தமிழ் சினிமா

.

முடிவுக்கு வந்தது விஸ்வரூபம் சர்ச்சை



தமிழகத்தில் கடந்த 11 நாள்களாக நீடித்து வந்த நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் பட சர்ச்சை சனிக்கிழமை (பிப்ரவரி 2) மாலை முடிவுக்கு வந்தது. இந்தப் படத்தில் சில ஒலிக் குறிப்புகளை நீக்க கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர் ராஜகோபால் முன்னிலையில்
நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, விஸ்வரூபம் படம் தமிழகத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் பட சர்ச்சை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கமல் தரப்பினர் வாபஸ் பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
உடன்பாடு கையெழுத்து: நடிகர் கமல்ஹாசன் தரப்பும், இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பும் சுமுக முடிவுக்கான எழுத்துப்பூர்வ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், தனிப்பட்ட பிரச்னை காரணமாக முதல்வர் ஜெயலலிதா இந்தப் படத்துக்கு தடை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் கமல்ஹாசன் தரப்பும்,  இஸ்லாமிய அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தால் அதற்கு ஏற்பாடு செய்யத் தயார் என தெரிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பையடுத்து, தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில் உள்துறை செயலாளர் ராஜகோபால், விஸ்வரூபம் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன், அவருடைய சகோதரர் சந்திரஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா உள்ளிட்ட 14 பேர் பங்கேற்றனர்.
திரைப்படத்தை பார்த்த பிறகு...: தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை 6 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பிற்பகலில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
பேச்சுவார்த்தையின்போது, விஸ்வரூபம் படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டதாகவும், அதிலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை இஸ்லாமிய அமைப்புகள் சுட்டிக் காட்டியதாகவும், அதற்கான விளக்கங்களை கமல்ஹாசன் அளித்ததாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது.
பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:
""முத்தரப்பு பேச்சுவார்த்தை என்ற இந்தச் சந்திப்பு ஏற்பட ஆவன செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு விடுமுறை நாளிலும்
கிட்டத்தட்ட 6 மணி நேரமாக எங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் ஆறுதல்களைச் சொன்ன உள்துறைச் செயலாளருக்கு நன்றி. பேச்சுவார்த்தையில் என்னுடைய இஸ்லாமிய சகோதரர்களிடம் பேசி அவர்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு என்னால் என்ன முடியும் என்பதைத் தெரிவித்தேன்.
குறிப்புகள் நீக்கப்படும்: அவர்களது கோரிக்கையை ஏற்று, படத்தில் சில ஒலிக் குறிப்புகளை நீக்குவதாகச் சொல்லி இருக்கிறேன். அதன் பட்டியல் இருக்கிறது. நீக்கப்படும் குறிப்புகள் குறித்து மத்திய சான்றிதழ் தணிக்கை வாரியத்திடம் முறைப்படி தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும். இதன் பின், படத்தை வெளியிட முயற்சிப்பேன். இந்த படப் பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் எனது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவேன். தமிழக அரசும் படத்துக்கு விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்ளும் என நம்புகிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.
பேச்சுவார்த்தை குறித்து ஜவாஹிருல்லா கூறியது:
விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகள் மற்றும் சில வசனங்களை நீக்க நடிகர் கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இடையே எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபாவும் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசனும் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.
எப்போது வெளியாகும்?
விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியது:
எனது ரசிகர்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். படத்தின் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில் படத்தை வெளியிடும் தேதியை அறிவிக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும். தொழில்நுட்பரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பேசிய பிறகு படம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றார் கமல்ஹாசன்.

நன்றி: dinamani.com

விஸ்வரூபம் மீதான தடை நீக்கம் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


 
கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சைகளில் சிக்கித் தவித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இதனையடுத்து இப்படத்தின் தடை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் தரப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் இன்று ஒத்திவைக்கபட்டிருந்து.

மீண்டும் இன்று நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு சுமார் 6 மணி நேர விவாதத்தின் பின்னர் தீர்ப்பிற்காக ஒத்தி வைக்கப்பட்டு சற்று முன்னர் திரு கே. வெங்கட்ராமன் நீதிபதி விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் அறிக்கை இன்று இலங்கை தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பரீசிலனை செய்த பின்னர் இலங்கையில் வெளியிடுவது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 நன்றி வீரகேசரி  

 

 

 

இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுமா? தணிக்கை சபை விளக்கம்



2013-01-29

இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட இலங்கை தணிக்கை சபையின் தலைவர் காமினி சுமனசேகர, இஸ்லாமிய மத குருமாரின் அறிக்கை கிடைத்தவுடன் மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்திரைப்படம் இஸ்லாமிய மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதான முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களுக்கு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நேற்றிரவு காண்பிக்கப்பட்டது.

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமது பிரதான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என நேற்றிரவு அறிவித்தது.

இது தொடர்பில் தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்த கருத்துக்கள்,

கேள்வி: விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படுவதற்கு ஏதுவான காரணிகள் என்ன?

பதில்: இஸ்லாம் மதத்துக்கு எதிரான காட்சிகளைக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தி அத்திரைப்படத்தினை தடை செய்யுமாறு இஸ்லாமிய அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கையில் வாழும் இனத்தவர்கள் என்ற வகையில் அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது எமது கடமையாகும்.

அதன்பிரகாரம் திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி குறிப்பிட்ட அமைப்புகளுடனும் முஸ்லிம் தலைவர்களுடனும் பேச்சுவார்த்கைள் நடத்தினோம். இத்திரைப்படம் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட ஏனைய அமைப்பினருக்கும் மத குருமாருக்கும் நேற்றிரவு காண்பிக்கப்பட்டது.

கேள்வி: அதன்பின்னர் நீங்கள் எடுத்த தீர்மானம் என்ன?

பதில்: முஸ்லிம் மதத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் திரைப்படம் தொடர்பாக எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நாம் கோரியிருந்தோம். அதன்பிரகாரம் இவ்வாரம் அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஆயினும் நேற்று திரைப்படத்தை பார்த்த பெரும்பாலானோரின் கருத்து திரைப்படத்தை திரையிடக் கூடாது என்பதாகத்தான் இருந்தது.

கேள்வி: விஸ்வரூபத்தை திரையிடக் கூடாது என்பதற்கு அந்த அமைப்புகள் கூறும் காரணம் என்ன?

பதில்: அவர்கள் இதுவரை எழுத்து மூலமாக எமக்கு அறிவிக்கவில்லை. எனினும் பேச்சுவார்த்தைகளின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இஸ்லாம் மதத்தவரை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாகவும் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கேள்வி: இலங்கை தணிக்கை சபை என்ற வகையில் விஸ்வரூபம் தொடர்பில் உங்களுடைய கருத்தினை கூற முடியுமா?

பதில்: என்னைப் பொறுத்தவரையில், திரைத்துறையைச் சார்ந்தவன் என்ற ரீதியில் விஸ்வரூபம் திரைப்படத்தில் பிழை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் இல்லை.

கேள்வி: இலங்கையில் திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்குரிய அனுமதி வழங்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கும் அதேவேளை, மதங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கருத்துக்களும் இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள். அவ்வாறெனின் உங்களுக்குரிய அதிகாரத்தின் நம்பகத்தன்மை இங்கு மீறப்படுவதாக இல்லையா?

பதில்: இலங்கையில் முஸ்லிம் மக்கள் வாழுகிறார்கள். இலங்கையர்கள் என்ற ரீதியில் அவர்களுடைய கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் தானே? அதனால்தான் அவர்களுக்கு திரையிட்டுக் காட்டினோம். இஸ்லாமிய மதத் தலைவர்களின் பார்வையில் அந்தத்திரைப்படம் எவ்வாறிருக்கிறது என்பதை எழுத்து மூலமாகக் கோரியிருக்கிறோம்.

(ஆர். நிர்ஷன்)

நன்றி வீரகேசரி 

 

 

தமிழகத்தை விட்டு வேறு மதசார்பற்ற நாட்டில் குடியேறுவேன்: கமல் ஹாசன்
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து, படம் வெளியிட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கமல் ஹாசன். அப்போது அவர், தான் தமிழகத்தை விட்டுவிட்டு, வேறு மதச்சார்பற்ற மாநிலத்துக்கோ அல்லது மதச்சார்பற்ற நாட்டுக்கோ சென்று குடியேறுவேன் என்று கூறினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில்,

"விஸ்வரூபம் படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்வதாக அமையும்? இந்தப் படத்தை எடுப்பதற்காக நான் பெரும் தொகை செலவு செய்திருக்கிறேன். என் திரையுலக அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் கொண்டு இந்தப் படத்தை நான் தயாரித்துள்ளேன். இந்தப் படத்துக்காக நான் எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன்.

இந்தப் படம் மட்டும் வெளியாகவில்லை என்றால் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் இந்த வீடு ‌என்னுடையது இல்லை என்றாகிவிடும்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, நீதிபதி என்னிடம் கேட்டார். ஒருவரின் முதலீட்டுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா? என்று!

எனக்கு நம் நாட்டின் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் இப்போதும் சொல்கிறேன். நம்  நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கவும் நான் தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது; அரசியல் கிடையாது; மனிதநேயம்தான் முக்கியம்.

என் மனதில் பட்டதை தைரியமாக எடுத்துச் சொல்வேன். இந்தப் படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை. இந்த நிலையில், எதற்காக எனது படத்தைத் தடை செய்கிறார்கள் என்பது எனக்குப் புரியவி‌ல்லை.

என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும் விருட்சமாக எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்து அமரும் மரமாக நான் உயர்வேன். அது ஒரு சோலையாகும், காடாகும். ஆனால் இந்த விதையைப் போட்டது நான். எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது.

ஒரு வேளை தமிழகம் மட்டும் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால், நான் நிச்சயமாக வேறு ஒரு மாநிலத்தைத் தேடிப் போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டைத் தேடிப் போவேன்.

இன்று படம் பார்க்க திரையரங்குகளுக்குச் சென்ற எனது ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இழப்பதற்கு இனி என்னிடம் ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள்.

கேரளாவில் மலபாரிலும், ஐதராபாத்திலும் படம் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்".

- இவ்வாறு கூறினார் கமல் ஹாசன்.நன்றி தேனீ 

 

No comments: