ஆழ்வார் திவ்விய பிரபந்தம் - பகுதி 3 - மதிதாய் புழுதியளைந்த மேனியுடன் காணும் பொழுது பெரிதுவைப்பதும் மாணிக்கமே என் மணியே என அழைப்பதும் வாத்சல்ய பாவனை உச்சநிலையில் உள்ளம் உருகி நிற்பதைக் காட்டி நிற்கின்றது.

இளம் பராயத்திலிருந்தே பூஞ்செடிகள் தானே வளர்த்து பெருமாளுக்கு மாலைகள் தொடுத்து பூசாரியிடம் கொடுத்து தனி இன்பம் காண்பவர். பின்னர் பூந்தோட்டத்தைப் பெரிதாக்கி மேலும் அழகிய பூங்கன்று, செடிகளை வளர்த்தார். பெருமாளுக்குகந்த துளசி செடிகளையும் அதிகம் வளர்த்தார். ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையில் பூக்கொய்யப்போயிருந்த சமயம் சிறிய குழந்தையின் குரல் அங்கு கேட்டது. குரல் கேட்கும் திசை நோக்கி விரைந்த பெரியாழ்வார் துளசிச்செடியில் பட்டுத்துணியினால் சுற்றப்பட்டிருந்த அழகிய ஒரு பெண் குழந்தையைக் கண்டு அன்போடு தூக்கியணைத்து பெற்றோர் யாராவது அங்கு நிற்கின்றனரா என எங்கும் பார்த்தார். ஒருவரும் தென்படவில்லை. அன்று ஆடிப்பூரம். குழந்தையை அன்போடு அணைத்துக் கொண்டு போய் தம் மனைவியாரிடம் கொடுத்தார். இறைவனைக் குழந்தையாகப் பாவனை பண்ணிப் பக்திபரவசத்தில் பாடும் ஆழ்வாருக்குப் பிள்ளைகளில்லை. இக்குழந்தை கிடைத்ததும் அத்தம்பதியினர் பெருமகிழ்வெய்தினர். குழந்தை பூமியிலிருந்து கிடைக்கப்பெற்றமையால் கோதை என நாமமிட்டனர். கோதையும் பெரியாழ்வார் எம்பெருமானைப் பக்தியோடு பாடும் பாடலகளையும் அவரைப்பற்றிய கதைகளையும் கேட்டு நாராணன் சிந்தையாகவே வளர்ந்தாள் கோபியர் கண்ணன் கதைகள் அவள் உள்ளத்தைக் கவர்ந்தன. அவள் தானும் கண்ணனைத்தான் மணப்பேனென்று கூறும் போதெல்லாம் அவரும் உடன் பாடாயிருந்தார். ஆனால் கொஞ்சம் வளர்ந்தபின் பெரியாழ்வாருக்குச் சோதனையாய் போயிற்று.


அவரது விஷ்ணு கைங்கர்யங்களில் முக்கியமானது தினந்தோறும் அதிகாலையிலெழுந்து பூக்கள் பறித்து மாலைகள் தொடுத்து பூசை செய்பவரிடம் கொடுத்து எம்பெருமானை அழகுபடுத்திப் பார்ப்பதாகும். கோதையும் அவருடனே தான் இருப்பாள். சிறுமி கோதை மதுர பாவத்துடன் தன்னை கோபிகைகளில் ஒருவராகவே எண்ணிக்கொண்டார். மார்கழி மாதம் வந்தது. மானிடர்க்கு ஒரு வருடம் தேவர்கட்கு ஒரு நாளாகும். மார்கழி மாதம் தேவர்கட்கு வைகறைப்போது சூரியனுதிப்பதற்கு முன்னுள்ள 2.5 நாழிகையாம் - பிரம்ம முகூர்த்தம். இந்நேரத்தில் இறைவனை வணங்குதல் மிகச்சிறப்பானதாகும். கோபிகைகள் இந்நேரத்தில் நீராடி காத்யாயனி விரதம் மேற்கொண்டு கண்ணனை மணமகனாக வரிக்க வேண்டி நின்றனர்.

கோதையும் தன்னை ஒரு கோபியாகவும் பிருந்தாவனத்திலிருப்பதாகவும் பாவனை பண்ணிக்கொண்டு நீராடப்புறப்படுவதாகத் திருப்பாவை பாடியருளினார். இவர் நோற்றது பாவை நோன்பு.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினே நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்கான்
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

தோழியார் எல்லோரையும் அதிகாலை நீராட அழைக்கின்றார். நந்த கோபன் குமரன், யசோதை இளஞ்சிங்கம், கார்மேனி, சிவந்தகண் நிறைந்த மதி போல் முகத்தானாகிய நாராயணனே நமக்குப் பரிசு தருவான் என ஊக்குவித்து அழைக்கின்றார்.

நோன்பு எவ்வாறென்பதை
நெய்யுண்னோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம், பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நிற்போம் என்கின்றார்.

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்குஞ் செய்ததா மோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்க
போய பிழையும் புதுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்…..

மனம் வாங்குக் காயத்தினால் வணங்கி நிற்க எல்லா வினைகளும் பொசுங்கிப் போகும் என்று கோதை எல்லா ஜீவாத்மாக்களையும் கடைத்தேற்ற அழைக்கின்றார். திருப்பாவைப் பாடல்கள் 30. முதல் பதினைந்தும் தோழியரை அதிகாலை நித்திரை விட்டெழுந்து நீராடி பரமனடி பாடக் கூவியழைக்கின்றார். பின்னர் கண்ணனைத் துயிலெழப்பாடுகின்றார். கண்ணன் நித்திரை கொண்டால்தானே எழுப்பலாம். ஆனால் கண்ணனோ எல்லோரும் பாடி உய்யும் பொருட்டு நித்திரை செய்வது போலக் கிடக்கின்றார்.  நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே, கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய் என்றும் தூயோமாய் வந்தோம் தூயிலெழப் பாடுவதற்கு என்று நந்தகோபன் வீட்டுக்குமுன் வந்து பாடுகிறார்கள் கோதையும் தோழியரும்.

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடும் புகழும் பரிசினால் நன்றகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னர் பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

நோன்பினால் தாங்கள் பெறும் பலனை கூறி எல்லோரையும் ஊக்குவிக்கின்றார். கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் என்ற கூறிநிற்கின்றார் கிருஷ்ண பக்தை.

கோதை கண்ணனை தன் நாயகனாகப் பாவனை பண்ணிக் கொண்டாள். பெரியாழ்வாரோ கண்ணனைத் தம் குழந்தையாகவே பாவனை செய்தார். தினந்தோறும் அழகிய மாலைகள் தொடுத்து எம்பெருமானை அழகுபடுத்துவார். மாலைகளைக் கட்டி கூடையில் வைத்துவிட்டு தமது கைங்கர்யங்களைச் செய்துவிட்டு கூடையைக் கொணர்ந்து அர்ச்சகரிடம் கொடுத்துவிடுவார். பூங்கோதை தந்தை தன் கைங்கர்யங்களைச் செய்யப்போகும் சமயம் மாலையைத் தான் போட்டு அழகுபார்த்து விட்டு கூடைச்குள் வைத்துவிடுவாள். இப்படி நாட்கள் சென்றன. ஒரு நாள் கோதை மாலையைப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆழ்வார் திரும்பிவிட்டார். ‘திக்’கென்றது அவர்க்கு. மானுடர் அணிந்த மாலை மங்களமான மூர்த்திக்கு அணிவிப்பதில்லை. கோதையைக் கடிந்துவிட்டு பூக்களெடுத்து வேறு மாலை தொடுத்துக் கொண்டுபோய் ஆவலோடு எதிர்பார்த்து நின்ற அர்ச்சகரிடம் கொடுத்தார். அன்றிரவு பெரயாழ்வார் கனவில் திருமால் தோன்றி கோதை சூடிக்கொடுத்த மாலையே தனக்குப் பிரியமென்றார்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஒரு அழகிய கனவொன்று கண்டார்.

வாரணம் ஆயிரம் சூழ வலஞ் செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னெ;பான் ஓர்
குhளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் என்றும்
பின்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை யுடையவன் நாரா யணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தான்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.

ஒரு நாள் அழகிய அருள் நிறை வாலிபன் ஒருவன் பெரியாழ்வார் மனைக்கு வந்தான். அவனது ஊர், பெயரைக் கேட்டார் பெரியாழ்வார். பெயர் ரங்கநாதன் எனவும் ஊர் ஸ்ரீரங்கம் எனவும் கூறி அவரது மகளைத் தமக்கு திருமணஞ் செய்து கொடுக்கமுடியுமோ வென்று கேட்டான். அவர் கோதை முடிவுதான் முடிவு என்று கூறிக் கோதையைக் கேட்கப் போனார். கோதையே ஸ்ரீரங்கநாதப் பெருமானைத் தவிர வேறொவரையும் மணக்கமாட்டேனென்று கூறிவிட்டாள். இரவு கோதை ஒரே அழுகைதான். பெரியாழ்வார் கனவில் எம்பெருமான் தோன்றி உமக்கு என்னைத் தெரியவில்லையா? நான் கோதையை மண்க்கவுள்ளேன். உரிய சிறப்புகளுடன் அழைத்து வரவும் எனக் கூறியருளினார். வல்லபதேவ மன்னன் கனவிலும் ஸ்ரீரங்கநாதப் பெருமான் தோன்றி தான் கோதையைத் திருமனஞ்செய்யப் போவதையும் சிறப்பாக ஊர்வலமாக கோவிலுக்கழைத்து வரும்படியும் அவர்களை உத்தரவிட்டார். மன்னன் முதலில் விஷ்ணு சித்தர் அருளால் நேரில் எம்பெருமானைத் தரிசித்தார். இரண்டாம் முறையாக கனவில் காணும் பேறுபெற்றார். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி அரச சிவிகையில் கோலாகலமாக அழைத்துவரப்பட்டு கோவில் மணிமண்டபத்தை யடைந்தனர். அங்கு அழகிய மணவாளனுக்கும் கோதைக்கும் திருமணம் நடந்தேறியது. பெரியாழ்வர் ஸ்ரீரங்கநாதனுக்கு மாமனாரும் ஆயினார். ஸ்ரீரங்கநாதனையே ஆண்டதனால் கோதை ஆண்டாள் ஆயினாள். பெரியாழ்வார் ஆண்டாளை நீதான் மூலவர் சந்நிதி உட்செல்லலாம் என்று அவளை அனுப்ப திருப்பாதப் பக்கமாகச் சென்ற கோதை சோதி வடிவில் ஸ்ரீரங்கநாதரோடு இணைந்து கொண்டார். உடனே ஸ்ரீரங்கநாதர் இலக்குமி கோதை – பூதேவி சகிதம் எல்லோருக்கும் காட்சியளித்தருளினார். பெரியாழ்வரின் அரிய பொக்கிஷம் கோதை. பெரியாழ்வார் பெற்றாரும் மாமனாரும் ஆயினார். தூய ஆழ்ந்த பக்தி தேடித் தந்த செலவமிது.தொடரும் ............


No comments: