நான் ரசித்த அரங்கேற்றம்........கலா ஜீவகுமார்


.


அண்மையில் அபினயாலயா நடனப் பள்ளி ஆசிரியை ஸ்ரீமதி மிர்நாளினி ஜெயமோகனின் முதலாவது நடன அரங்கேற்றம் சிட்னி riverside theater இல் 28/01/13 இடம் பெற்றது. செல்வி பாலகி பரமேஸ்வரன் இந்த சிறப்பான அரங்கேற்ற நிகழ்வைச் செய்து தனக்கும் தனது ஆசிரியர் மிர்நாளினியிற்கும் பெருமை சேர்த்துக் கொண்டார். ஸ்ரீமதி மிர்நாளினி ஜெயமோகன் தனது அபிநயாலயா நடனப் பள்ளியை 2002 ம் ஆண்டு சிட்னியில் அங்குரார்ப்பணம் செய்து அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ நடன நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளார் என்பது சிட்னி வாழ் மக்கள் நன்கறிந்த உண்மை. எல்லா நிகழ்வுகளுக்கும் சிகரம் வைத்தால் போல் அமைந்திருந்தது செல்வி பாலகியின் அரங்கேற்றம்.
பரமேஸ்வரன் யோகராணி தம்பதியினரின் அருமைப் புதல்வி பாலகி சிறு வயது முதலே சகல துறைகளிலும் ஆற்றலும் ஈடுபாடும் கொண்டவர். வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு ஈடாக அவரை சிறு குழந்தையாக பார்க்கும் போதே அவரது ஆற்றல் , அறிவு, திறமை அவரில் தெளிவாக புலப்படும். எந்தத் துறையை எடுத்தாலும் அதைச் சிறப்பாக முடிக்க வேண்டும் என்று எண்ணிச் செயற்படும் பாலகியின் ஒரு பரிணாமமே இந்த நடனக் கலை, அதன் ஒரு படிக் கல்லே இந்த அரங்கேற்றம்.
பரமேஸ்வரன் ஒரு பிள்ளையார் பக்தன் அதனைப் பிரதிபலித்தது மண்டப அலங்காரம். எளிமையாக ஒரு தொந்திக் கணபதி வாயிலை அலங்கரிக்க , இடையே பாலகியின் நடனத் தோற்றத்தோடு மிகவும் எளிமையாக மண்டபம் காணப்பட்டது. சரியாக 6 மணிக்கு மண்டபத்தின் பெரும்பகுதி நிறைந்துவிட 6.05 இற்கு நிகழ்வு ஆரம்பித்தது. 





                                                                           படப்பிடிப்பு செ .பாஸ்கரன் 

பாலகியின் சகோதரன் கஜனன் அழகு தமிழிலும் ஆங்கிலத்திலும் சுருக்கமாக தனது வரவேற்புரையை வழங்கியிருந்தார். முதலாவது நிகழ்வாக இடம்பெற்றது ஒரு பாடல். கஜவதனா என ஆரம்பிக்கும் ஸ்ரீ ரஞ்சனி ராகத்தில் அமைந்த இந்த பிள்ளையார் ஸ்துதியை தனது குரலிலேயே வழங்கியிருந்தார் பாலகி. ஆடலில் மட்டுமல்ல நான் பாடலிலும் வல்லவள் என்பதை இந்த ஒரு பாடல் மூலமே நிரூபித்திருந்தார் பாலகி. நல்ல குரல் வளமும் தாள ஞானமும் அவரிடம் உள்ளதை அந்த பாடல் மக்களுக்கு புரிய வைத்திருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.



அரங்கம் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் அலங்கரிக்கப் பட்டிருக்க பாலகியின் சிறு குழந்தைப் பராய நடன ஒளிக் கீற்றுக்களுடன் நடன அரங்கேற்றம் ஆரம்பமாகியது. நிகழ்வைத்தொகுத்து வழங்கியிருந்தார் நமக்கெல்லாம் மிகவும் பரீட்சயமான அறிவிப்பாளர் மகேஸ்வரன் பிரபாகரன், அவருடன் இணைந்து கொண்டவர் ஷிவானி. பாடகர் அகிலன் சிவானந்தன் தனக்கே உரித்தான கம்பீரக் குரலில் பிள்ளையார் ஸ்துதி இசைக்க மக்கள் சிலையென இருந்து அந்தப் பாடலை ரசித்ததை காணக் கூடியதாயிருந்தது.
நடனத்தின் முதலாவது உருப்படியாக அமைந்திருந்தது புஷ்பாஞ்சலி. அதனை தொடர்ந்து " ஆனந்த நடமாடும் விநாயக " என்று தொடங்கும் விநாயகர் ஸ்துதி . அழகுச் சிற்பமாக நாட்டியத்திற்கேற்ப அங்க அமைப்பும் கண்களும் கொண்ட பாலகி மிகவும் லாவகமாக மேடையை வலம் வந்து கொண்டிருந்தார். பிள்ளையாரையும் தனது குருவையும் மற்றைய கலைஞர்களையும் வணங்கி முகத்தில் ஒரு புன்னகையுடன் ஆரம்பித்து வைத்தார். ஒரு குட்டிப் பிள்ளையாரே நேரில் வந்து மேடையை வலம் வந்தது போல் அமைந்திருந்தது ஆனந்த நடமாடும் விநாயகா.



அதனைத் தொடர்ந்து அடானா ராகத்தில் அமைந்த ஜதீஸ்வரம் இடம் பெற்றது. ஜதிகளின் கோர்வையே ஜதீஸ்வரம் . இங்கு ஒவ்வொரு கோர்வையும் தாளம் தப்பாது முத்திரை சுத்தத்துடனும் அங்க சுத்தத்துடனும் செய்திருந்தார் பாலகி. அழகிய ஒரு ஜதீஸ்வரம், அதனை அழகாக தயாரித்திருந்தார் ஆசிரியர் மிர்நாளினி . இடையிடையே அவரது குரல் மிகவும் மிடுக்காக ஜதிகளாக வெளி வந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு இடையிலும் மேடையலங்காரம் ஒவ்வொரு திரையாக பின்புறமாக வந்து கொண்டிருந்தது மிகவும் அருமையாக இருந்தது. முதலில் பிள்ளையார் வந்தார், பின்பு ஒரு கோவில் கோபுரம், அதனைத் தொடர்ந்து ஒரு மலையடிவாரம் இப்படி மக்களின் ஆரவாரமின்றி திரை மட்டும் மாறிக் கொண்டிருந்தது நிகழ்வுக்கு மெருகூட்டியது என்றால் அது மிகையாகாது. அடுத்து இடம் பெற்ற சிவன் ஸ்துதி , ரேவதி ராகத்தில் அமைந்த "போ சம்போ சிவ சம்போ " என்ற பாடலுக்கு சிவன் நடனம் எல்லோரையும் பெரிதும் கவர்ந்திருந்தது. இதில் அகிலன் அவர்களின் பாடலை ரசிப்பதா இல்லை பாலகியின் நடனத்தை ரசிப்பதா என்று மக்களை திண்டாட வைத்து விட்டது. சிவன் நடனத்தின் ஒரு பகுதியில் பாலகி தன் முழங்காலில் இருந்து மேடையை முற்று முழுதாக வலம் வந்து பலரதும் கர கோஷத்தைப் பெற்றுக் கொண்டார். சிவனுக்கே உரித்தான தாண்டவத்தின் மிடுக்கும் , கோபமும் அழகாக அங்க அசைவாலும் பாவத்தாலும் வெளிக்கொணரப் பட்டிருந்தது.



இவை எல்லாவற்றிற்கும் மெருகூட்டியது அகிலனின் குரல் . இப்படி ஒரு குரல் வளம் கொண்ட கலைஞர் உள்ளூரில் இருக்க ஏன் இந்தியாவிலிருந்து பாடகர்கள் பல அரங்கேற்றங் களுக்கு வரவழைக்கப்பட வேண்டும் என்று என் மனதில் எண்ணத் தோன்றியது. இங்கு அகிலன் மட்டுமல்ல புல்லாங்குழல் இசைத்த தேவகி , அருமையான ஒரு இசை வழங்கி எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தினார். கிஷான் சேகரம் ஒரு சிறுவனாக மேடை கண்ட கலைஞன் , இன்று வாலிபனாக ஒரு புன்முறுவலுடன் அழகாக மிருதங்கம் , தபேலா போன்ற கருவிகளை வாசித்தார். ஒரு நடனக் கச்சேரிக்கு மிகவும் முக்கியமான வாத்தியம் மிருதங்கம் , அருமையாக வாசித்து இந்த நடன அரங்கேற்றத்திற்கு ஒரு முத்தாய்ப்பு வைத்திருந்தார் கிஷான். வயலின் மேதை நாராயணதாஸ் கோபதி தாஸ் , பல அரங்கு கண்ட மேதை. நமது உள்ளூர்க் கலைஞன் ஜெயராம் ஜெகதீசன் சகல கலா வல்லவன் , மேடையில் வெகு லாவகமாக தனது திறைமைகளை வீணையிலும் மோர்சிங்கிலும் மாறி மாறி அள்ளி வீசிக் கொண்டிருந்தார். அவர் இசைத்த காயத்திரி மந்திரம் நிச்சயமாக எல்லோர் கண்களையும் அவர் பால் திருப்பியது. இவ்வளவு திறமையாக உள்ளூர்க் கலைஞர்கள் அருகில் இருக்க தூர  இடம் தேடி பொருள் செலவழித்து அலைவது ஏன் ? இதை நாம் ஆதரிக்க வேண்டுமா ? உள்ளூர்க் கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்களைக் கொடுத்து அவர்களை இன்னும் இன்னும் ஊக்குவித்து வளம் படுத்தலாமே ?.



அடுத்த உருப்படியாக அமைந்திருந்தது வர்ணம். வர்ணம் தான் பரத நாட்டியத்தின் மிகவும் முக்கியமானதும் நீளமானதுமான உருப்படியாகும். சாதரணமாக எல்லா வர்ணங்களுமே ஒரு நாயகி நாயகனுக்காக ஏங்குவதாக அமையும்.ஆக இங்கு நிறுத்தம் , அபிநயம் என்பன முக்கிய பங்கு பெறுகின்றன. பாலகி இங்கு காம்போதி ராகத்தில் அமைந்த " வருவானோ " என்று அமைந்த வர்ணத்தில் கண்ணனுக்காக ஏங்கும் ஒரு பேதையாக அழகாக அபிநயித்தார். பாவம், ராகம் , தாளம் யாவும் ஒருங்குற தன் மன ஏக்கத்தை வெளிக் கொணர்ந்தார். அவன் வருவான் வருவான் என எண்ணி தன்னை அழகாக அலங்கரித்து காத்திருத்தல், மிகவும் வெட்கப்பட்டு கண்ணனுக்காக ஒரு கடிதம் ஆசையில் எழுதுதல் என தனது மன வெளிப்பாட்டை பாவம் மூலம் இயல்பாக மக்களுக்கு எடுத்து வந்தார். அதனுடன் இணைந்து ஒரு சிறு பகுதில் பாம்பு நடனமும் இடம் பெற்றது. அவரது உடல் லாவகமாக பாம்பு போல் மிகவும் வளைந்து கொடுத்து ஒரு நல்ல நடனத்தை நிச்சயமாக தந்திருந்தார் பாலகி.
புஷ்பாஞ்சலியிலிருந்து வர்ணம் வரை சகல நடனங்களும் மிகவும் விறுவிறுப்பாக நட்டுவாங்கம் செய்யப் பட்டிருந்தது. இதற்கு அவரது நடன ஆசிரியர் மிர்நாளினியிற்கும் , பாலகிக்கும் ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும்.
தொடர்ந்து இடம் பெற்ற 20 நிமிட இடைவேளையில் பல்சுவை உணவுகளும் பரிமாறப் பட்டன.



இடைவேளையைத் தொடர்ந்து சில கீர்த்தனங்களும் தில்லானாவும் இடம்பெற்றன. ரேவதி ராகத்தில் அமைந்த " துர்கே துர்கே ஜெய ஜெய துர்கே " என்ற கீர்த்தனம் அம்பாள் துர்க்கையின் வீரத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. கீர்த்தனம் பெரும்பாலும் பாவத்தைத்தான் முதன்மையாகக் கொண்டிருக்கும். துர்க்கையின் வீரத்தையும் காத்தல் தொழிலையும் அழகாக அபிநயத்தால் வெளிக் கொணர்ந்திருந்தாள் சிறுமி பாலகி.
அதனைத் தொடர்ந்து எமது நாட்டின் பாரம்பரிய கிராமிய நடனங்களில் ஒன்றான குறவஞ்சி நடனம் இடம் பெற்றது. முந்திய காலங்களில் அரங்கேற்றங்களில் ஒரு கிராமிய நடனமும் இடம் பெறுவது வழமையாக இருந்தது. காலப் போக்கில் இந்த நிகழ்வு அரிதாகப் போய் விட்ட காரணத்தினாலோ என்னவோ பாலகியின் அரங்கேற்றத்தில் குறத்தி நடனம் வெகுவாக எல்லோரையும் கவர்ந்திருந்தது. மிகவும் துடிப்பாக ஒரு சிறு துள்ளலுடன் எல்லோர் மனதையும் கவர்ந்தார் பாலகி. நிச்சயமாக நடன அமைப்பு மிகவும் நன்றாக அமைந்திருந்தது. இருந்தாலும் இதற்கு முன் இடம் பெற்ற நடனங்கள் யாவுமே துரித கதியில் மிகவும் துரிதமான ஜதிகளுடன் இடம் பெற்றதாலோ என்னவோ குறத்தி கொஞ்சம் இன்னும் ஆரவாரமாக , வேகமாக மேடையை நிரப்பியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது. வழக்கத்தில் குறத்தி நடனம் ஒரு துரித கதி நடனம் என்பதால் இது ஒரு சிறு குறையாகப் பட்டது.



இதன் பின் பிரதம விருந்தினர் ஸ்ரீமதி திரிபுரசுந்தரி யோகநாதனின் உரையும் கௌரவிப்பும் இடம் பெற்றது.
அதன் பின் இடம் பெற்றது ஒரு சிறப்பான கீர்த்தனம். ராகமாலிகா ராகத்தில் அமைந்த " அழகுனது காலடியில் அடைக்கலம் முருகா " என முருகன் மீது பாடப் பட்ட பாடலில் தனது பக்தியையும் , காதலையும் முருகப்பெருமானிடம் தெரிவுக்கும் அவள் நம் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், முள்ளி வாய்க்கால் , நந்திக் கடல் அவலம் போன்றவற்றை முறையிட்டு அவர்களைக் காக்கும்படி வேண்டுவதாக அமைந்திருந்தது. நிறையவே பாவமும் அபிநயமும் இணைந்து இந்த கீர்த்தனத்தை வழங்கியிருந்தார் பாலகி. சமகாலப் பிரச்சனைகளையும் இந்த நிகழ்வில் உள் வாங்கி நிகழ்விற்கு பெருமை சேர்த்திருந்தது அபினயாலயா நடனப் பள்ளி.
இறுதியாக இடப்பெற்றது தில்லானா. குந்தலவரளி ராகத்தில் அமைந்த தில்லான நிகழ்வை நிறைவு செய்தது. சாதாரணமாக தில்லானா மிகவும் விறுவிறுப்பாக, மக்களை அசையாமல் வைத்திருக்கும் ஒரு உருப்படி ஏன் சோடை போனது ? தில்லான ஆரம்பத்தில் ஜதிகளுடன் ஆரம்பித்து பின்பு சிறு அபிநயத்தில் முடிவடைந்தது. மிகவும் வேகமான ஜதிகளுடன் இடம் பெற்ற அரங்கேற்றம் தில்லானாவில் ஏன் சோர்வடைந்தது. தாளம் தப்பவில்லை ஆனால் வேகம் குறைந்திருந்தது. இதற்குப் பாடல் காரணமா இல்லை நடன அமைப்பு காரணமா என்றுஎண்ணத் தோன்றியது. அதனைத் தொடர்ந்து "உலகெலாம் உணர்ந்தோதுதற் கரியவன் " என்ற புராணத்துடனும் மங்களத்துடனும் இனிதே நிறைவு பெற்றது.


மண்டபம் நிறைந்த மக்களுடன் நிறைவு பெற்ற அரங்கேற்றம் நிச்சயமாக எல்லோருக்கும் ஒரு திருப்தியையும் மன மகிழ்வையும் கொடுத்திருந்தது. அடாது மழை பொழிந்து கொண்டிருக்க விடாது தனது திறமையை காட்டி, இந்த நிகழ்விற்கு கொட்டும் மழையிலும் வந்தது திருப்தியே என்று யாவரையும் சொல்லி வியக்க வைத்தாள் பாலகி. மிருநாளினியின் முதலாவது அரங்கேற்றம் அவருக்கு வெற்றி கொடுத்ததாகவே அமைந்தது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. உள்ளூர்க் கலைஞர்களைக் கொண்டு ஒரு சிறப்பான அரங்கேற்றத்தைத் தந்த ஆசிரியை மிர்நாளினிக்கு எனது பாராட்டுக்கள். அவர் மீண்டும் மீண்டும் இவ்வாறு பல அரங்கேற்றங்களைக் காணவேண்டும் என வாழ்த்துகிறோம்.
"ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் : என்பதற்கு இணங்க பாலகியின் பெற்றோர் பரமேஸ்வரனும் யோகரானியும் தமது மகளின் திறமையைப் பார்த்து பெரிதும் உவகை கொண்டிருப்பார்கள். பாலகியின் அரங்கேற்றம் நடனக் கலையின் ஒரு முதற் படியே. தொடர்ந்தும் இவர் பல் கலை பயின்று சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.













4 comments:

Unknown said...

தமிழுக்கும் சைவசமயத்துக்கும் பரத நாட்டிய கலைக்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை அளித்துள்ளது இவ் அரங்கேற்றம்

எமது வாழ்த்துக்கள் சிறுமி பாலகி பரமேஸ்வரனுக்கு.அவரது உன்னத கலை உணர்வு பிரமாதம்.

நாட்டிய குருவின் முதலாவது நாட்டிய அரங்கேற்றம் திறமையின் வெளிப்பாடாகும்.

உள் நாட்டு உன்னத இசை குழுவினர் நாட்டியத்துக்கு மெருகு ஊட்டி சபையினரை கரகோஷம் செய்ய வைத்தனர்.

தமிழர் பண்பாட்டை உலகெங்கும் பரப்பும் கலைஞர்கட்கு எமது பாராட்டுக்கள்

Ramesh said...

பாலகியின் நடனம் உண்மையிலேயே நம்மைக் கவர்ந்திருந்தது. உள்ளுர் வித்துவான்களை பாவித்தது மெச்சத்தகுந்தது. ஆசிரியரும் அப்பா அம்மாவும் பாராட்டுக்குரியவர்கள். எழுத்தாளர் அரங்கேற்றங்களை தொடர்ந்து எழுதினால் நமக்கும் மகிழ்வாக இருக்கும் நன்றி.
இவற்றைத் தவறாமல் தருகின்ற முரசிற்கு என் வாழ்த்துக்கள். அன்று இன்னொரு அரங்கேற்றமும் நடந்தது அது ஏன் வரவில்லை ? கி..கி...கி...

ரமேஸ்

Yaso said...



நன்றாக இருந்தது நடனம் பக்கவாத்தியமும் பாடலும் மிக மிக நன்று. நடனத்தில் சினிமாபாணி முத்திரைகள் அடைவுகள் அதிகம் காணப்பட்டது. ஆசிரியர் இதில் கவனம் செலுத்த வேண்டும். படங்கள் இன்னும் அதிகம் போட்டிருக்கலாம். தமழிழ்முரசு தனது சேவையை தொடரவேண்டி வாழ்த்துகிறேன்

யசோ

Sumathi said...


அண்மையில் நான் பார்த்த அரங்கேற்றங்களில் என்னை மிகவும் கவர்ந்த அரங்கேற்றம் இந்த அரங்கேற்றம். குட்டி பாலகி மிகவும் நன்றாக ஆடினார். கிஷான் சேகரம் மிருதங்கம் வாசித்தது அருமை அத்தோடு யெயராம் பல வாத்தியங்களை வாசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இனி என்ன வாத்தியம் யெயராம். இதை எழுதிய கலா ஜீவகுமார் நன்றாக எழுதியுள்ளார் பாராட்டுக்கள்