உறுமிக்கொண்டு வீசும்
வெட்டி மின்னல் பாயும்போது
வெறும் கோடை என்ன செய்யும்..?
ஒற்றைவானம் என்ன
ஓராயிரம் வானமும்
மொத்தமாய் பிளந்துவந்து
கடலை சொரியும்
பார்
உள்ளே ஊமையாய்
எரிந்துகொண்டிருப்பது
பெருந்தீ..
ஒரு புள்ளியில்
வெடித்துப் பிழந்து
விண்ணோக்கிப்
பாயும்போது
மின்னல் தொடங்கும்..
முக்கி முக்கி
இடிமுழக்கத்தை
ஈனாமல் போக
எம்முன்னே இருப்பது
மலட்டு வானமல்ல
கண்ணீர்களால்
கருக்கொண்ட
கருவானம்..
எனக்கு தெரியும்
ஒருகாலத்தை
கடந்துபோவது
அவ்வளவு இலகுவல்ல
நாங்கள்
ஒரு கொடிய
கோடையைக் கடக்கிறோம்
மாரி கருக்கட்டுகிறது
வா குடையைத்தேடுவோம்..
மழைவரும்போது
கல்லறைகளைத்தேடி
தரைக்குவரும் நட்சத்திரங்களை
தரிசிக்க செல்லவேண்டும்...
No comments:
Post a Comment