வானொலி மாமாவின் குறளில் குறும்பு 55 சினங்காப்பது எங்கே!ஞானா: ….ம்…..சினம் தீது…அது சரி. கோபப்பட்டால் Blood pressure   ஏறும். நாடி நரம்புகள் முறுக்கேறும். நெஞ்சு படபடக்கும். உயிருக்கே ஆபத்து வந்தாலும் வரும். ஆதனாலைதான் வள்ளுவப் பெருந்தகை வெகுளாமை எண்டு ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார். ஆனால்…

அப்பா: என்ன ஞானா? வள்ளுவற்றை வெகுளாமை எண்ட அதிகாரத்திலை என்ன பிழை?

ஞானா: அதிலை அப்பா…. அதாவது வந்து கோபத்தை நாங்கள் எப்பபோதும் எந்தநிலையிலும் அடக்க வேணும்தானே.

அப்பா: உண்மைதான் ஞானா. அதிலை உனக்கேன் சந்தேகம்?

ஞானா: திருவள்ளுவர்…… “செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென்” எண்டெல்லே சொல்லியிருக்கிறார். அப்பிடி எண்டால் கோபத்தைக் காட்ட கூடிய இடத்திலை காட்டாதையுங்கோ மற்ற இடகங்களிலை கோபத்தைக் காட்டினாலும் சரி காட்டாவிட்டாலும் சரி எண்டேல்லோ சொல்லிறார்.அப்பா: சரியாய்த்தானே சொல்லியிருக்கிறார் ஞானா. தன்னைக் காட்டிலும் பலம் குறைந்தவர்களிடத்திலை கோபத்தைக் காட்டிறது மிகச் சுலபம். அப்பிடிப்பட்ட சூழ்நிலையிலை கோபத்ததைக் காட்டாமல் அடக்கிக் கொள்ளக் கூடிய மனவலிமை உள்ளவனுக்கு, தன்னிலும் பாக்க வலிமை உள்ளவனிட்டை கோபத்தைக் காட்டினால் என்ன நடக்கும் எண்ட விழிப்புணர்வு இருக்கும்தானே.

சுந்தரி: (வந்து) சரியாய் சொன்னியள் அப்பா. மெலியாரை வலியார் கேட்டால், வலியாரைத் தெய்வம் கேக்கும் எண்டு சொல்லுவினம். அதுபோலை……

அப்பா: வாரும் சுந்தரி வாரும். அதுபோலை என்ன நடந்தது?

சுந்தரி: மறந்து போனியளே அப்பா? அண்டைக்கு நானும் இவள் பிள்ளை ஞானாவும் சொன்ன ஒரு சின்ன விஷயத்துக்கு எங்களிலை துள்ளிப் பாய்ஞ்சு சீறினியளே. எங்களிட்டை உங்கடை கோபம் செல்லும். ஆனால் நீங்கள் கோபத்தை அடக்கேல்லை.

ஞானா: ஆனால் பக்கத்து வீட்டுக்காறன் தன்ரை வளவுக்கை நிண்ட மரக்கொப்புகளை வெட்டி எங்கடை வளவுக்கை எறிஞ்சதுக்கு, ஒரு சத்தமும் போடாமல் வெட்டிக் கட்டி green Bin  இலை போட்டு வைச்சிட்டியள். அவன் பலசாலி….அவனோடை பேசப் பயம்.

சுந்தரி: ஞானா! அபபா என்ன கோளையே? வலியாரைத் தெய்வம் கோக்கட்டும் எண்டு விட்டிட்டார்.

அப்பா: இஞ்சை பாருங்கோ பெம்பிளையள் என்ரை பெலனையும் பெலவீனத்தையும் சோதிக்க வந்தனியளோ? அல்லாட்டில் திருக்குறளுக்கு விளக்கம் கேக்க வந்தனியளோ?

ஞானா: அப்பா கோவியாதையுங்கோ. அண்டைக்குப் பக்கத்து வீட்டுக்காறன் செய்த பிழையைக் கண்டும் உங்களுக்குக் கோபம் வரயில்லை ஆனால் நாங்கள் பிழை செய்யாமல் இருக்கவே எங்களிலை சீறி விழுந்தியள். திருவள்ளுவர் சொன்னதுக்கு மாறாய் நடந்திருக்கிறியள் எண்டுதான் சொல்ல வாறம்.

சுந்தரி: ஞானா அப்பா அண்டைக்குப் பக்கத்து வீட்டுக்காரனோடை அப்பா கோபத்தை அடக்கயில்லை அவனைக் கண்டதும் கோபம் தானாய் அடங்கிப்பேச்சு. உதைத்தான் வள்ளுவர்

“செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்லிடத்துக் காக்கிலென் காவாக்கா லென்.”
எண்டு குறளிலை சொல்லியிருக்கிறார். அதாவது வந்து ஒருவன் உண்மையாய் கோபத்தை அடக்கவேணுமெண்டால் மெலியாரிட்டைத்தான் கோபத்தைக் கட்டாயம் அடக்க வேணும். வலியவையிட்டை கோபத்தை அடக்க் வேண்டிய தேவை இல்லை. அது நானாய் அடங்கிப் போம்.

ஞானா: அம்மா…வலிமை உள்ள ஆக்களிட்டைக் கோபத்தைக் காடினால் சில நேரம் கைகால் முறியக்கூடிய சண்டை வந்து பெருங்குழப்பத்திலை முடியும். அதனாலை ஆக்கள் வலிமை உள்ளவையளிட்டைக் கோபத்தைக் காட்டிறதில்லை. அதனாலைதான் வள்ளுவர் வலிமையான ஆக்களிடைடை நீங்கள் கோபத்தைக் காட்டினால் என்ன காட்டாமல் விட்டால் என்ன கட்டா விட்டால் என்ன. நிச்சயம் காட்ட மாட்டியள் எண்டு சொல்லியிருக்கிறார் போலை.

அப்பா: ஞானா சரி…சரி…. அண்டைக்கு உங்களோடை கோபத்தைக் காட்டினது பிழைதான். ஓத்துக்கொள்ளிறன்.

சுந்தரி: அப்பா….திருக்குறளைக் கரைச்சுக் குடிக்கிற நீங்களே அதிலை சொல்லப்பட்ட படி நடக்காட்டில் வேறை ஆர் திருக்குறளிலை சொன்னபடி நடக்கப் போகினம்.

அப்பா: சுந்தரி….நான் வந்து எப்பவாவது திருக்குறளிலை சொல்லப்பட்ட படி நடக்கிறன் எண்டு சொன்னனானே. சொல்லேல்லை. திருக்குறளிலை சொல்லி இருக்கிறபடி நடக்க முயற்சிக்கிறன் எண்டுதானே சொல்லியிருக்கிறன்.

ஞானா: அப்பா இண்டைக்கு நீங்கள் நல்லாய் மாட்டுப்பட்டுப் போனியள்.

அப்பா: ஞானா…திருக்குறளிலை சொல்லியிருக்கிறபடி நடக்கிறவை மிச்சம் குறைவு. அப்பிடி அதிலை சொல்லியிருக்கிறபடி அச்சொட்டாய் நடந்தால் அவர் ஒரு ஞானியாய் இருப்பர்.

சுந்தரி: அப்ப திருக்குறளைப் படிக்கிறதாலை என்ன புண்ணியம் அப்பா.

அப்பா: சுந்தரி…திருக்குறள் ஒரு வழிகாட்டி. அதிலை சொன்னபடி இயன்றளவுக்குக் கடைப்பிடியுங்கோ. வாழ்க்கை இலகுவாய்ப் போகும். திருக்குறளைப் பற்றிச் சிந்திக்காத ஆக்களே எத்தினையோ பேர் இருக்கினம். அவையில் பாக்க கொஞ்சம் எண்டாலும் தெரிஞ்சு கடைப்பிடிக்கிறது நல்லது தானே.

ஞானா: அப்பா  உஙகளைப் பற்றி எங்களுக்குத் தெரியும்தானே. உங்களுக்குக் கோபம் வாறதுதான் ஒரு குறை. அந்தக் குறையும் இல்லாமல் போகவேணும் எண்டதுதான் எங்கடை விருப்பம். கோபம் எந்தநேரத்திலும், எந்தச்சந்தர்ப்பத்திலும் கட்டுப்படுத்த வேண்டிய ஒன்று என்பதை ஏற்றுக்கொள்ளுவியள்தானே.

அப்பா: உண்மைதான். நான் இனிமேல் கவனமாய் நடக்கிறன். இப்ப ஆளை விடுங்கோ.
-இசை-

No comments: