மெல்பேணில் வியந்து இரசிக்க வைத்த வீணை அரங்கேற்றம்

.
                                        தேவி திருமுருகன்,  மெல்பேண்


அண்மையில் மெல்பேணில் றோவில் மேல்நிலைப் பள்ளி, காட்சிக் கலைக்கூடத்தில் இடம்பெற்ற செல்வி காயத்திரி மதனசேனராஜாவின் வீணை அரங்கேற்றம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி மிகவும் மகிழ்ந்து இரசிக்க வைத்தது. பரதநாட்டியம்,  மிருதங்கம்,  வாய்ப்பாட்டு ஆகிய நுண்கலைகளின் அரங்கேற்றங்கள் அடிக்கடி நடைபெறுவது சாதாரணம். ஆனால் வீணை அரங்கேற்றம் என்பது அத்தி பூத்தாப்போல மிகவும் அரிதாகவே நடைபெறும். நூற்றுக்கணக்கான மாணவர்கள் வீணைவாத்தியத்தைக் கற்றுக்கொண்டிருந்தாலும்,  அரங்கேற்றம் வரை பயிற்சியினைத் தொடருவோர் மிகச்சிலரே. அவர்களிலும் அரங்கேற்றம் செய்வோர் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையிலேயே உள்ளனர்.

இந்த நிலையில்,  அண்மையில் மெல்பேணில் செல்வி காயத்திரி மதனசேனராஜா தனது வீணை அரங்கேற்றத்தினை நிகழ்த்தியிருந்தார். மொனாஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வியின் இறுதியாண்டு மாணவியான காயத்திரி கல்வி தொடர்பான கற்கை அழுத்தங்களுக்கு மத்தியில் இதனை நிறைவேற்றியது உண்மையிலேயே சாதனைதான். அதே வேளை அவரது உயர்கல்வித் தகைமை காரணமாக அமைந்துவிட்ட அறிவும், முழுமையும்,  நிதானமும் வீணை வாத்தியத்தின் நுட்பங்களைத் தெளிவுறத் தெரிந்து கொள்ளவும்,  ஈடுபாட்டுடன் வாசிக்கவும் பேருதவிபுரிந்திருக்கும் என்பதை அரங்கேற்றச் சிறப்பு வெளிப்படுத்தியது.


மெல்பேணில் 1990 ஆம்  ஆண்டில் தமது குருவின் பெயரில் கர்நாடக இசைக் கல்லூரியினை ஸ்தாபித்து அன்றிலிருந்து வீணை வாய்ப்பாட்டு என்பவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கும் இசை இரட்டையர்களான ராம்நாத் ஐயர்,  கோபிநாத் ஐயர் ஆகியோரின் பிச்சுமணி கர்நாடக இசைக் கல்லூரியில் 1999 ஆம் ஆண்டிலிருந்து காயத்திரி வீணை வாத்தியத்தினை முறையாகக் கற்றுவந்திருக்கின்றார்.
ஏனைய வாத்திய அரங்கேற்றங்களில் இருந்து வீணை அரங்கேற்றம் சற்று வித்தியாசமானது. வீணை அரங்கேற்றத்தில் அரங்கேற்றத்தைச் செய்பவர் மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருப்பார். பக்கவாத்தியக் கலைஞர் ஒரவரோ அல்லது பலரோ அவருக்கு இடப்பக்கம் அல்லது வலப்பக்கத்தில் அவரைப்பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஏனை சில வாத்திய அரங்கேற்றங்களில் அரங்கேற்ற நாயகர் பக்கவாத்தியக் கலைஞரைப் போல அருகே இருக்க  பாடகர்,  அல்லது வேறு வாத்தியக் கலைஞர் ஒருவர்தான் நடுநாயகமாக அமர்ந்திருப்பார்.அந்தவகையில் இந்த வீணை அரங்றே;றத்தில் அரங்கேற்ற நாயகி செல்வி காயத்திரி மேடையில் நடுவே வீணையோடு அமர்ந்திருக்கää வலப்பக்கத்தில் பக்கவாத்தியக்கலைஞரான உலகப் புகழ்பெற்ற மிருதங்க வித்துவான் திரு சிதம்பரம் பாலசங்கர் அமர்ந்திருந்தார். காயத்திரி வீணையின் நரம்புகளில் தன் விரல்களை இதமாக தடவினார். காலையில் சூரியனின் கதிர்கள் எழுவதுபோல வீணையிலிருந்து அமைதியாக எழுந்த ஒலி மண்டபமெங்கும் இனிமையாகப் பரவியது.
சுகானா இராகத்திலும்,  ஆதி தாளத்திலும் அமைந்த,  திருவொற்றியூர் தியாகையரின்,  “கருணிம்ப” என்ற பாடலுக்கான வீணை இசை நிகழ்ச்சியை ஆரம்பித்த வைத்தது.
தொடர்ந்து முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் “வாதாபி கணபதிம்” ஹம்சத்வனி இராகத்திலும்,  ஆதி தாளத்திலும்,  மற்றும்,  கோபாலகிரு~;ண பாரதியார் அவர்களின்,  “சபாபதிக்கு வேறு தெய்வம்” ஆபோகி இராகத்திலும் ரூபக தாளத்திலும் வீணையின் நாதத்தில் இசைவெள்ளம் மண்டபம் எங்கும் பரவ கச்சேரி களைகட்டத் தொடங்கியது.
பெரியசாமி தூரன் அவர்களின் “முருகா முருகா” என்ற பாடல் சாவேரி இராகத்திலும்,  மிஸ்ரசாப்பு தாளத்திலும்,  முத்துசாமி தீட்சிதர் அவர்களின் “ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே” என்ற பாடல் ஆரபி இராகத்திலும்,  ரூபக தாளத்திலும் அமைந்த உருப்படிகள் அடுத்தடுத்து இடம்பெற்று சபையோரின் செவிகளில் இன்பத் தேனை இதமாகப் பாய்ச்சித் தம்மை மறந்து இரசிக்கவைத்தன.
வீணைவாத்தியத்தினை வெகு இலாவகமாகக் கையாளும் காயத்திரி தனது வாசிப்பில் காலப்பிரமாணம்,  இராகபாவம் என்பவற்றில் மிகவும் கரிசனை கொண்டவர் என்பதற்கு,  தியாராஜர் அவர்களின் “ஏதாவுனர” என்ற பாடலுக்கான அவரது வாசிப்பை நல்லதோர் எடுத்துக்காட்டாகச் கொள்ளலாம்.
நேரம் போவதே தெரியாமல் பார்வையாளர்கள் தம்மை மறந்து காயத்திரியின் வீணாகானத்தில் மூழ்கிக்கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம். அதற்குள் இடைவேளை வந்து விட்டது. இடைவேளைக்குப்பின்னர் இடம்பெற்ற பாடல்கள் இசையுலகில் மட்டுமன்றிப் பொதுவாக எல்லோர் மனங்களிலும் நர்த்தனம் ஆடுகின்ற பிரபல்யமான பாடல்களாக அமைந்தமை வீணை இசையில் பார்வையாளர்கள் அனைவரையும் கட்டுண்டு கிடக்கவைத்தது. மூதறிஞர் இராஜாஜியின் “குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா” என்ற பாடலின் வரிகள் திருமதி எம்.எஸ்சுப்புலட்சமி அவர்களின் குரலில் இருந்து வருவது போலவே அட்சரசுத்த உச்சரிப்பாகவே வீணையிலிருந்து வந்து வீணை பாடுவது போல இருந்தது. அழகான வாசிப்பு.
அதைப்போலவே பெரியசாமி தூரன் அவர்களின் “கலியுகவரதன்”,  மற்றும் மஹாகவி பாரதியாரின் “சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா” ஆகிய பாடல்களும் காயத்திரியின் வீணையில் தெளிவான தொனியோடு,  இசைப் பிறழ்வு, சொற்பிசிறு இல்லாமல் ரீங்காரமாக வெளிப்பட்டபோது,  பார்வையாளர்கள் தாமும் அந்தப் பாடல்களை உதடுகளால் உச்சரித்து உள்ளத்தால் முழுமையாக இரசித்தனர்.இறுதியில் தில்லானாவும்,  நிறைவாக மங்களமும் இடம்பெற்று வீணை அரங்கேற்றம் திருப்தியாக நடந்தேறியது. 
மிகவும் அரிதாகவே வீணை அரங்கேற்றத்தில் கலந்துகொள்கின்ற வாய்ப்பு இசை இரசிகர்களுக்குக் கிடைக்கும் என்றாலும்,  காயத்திரியின் அரங்கேற்றம் இரசிகர்களை இரசிகர்களுக்கு வியப்பானதொரு விருந்தாகவும் அமைந்து மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அந்த அளவிற்கு காயத்திரி இசை நுணுக்கங்களை ஐயம் திரிபற அறிந்து, பாடல்களின் இராக,  தாள வகைகளைத் தெளிவாக உள்வாங்கி வீணை வாத்தியத்தினை மிகவும் இலாவகமாகவும்,  உள்ளத்தால் அனுபவித்தும் வாசித்தார். உண்மையில் அவர் இன்னுமொரு “வீணை காயத்திரி” தான்.
வீணையின் நாதத்திற்கு ஏற்றமுறையிலும்,  மெருகூட்டும் வகையிலும் மிகவும் ஒத்துழைப்போடு,  பக்கவாத்தியக் கலைஞரான திரு சிதம்பரம் பாலசங்கர் உண்மையிலேயே அற்புதமாகத் தமது பணியினைச் செய்தார்.
இசைக் கலைஞர்கள்,  நாட்டியக் கலைஞர்கள்,  கலை ஆர்வலர்கள்,  நுண்கலை வித்துவான்கள் முதலியோர் உட்படப் பலதரப்பினருக்கும் முன்னிலையில் எல்லோரும் மகிழ்ந்தும் வியந்தும் பாராட்டும் வகையில் தனது வீணை அரங்கேற்றத்தினைச் செவ்வையாகவும்,  சிறப்பாகவும் செல்வி காயத்திரி மதனசேனராஜா பூர்த்திசெய்தார். அவரது கலைப்பயணம் தொடர எமது வாழ்த்துக்கள்.   
 
 – தேவி திருமுருகன்,  மெல்பேண்


No comments: