இலங்கைச் செய்திகள்


முஸ்லிம் மாணவ மாணவியர் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்: சிங்களப் பாடசாலையில் பணிப்பு

இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சவூதி இணக்கம்

இந்தியாவின் வட,கிழக்கில் பிரகாசிக்கும் ஒரு"நம்பிக்கை நட்சத்திரம்'


 தமிழர் விவகாரம் ; சந்தியில் நிற்பது கொழும்பு அல்ல, டில்லியே


  40 வருடமாக வசிக்கும் முள்ளியவளை மக்களை வெளியேற ஒருவார அவகாசம் ===================================================================
முஸ்லிம் மாணவ மாணவியர் ஆசிரியரின் காலில் விழுந்து வணங்க வேண்டும்: சிங்களப் பாடசாலையில் பணிப்பு


05/03/2013 பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் இன்று முதல் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர் அணியும் கலாசார உடையினையும் தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப் போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்   நன்றி வீரகேசரி

இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சவூதி இணக்கம்

05/03/2013 வெளிநாட்டில் தொழில்வாய்பை பெற்று செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட சவூதி அரேபியா இணக்கியுள்ளது.

இதுபற்றிய உடன்படிக்கை ஒன்று சவூதி அரேபிய அரசாங்கத்துடன் விரைவில் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற ஒப்பந்தங்கள் ஏற்கனவே ஒமான் மற்றும் குவைத் அரசாங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதன் முறையாக இந்த ஒப்பந்தில் கைச்சாத்திட சவூதி அரேபிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. முன்னர் பல முறை தொடர்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சவூதி அரேபிய அரசாங்கம் மறுப்பு தெரிவித்து வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய அந்த நாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்   நன்றி வீரகேசரி


.

 

 

 

   இந்தியாவின் வட,கிழக்கில் பிரகாசிக்கும் ஒரு"நம்பிக்கை நட்சத்திரம்'
அஹிம்சைப் போராட்டத்தின் மூலம், நீதி, நியாயத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் கடந்த 12 ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்துவரும் ஐரோம் சர்மிளா (40 வயது) என்ற வீராங்கனையின் திடசித்தத்துக்கு முன்னுதாரணமாக அவரைத் தான் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. இந்தியாவின் வட, கிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்தவர் ஐரோம் சர்மிளா. மணிப்பூரில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட அதிகாரத்தை அகற்ற வேண்டும் என்பதே சர்மிளாவின் 12 வருட கால உண்ணாவிரதப் போராட்டத்தின் முக்கிய வலியுறுத்தல். அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறாரென்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜராவதற்காக இந்தியத் தலைநகர் டில்லிக்கு கொண்டு வரப்பட்ட அப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் மணிப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். "நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை. நான் நடத்துவது அகிம்சைப் போராட்டம் மட்டுமே'  என்று அவர் நீதிபதியிடம் கூறியுள்ளார்.

இராணுவத் துணைப் படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2000 ஆம் ஆண்டு நவம்பரில் ஐரோம் சர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். படையினருக்கு சிறப்பு விடுபாட்டை வழங்கும் சட்டமூலத்தை அகற்றி விட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்த ஐரோம் உண்பதில்லை, தண்ணீர் குடிப்பதில்லை.பல் துலக்குவது கூட இல்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வரும் சர்மிளாவுக்கு மூக்குத்துவாரமூடாக குழாய் வழியாக இரு தடவை நீராகாரம் செலுத்தப்படுகிறது.

