தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள் நினைவாக! : நிலவிலே மலர்ந்த முல்லை

.

பத்துப் பாட்டுக்குப் பட்ட பாடு இது!
நிலவிலே மலர்ந்த முல்லையை உ.வே.சா. விவரித்த விதம் இது!
உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்த நாள் நினைவாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. பத்துப்பாட்டு ஏட்டுச் சுவடி தேடி நடையாய் நடந்து, திருநெல்வேலி மண்ணில் தாமிரபரணிக்கரையில், வேதம் தமிழ் செய்த மாறன் என்றும், திராவிட வேதம் படைத்த மாறன் என்றும் போற்றப்படும் சுவாமி நம்மாழ்வார் அவதரித்த மண்ணில் அந்தச் சுவடி கிடைக்கப் பெற்றதும், உ.வே.சா. அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர் இதனை இந்தக் கட்டுரையில் விவரிக்கிறார்.
முல்லை மலரானது, நிலவு காயத் தொடங்குகையில் இதழ் விரித்து மலர்ச்சி காண்கிறது. இங்கும் அப்படியே! நிலவு தனது பட்டொளியால் நிலத்தைக் குளிர் ஒளியில் ஆழ்த்தியிருக்க, அந்த இரவு நேரத்தில் ஓலைச் சுவடியை எடுத்துப் படிக்கும்போது, முதல் எழுத்தே பத்துப் பாட்டில் ஒன்றான முல்லைப் பாட்டு உ.வே.சா. ஐயரின் கண்களில் தெரிகிறது. ஆர்வ மிகுதியால் எடுத்துப் படித்தவர், இந்தக் கட்டுரைக்கான தலைப்பையும் அவ்வாறே இருபொருள்படக் கொடுத்துள்ளார். நிலவில் மலர்ந்த முல்லைப் பாட்டு என்று!


ஒலைச் சுவடி தேடி ஊர் ஊராய்ச் சுற்றி, தனது வாழ்க்கையை தமிழின் மறுமலர்ச்சிக்காக தியாகம் செய்த மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் தியாகத்தைப் போற்றாதிருந்தால் நாம் தமிழர் இல்லை!
அவர் பட்ட சிரமங்களை அவர் விவரிப்பில் படித்தால் அவர் காலக் கண்ணோட்டத்தில் இருந்த நிலை புரியும்!
-------------------------
நான் முதலில் லக்ஷ்மண கவிராயரென்ற ஒருவருடைய வீட்டிற்குப் போனேன். அவர் மிகவும் சிறந்த வித்துவானாகிய தீராத வினை தீர்த்த திருமேனி கவிராயரென்பவருடைய பரம்பரையினர். அவர் வீட்டில் ஆயிரக்கணக்கான சுவடி கள் இருந்தன. பல பழைய நூல்களும், இலக்கணங்களும், பிரபந்தங்களும், புராணங்களும் இருந்தன. எல்லா வற்றையும் பிரித்துப் பிரித்துப் பார்த்து வந்தேன். நான் தேடி வந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை, ஒரு சுவடியில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களின் "ஜாப்தா' இருந்தது.
அதிற் கண்டவற்றுள் பத்துப்பாட்டின் முதல் ஏழு பாடல்களுள்ள பிரதியின் பெயர் ஒன்று. ஊரை விட்டுப் புறப்பட்டது முதல் அனுகூலமான செய்தி யொன்றையும் பெறாமல் தளர்ச்சியடைந்திருந்த என் மனத்தில் அப்பொழுது சிறிய ஊக்கம் பிறந்தது. அந்தச் சுவடிக் குவியல்களிலே பத்துப்பாட்டு அகப்படக் கூடுமென்றே நம்பினேன்.
மூன்று நாட்கள் ஆழ்வார் திருநகரியில் இருந்தேன். வந்த முதல்நாள் ஆவணியவிட்டம். ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்த பள்ளிக்கூடப் பரிசோதகரும் என் நண்பருமாகிய சிவ ராமையரென்பவருடைய வீட்டில் தங்கி இருந்தேன். ஒவ்வொரு நாளும் லக்ஷ்மண கவிராயர் வீட்டில் ஏடு பார்ப்பதும் இடையிலே சில சமயங்களில் தாயவலந் தீர்த்த கவிராயர், அமிர்த கவிராயர் முதலிய வேறு கவி ராயர்கள் வீடுகளிலுள்ளவற்றைப் பார்ப்பதும் என்னுடைய வேலைகளாக இருந்தன. முப்பது கவிராயர்கள் வீடு களில் தேடினேன். லக்ஷ்மண கவிராயர் வீட்டிலுள்ள ஏடுகள் எல்லாவற்றையும் பார்த்தேன். பத்துப்பாட்டு அகப்பட வில்லை. இது நான் புறப்பட்ட காலத்து ஏற்பட்ட சகுனங்களின் பயன் என்றெண்ணி வருந்தினேன்; என் உள்ளம் சோர்ந்தது.
அப்பொழுது லக்ஷ்மண கவிராயர், "எங்கள் வீட்டில் அளவற்ற ஏடுகள் இருந்தன. எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மனைவியாரின் பிறந்தகம் தச்சநல்லூர். தம் புருஷர் இறந்தவுடன் அவர்கள் தச்ச நல்லூர் சென்று விட்டார்கள். போகும்போது இங்கிருந்த சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம்'' என்றார். "பத்துப்பாட்டும் அந்தச் சுவடிகளோடு தச்ச நல்லூருக்குப் போயிருக்க வேண்டும். சரி; இவ்வளவு சிரமப்பட்டும் பயனில்லாமற் போயிற்றே!'' என்று வருந்தி நான் கூறினேன்.
அவர் திடீரென்று எதையே நினைத்துக் கொண்டு, "ஒரு விஷயம் மறந்து விட்டேன்; இவ்வூரில் என்னுடைய மாமனார் இருக்கிறார். தேவபிரான் பிள்ளையென்பது அவர் பெயர். அவருக்கும் எனக்கும் இப்பொழுது மனக் கலப்பில்லை. என்னுடைய வீட்டிலிருந்த வேலைக்காரன் ஒருவன் சில சுவடிகளைக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து விட்டான். அவரிடம் நீங்கள் தேடும் புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம். ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது நிறுத்தி விட்டேன்'' என்றார்.
"அவற்றையும் பார்ப்போம். தாங்கள் மட்டும் தயை செய்ய வேண்டும். எனக் காகவும், தமிழுக்காகவும் மனஸ்தாபத்தை மறந்து தாங்களே அவர் வீட்டில் இருப்ப வற்றை வாங்கித் தர வேண்டும்; என்னை வரச் சொன்னாலும் உடன் வருவேன்'' என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்; அருகிலுள்ளவர்களும் சொன்னார்கள். கவிராயர் அங்ஙனமே செய்வதாக ஒப்புக் கொண்டார்.
ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கையும் மனமும் சோர்ந்து, அவ்வூரில் ஸப்ரிஜிஸ்திராராக இருந்த இராமசாமி ஐயரென்பவர் வீட்டுக்குப் போனேன். இரவு அவர் வீட்டில் போஜனம் செய்து விட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். அவ்வூரிலுள்ள ஸ்ரீ வைஷ்ணவப் பெரியார் சிலர் நான் விரும்பியபடி திவ்யப் பிரபந்தத்திலுள்ள சில பாசுரங்களின் பழைய வ்யாக்கியானங் களைச் சொல்லிக் கொண்டி ருந்தனர். நான் மிக்க விருப்பத்துடன் கேட்டு மகிழ்ந்தேன். இயல்பாகவே அவ்வியாக்கியானங்களைக் கேட்டு அடையும் முழு மகிழ்ச்சியும் எனக்கு அப் பொழுது உண்டாக வில்லை. அதற்குக் காரணம் அவற்றைச் சொன்னவர் களது குறையன்று; என் உள்ளத்துக்குள்ளேயிருந்த, "பத்துப்பாட்டு அகப்பட வில்லையே!' என்ற கவலையே.
இப்படி இருக்கையில், அன்று ஏதோ விசேஷமாதலின், திருவீதியில் பெருமாளும், சடகோபராழ்வாரும் எழுந் தருளினார்கள். ஆழ்வார் அவதரித்த திவ்ய தேசம் அவ்வூரென்று நான் சொல்வது மிகை; நானும் பிறரும் எழுந்து தரிசனம் செய்தோம். நான் வணங்கினேன். பட்டர்கள் சந்தனம் புஷ்பமாலை முதலிய வற்றை அளித்தார்கள்.
எல்லோருடைய அன்பும் ஒருமுகப் பட்டு அத்தகைய மரியாதைகளை நான் பெறும்படி செய்தது.
அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தைத் தரிசித்தேன்; அவரைப் பார்த்து, "ஸ்வாமி! தமிழ் வேதம் செய்தவரென்று தேவரீரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூலொன்றைத் தேடி வந்திருக்கிறேன். தமிழுக்குப் பெருமையருளும் தேவரீருக்கு, நான் படும் சிரமம் தெரியாததன்றே! நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா!'' என்று சொல்லிப் பிரார்த்தித்தேன். உள்ளம் அயர்ந்து போய், "இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை' என்ற முடிவிற்கு வந்தமை யினால் இங்ஙனம் பிரார்த்தனை செய்தேன்.
பெருமாளும் ஆழ்வாரும் அவ்விடத் தைக் கடந்து அப்பால் எழுந்தருளி னார்கள். உடனே நாங்கள் திண்ணையில் வந்து அமர்ந்தோம். நிலா ஒளி நன்றாக வீசியது. அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக் கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார். திருக்கோயிலில் பிரசாதங்களைப் பெற்று அவற்றை மறைத்துக் கொண்டு வருகிறாரென்று நான் நினைத்தேன்.
வந்தவர், "இந்த புஸ்தகத்தைப் பாருங்கள்; இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக்கிறது; பார்த்து விட்டுத் திருப்பி அனுப்பி விடுவதாகச் சொல்லி வாங்கி வந்தேன்'' என்று கூறி மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார். அவர் என்னிடம் கொடுப்பதற்கு முன்பே ஆத்திரத்தால் நான் அதனைப் பிடுங்கினேன்; மேலே கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து அந்த நிலாவின் ஒளியிலேயே பிரித்தேன். சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் என் கண்ணிற்பட்டது.
நிலவில் மலர்ந்த அம் முல்லையினால் என் உள்ளம் மலர்ந்தது. எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லை யில்லை. மிகவும் விரைவாக முதலி லிருந்து திருப்பித் திருப்பிப் பார்த்தேன். ஆரம்பத்தில் திருமுருகாற்றுப் படை, அப்பால் பொருநராற்றுப்படை, அதன் பின் சிறுபாணாற்றுப்படை இப்படி நெடுநெல்வாடை முடிய ஏழு பாட்டுக்கள் இருந்தன. ஒவ்வோர் ஏட்டையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கையில் என்னையே மறந்து விட்டேன். சந்தோஷ மிகுதியினால் அப்பொழுது என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருகிலிருந்தவர்களுக்குப் பொருள்பட்டிரா.
அந்தச் சமயத்தில் மட்டும் என்னை யாரேனும் புதிதாகப் பார்த்திருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகவே கருதியிருப்பார்; என்னுடைய மன உணர்ச்சி அவ்வளவு தீவிரமாகயிருந்தது. ஆழ்வாரை ப்ரார்த்தித்தது வீண் போகவில்லை. அவர் கண்கண்ட தெய்மென்பது ஐயமேயில்லை என்று அருகிலிருந்தவர்களிடம் கூறினேன்.
அன்று இரவு முழுவதும் ஸந்தோஷ மிகுதியினால் எனக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாள் காலையில் திருக் கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து அர்ச்சனை செய்வித்து, இப்படியே நான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலம் செய்தருள வேண்டும் என்று பிரார்த்தித்து விட்டு வந்தேன்.

நன்றி: தினமணி 

No comments: