ஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 5 - மதிதொண்டரடிப் பொடியாழ்வார்

பச்சைமா மலைபோல் மேனிப்
பவளவாய்க் கமலர் செந்கண்
அச்சுதா அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே

ஸ்ரீரங்கப் பெருமானை ஆனந்தமாக அனுபவித்துப்பாடுகின்றார் ஆழ்வார். கடும் பச்சை நிறத்தில் மேனி, பவளம் போல் வாய், தாமரைபோல் செங்கண்கள் இதற்குமேல் ஒன்றுஞ் சொல்ல இயலாமல் அச்சுதா, அமரர் தலைவர், ஆயர் தம் கொழுந்தே என்று சொல்வதால் ஏற்படும் சுவை, இன்பம் இவை தவிர வேறெதுவும் வேண்டேன் என்கின்றார். ஏனையவை எல்லாம் காலத்தால் அழிபவை.

வேதநூற் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதில் பதினை யாண்டு
பேதை பாலகன தாகும்
புpணிபசி மூப்புத்துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகரு ளானே

சாஸ்திரப் பிரமாணப்படி மனிதன் ஆயுசு 100. முழுவாழ்வு வாழ்கின்றான். ஆழ்வார் கணித்துக் கூறுகின்றார் எவ்வாறு காலம் இறைதொடர்பில்லாமல் வீணாகிறதென்பதை. வாழ்க்கையில் பாதி நித்திரையில் கழியும். முதல் 15 ஆண்டுகள் அறிவு வளர்ச்சியற்ற பாலப்பருவம். மிகுதியிலும் நோய், முதுமைக்கால இயலாமை, வாழ்க்கையில் ஏற்படுந் துன்பங்கள் யாவற்றில் பெரும் பகுதி கழியும். ஆதலால் உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் பிறவியே வேண்டாம் என்கின்றார்.


இப்படிப் பாடிய ஆழ்வாரின் இளமைப் பெயர் விப்ர நாராயணா. ஆழகிய இளைஞனாகிய இவர் ஸ்ரீரங்கத்திற்கு அண்மையில் ஒரு மிக அழகிய பூந்தோட்டத்தை அமைத்து ஸ்ரீரங்கநாதருக்கு பூ மாலை கைங்கர்யத்தைச் செய்து வந்தார். ஒரு நாள் இரு அழகிய இளம் பெண்கள் ஸ்ரீரங்க நாதனரத் தரிசித்துவிட்டுத் திரும்புகையில் இப்பூந்தோட்டத்தின் அழகால் கவரப்பட்டு அதனுள் சென்று பார்த்தனர். தேவி, தேவதேவி என்ற அப்பெண்களில் தேவதேவி பெயருக்கேற்றாற்போல் மிக அழகாக இருந்தாள். நாராயண சிந்தையிலேயே ஆழ்ந்திருந்த விப்ரநாராயணன் இவர்களைக் கவனிக்கவேயில்லை. இதனால் தாக்கமடைந்த தேவதேவி தான் அங்கு தங்கப் போவதாகவும் சகோதரி தேவியை வீடு திரும்பும் படியும் அனுப்பிவிட்டாள். தேவதேவி தோட்டத்தைச் சுத்தமாகவும் அங்கிருந்த குடிசையையும் அழகாகவும் வைத்திருக்க ஆவன செய்தாள். ஆனால் விப்ர நாரயணனோ நாராயண சிந்தையைத் தவிர வேறெதுவுமில்லாதிருந்தான். விப்ர நாராயணனுக்கு சோதனை காலமாகத் திடீரென கடும் புயலும் மழையும் பொழியத் தொடங்கிற்று. பூந்தோட்டத்திலேயே தங்கியிருந்த தேவதேவி தெப்பமாக நனைந்து குளிரில் நடுங்குவதைக் கண்ட விப்ர நாராயணனன் அவளை எங்கிருக்கிறாரென்பதை அப்பொழுதுதான் விசாரித்தறிந்து குடிசைக்கு அழைத்து தன் உடுப்பையும் கொடுத்தான். அவள் எண்ணம் நிறைவேறியது. இளைஞனும் இவள் சிந்தையாயிருக்கத் தொடங்க தேவதேவி உடனே தன்வீடு திரும்பிவிட்டாள். அவளைத் தேடி விப்ர நாராயணன் விரைந்துபோய் அவளின் கதவைத் தட்ட அவளின் தாயார் “பணம் கொணர்ந்துள்ளீரா” எனக் கூறிக் கதவைத் தாளிட்டுவிட்டாள். இறைவன் அருள் பாலிக்க திருவுளங் கொண்டார்.  ஒரு பிராமணச் சிறுவன் வேடத்தில் கோவிலிருந்த ஒரு பொற்கிண்ணத்தைக் கொண்டுபோய் தேவதேவியின் அன்னையிடம் கொடுத்தார். விப்ர நாராயணன் அங்கு அனுமதிக்கப் பட்டார். அடுத்தநாள் காலையில் பூசகர் பூசைசெய்யப் போன பொழுது ஒரு பொற்கிண்ணத்தைக் காணாது உடனே காவலர்களுக்கு அறிவிக்க அரசனும் அவ்வூரெங்கும் தேடும்படி கட்டளையிட்டான். தேவதேவியின் அன்னை விப்ர நாராயணனே தந்ததாகக் கூற விப்ர நாரயணனை வீழி வழியாகக் கட்டியிழுத்துக் கொண்டு போயினர். இதனால் பெருந்துன்படைந்த இளைஞனுக்கு அகங்காரம் நீங்க நல்ல அமைதி பெற்றான். பெருமாளும் அரசர்க்கு இது ஒரு சோதனைதான் என்று உணர்த்தினார்.
தொண்டர்கள் அடித்தூசுக்கே தான் சரணம் என்று நெஞ்சுருகிக் கூறிய விப்ர நாராயணன் தொண்டரடிப்பொடி ஆழ்வாராயினர்.

வண்டினம் முரலும் சோலை
மயிலினம் ஆடும் சோலை
கொண்டல்மீ தணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
அணி திரு வரங்க மென்னா
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை
விலக்கி நாய்க் கிடுமினீரே.

ஸ்ரீரங்கத்தின் சோலை அழகைக் காட்டி அரங்க நாதரை வணங்காதவர்கள் உண்டு சுகித்திருக்க வேண்டாமென அழுத்தமாகக் கூறுகிறார்.
பின்னும்

அரங்கமா கோயில் கொண்ட 
கரும்பினைக் கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்குமாறே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அரங்மா நகரத்தானை இனிமை அனுபவிக்க அனுபவிக்க மேலிருந்து அடியை நோக்கிப் போகும் கரும்பின் சுவையைக் கூறித்திளைக்கின்றார்.

காரொளி வண்ணனெ என்
கண்ணனே கதறுகின்றேன்

என ஆற்றாமை மிக்குப் பாடுகின்றார்.
திருப்பள்ளிபெழுச்சியும் பாடியுள்ளார்.  
தொடரும் ......


No comments: