தமிழ் சினிமா

ஹரிதாஸ்

இன்றைய உலகில் பெரும்பாலான குழைந்தைகள் ஆட்டிசம் எண்ணும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டிசம் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு.
அப்படி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன்தான் ஹரிதாஸ்.
இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பிரத்யேக பயிற்சி கொடுத்தால் அவர்களும் தங்களின் அதீத திறமைகளை வெளிக்காட்டி இந்த உலகில் ஒரு சராசரி மனிதனாக வாழ முடியும் என்பதை உலகில் பல பேர் நிரூபித்துள்ளார்கள்.
ஆட்டிசம் குறைபாடுள்ள மகனுக்கும் ஒரு தந்தைக்கும் உள்ள உணர்சிப்போராட்டம் தான் இந்த படத்தின் கதை. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் கிஷோர், சினேகா மற்றும் சிறுவன் ஹரிதாஸ்(பிரிதிவி ராஜ் தாஸ்).
படத்தின் ஒரு வரிக் கதையை வைத்து படம் ஒரு ஆவணப்படம் எண்ணும் முடிவுக்கு வராதீர்கள். நேர்த்தியான கதையும் , திரைக்கதையும், ஒளிப்பதிவும் இந்த படத்தை சுவாரசியமாகவும் படத்தை வேறு ஒரு தளத்திற்கும் எடுத்து சென்றுள்ளது.
மிடுக்கான காவல் துறை அதிகாரியாக வரும் கிஷோர், கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிடுக்கும் உடலமைப்பும் கொண்டதால், இவரை போலிஸ் அதிகாரியாக எளிதில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இவர் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். தன்னுடைய பாத்திரம் என்ன என்பதை அறிந்து நடித்திருக்கிறார். பல காட்சிகளில் நம் கண்களை குளமாக்கவும் தவறவில்லை.
பள்ளி ஆசிரியையாக வரும் சினேகா, தன்னுடைய பாந்தமான நடிப்பில் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டு செல்கிறார். சிறுவனை அரவணைத்து அவர் நடத்தும் விதத்தில், இந்த குறைபாடுள்ள குழந்தைகளிடம் ஆசிரியை எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அழகாக தனது நடிப்பால் உணர்த்தியுள்ளார். அளவான நடிப்பு, தேவையான உணர்ச்சிகள் என்று தன்னுடைய கதாபாத்திரத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் சினேகா.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவனாக பிரிதிவிராஜ் தாஸ். படத்தின் மிகப்பெரிய பலமே இவன்தான். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் ஆரம்பம் முதல் நடிப்பை மட்டும் வெளிக்காட்டியுள்ளான். உண்மையிலேயே ஒரு ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு சிறுவன் நடித்தல் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு நடிப்பில் கச்சிதம்.
பரோட்டா சூரி, நாளுக்கு நாள் நடிப்பிலும் நகைச்சுவையிலும் மனுஷன் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார். கிஷோருக்கு டிரைவர்ராக வரும் சூரி, பண்ணும் நகைச்சுவை காட்சிகள் நன்றாக சிரிக்கும்படி இருக்கின்றன. பள்ளிகூடத்தில் குழந்தைகளிடம் இவர் வாங்கும் மொக்கையே சான்று.
ஆட்டிசம் குழந்தைகளிடம் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக் கூறும் யூகி சேது, இந்த நோயை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த தவறவில்லை. அந்த அளவுக்கு இந்த நோயை பற்றி ஆராய்ந்துள்ளார் இயக்குனர். ஒரு இடத்தில் கூட மிகைப்படுத்தி கூறாமல், அளவாக எடுத்து கூறியதற்கு ஸ்பெஷலாக பாராட்ட வேண்டும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் எந்த அளவுக்கு மனதில் வலியுடன் உள்ளார்கள் என்பதனையும் , அப்படிப்பட்ட குழந்தைகளின் கஷ்டங்களையும் மிக நேர்த்தியாக கூறியுள்ளார். இவரின் முந்தைய படங்களுக்கும் இதற்கும் நிச்சயமாக எந்த ஒரு சாயலுமே இருக்காது. இந்த படத்திற்கு முதன்முதலாக கதை திரைக்கதை எழுதி இயக்கியும் உள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு உணர்ச்சி ததும்ப வந்துள்ள படம். அனைவரும் இன்றைய சூழலில் பார்க்கவேண்டிய படமும் , தெரிந்து கொள்ளவேண்டிய படமாகவும் உள்ளது.
நடிகர் : கிஷோர்
நடிகை : சினேகா
இயக்குனர் :ஜி.என்.ஆர் குமரவேல்




அமிரீன் ஆதி-பகவன்

உருவ ஒற்றுமை உள்ள ஆதி–பகவன் என்ற இரண்டு நபர்களிடையே நடக்கும் வித்தியாசமான யுத்தம் தான் இப்படத்தின் கதை.
மும்பை நகரின் பயங்கரமான தாதாவாகயிருக்கிறான் பகவான்.
இவன் மீது பதினெட்டு கொலை வழக்குகள் உள்ள நிலையில் மத்திய மந்திரியின் தம்பியை அவர் கண்முன்பே கொன்று விடுவதால் தம்பியை இழந்த மந்திரி, பகவானை ‘என்கவுன்டர்’ செய்ய ஏற்பாடு செய்கிறார்.
கதாநாயகி நீந்து சந்திரா பகவானின் காதலி. அவனை என்கவுன்டரில் இருந்து காப்பாற்ற பாங்காக் சென்று பகவான் போன்ற உருவ தோற்றம் கொண்ட ஆதியை மயக்கி மும்பைக்கு அழைத்து வந்து கொன்றுவிட ஏற்பாடு செய்கிறாள். அவளுடைய திட்டம் நிறைவேறியதா, இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.
ஆதி–பகவான் என இரண்டு வேடங்களில், ஜெயம் ரவி அமர்க்களப்படுத்தியிருக்கின்றார். ஆதியாக பாங்காக்கில் பணக்கார போதையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்டைலான ஜெயம் ரவி ரசிக்க வைக்கிறார். ‘பகவான்’ கதாபாத்திரம் ஜெயம் ரவிக்கு இன்னொரு மைல் கல் என்று சொல்லலாம்.
சண்டை காட்சிகளில் அபாயத்தின் உச்சத்தை தொட்டு விளையாடியிருக்கிறார். குறிப்பாக பொலிசாரிடமிருந்தும், முரட்டுத்தனமான பணக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக மோதுகிற சண்டை காட்சியும், நீத்து சந்திராவுடன் மோதும் சண்டை காட்சியும், படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கின்றது.
அனுதாபத்துக்குரிய ‘பார் கேர்ள்’ ஆகவும், ஒரு பயங்கர தாதாவின் காதலியாகவும் இரண்டு மாறுபட்ட முகங்களை காட்டியிருக்கிறார் நீத்து சந்திரா. பொலிஸ் அதிகாரியாக அனிருத், கடத்தல் கும்பலின் தலைவனாக பாபு ஆன்டனி, ஜெயம் ரவியின் தாயாக சுதாசந்திரன், ரவுடி கும்பலின் தலைவனாக ‘வேட்டைக்காரன்’ ரவி, மந்திரியின் தம்பியாக ரவிசங்கர், எம்.பி.யாக பாலாசிங் என படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தேவராஜின் ஒளிப்பதிவில் பாங்காக், மும்பை நகரங்களின் அழகையும் பிரமிப்புகளையும் நேரில் பார்த்தது போன்று திருப்தியாக இருந்தாலும் யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் பாடல்களைவிட பின்னணி இசை தான் கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.
இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்குப் போய் பாங்காக் நகரில் கஷ்டப்பட்டு தப்பான வழியில் பணம் சம்பாதித்த ஒரு கிரிமினல் ஆசாமி ஒரு பெண்ணை சந்தித்தவுடன் சுலபமாக நம்பிவிடுவானா? எந்த பாதுகாப்பும் இல்லாமல் மும்பைக்கு புறப்பட்டு வருவானா? என்ற கேள்விகள் எழுந்தாலும், எதிர்பாராத திடீர் திருப்பங்களும், திகிலூட்டும் சண்டை காட்சிகளும், இதுவரை பார்த்திராத காட்சி அமைப்புகளும் திருப்தியை ஏற்படுத்திகின்றன.
அமீரின் இயக்கத்தில் இது வரை கண்டிராத ஒரு புதிய பரிணாமத்தை இப்படம் கொடுத்துள்ளது.
நடிப்பு: ஜெயம் ரவி, நீத்து சந்திரா, பாபு ஆன்டனி, சுதா சந்திரன்
ஒளிப்பதிவு: தேவராஜ்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ஜெ அன்பழகன்
இயக்கம்: அமீர்


நன்றி விடுப்பு   

No comments: