.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான இளைய மகன் பாலச்சந்திரன், உயிருடன் பிடித்து கொல்லப்பட்டதாகப் புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் இயக்குனர் கெல்லம் மக்ரே.
உலகை உறைய வைத்த ஒளிப்படங்கள்!
தமக்கு கிடைத்த நான்கு ஒளிப்படங்களில் மூன்றை, அவர் கடந்த 19ம் திகதி லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ற் மற்றும் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு வெளியாகும் தி இந்து ஆகிய நாளிதழ்களில் வெளியிட்டுள்ளார்.
முதலிரு படங்களிலும், சுற்றிவர மண்மூடைகள் அடுக்கப்பட்டுள்ள பதுங்கு குழி ஒன்றினுள், பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மரப்பலகை ஆசனம் ஒன்றின் மீது அமர்ந்துள்ள காட்சிகள் பதிவாகியுள்ளன.
அதில் ஒன்றில், கையில் தின்பண்டப் பொதி ஒன்றுடன் மிரட்சியுடன் வெறித்துப் பார்க்கும் காட்சியும், அவருக்கு முன்னே நிற்கும் இலங்கை இராணுவத்தைச் சோ்ந்த ஒருவரின் சீருடையின் ஒரு பகுதியும் அவரது ஒரு கையும் பதிவாகியுள்ளன.
கிட்டத்தட்ட அதையொத்த சூழலில் உள்ள அடுத்த ப்டத்தில், பாலச்சந்திரன் தனது கையில் இருந்த தின்பண்டப் பொதியில் இருந்து எதையோ எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் காட்சி உள்ளது.
இந்த இரண்டு படங்களிலும், அவரது உடலில் மேலாடை ஏதும் இல்லை. காற்சட்டை மட்டும் அணிந்துள்ளார். தோளில் ஒரு சாரம் போர்த்தியுள்ளார்.
அடுத்த படம், பாலச்சந்திரன் நெஞ்சில் நான்கு துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் இறந்து கிடக்கும் காட்சியைக் கொண்டது.
கரடு முரடான வெறும் நிலத்தில் கிடக்கும் அவரது உடலைச் சுற்றி, இரண்டு இராணுவச் சப்பாத்து அணிந்தவர்களினதும், சாதாரண செருப்பு அணிந்த இருவரினதும் பாதங்களின் சில பகுதி தென்படுகின்றன.
இன்னொருவரின் நிழல் பாலச்சந்திரனின் உடல் மீது தெரிகிறது.
ஆனால் நான்கு குண்டுகள் துளைத்த காயங்கள் அவரது மார்பில் உள்ள போதிலும், தரையில் இரத்தம் உறைந்த தடயங்கள் எதையும் காண முடியவில்லை.
எனவே அவர் வேறு இடத்தில் சுடப்பட்டு அந்த இடத்தில் போடப்பட்ட பின்னர் அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நான்காவது படம், பாலச்சந்திரனைச் சுற்றி அவரது மெய்க்காவலர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஐந்து போ் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடக்கும் காட்சியைக் கொண்டது என்று கெல்லம் மக்ரே கூறியுள்ள போதிலும் அதை அவர் வெளியிடவில்லை.
அவரது அடுத்த ஆவணப்படமான போர் தவிர்ப்பு வலயத்தின் சுவாரசியம் போய்விடும் என்பதால் எல்லாப் படங்களையும் வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம்.
இந்தப் படங்கள் எல்லாமே ஒரே கமராவில் எடுக்கப்பட்டவை என்றும், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு இடையில் எடுக்கப்பட்டவை என்றும் கெல்லம் மக்ரே கூறியுள்ளார்.
இந்த ஒளிப்படங்களின் சுய தரவுகளின்படி 2009 மே 19ம் திகதி காலை 10:14 மணிக்கு முதலாவது படம் எடுக்கப்பட்டுள்ளது. கடைசிப்படம் அதாவது பாலச்சந்திரன் இறந்து கிடக்கும் படம் 12:01 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே பாலச்சந்திரன் மே 19ம் திகதி நண்பகலுக்கு முன்னதாகவே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் பாலச்சந்திரன் 2009 மே 19ம் திகதி காலை 7:30 மணியளவில் பிரிகேடியர் கமால் குணரத்னவின் 53வது டிவிசனிடம் சரணடைந்ததாக ஒரு தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆக அந்தத் தகவல் மற்றும் தற்போது வெளியாகியுள்ள ஒளிப்படங்கள் என்பன பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.
இந்தப் படங்கள் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
12வயதுச் சிறுவன் ஒருவன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதான கருத்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் இவை எதையுமே இலங்கை இராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இவை பொய்யான காட்சிகள் என்றும் புனையப்பட்டவை என்றும் அரசாங்கமும் இராணுவமும் திரும்பத் திரும்ப கூறி வருகின்றன.
முன்னதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சி அடங்கிய ஒளிப்படம் வெளியான போதும், அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்றே இராணுவம் கூறியிருந்தது.
இருதரப்பு மோதலுக்குள் அகப்பட்டு பாலச்சந்திரன் இறந்திருக்கலாம் என்றும் இராணுவத்தரப்பில் கூறப்பட்டது.
இப்போதும் அதையே இராணுவம் கூறுகிறது.
இருதரப்பு மோதலுக்குள் அகப்பட்டு பாலச்சந்திரன் இறந்திருந்தால் அவரது சடலம் இராணுவத் தரப்பிடம் சிக்கியிருக்க வேண்டும்.
அப்படி அவரது சடலம் தம்மிடமே சிக்கியதாக இராணுவத் தரப்பு முன்னொருபோதும் கூறவில்லை.
பாலச்சந்திரன் பற்றியோ, அல்லது பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா பற்றியோ இலங்கை இராணுவம் எதையும் அறிந்திருக்கவில்லை, அவர்கள் எங்கிருந்தனர், என்ன நடந்தது என்றும் தெரியாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் கூறியுள்ளார்.
2009 மே 19ம் திகதி காலை 10:00 மணியளவில் போரின் முடிவில் மீட்கப்பட்ட புலிகளின் சடலங்களில் பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி ஆகியோரின் சடலங்கள் மட்டும் தான் இருந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.
இருதரப்பு மோதலில் பாலச்சந்திரன் இறந்திருக்கலாம் என்ற இராணுவத்தரப்பின் கருத்தை உறுதிப்படுத்தும் எந்த வலுவான ஆதாரமும் இல்லை.
அதேவேளை, இந்த ஒளிப்படங்கள் பதிவான நேரங்களில் எந்தவொரு இருதரப்பு மோதலும் இடம்பெற்றிருக்கவும் இல்லை.
2009 மே காலை 10 மணியுடன் இறுதிப்போர் முடிவுக்கு வந்து விட்டதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
அந்தநேரத்தில் அதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் பாலச்சந்திரன் அதற்குப் பின்னரும் அதாவது 2009 மே 19ம் திகதி காலை 10:14 மணிக்குப் பின்னரும் உயிருடன் இருந்துள்ளதாக புதிய ஒளிப்பட ஆதாரம் கூறுகிறது.
எனவே அந்த நேரத்தில் இருதரப்பு மோதலில் அவர் அகப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
அப்படி இருதரப்பு மோதலில் அகப்பட்டு இறந்திருந்தால் கூட, அவரது சடலத்தை அப்போதே இராணுவம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
இவை எதுவும் நடந்திருக்கவில்லை.
சிறுவன் என்பதால் இரகசியமாக இந்த விவகாரத்தை மறைக்கும் முயற்சிகளே நடந்துள்ளதாகத் தெரிகிறது.
2009 மே 19ம் திகதி காலை 7:30 மணியளவில் சரணடைந்த பாலச்சந்திரனிடம், அவரது தந்தையின் இருப்பிடம் குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர் அவர் கொல்லப்பட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
தற்போது வெளியாகியுள்ள ஒளிப்படங்களில் பதிவான நேரத்தின் அடிப்படையில் பாலச்சந்திரன் 2009 மே 19ம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னதாகவே கொல்லப்பட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.
ஆனால் போர் மே 19ம் திகதி காலை 10 மணியுடன் முடிந்து விடுகிறது.
அதாவது பிரபாகரன் இறந்தது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அல்லது சமநேரத்தில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டுள்ளதாக புதிய ஒளிப்பட ஆதாரங்கள் மூலம் கருத முடிகிறது.
பாலச்சந்திரன் பற்றிய இந்த ஒளிப்படங்கள் கமராவினால் எடுக்கப்பட்டவை என்பதையும், எந்த மாற்றங்களும் செய்யப்படாதவை என்பதையும் சனல் 4 தொலைக்காட்சி உறுதிப்படுத்துகிறது.
ஆனால் இலங்கை இராணுவம் அதற்கு முரணாக இவை பொய்யானவை, புனையப்பட்டவை என்கிறது.
சனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே இரண்டு போர்க்குற்ற ஆவணப்படங்களை வெளியிட்ட போதும் இலங்கை இராணுவம் அவற்றையும் பொய் என்றே மறுத்த்தது.
இலங்கை இராணுவத்தின் தொழில் நுட்பப் பிரிவு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் அவை பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாகவும் இராணுவத்தரப்பில் அதுபோன்றே சாட்சியமளிக்கப்பட்டது.
ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சனல் 4 போர்க்குற்றக் காட்சி பொய்யானது என்று உறுதிப்படுத்தவில்லை.
அதன் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்குமாறே பரிந்துரைத்தது.
இன்றுவரை இலங்கையின் கொலைக்களங்கள் என்ற சனல் 4 ஆவணப்படத்தின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைகளை இலங்கை இராணுவம் முடிக்கவில்லை.
இதற்கென நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான இராணுவ நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட முதலாவது கட்ட அறிக்கையில், பொதுமக்கள் மீது தாம் ஷெல் தாக்குதல்களை நடத்தவில்லை என்று மட்டும் கூறியுள்ளது.
அடுத்த கட்டமாக சனல்4 ஆவணப்படம் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை இராணுவத்தினால் பொய்யானது என்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட வீடியோ காட்சியின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதை இராணுவம் இன்னமும் இழுத்தடித்து வருகிறது.
இத்தகைய பின்னணியில் தான் பாலச்சந்திரன் பற்றிய ஒளிப்படங்களையும் பொய்யானவை என்று இராணுவத்தரப்பு கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்ட ஒரு போர் நடவடிக்கையில் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்படவோ, தம்மால் கொல்லப்படவோ இல்லை என்று எந்தவொரு இராணுவத்தினாலும் குறுகிய நேரத்தில் முடிவெடுத்து மறுக்க முடியாது.
முதலில் அந்தப் படத்தை ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தான் முடிவு செய்ய வேண்டும்.
அப்படி எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படாமலேயே இலங்கை இராணுவமும் அரசதரப்பும் இவற்றை நிராகரித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இறந்த உடல் மீது அமெரிக்கப் படையினர் சிலர் சிறுநீர் கழிக்கும் காட்சி உள்ளிட்ட அமெரிக்கப் படைகளின் போர்க்குற்றங்கள் குறித்த வீடியோ மற்றும் ஒளிப்படங்கள் அண்மையில் வெளியான போது உடனடியாக அமெரிக்கா அதை நிராகரிக்கவில்லை.
இதுபற்றி விசாரித்து விட்டுப் பதிலளிக்கிறோம் என்றுதான் அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த ஹிலாரி கிளின்டன் கூறினாரே தவிர, அப்படியொன்றும் நடக்கவில்லை என்றோ, அது புனையப்பட்ட காட்சி என்றோ எடுத்த எடுப்பிலேயே பதிலளிக்கவில்லை.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் அமெரிக்கப் படைகள் அவ்வாறு மீறலில் ஈடுபட்டது உண்மையே என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய அணுகுமுறையை பாலச்சந்திரன் விவகாரத்தில் இலங்கை அரசாங்கமோ அரச படைகளோ கடைப்பிடிக்கவில்லை.
இலங்கைப் படையினர் 100 வீதம் ஒழுக்கமானவர்கள் என்றும் போர் விதிகளை அவர்கள் ஒருபோதும் மீறவில்லை என்றும் போர்க்களத்தையே எட்டிப்பார்க்காத அரசதரப்பினர் பலரும் கூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கான படையினர் ஈடுபடுத்தப்படும் போரில் விதி மீறல்கள் இடம்பெறுவது சாதாரணமானது.
இத்தகைய மீறல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கொள்ள முடியாத எந்த இராணுவமும் உலகில் இல்லை. ஆனால் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு அவை உண்மையென்றால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் பொய் என்றால் அதை நிரூபிப்பதும் தான் இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றும்.
இலங்கை இராணுவத்துக்கு இப்போதுள்ள சவால் தாம் பாலச்சந்திரன் கொலை உள்ளிட்ட எந்தவொரு போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபித்துக் கொள்வது தான்.
அதனை ஒருபோதும் இலங்கை இராணுவத்தின் சுய விசாரணைகள் மூலம் செய்து கொள்ள முடியாது.
ஏனென்றால் அதற்கான நம்பகத் தன்மையை இராணுவம் தக்கவைக்கத் தவறிவிட்டது.
குற்றச்சாட்டுகள் எழுகின்ற போது அதுபற்றி விசாரித்து விட்டு பதிலளிக்காமல் எடுத்த எடுப்பிலேயே மறுக்கின்ற போக்கின் மூலம் இலங்கை இராணுவம் தமது நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் இழந்து விட்டது.
தற்போது வெளியாகியுள்ள பாலச்சந்திரன் பற்றிய ஒளிப்படங்கள் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும் இவற்றின் உண்மைத்தன்மை மீது கேள்வி எழுப்பியுள்ள ஒரே ஒருவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மட்டும் தான்.
வேறு எவருமே இதன் மீது கேள்வி எழுப்பாத நிலையில் இவை பொய்யான படங்கள் என்று சர்வதேச அளவில் நிரூபிப்பதன் மூலம் மட்டுமே இலங்கை இராணுவத்தினால் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுபட முடியும்.
வெறும் நிராகரிப்புகளும் அறிக்கைகளும் ஒருபோதும் இலங்கை அரசையோ இராணுவத்தையோ காப்பாற்ற உதவப் போவதில்லை.
சுபத்ரா
நன்றி: Tamilwin
No comments:
Post a Comment