.
யாழ்ப்பாணத்துக்கு கணணி பரவலாக அறிமுகமான நேரத்தில் எத்தினை பேர் ஊரில் இருந்தீர்களோ தெரியாது..அப்படி இருந்திருந்தால் அந்த நேரம் புதிது புதிதாக முளைத்த பல கணணி திருத்தும் கடைகளையும் பார்த்திருப்பீர்கள்..அந்த நேரம் கணணி யாழ்ப்பாணத்துக்கு புதிது என்பதால் பிள்ளைகளுக்கு கணணி வாங்கிகொடுத்த பெற்றொர் பலருக்கு அதைப்பற்றி பெரிதாக விளக்கம் ஏதும் தெரியாது..அப்படியான பெற்றொர்கள் கணணி பிழைத்துவிட்டது என்று இந்த திருத்துபவர்களிடம் போனால் அவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பல..(எல்லாரும் அல்ல)..இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவு....
அண்ணணிண் சிங்கிள் பாத்ரூம் சைஸ் காட்வெயர் திருத்தும் கடை...
இரண்டு மேசை..இதுக்குள்ளைதான் நீட்டவும் முடியாமல்..மடக்கவும் முடியாமல் அண்ணை பழைய கொம்பியூட்டருகளோட(அதுக்குள்ளை ஒண்டும் கிடவாது..வெறும் கோதுகள்..நான் ஒரு பெரிய வேலைக்காறன் எண்டு காட்ட பம்மாத்துக்கு வைச்சிருக்கிற பழைய இரும்புக்கடை அயிற்றங்கள்...)சண்டை பிடிச்சுக்கொண்டு இருப்பார்...
ஆராவது கொம்பியூட்டர் திருத்த வந்தால் அண்ணை வாங்கோ...இருங்கோ...(இருக்கிறதுக்கு அங்கை இடமுமில்ல கதிரையுமில்ல...கொம்பியூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலத்தில வந்த கொம்பியூட்டர் ஒண்டை கவிட்டு வைச்சிட்டு அதிலதான் இருங்கோ எண்டு வாறவையிட்ட சொல்லுறவர்..வாறவை அதைப்பாத்த உடனையே இருக்கிற எண்ணத்தை கைவிட்டிட்டு நேர கொம்பியூட்டரில இருக்கிற பிரச்சினையை சொல்ல வெளிக்கிட்டுவிடுவினம்..அண்ணனின் விருப்பமும் அதுவே...சும்மா இருந்து அந்த நாலுக்கு நாலு கடைக்குள்ளை இடத்தை நிரப்புறதைவிட பக்கெண்டு அலுவலைச்சொன்னால் எவ்வளவுதேறும் எண்டு ஒரு மனக்கணக்கு போடலாம் எண்டுறதை விட அங்கிருக்கிற சாமானுகள் எல்லாம் டம்மி எண்டதை ஆரும் பாத்திடக்குடாது எண்டதுதான் அண்ணைக்கு முக்கியம்...
அண்ணை உங்கை ரவுனுக்க இருக்கிற மூண்டு கொம்பியூட்டர் திருத்துற கடைக்காரரிட்டையும் குடுத்துகேட்டுப்பாருங்கோ..அவங்களுக்கு அரைவாசிச் சாமானுகளின்ர பேரே தெரியாது..இந்த விசித்திரத்திலை வாடகை கட்டி கடை எடுத்து வச்சிருக்கிறாங்கள்...அதில ஒருத்தன் சீதனக்காசிலை போட்ட கடை..மானங்கெட்டவங்கள்..இஞ்சை கொண்டாங்கோ..என்னட்டை வந்திட்டியள் எல்லோ..இனி உங்கடை கொம்பியூட்டர் புதுக்கொம்பியூட்டாராய்தான் வரும்..என்ரவேலை கிளீன் வேலை அண்ணை..உவங்களை மாதிரி சொறியிறேல்ல நான்...ஊரான் எல்லே...கண்ணத்தைப் பொத்தி அடிச்சமாதிரி காசெல்லாம் கேக்கமாட்டன்..என்னடை ரேட் நியாய ரேட்தான் எப்பவும்...
வந்தவர் அண்ணன்ர கதையிலை மயங்கி சுடச்சுட வீட்டுக்குப்போய் கொம்பியூட்டர் குலுங்கிப்போகும் எண்டு பொடியையும் பின்னுக்கு ஏத்தி அவன்ரை மடியிலை அலுங்காமல் குலுங்காமல் புதுமணப்பொம்பிளை மாதிரி கொம்பியூட்டரை கொண்டு வந்து இறக்குவார்...
நம்பிக்கெடப்போகும் அந்த வெங்காயமும் கொம்பியூட்டரை கொண்டுவந்தவுடன இவர் இருக்கிற ஸ்கூட்றைவர் எல்லாத்தையும் போட்டுபாத்து அதிலை எது பொருந்துதோ அதாலை மளமளவெண்டு கவறைக் கழட்டுவார்..உள்ளுக்கை வடிவாய் உத்துப்பாத்திட்டு வெளியாலை தள்ளிக்கொண்டு நிக்கிற ஏதாலும் ரண்டு வயறை குத்துமதிப்பாய் இழுத்துக் கழட்டுறது..பிறகு தலையை சொறிஞ்சுகொண்டு முகட்டு வளையைப்பார்த்து யோசிக்கிறது...அண்ண்ண்ண்ண்ணை....எண்டு இழுத்துப்போட்டு...உள்ளை கனக்க வேலை கிடக்கண்ணை திருத்த...இதுக்குள்ளை இப்ப கையை வைச்சால் மினக்கெடும் அண்ணை..பங்க பாருங்கோ எத்தினை கொம்பியூட்டர் கழட்டினபடி கிடக்கெண்டு...உள்ள இருக்கிற மூடின கோதுவளைக்காட்டுவார்...
வந்தவரும் அண்ணை ரொம்ப பிஸிபோல பாவம் அந்தாள்..முன்னம் கொடுத்தவங்களும் அந்தாலை ஆக்கினைப்படுத்துவங்கள்தனை எண்டு கழிவிரக்கப்பட...ஒரு ரெண்டு நாளையாலை வாங்கோ..எல்லாம் அந்தமாதிரி கிளீனாய் முடிச்சு வைக்கிறன்...ஒருக்கா உங்கடை மொபைல் நம்பரை தந்திட்டு போங்கோ...நான் எதுக்கும் இன்னுமொருக்கா வடிவாய் செக் பண்ணீட்டு என்ன பிரச்சினை எவ்வளவு சிலவு வரும் எண்டு கோல் பண்ணி சொல்லுறன் எண்டு எங்கடை காட்வெயார் என்ஞினியரும் பீலாவிடுவார்...
வந்தவர் போனவுடன் எங்கடை எஞ்சினியர் கடைக்குள்ள இருக்கிற சுத்தியல்,ஸ்பெனர்,குறடு எண்டு அகப்படுற எல்லாத்தையும் பாவிச்சு அங்கினை இங்கினை கொம்பியூட்டரில ஒரு தட்டு ரண்டு சுறண்டல் சுறண்டுவார்..ஏதாவது வயர் கியர் ஆடுப்பட்டிருந்தால் இல்லாட்டி கறல்கிறல் ஏதேனும் கொட்டுப்பட்டால் ஒன் பண்ண குருட்டுவாக்கிலை கொம்பியூட்டர் வேலை செய்யும்..அப்பிடியும் வேலை செய்யாட்டி சயிற்றாபிடிச்சுக்கொண்டு கவறிலை ரெண்டு அடி அடிப்பார்..முந்தி பொருளாதார தடையுக்கை ரீவி பாக்க யூஸ் பண்ணிண வாட்டர்பம் இன்ஞின்மாதிரி திடீரெண்டு கொம்பியூட்டர் வேலை செய்யும்...
அப்ப இவர் உடனை போனைபோட்டு அண்ணை எல்லாம் ரெடி வந்து சாமானை பிக் அப் பண்ணிக்கொண்டுபோங்கோ எண்டுவார்...கொம்பியூட்டரைக்குடுத்தது உடனை அண்ணை என்னமாதிரி பீஸ் எல்லாம்..எவளவு வரும் எண்டு இழுக்க..இவர் உடனை அண்ணை காசென்ன காசு மனிசர்தான் முக்கியம்..அதுகும் நீங்கள் எங்கடை ஊர்க்காரர்..உங்களிட்டை கேப்பனே..நான் கூலிகீலி ஒண்டும் வைக்கேல்லை அண்ணை..சாமானுவள்தான் கொஞ்சம் மாத்தவேண்டி வந்திட்டு...இஞ்சை யாழ்ப்பாணத்திலை ஒறிஜினல் சாமனுவள் எடுக்கிறதே கஸ்ரம்..எல்லாம் சைனிஸ் டூப்ளிக்கேற்றுவள்தான் விக்கிறாங்கள்..ஆனால் நான் உங்களுக்கு கொம்பனியாலை இறக்கின திறம் சாமானுவளாய்தான் போட்டிருக்கிறன் எண்டிட்டு...நாலைஞ்சு இங்கிலிஸ் எழுத்துக்களை குத்துமதிப்பாய் கோத்து Pso,MGT,MMS எண்டு நாலைஞ்சு பேரை மாத்தின பாட்ஸ்களின் பேரெண்டுவர்..இப்ப கொன்டுபோய் போட்டுபாருங்க சும்மா தண்ணிமாதிரி உங்கட கொம்பியூட்டர் வேலை செய்யும் எண்டவும்..இதுவும் நம்பி கேட்ட காசை குடுத்திட்டு வீட்டுக்கு எடுத்திட்டுபோகும்..
இந்த குறளிவித்தைக்கெல்லாம் மசியாத கொம்பியூட்டரை இவர் திருத்தேலாது எண்டு சொல்லமாட்டர்..கவுரவம் என்ன ஆகிறது..அதுக்குதான் இன்னொரு கதை வைச்சிருக்கிறார்..அண்ணை இதுக்குள்ளை நிறைய சாமானுவள் மாத்தவேணும்..புரொசெசர் இத்துப்போச்சு...மதர்போட் உக்கிப்போச்சு..றம் செத்துப்போச்சு...உவ்வளவும் மாத்திறதை விட நீங்கள் ஒரு புதுக்கொம்பியூட்டர் வாங்கலாம் எண்டவும் வந்த அப்பாவி அதை நம்பி கொண்டந்த கொம்பியூட்டரை இனி ஆர் திருப்பி கொண்டு போறதெண்டு இவரிட்டையே விட்டிட்டு இவர் சொல்லுற கடையிலை புதுக்கொம்பியூட்டர் வாங்கும்..அந்தக்கடையிலை கிடைக்கிற கொமிசனையும் வாங்கிகொண்டு வந்த வெங்காயம் விட்டிட்டுபோன கொம்பியூட்டரை ஆரேனும் இன்னும் நல்லாய் திருத்துற ஆக்களிட்டை குடுத்து திருத்துவிச்சு இன்னொரு வெங்காயத்தின்ர தலையிலை கட்டிவிடுவார் எங்கடை என்சினியர்... ஆனால் அவற்றை இந்தளவு வண்டவாளங்களுக்கு நடுவிலும் கடைக்கை ரைகட்டிக்கொண்டு நிக்க ஒரு நாளும் மறக்க மாட்டார்...இப்பிடிதான் எங்கடை காட்வெயர் எஞ்சினியர் மார் பலற்ற பிழைப்பு யாழ்ப்பாணத்திலை அந்த நேரம் ஓடிச்சு..
நன்றி: theeraanathi.blogspot
No comments:
Post a Comment