புரதம், மாப்பொருள், விற்றமின்கள் திரவமாக உடலில் செலுத்தப்படுகிறது. 2005 இல் டில்லியில் தனது எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ஐரோம் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 7 வருடங்கள் கடந்த நிலையில் இப்போதுதான் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.தான் முன்னெடுத்து வருவது எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு வடிவமே என்று நீதிமன்றத்தில் ஐரோம் கூறியதையடுத்து மே 22 வரை நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

அகிம்சா மூர்த்தியாம் அண்ணல் காந்தியை முன்னுதாரணமாகக் கொண்டு தனது போராட்டத்தை தொடரப்போவதாக ஐரோம் தெரிவித்திருக்கிறார். இம்பால் நகரிலுள்ள மருத்துவமனையில் தங்கியிருக்கும் அவர் தனது தாயாருடனோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ தொடர்பை வைத்திருக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு அவர்கள் வலியுறுத்துவார்களென்பதால் சந்திப்பைத் தவிர்த்துக் கொள்கிறார். தனியே தான் வந்தோம். தனியாகவே போகிறோம் இதனை செய், அதனைச் செய் என்று தனக்கு மற்றவர்கள் நிர்ப்பந்திப்பதை தான் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகளுக்கான சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றிருக்கும் ஐரோம், இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடிய தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி போன்ற மாமனிதர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதை விரும்பவில்லை. மனிதர்களை துதிப்பதை நான் விரும்பவில்லை. சகல மனிதர்களுக்குமே இரு பக்கங்கள் உள்ளன. நல்லது, கெட்டது என்ற இரு தன்மைகளும் இருக்கும். ஒருவரை நாங்கள் துதிக்கும் போது அவரின் தீமையான பக்கத்தையும் துதிக்கிறோம் என்பது அவர் வெளிப்படுத்தியிருந்த யதார்த்தபூர்வமான பதில்.

உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த போது இவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது பற்றி அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. ஆனால் 12 வருடங்கள் கடந்த நிலையில் போராட்டத்திற்கான அத்திபாரக் கல்லாக தான் இருந்திருக்கிறார் என்று உணர்வதாக அவர் கூறுகிறார். மணிப்பூரை விட்டு இராணுவம் வெளியேற வேண்டுமென ஐரோமின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் 40 இற்கும் மேற்பட்ட கிளர்ச்சிக் குழுக்கள் அந்த மாநிலத்தில் இயங்குவதால் இராணுவத்தின் பிரசன்னம் அவசியம் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஆனால் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் பொதுமக்களே அதிகளவுக்கு பாதிக்கப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. 

எது எவ்வாறாக இருப்பினும் சாதாரண மனிதர்களுக்குள்ள விருப்பு, வெறுப்புகளை தியாகம் செய்து பொதுநலன் கருதி கடந்த 12 வருடங்களாக சாத்வீக வழியில் போராடும் ஐரோம் சர்மிளாவை இரும்புப் பெண் என்று மட்டும் வர்ணித்து விட முடியாது. இந்தியாவின் வட, கிழக்கு மாநிலமான மணிப்பூரின் நிலைமையிலேயே இலங்கையின் வட,கிழக்கு குறிப்பாக வடமாகாணம் காணப்படுகிறது. தமது அடிப்படை உரிமைகளுக்காக ஏங்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஐரோம் சர்மிளாவின் சாத்வீகப் போராட்டம் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாகும்.       நன்றி தினக்குரல்






 தமிழர் விவகாரம் ; சந்தியில் நிற்பது கொழும்பு அல்ல, டில்லியே

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாட்டை வலியுறுத்தி ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்  அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானம் தொடர்பான எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம்  உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்ற அதேசமயம், தெற்காசியாவில் பலம் பொருந்திய பெரியநாடும் உலகிலேயே பாரிய ஜனநாயக தேசமாக கருதப்படுவதுமான இந்தியா தனது தென்கோடிப் புறத்திலுள்ள இலங்கைத் தீவு தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய ஜெனீவா விவகாரத்தினால் இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்குள்ளேயும் அரசுக்கு வெளியே இருந்து ஆதரிக்கும் கட்சிகளுக்கும் இடையில் கடும் பிளவு ஏற்பட்டிருப்பதாகத் தென்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் நீண்ட காலத் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வொன்றைக் காணவேண்டும் என வலியுறுத்தி வரும் தமிழக அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா , வட இந்தியாவில் செல்வாக்கு மிக்கதும் அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சியுமான சமாஜ்வாதி போன்றவையும் அமெரிக்காவின் உத்தேசத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றன. 

ஆனால், பூகோள  அரசியல் நலன்சார்ந்த விடயங்களுக்கே முன்னுரிமை கொடுப்பதற்கான உள்மன விருப்பத்துடனேயே  இந்திய அரசாங்கம் இருந்து வருவது பாராளுமன்றத்தின்  மேல் சபையான ராஜ்ய  சபையிலும் நேற்று முன்தினம் கீழ் சபையான லோக சபையிலும் வெளிவிவகார அமைச்சர் சல்மான்  குர்ஷிட்  அளித்த பதில்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. கடந்த வருட மார்ச்சில் அமெரிக்க அனுசரணையுடனான தீர்மானத்தின் கனதியைக் குறைத்து நீர்த்துப் போக வைத்த பின் இந்தியா ஆதரவளித்தது என்பது இரகசியமல்ல. ஆனால், இந்த வருடமும் அதே விடயத்தை மேற்கொள்வது உள்நாட்டு அரசியலில் குறிப்பாக தமிழகத்தில்  மோசமான எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அமெரிக்காவுடன் நேரடியாக பேசுமாறு இலங்கையை இந்தியா  தூண்டுகிறது. ஆனால், வெளிப்படையாக இலங்கை அதனை நிராகரித்து விட்டதை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவாவில் தீர்மானத்தை முன்னின்று சமர்ப்பிக்க வேண்டிய விதத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அமைய வேண்டுமென இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்று கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்த உழவு இயந்திரங்கள் வழங்குவது மட்டும் போதாது என்று இடித்துரைத்திருக்கிறார்.

இந்திய அரசின் முக்கிய பங்காளியான தி.மு.க. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கடுமையான ஆதரவு நிலைப்பாட்டை  எடுத்திருக்கிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்படும் என்று சல்மான் குர்ஷிட் கூறியிருக்கின்ற போதிலும்  பதிலளிக்கும் கடப்பாடு  இலங்கையின் உள் விவகாரம் என்றும் தீர்வு இலங்கையிடமிருந்தே வர வேண்டும் எனவும் இந்தியா பிராந்தியத்தில்  பெரியண்ணனாகவோ அல்லது உலக பொலிஸ்காரனாகவோ இருக்க முடியாது என்றும் இதனை உணர்ந்து கொள்ளுமாறும் அழுத்தி உரைத்திருக்கிறார். அதேசமயம் இலங்கையில் யுத்தத்தால் சாதிக்க முடியாததை இராஜதந்திரத்தால் நிறைவேற்ற முடியுமென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தையும் அதனைத் தாண்டிச் செல்லும் தீர்வுமே அவசியமெனவும் 13 இற்கும் குறைவானதாக தீர்வு இருக்க முடியாது என்றும் அழுத்தி உரைத்திருக்கிறார்.  13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையையே  இல்லாதொழிப்பதற்கான விருப்பத்தை அரச உயர் மட்டத் தலைவர்கள் விடுத்து வரும் நிலையில்,  இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு  செவிசாய்க்கப்படுமா? என்பது கேள்வி.

ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தின் இறுதி நகல் வரையை யாதர்த்த பின்பே இந்தியா இறுதி முடிவை எடுக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளிவிவகார அமைச்சர் குர்ஷிட்டும் அறிவித்திருக்கின்றனர். ஜெனீவாவில் எத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டாலும் நீண்ட காலமாக துன்பப்படும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு நிரந்தர தீர்வொன்று எட்டுவதற்கு அத்திபாரமிடுவதற்கான செயற்பாடே அவசியம். அதே சமயம் அடுத்த வருடம் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவிருப்பதால் அதற்கான அரசியல் இலாப நட்டக்கணக்கை கூட்டிக் கழித்துப் பார்ப்பதாக தமிழ் மக்களின் பிரச்சினை பந்தாடப்படக் கூடாது. ஆனால் , சர்வதேச பிராந்திய பூகோள நலன்சார்ந்த அரசியலுக்குள் இலங்கைத் தமிழர் விவகாரம் முன்னொரு போதுமில்லாத வகையில் இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவே தென்படுகிறது. நடைமுறையில் அந்த மக்களின் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றனவே தவிர தீர்வென்பது தொடர்ந்தும் கானல் நீர் தான்.   நன்றி தினக்குரல்









  40 வருடமாக வசிக்கும் முள்ளியவளை மக்களை வெளியேற ஒருவார அவகாசம்

peoplsமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளை மத்திய பகுதியில் கடந்த 40 வருடங்களாக வசித்துவரும் தமிழ்க் குடும்பங்களை ஒரு வார காலத்துக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கொடுத்துவந்த அழுத்தங்களையடுத்தே காட்டுத் திணைக்கள அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் இம்மக்களை வெளியேறுமாறு அறிவித்திருக்கின்றார்கள்.

முள்ளியவளை மத்திய பகுதியிலுள்ள தமிழ்க் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கும் அங்கு ஐந்து ஏக்கர் நிலத்தில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டு வருகின்றது. இதற்காக இந்தப் பகுதியில் காலாதிகாலமாக வசித்துவரும் தமிழ்க் குடும்பங்களை வெளியேறுமாறு அதிகாரிகளும், படையினரும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவருவது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்தக் கிராமத்துக்கு வந்த காட்டுத் திணைக்கள அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் தமிழ்க் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என அறிவித்தல் பலகை ஒன்றை வைத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசுடன் இணைந்து செயற்படும் வடபகுதித் தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதிகளும் இந்தக் கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்று மக்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர். பி.பி.சி.க்கு இது தொடர்பான செய்திகளைக் கொடுத்தது யார் எனக் கேட்டே அவர்கள் எச்சரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்தே காட்டுத் திணைக்கள அதிகாரிகள் முள்ளியவளை மத்திய கிராமத்துக்கு நேரில் வந்து குறிப்பிட்ட கிராமவாசிகள் வசிப்பது காட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணி எனவும், அதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் எனவும் எச்சரித்தனர். அதனையடுத்தே இது தொடர்பாக அறிவித்தல் பலகை ஒன்று அங்கு நாட்டப்பட்டுள்ளது.

1972ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் காடுகளை வெட்டி குடியிருப்புக்களை அமைத்த இந்தக் கிராம மக்கள் இறுதிக்கட்டப் போரின் போது அனைத்தையும் இழந்து மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்தார்கள். பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் விடுவிக்கப்பட்ட இவர்கள், வீடுகளை அமைப்பதற்கோ வாழ்வாதாரங்களைப் பெறுவதற்கோ வசதியில்லாத நிலையில் தமது உறவினர்கள் நண்பர்களின் இல்லங்களிலேயே தங்கியிருந்தனர்.

தற்போது தமக்குக் கிடைத்த குறைந்த பட்ச வசதிகளுடன் சிறிய சிறிய கொட்டில்களை அமைத்து அங்கு குடியிருக்க மக்கள் முற்பட்டுள்ள நிலையில்தான், இராணுவத்தினர் அங்கு முகாம் அமைப்பதற்கு 5 ஏக்கர் காணி வேண்டும் எனக் கேட்டு வற்புறுத்தத் தொடங்கியிருக்கின்றார்கள்.
இப்பகுதி மக்கள் தமக்குரிய குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகளையும் தடிகளையும் பெற்றுக்கொள்வதற்குக்கூட முடியாதவர்களாக உள்ளனர்.

அரசாங்கத்தினால் இவர்களுடைய மீள்குடியேற்றத்துக்காக எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை. போரின் போது அனைத்தையும் இழந்த இவர்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தில் கூட உதவி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 40 வருட காலமாக வசித்துவரும் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேற முடியாது என்று அம்மக்கள் கூறியிருக்கின்றார்கள்.      நன்றி தினக்குரல்

No comments: