LIFE OF PI: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!


.

எல்லாமும் பறிக்கப்பட்ட நிலையில் யாருமேயற்ற தீவொன்றில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது அப்படிப்பட்ட கனவையாவது கண்டிருக்கிறீர்களா? ஆம், என்று பதில் சொல்கிறவர்களுக்குத் தெரியும் அப்படிப்பட்ட நிலை எவ்வளவு அயர்வைத் தரும் என்று. தூக்கம் எமக்கு கிடைத்த ஓய்வின் அற்புத வடிவம். ஆனால், அந்த தூக்கத்தில் வரும் கனவுகள் சில எங்களின் ஆழ் மனதை அலைக்கழித்து அந்தக் களைப்பினை மனதில் மட்டுமல்ல (தூக்கத்தின் முடிவில்) உடலினுள்ளும்  வழங்கக் கூடியது. கனவுகளை தவிர்ப்பது எம்மால் அவ்வளவுக்கு முடியாது. ஆனால், யாருமே- எதுமே அற்ற நிலையை மனது உணரும் தருணங்களை நாம் வெற்றி கொள்ள முடியும்.    எம்முடைய மனதை நாமே வெற்றி கொள்வது பற்றிய தேடல்கள் தியானம் என்கிற வடிவில் அதிகம் ஆன்மீகத்தை நோக்கி கொண்டு சேர்க்கின்றன.  

தியானமும்- ஆன்மீகமும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதற்குண்டான பதில்களை பெற்றுக்கொள்வதன் மூலம் சரியாக அணுகப்பட வேண்டியது.  தியானத்தின் வழியில் பெற்றுக்கொள்கிற ஆன்மீகத்தையோ நம்பிக்கையோ யாருமே இன்னொருவருக்கு கற்றுத்தர முடியாது. அது  தனித்துவமானது. ஒவ்வொரு மனிதனும்- மனமும் தத்துவார்த்தமாகவும்- அதற்குப் பின்னராக நம்பிக்கையையும் முன்வைத்து பெற்றுக்கொள்வது.  இறுதிவரை ஆன்மிகத்தை ஒரு ஆசிரியராலோ- மத நிறுவனத்தாலோ சரியாக கற்றுத்தர முடியாது. அது, தனி மனது சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. சிலர் இசைக்குள் தன்னுடைய மனகட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் புத்தகங்களுக்குள், இன்னும் சிலர் நீச்சலுக்குள், விளையாட்டுக்குள், எழுத்துக்குள், சமையலுக்குள், பயணங்களுக்குள் என்று அவரவர் தங்களது மனகட்டுப்பாட்டை வைத்துக்கொள்வதற்கு தனித்தனியான முறைகளை கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், தங்களையோ- சமூகத்தையோ நோக்கிய கேள்விகளை மட்டும் இறுதிவரை கைவிட மாட்டார்கள்.  மேற்குறிப்பிட்ட இவ்வளவும் ஒரு பருமட்டான வடிவம் மட்டுமே. ஆக, இப்படியும் தியானமும்- அதன் சார்பிலான ஆன்மீகமும் அடையாளப்படுத்தப்படலாம். அணுகப்படலாம்.


Life of Pi என்கிற தலைப்பிட்டுவிட்டு  ஏன் தியானம்- ஆன்மீகம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் என்கிற சந்தேகம் வந்திருக்கும். அது இயல்பானது. உங்களை அதிகம் அயர்ச்சியடையவும் வைத்திருக்கும்.  ஒரு திரைப்படம், அதற்குள் கையாளப்பட்டிருக்கிற திரைமொழி என்பன தத்துவார்த்தமான கேள்விகளை உங்களுக்குள் எழுப்பிக்கொண்டு  ஒரு பூரண அனுபவத்தை தருமென்றால் அதுவும் வெற்றிபெற்ற திரைவடிவம் தான்.  அப்படிப்பட்ட அனுபவத்தை 2007இல் வெளியான ஸ்பானிய- பிரான்ஸிய படமான In the City of Sylvia தந்தது. அது, தேடல் பற்றிய படம். எப்போதோ ஒரு நாள் ரயிலில் சந்தித்த பெண்ணொருத்தியைத் தேடிக்கொண்டிருக்கிற ஓவியன் ஒருவனின் பயணம் தொடர்பிலான படம்.  தொலைந்ததை அல்லது விட்டதை   தேடிக்கொண்டிருப்பது என்கிற வடிவில் பெண்ணை  உருவகப்படுத்தி தேடலைத் தொடர்ந்து மனதுக்குள் ஒரு  அமைதியை காண்பித்திருக்கும்.  படம் நிறைகிற தருணத்தில் எங்களின் மனது எங்களுடன் அமைதியாக பேசிக்கொண்டிருப்பது போன்று உணர வைத்திருக்கும். நான்  In the City of Sylvia பார்த்து முடித்ததும் அப்படித்தான் உணர்ந்தேன். அதே உணர்வை   சகாசங்களும்- அதீத   புனைவுகளும்   கொண்ட   Life of Piயும் தந்தது. 

‘கண்ணே கண்மணியே கண்ணுறங்காய் பூவே….’ என்று Bombay ஜெயசிறீயின் குரலில் தாலாட்டும் பாடலுடன்  Life of Pi திரையில் விரியும்.  அதுவும், ஹொலிவூட் படமொன்று  தமிழ் பாடலொன்றுடன் ஆரம்பிப்பது புது சிலிர்ப்பை மனதுக்குள் கொடுக்கும். (நீங்கள் கேட்கலாம் அமெரிக்கன் தமிழ் பாட்டு இசைத்தால் பெருமையா என்று? நியாயமான கேள்வி. ஆனாலும், இந்த காலணித்துவ ஆட்சிக்குள் இருந்துவிட்ட மனநிலையோ அல்லது மேற்கத்தை தேசங்களின் மீதான தேவையற்ற பிரமிப்போ, என்னதான் பகுத்தறிந்து உணர வைத்தாலும் சில காணங்களின் எங்களை தோற்கடித்துவிடுகிறது. அப்படியான தருணங்களில் இப்படியாக சந்தோசப்படவும் செய்கிறது) கிழக்கிந்திய கம்பனியின் ஆளுகைக்குள் இருந்த இந்தியாவின்   பாண்டிச்சேரியில்  ஆரம்பிக்கும் கதை   பசுபிக் பெருங்கடலினூடு மெக்சிக்கோ சென்று கனடாவில் முடியும். 

ஆக, இப்போது சின்னதாக(?) கதை என்னவென்று கூறிவிடுகிறேன்.  கனடாவில் வசிக்கும் பிஷீன் மோலிட்டோர் படேல் (Piscine Molitor Patel) என்கிற ‘பை(Pi)’ தன்னை தேடிவரும் எழுத்தாளருக்கு ‘ரிச்சட் பார்க்கருக்கும்- தனக்கும்’ உண்டான உறவை கூறுவதுடன் கதை நகர ஆரம்பிக்கும். பை, பாண்டிச்சேரியில் மிருகக்காட்சிசாலை வைத்திருப்பவருடைய இரண்டாவது மகன். தாய் கூறும் ‘மண்ணையுண்ட கண்ணனின் வாயில் பிரபஞ்சமே தெரிந்த’ கதையைக் கேட்டு வளர்ந்தவன். கடவுள்களை சிறுவயதிலேயே சூப்பர்மான்களாக கனவு கண்டவன். அதுவே, மெல்ல மெல்ல கடவுளின் மீதான ஈர்ப்பாக மாறிப்போய் கேள்விகளுடனும்- தேடலுடனும் வாழ்க்கையை அணுகும் சிறுவன். இப்படிப்பட்டவனின் வாழ்க்கையில் தந்தையின் மிருகக்காட்சிசாலைக்கு வரும் ‘ரிச்சட் பார்க்கர்’ என்கிற வங்கப்புலியுடன் இணக்கமொன்று பார்த்த கணத்திலேயே கொள்கிறான். பைக்கும்- ரிச்சட் பார்க்கர் என்கிற புலிக்குமான பிணக்கும்- இணக்கமும்- போராட்டமுமே படத்தின் உயிர்நாடி. 

பை பதினாறு வயதை நெருங்கும் போது இனியும் பாண்டிச்சேரியில் மிருகக்காட்சிசாலையை வைத்து தொழில் நடத்த முடியாது என்கிற முடிவுக்கு வரும் பையின் குடும்பம் கனடாவுக்கு குடிபெயர முடிவெடுக்கிறது. மிருகக்காட்சிசாலையிலுள்ள விலங்குகளை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கொண்டு சென்று விற்றால் பெரிய தொகை கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம் என்ற எண்ணத்துடன் கப்பலுடன் பயணிக்கிறார்கள். இந்தியாவிலிருந்து புறப்படும் கப்பல், சில நாட்களின் பின்னர் மணிலாவை கடந்து பசுபிக் கடலின் மரியான ஆழிப்பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கிவிடுகிறது. இந்த  விபத்தில் உயிர்காக்கும் படகொன்றில்  தப்பிக்கும் பையுடன், வரிக்குதிரை, ஒரங்குட்டான் வகை குரங்கு, கழுதைப்புலி உள்ளிட்டனவும் முக்கியமாக ரிச்சட் பார்க்கர் என்கிற வங்கப்புலியும் தப்பிக்கின்றன. 

மிருகங்களுக்கும் மனது உண்டு. அவையின் ஆன்மாவும் அற்புதமானவை. அவற்றை அடக்கியாள முடியும் என்கிற உணர்வை சிறிய வயதில் பை கொண்டிருந்தான். அதுவும், ரிச்சட் பார்க்கர் என்கிற புலியை பார்த்த கணத்திலேயே அதற்கும் தனக்குமிடையில் ஓர் அற்புதமான பிணைப்பு இருக்கிறது என்று நம்பியிருப்பான். அந்த எண்ணத்தை அவனது தந்தையார் ரிச்சட் பார்க்கர்(புலி) ஆடு ஒன்றை வேட்டையா வைப்பதன் மூலம் நிர்மூலமாக்கியிருப்பார். அதிலிருந்து புலி என்றாலே பைக்கு பயங்கரப்பயம். அப்படிப்பட்ட நிலையில், தனித்த படகொன்றில் வங்கப்புலி, கழுதைப்புலி, அடிபட்ட வரிக்குதிரை, ஓரங்குட்டான் குரங்கு உள்ளிட்டவற்றுடன் பையும் இணைந்து பயணிக்க வேண்டியேற்படுகிறது. 

பிழைத்தலுக்கான வழி என்பது வேட்டையாடுதலுடன் ஆரம்பித்தது. ‘தக்கன பிழைத்து வாழும்’ என்ற கோட்பாடே அதிலிருந்து தானே தோற்றம் பெற்றது. அப்படிப்பட்ட நிலையில், மனிதன் ஒருவனும் நாலு மிருகங்களும் கடலில் பயணிக்கின்றன. இப்படி   பயணிக்கின்ற தருணத்தில் எவ்வளவு அமைதியாக இருந்தாலும் வயிறு பசித்து ‘பிழைத்தலுக்கான வழி வேட்டையாடுதல்’ என்கிற கோட்பாட்டை  எப்படியாவது உணர்த்திவிடும். அப்படியான சந்தர்ப்பமொன்றில் முதலில் கழுதைப்புலியால் அடிபட்ட வரிக்குதிரை வேட்டையாடப்பட்டு விடும். பின்னர் அதே கழுதைப்புலி ஒரங்குட்டானையும் வேட்டையாடிவிடும். இதை, படகின் ஒரு முனையிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பான் பை. சிறிய கணங்களுக்குள்ளேயே படகின் அடியில் மறைந்து படுத்திருந்த ரிச்சட் பார்க்கர் என்கிற வங்கப்புலி ஒரே வேகத்தில் கழுதைப்புலியை வேட்டையாடி உண்டுவிடும். இப்போது, படகில் எஞ்சியிருப்பது பையும்- ரிச்சட் பார்க்கர் என்கிற வங்கப்புலியும். இனி பைக்கும்- வங்கப்புலிக்குமிடையிலான பிழைத்தலுக்கான போராட்டம் எப்படிப்பட்டது?     227 நாட்கள் பையும்- புலியும் எப்படி கடலில் கழித்து உயிர் பிழைத்தார்கள் என்பதை பிரமாண்டங்களினூடும், மனதை ஆட்கொண்டு ஆழத்தில் ஊடுருவி ஒருமுகப்படுத்தியும் படைத்திருக்கிறார் இயங்குனர் ஆங் லீ (Ang Lee).  

Life of Pi, எழுத்தாளர் யேன் மார்தல் (Yann Martel) 2001ல் எழுதி 'மன் புக்கர்' விருது பெற்ற சகாச- புனைவு நாவல். அதே பெயரிலேயே ஆங் லீ சுமார் ஐந்து வருட கடின உழைப்புடன் படத்தை இயக்கியிருப்பார். நாவலின் வெளிப்பட்ட அதேயளவு உணர்வுகளையும்- கேள்விகளையும்- பிரமாண்டத்தையும் கொஞ்சம்கூட குறைவின்றி ஆங் லீ படத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக யேன் மார்தல் குறிப்பிட்டிருந்தார். திரைக்கதையை டேவிட் மாகீ (David Magee) எழுதியிருக்கிறார். படம் பூராவும் பையுடன் பயணிக்கும் வங்கப்புலியை கிராபிக்ஸ்- அனிமேஷன் தொழிநுட்கத்தின் உதவியுடன் மிகமிக நேர்த்தியாக வடிவமைத்து படத்துக்குள் வைத்திருப்பார்கள். முப்பரிமாண(3D) காட்சி அமைப்புடன் 2012இன் இறுதியில் வெளியான இந்தப்படம் கடந்த வருடத்துக்கான ஒஸ்கார் விருது போட்டியில் பல பிரிவுகளில் இருக்கிறது. குறிப்பாக, ஒரிஜினல் இசை என்கிற போட்டியில் ‘கண்ணே கண்மணியே’ என்று Bombay ஜெயசிறீ பாடிய பாடலும் இருக்கிறது. (ஒஸ்கார் விருது பரிந்துரையில் முதல் முதலாக இடம்பெற்ற தமிழ் பாடல் இது)

ஹொலிவூட் வழக்கத்துக்கு மாறாக இரண்டு மணித்தியாலங்களை தாண்டிய படம் Life of Pi. ஒரு சகாசப்பயணத்துக்குள் உங்களுடைய ஆன்மாவுடன் பேசுகிற உணர்வையும்- வாழ்க்கையின் தேடல் குறித்த கேள்வியையும் அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருக்க வைத்த படம். படத்தின் ஒரு கட்டத்தில் பையும்- வங்கப்புலியும் ஒருவரையொருவர் கொன்றுவிட முயற்சிப்பார்கள். ஆனாலும், இருக்கின்ற மற்றவரும் கொல்லப்பட்டுவிட்டால் தனித்திருக்கிற தான் இலகுவாக மரணித்துவிடுவேன் என்கிற உண்மை உறைக்க ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் ஆதரிக்கும்   மனநிலைக்கு வருவார்கள். இது எவ்வளவு பெரிய தத்துவம். அதுபோல, ஒருகட்டத்தில் பையும்- வங்கப்புலியும் உணவும் நீருமின்றி களைத்துப் போன தருணத்தில் தேடும் ஆதரவு  என்பது  முதுமையில்  அல்லது  உடலில் வலிமையற்று இருக்கின்ற தருணத்தில் நாம் வேண்டி நிற்கிற ஆதாரம் தொடர்பானது. அது இப்படியிருக்கும், உடலில் வலிமையிருக்கிற வரையில் நாம் எவ்வளவு ஆட்டங்களை வேண்டுமானாலும் ஆடிக்கொள்ளலாம். ஆனால், அந்த வலிமை காணாமல் போயிருக்கிற போது நாம் ஒன்றுமேயில்லை என்று உணருவோம். அப்படிப்பட்ட நிலையில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லை என்கிற நிலைக்கு பையும்- வங்கப்புலியும் வந்திருப்பார்கள். அதுபோல, மற்றவர் மரணித்துவிடக்கூடாது என்பதிலும் அக்கறைகொள்ள ஆரம்பித்திருப்பார்கள். அப்பட்டமான வாழ்க்கையின் உண்மைகளை பிரமாண்டங்களினூடு பேசியிருக்கும் Life of Pi.

அதுபோக, மனிதனொருவனுக்கும்- அவனுடைய மனதுக்கும் இடையிலான பிணக்கை எப்படி கையாள வேண்டும் என்பதையும் பை- வங்கப்புலியினூடு விதைத்துச் செல்வார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு கட்டத்தில் ‘பை’யாக நாங்களும்- வங்கப்புலியாக எங்களுடைய மனதும் மாறிவிட்டிருக்கும். நாங்கள் பையாக மாறி எங்களின் மனதை அடக்கி அரவணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். படைப்பொன்று, அதில் பயன்படுத்தப்பட்டிருக்கிற  திரைமொழியொன்று  இவ்வளவு தாக்கத்தை மனதுக்குள் செலுத்த முடியுமா? ஆம் , என்ற பதிலை Life of Pi நிரூபித்திருக்கும். ஒரு படைப்பு அழகியலுடன் உச்சத்துடனும்- அதேயளவு வெற்றியுடனும் இருக்கின்றது என்றால் அதற்கு அண்மைய உதாரணம் Life of Pi.  ஏற்கனவே  ஒஸ்கார் விருதை  வென்றிருக்கிற சீனா-தாய் நாட்டுக்காரரான ஆங் லீ வாழ்க்கையை தத்துவார்த்தமான அணுகுவதாக ஏற்கனவேயொரு பேட்டியில் சொல்லி படித்திருந்தேன். அந்த  தத்துவார்த்தத்தை அற்புதமாக திரைக்குள் கொண்டுவந்து கொண்டாட வைத்திருக்கிறார். 

இந்தியாவின் நல்ல நடிகர்களுள் ஒருவராக சொல்லக்கூடிய இர்பான் கான், தபு, சூரஜ் சர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கடலில் புலியுடன் மல்லுக்கட்டும்- அரவணைத்துப் போகும் பையாக சூரஜ் சர்மா அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் ஆங்காங்கே தமிழில் பேசிகொண்டிருக்கிறார்கள். அதுபோக, ஆங்கிலத்திலேயே படம் அதிகம் நகர்கிறது. ஆனாலும், ஒரு தருணத்தில் மொழிகளே தேவையிருக்கவில்லை புரிந்து கொள்வதற்கு.  படத்தின் குறிப்பிட்டளவு பகுதி பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதுவும், வசந்தமாளிகை படம் வந்த காலத்தில் நிகழும் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமானவை. அதுபோல, கடலில் நிகழும் காட்சிகள் அனைத்தும் பெரிய நீச்சல் தடாகம் அமைத்து படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், படத்தின் பெரும்பகுதியை  வரைகலை (கிராபிக்ஸ்) அனிமேஷன் தொழிநுட்பம் பிடித்திருக்கும். அதுவும், எது அனிமேஷன், எது உண்மை என்று தெரியாத அளவுக்கு.  ஒளிப்பதிவின் தரமும்- யுக்தியும் இவ்வளவுக்கு நேர்த்தியாக நான் எந்தப்படத்திலும் அவதானித்தது இல்லை.  கிளாவுதியோ மிராண்டா (Claudio Miranda) ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

எப்போதாவதுதான் படைப்புக்கள் படைப்பு என்கிற அளவைத் தாண்டி எம்முள் தாக்கம் செலுத்தும். அப்படியான படைப்புக்கள் கொண்டாட்டத்தின் வடிவங்கள். அது, எழுத்தாக, சினிமாவா, இசையாக  என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படிப்பட்ட  படைப்புத்தான் Life of Pi. ஆங்கிலத்தில் நாவலாகவும், இப்போது தமிழ் -ஆங்கில மொழிகளில் சினிமாவாகவும் கிடைக்கிறது.  உங்களை உங்களுக்கு கண்டுபிடித்துக் கொடுக்க- உலக அபத்தங்களின் மீது கேள்விகளை எழுப்ப சிலவேளை Life of Pi தூண்டுகோலாக அமையலாம். அற்புதங்களை படைப்பது மட்டுமல்ல,   அதனூடு பெற்ற அனுபவங்களை பகிர்வதும் சந்தோசமே. அந்த வகையில் Life of Pi குறித்த எண்ணங்களைப் பகிர்வது எனக்கு பெரிய சந்தோசம்!

பெப்ரவரி 01, 2013 தினக்குரலில் வெளியானது.

நன்றி :maruthamuraan.blogspot

No comments: