இலங்கைச் செய்திகள்வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

புனரமைக்கப்படும் இரணைமடு விமான ஓடுபாதை

எந்த பலனையும் பெற்றுதராத ஏகாதிபத்திய விசுவாசம்

தமிழ் மக்களின் முடிவில்லாத பயணம்

23 வருடங்களாக போராடும் வலிகாமம் வடக்கு மக்கள்

வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

 இந்தியாவின் நிதி உதவியின் கீழ் நிரந்த வீடுகளை வழங்குவதில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளினால் அநீதிகள் இழைக்கப்படுதாக கூறி, இன்று முற்பகல் வவுனியா பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

வவுனியா காமனி வித்தியாலத்திற்கு எதிரில் இருந்த பேரணியாக சென்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை தமது ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் காரணமாக வீடுகள் கிடைக்க வேண்டியவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.  நன்றி வீரகேசரி 

 

 புனரமைக்கப்படும் இரணைமடு விமான ஓடுபாதை

By General
2013-01-30


புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையை புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
Pics By: J: Sujeewakumar

இந்த ஓடுபாதையை 1500 மீற்றர் வரை விரிவாக்குவதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இந்த விரிவாக்கல் பணிகளில் இதுவரை 75 வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனரக போக்குவரத்து விமானங்கள் தரையிறங்கும் வகையில் இந்த ஓடுபாதை விரிவாக்கப்பட்டு வருவதுடன் விரிவாக்கற்பணிகள் முடிவடைந்ததும் விரைவில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

 நன்றி வீரகேசரி

எந்த பலனையும் பெற்றுதராத ஏகாதிபத்திய விசுவாசம்
இலங்கை வந்த அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சனவரி 26 சனியன்று  இடம்பெற்றது.  சனவரி 26 சனியன்று  நண்பகல்அமெரிக்க தூதராலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கூட்டமைப்புத் தூதுக்குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகித்தார். அமெரிக்காவின் உயர்மட்டக்குழு தனது இலங்கை பயணத்தின்போது முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தான் ஏனையவர்களுடனான சந்திப்பு என்று கூறப்படுகின்றது.
அமெரிக்காவின் தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்காசியா மற்றும் பசுபிக் விவகாரங்கள் பிரிவின் மூன்று வெளியுறவு பிரதிச் செயலாளர்கள் அங்கம் வகித்தனர். இச்சந்திப்பு தொடர்பாக இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்"இலங்கை தமிழர்கள் பிரச்சினை பற்றி நாடு சுதந்திரம் பெற்ற நாட்தொடக்கம் இன்று வரை இடம்பெற்று வருகின்ற அநீதிகள்இ துயரங்கள்; அறவழியில் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள அன்று நடத்திய போராட்டங்கள்இ அது பின்னர் ஆயுதப் போராட்டமாக மாற வேண்டிய நிர்ப்பந்தங்கள் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரும் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களை பறிகொடுத்து பாரம்பரிய இடங்களில் மீளக்குடியமரமுடியாமல் பாரம்பரிய பிரதேசங்களை பெரும்பான்மை இனத்திடம் பறிகொடுக்கும் நிலையில் எல்லாரும் கைவிட்ட நிலையில் அனாதரவாக வாழ்கின்ற அவல நிலை பற்றியெல்லாம் அமெரிக்கத்தூதுக்குழுவின் முன்னால் ஆதாரபூர்வமாக முன்வைத்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற செய்திகளை கேட்டு புல்லரித்த காலம் மலையேறிவிட்டது. இது போன்ற செய்திகளை எத்தனை தடவை கேட்டிருக்கின்றோம்.ஒவ்வொரு முறையும் "இந்த தடவை அரசாங்கம் தப்ப முடியாது"இ"சர்வதேசம் அரசாங்கத்துக்கு போதிய அழுத்தம் கொடுக்கும்"இ"அரசாங்கத்தை  கடுமையான சர்வதேசப்பொறிக்குள்  மாட்டிவிட்டிருக்கின்றோம்". என்று  கூட்டமைப்பினர் விடுகின்ற அறிக்கைகளை கேட்டு கேட்டு தமிழ் மக்கள் காத்திருந்தது தான் மிச்சம்.ஏதும் நடப்பதேயில்லை.மாறாக இருக்கும் உரிமைகளும் மென்மேலும் நெருக்குவாரத்துக்குள்ளாக்கப்பட்டே வருவதாக கூட்டமைப்பினரின் இந்த வீராப்பு அறிக்கைகளை பிரசுரிக்கின்ற அதே பத்திரிகைகள் தான் தமது ஏனைய பக்கங்களில் அழுது வடிக்கின்றன.
அப்படிஎன்றால் அப்போ என்னதான் நடக்கிறது? என்பது பற்றி நாம் இனியாவது சிந்த்தித்தாக வேண்டும்.அமெரிக்க தூதுக்குழுவினரை சந்திப்பதும் ஐரோப்பிய தூதுவர்களை சந்திப்பதும் இது ஒன்றும் முதல் தடவை அல்ல.கடந்த வாரம் கூட  பிரான்சின் தூதுவர் யாழ்ப்பாணம் சென்ற போதும் இதே குற்றபத்திரிகைகளைத்தான் அவரிடமும் வசித்தோம். யாது பலன் கண்டோம்? தமிழ் மக்களின் பிரச்சனைகளை நாம் யாரிடம் எடுத்து சொன்னாலும்  நமக்கான தீர்வை அவர்கள் யாரும் தங்கள் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தர முடியாதுஎன்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள தவறுகின்றோம் .எமது பிரச்சனைகளில் எவ்வளவுதான் அக்கறை இருந்தாலும் அவரவர் எல்லைக்குட்பட்டே சர்வதேசத்தின் தலையீடு இருக்க முடியும்.அதற்கும்கூட  இந்தியா என்கின்ற பிராந்திய வல்லரசின் ஆசீர்வாதம் அவசியமானதாகும்.அதை விடுத்து அமெரிக்கவோ ஐரோப்பாவோ ஆபிரிக்க நாடுகளில் தலையிடுவது போன்று எடுத்த எடுப்பில் இலங்கையில் எதையும் செய்து விட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அதன் காரணமாகத்தான் கடந்த இரு வருடங்களுக்கு முன் அமேரிக்கா சென்று வந்த கூட்டமைப்பு தலைவர்களால் எதையுமே சாதிக்க முடியவில்லை.சம்பந்தரும் மாவையாரும் வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று எடுத்து வந்த படங்களை வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு பிலிம் காட்டியதுதான் மிச்சம்.அப்போது நமது பத்திரிகைகள் கூட்டமைப்பினரின் அமெரிக்க பயணம் பற்றி எவ்வளவு புலுடால்கள் விட்டன? சம்பந்தரின் அமெரிக்க பயணமானது தமிழர்களின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நிகழ்த்த  போகின்றது.என்று சொல்லப்பட்ட ஆரூடங்களுக்கெல்லாம் என்ன நடந்ததது?
அது மட்டுமல்ல கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் இந்த சர்வதேசத்தை சாட்சியாக வைத்துத்தான் கூட்டமைப்பினர் மக்களிடம் வாக்கு கேட்டனர்."இதோ சர்வதேசம் பார்த்து கொண்டிருக்கிறது.மட்டகளப்பு மக்களே வாக்களியுங்கள்" என்று திருகுதாளம் பண்ணியது இந்த கூட்டமைப்பினர்தான்.மக்களும் இந்த மாயாயால  கதைகளில் மயங்கி வாக்குகளை வாரி வழங்கினர் .சர்வதேசம் ஏன் இன்றுவரை கிழக்கு மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளித்து .தமிழ் மக்களுக்கு எதையும் பெற்று தர முன்வரவில்லை? என்று எந்த பத்திரிகைகளாவது இது வரை கூட்டமைப்பினரை  நோக்கி கேள்வி எழுப்பியதுண்டா?
எனவே தமிழ் மக்களின் தீர்வு நோக்கியல்ல. தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய விசுவாதத்தின் தொடர்ச்சியே இலங்கை வந்த அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பாகும்.இது போன்ற செயற்பாடுகள் இலங்கை அரசை மட்டுமல்ல முழு சிங்கள மக்களையும் தமிழர்களுக்கு எதிராக திருப்புவதை தவிர வேறு எதையும் செய்ய போவதில்லை.
இலங்கையில் இனப்பிரச்சனை ஆழமாக வேர் ஊன்றுவதற்கும் அன்றிருந்த இந்த ஏகாதிபத்திய விசுவாசமே காரணமாகும்.இன்று நாம் சொல்லுகின்ற சிங்கள மொழி சட்டம் ஏற்படுவதற்கும் அன்றைய தமிழ் தலைவர்களின் ஆங்கிலம் மீதான விசுவாசமே காரணமாகும்.1920ம் ஆண்டிலிருந்தே ஆங்கிலத்தை அகற்றி சுய பாசைகள் அதாவது தமிழும் சிங்களமும்  அரச கரும மொழிகளாக்கபடவேண்டும் என்கின்ற கோரிக்கைகள் சிங்கள தலைவர்களிடமிருந்து வெளிப்பட்ட போதிலும் அதனை தமிழ் தலைவர்கள் ஆதரிக்கவில்லை.ஆங்கிலத்தை அகற்ற விடகூடாது என்று விவாதிக்கும் அளவிற்கு ஏகாதிபத்தியத்தை அண்டி பிழைத்த தமது அப்புகாத்து தொழில் மீதான விசுவாசம் இருந்தது.இந்த ஒத்துழையாமை செயட்பாடுகளே சிங்கள தலைவர்களை இறுதியில் சிங்களத்தை மட்டுமாவது அரசகரும மொழி ஆக்குவதில் கருத்தூன்ற செய்தது.
இப்படியாக எங்கோ இருக்கும் ஏகாதிபத்தியத்தை நம்பி உள்நாட்டில் இணைந்து வாழ வேண்டிய இசேர்ந்து பேச வேண்டியஇஒருமித்து தீரு காண வேண்டிய சிங்கள  மக்களை விட்டு விலகி விலகி செல்லுவதே நமது தலைமைகளின் வழக்கமாய் போனது.இந்த நிலை மாற வேண்டும்.ஏனனில் அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும் என்று சொல்வது போல  இலங்கை அரசுதான் தீர்வு காண வேண்டும்.அதை நோக்கியே நமது செயற்பாடுகள் இருக்க வேண்டும்.
மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்  -எழுகதிர்  நன்றி தேனீ தமிழ் மக்களின் முடிவில்லாத பயணம்

நீதி, சமத்துவம், பதிலளிக்கும் கடப்பாடு, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது தொடர்பாக நம்பகரமான நடவடிக்கையை இலங்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து ஜெனீவாவிலுள்ள  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2012 மார்ச்சில் அமெரிக்காவின் அனுசரணையுடன் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்தை எட்டுகின்ற நிலையில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வின் போதும் போர்க் குற்றச்சாட்டுகள் உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக புதிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்க உத்தேசித்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து வட, கிழக்கு அபிவிருத்திக்காக அதிகளவு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதாகவும் எந்தவொரு பாரபட்சமும் இன்றி சமூகத்தின் சகல தரப்பினருக்கும் அரசாங்கம் உதவிகளை அளித்துவருவதாகவும் அமைச்சர்கள் கூறுகின்றனர்.

இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க உயரதிகாரிகள் குழுவினர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த போது நிலைமைகளை நேரில் கண்டறிந்து கொண்டதாகவும்  முக்கியமான விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பாராட்டியுள்ளதாகவும் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கூறியுள்ளார். 2009 இற்குப் பின்னர் யாழ்.குடாநாட்டில் இராணுவத்தின் பிரசன்னம் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தூதுக்குழுவுக்கு சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். சிவில் நிர்வாகத்தில் இராணுவம் சம்பந்தப்படுவதில்லையெனவும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளதையொத்த ஆட்சிப் பொறிமுறையே வடக்கிலும் மேற்கொள்ளப்படுவதாகவும் 2008 இற்கு முன்னர் 40 ஆயிரமாக இருந்த படையினர் தொகை இப்போது 13100 ஆக மட்டுமே குடாநாட்டில் இருக்கின்றது என்பதும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க வெளியிட்டுள்ள புள்ளிவிபரமாகும்.

ஆனால், தமிழ்மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வட மாகாணத்தில் சிவில் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மட்டுமன்றி, அரசாங்கங்கள் பலவும் தொடர்ந்தும் வலியுறுத்திவருவதை அவதானிக்க முடிகிறது.  அத்துடன், இடம்பெயர்ந்த சகலரையும் மீளக்குடியேற்றி இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட்டதாக அரசாங்கம் கூறிவருகின்ற போதிலும் வட பகுதி மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் தமது சொந்த காணிகளுக்கு திரும்பிச் செல்லாத நிலைமை காணப்படுகிறது. யுத்தத்துக்குப் பின்னரான வட, கிழக்கு நிலைவரம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள், 2012 மார்ச்சில் முதற்தடவையாக சர்வதேச அமைப்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விமர்சிக்கப்பட்டுள்ள போதும் ஒருவருடம் கடந்த நிலையிலும் பாரியளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே யதார்த்தம். கள நிலைவரம் தொடர்பாக அரசதரப்பு முன்வைக்கும் பிரதிமைக்கும் சர்வதேச சமூகத்தின் அனுமானத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி இருப்பதை வருகைதந்துள்ள அமெரிக்கத் தூதுக்குழுவினர் வெளிப்படுத்திய விடயங்கள் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படாமை மற்றும் சட்ட ஆட்சி சீர்குலைவு என்பனவே அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் இப்போது இலங்கை தொடர்பாக அதிகளவுக்கு அதிருப்தி கொண்டுள்ள விடயங்களாகும். வட, கிழக்கு மாகாணங்களுக்கு கணிசமான அளவுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வே நிலையானதும் நீடித்ததுமான தீர்வாக அமையும் என்பது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையாகத் தென்படுகிறது. ஆனால், அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள சிறிய அளவிலான அதிகாரங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இதய சுத்தியுடன் விருப்பத்தை வெளிப்படுத்தாத நிலைமையே தொடர்ந்தும் நீடித்து வருவதை அரச தரப்பிலிருந்து வெளிப்படுத்தும் கருத்துகள் அம்பலமாக்குகின்றன. இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியுமென  தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கருதுவதாகத் தென்படுகிறது. ஆனால், வெளிநாட்டு அரசாங்கங்களும் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கு உதவுமென முழுமையாக நம்பியிருக்க முடியாது; நம்பவும் கூடாது. ஜனநாயக ரீதியில் அகிம்சாவழியில் ஏனைய சமூகங்களையும் இணைத்துக் கொண்டு செயற்படும் போதே தமிழ் மக்களுக்குத் தீர்வு கிட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படலாம். இதற்கும் இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது என்பதே உண்மை.     நன்றி தினக்குரல் 
23 வருடங்களாக போராடும் வலிகாமம் வடக்கு மக்கள்

இறுதி யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த வட பகுதி மக்களின் மீள் குடியேற்றம் முழுமையாக நிறைவடைந்து விட்டதாகவும் குறுகிய காலப் பகுதியில் இந்தப் பணிகளைப் பூர்த்தி செய்த நாடு உலகில் இலங்கையாகத் தான் இருக்க முடியும் என்றும் அரசாங்கத் தரப்பினர் பெருமிதத்துடன் அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்ற போதும் கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் (1990 இல்) வலிகாமம்  பகுதியிலிருந்து இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு  உள்ளான மக்கள் தமது சொந்த  மண்ணுக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்ற போராட்டம் தொடர்ந்து செல்கின்றது.  வடக்கில் குறிப்பாக யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு வலயங்களின் விஸ்தீரணம் குறைக்கப்பட்டு வருவதாகவும் தனியார் காணிகளிலிருந்து படையினர் வாபஸ் பெற்று வருவதாகவும் அரச தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த அவுஸ்திரேலிய தூதுக் குழுவினரிடம் தமது சொந்தக் காணிகளுக்குச் சென்று குடியேற உதவுங்கள் என்று வலிகாமம் வடக்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் மன்றாடியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தங்களுக்கு உதவி ஏதாவது செய்ய விரும்பினால் முதலாவதாக  சொந்த நிலத்தில் குடியமர்வதற்கு உதவுங்கள் என்பதே அந்த மக்களின் உருக்கமான வேண்டுகோளாகக் காணப்படுகிறது.

வலிகாமம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்குத் தடையாக இருப்பது அந்தப் பகுதி மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள காணிகள் பாதுகாப்பு வலயத்திற்குள் இருப்பதேயென்று அரசாங்கமும் படைத் தரப்பும் கூறி வந்த போதும் பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக சுருங்குகின்றன என்ற பதிலே தொடர்ந்தும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வலி . வடக்கு மக்கள் தமது காணிகளுக்குச் சென்று குடியமர அனுமதிக்குமாறு கோரி பாரிய  ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.  ஆனால், அரசாங்கம் இந்த மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா என்பது குறித்து சந்தேகமே அதிகளவுக்குக் காணப்படுகிறது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவது தொடர்பாக  கருத்து தெரிவித்திருந்த இராணுவ உயரதிகாரிகள் குழு முன்வைத்த அறிக்கையில் நாட்டின் பாதுகாப்பு, தந்திரோபாய தேவைகளை கருத்திற் கொண்டு நாட்டின் எப் பகுதிகளிலும் படையினரை நிலை கொள்ள வைக்கும் உரிமையை அரசாங்கம் கொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது இராணுவத்தினரால் காணிகள் பாதுகாப்புத் தேவைக்கு முக்கியமானவையென கருதப்பட்டால் அவற்றை சட்ட ரீதியாக சந்தை மதிப்பீட்டின் பிரகாரம் சுவீகரித்துவிட்டு  உரிமையாளர்களுக்கு  மாற்று நிலத்தை வழங்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கள நிலைவரம் இவ்வாறு அமைந்திருக்கையில் வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்வதென்பது கனவாகவே அமைந்து விடுமென்ற கவலையும் விரக்தியும் விசனமுமே அதிகரித்துள்ளது. அதேவேளை வலிகாமம் வடக்குப் பகுதியிலுள்ள வளமான விவசாயச் செய்கை நிலங்களில்  படையினர் பயிர்ச் செய்கையிலீடுபட்டிருப்பதாகவும் தமது வீடுகள் அழிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அப் பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு முன்னாலிருந்து எதிர்ப்புப் பேரணியை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். 

அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி சாராத வலி. வடக்கு இடம்பெயர்ந்தோர் அமைப்பே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீளக்குடியேறவும் தமது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்ளவும் அனுமதிக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற போதிலும் இழுபறிநிலையே தொடர்கின்றது. தமது அரசியல் பிரதிநிதிகள், அரசாங்கம், சிவில் அமைப்புகள், தொண்டர் நிறுவனங்கள் என்று சகல தரப்பினரையுமே  உதவுமாறு இந்த மக்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். அத்துடன், குடா நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆனால், அவர்களின் குரலை செவிமடுப்பதற்கு விருப்பமற்ற தன்மையையே அரசாங்கம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாக எண்ணத் தோன்றுகிறது.    நன்றி தினக்குரல் 

No comments: