வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 51 “நாள் ஒரு வாள்”


ஞானா:        அப்பா….அப்பா…உங்களை ஒண்டு கேக்கவேணும்…

அப்பா:        ஞானா ஒண்டென்ன…. ஒன்பதும் கேள். எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிறன்.

ஞானா:        அதாவது வந்தப்பா “நாள் செய்வது நல்லார் செய்யார்” எண்டு ஒரு பழமொழி இருக்கெல்லே            அப்பா?

அப்பா:        பிள்ளை ஞானா உது பழமொழியோ,  புதுமொழியோ எண்டது எனக்குத் தெரியாது இப்ப                 உதைப் பற்றி என்ன கேகக்கப் போறாய்?

ஞானா:        உந்த நாள் செய்வது எண்டதின்ரை கருத்தென்னப்பா?


சுந்தரி:        என்ன சங்கதி இரண்டுபேரும் என்னத்துக்கு நாள் பாக்கப் போறியள்.?

அப்பா:        சுந்தரி நீர்வந்து ஆட்டுக்கை மாடுவிடாதையும். அவள் பிள்ளை ஞானா ஏதோ கேக்கிறாள்.                நீர் வந்து நாள்பக்கிற கதையிலை நிக்கிறீர்.

ஞானா:        அம்மா…..நாங்கள் நாள்பாக்கேல்லை. நாள் செய்வது நல்லார் செய்யார் எண்டதைப் பற்றித்தான்            பேசுறம்.

சுந்தரி:        ஆமோ? உது தெரியாதே? ஒருதர் இன்னொருதருக்கு ஒரு துன்பத்தைச் செய்துபோட்டர் எண்டு            வையுங்கோவன். அந்தத் துன்புறுத்தப் பட்டவருக்கு அது உடனை பெரிய கோவத்தையும்,  அமைதி இன்மையையும் உண்டாக்கி துன்பம் செய்தவரை வெறுத்து ஒதுக்சச் செய்யும். ஆனால்            கொஞ்ச நாள் போனாப் பிறகு அந்தப் பாதிக்கப்பட்டவர் அதை மறந்துபோய் அந்தத் துன்பம்            செய்தவரோடை அன்பாய் பழகுவார். அதைத்தான் “நாள் செய்வது நல்லால் செய்யார்” எண்டு             சொல்லிறது.

அப்பா:    நல்ல உதாரணம்தான் சொல்லுறீர் சுந்தரி…..நாள் போகப் போக பழைய புண்கள் ஆறிவிடும் நாள் நல்லதுதான் செய்யும்.

ஞானா:        என்னப்பா நீங்கள்…. திருவள்ளுவர் உதுக்கு மாறாய் எல்லே சொல்லியிருக்கிறார்.
                நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்                                        
                வாளது உணர்வார்ப் பெறின்   
        எண்டெல்லோ சொல்லியிருக்கிறார். இந்த நாள் எண்டது மனிசற்றை உயிரை அறுக்கிற வாள்            எண்டுதானே சொல்றார்.

அப்பா:        உந்தக் குறள் வந்து ஞானா நிலையாமை எண்ட அதிகாரத்திலை உள்ள 334 வது குறள்.            ஒரு நாள் ஒரு நாள் எண்டு சொல்லி அடுத்தடுத்து நாள்கள் வந்து மெல்ல மெல்ல வாழ்நாளைக்            குறைக்கிறதுதான் இந்த நாளின்ரை வேலை. வாழ்நாள் நிலையாய் நில்லாது எண்டது தான்            உந்தக் குறளின்ரை கருத்து. பிள்ளை ஞானா மனிசராய் பிறந்தவைக்கு வாழ் நாள் எண்டு ஒரு             காலக் கணக்கு இருக்கு. இந்தக் காலக் கணக்கை மனிசர் சரியாய் பாவிக்காட்டில் காலன் வந்து         கணக்கை முடிச்சுக் கொண்டு போறதுதான் இயற்கை. ஆனபடியாலை மனிசர் நாளைச் சரியான             படியாய் உபயோகிக்க    வேணும்.

சுந்தரி:        அதென்டால் உண்மைதான். நாங்கள் எப்பிடி எப்பிடி எல்லால் நாளை வீணடிக்கிறம்.

ஞானா:        அதுக்குத்தான் அம்மா Time management எண்டு படிச்சிருக்கிறம்.

சுந்தரி:        என்னத்தைப் படிச்சுக் கிழிச்சிருக்கிறியள். எங்கடை ஆக்கள் ஆரும் நீ சொல்லிற
Time management படி நடக்கினமே? ஏன் அங்கை இஞ்சை போவான். எங்கடை பொதுக் கூட்டங்கள்,  விழாக்கள் எல்;லாம் நேர அட்டவணையின் படியே நடக்குது?

அப்பா:        சுந்தரி! நீர் சொல்லிறது சரிதான். குறிப்பிட்ட நேரத்துக்குத் தொடங்காயினம். குறிப்பிட்ட                நேரத்துக்கு முடிக்காயினம். பார்வையாளரையின்ரை முதுகை முறிச்சுப் போட்டுத்தான் வீட்டை            அனுப்புவினம்;. விடிய விடியக் கூத்துப்பாத்த மாதிரி நிகழ்ச்சிகளை இழுத்தடிப்பினம் இதெல்லாம்            இவள் பிள்ளை ஞானா சொல்லிற time management க்கு அப்பாற் பட்டவை.

ஞானா:        அப்பா எங்கடை ஆக்கள் ஏன் இந்த time management ஐ சரியாய் செய்யினம் இல்லை எண்டு            உங்களுக்குத் தெரியுமே?

அப்பா:        தெரியாமல் என்ன! நிகழ்ச்சியளை ஒழுங்கு செய்யிறவை முதலே எத்தினை மணத்தியாலங்கள்            நிகழ்ச்சியை நடத்தப் போறம் எண்டு தீர்மானிக்கிறது இல்லை. ஒரு மணி நேரமோ,  அல்லது             இரண்டுமணி நேரமோ எண்டு திட்டம் போடிற நாளிலை தீர்மானிக்க வேணும். எந்த ஒரு நிகழ்வும்            மூண்டு மணி நேரத்துக்கு மேலை போகாமல் இருக்க வேணும்.

ஞானா:        அப்பிடித்தான் அப்பா எல்லாரும் திட்டம் போடிறது…..ஆனால்….            
       
சுந்தரி:        ஆனால் ஆறுமணிக்குத் துவங்கின நிகழ்ச்சியள் முடியப் பத்துப் பன்னிரண்டு மணி அயிடும்.

அப்பா:        உதிலை வந்து சுந்தரி பெரிய சிக்கல்க்கல்கள் இருக்கு. நிகழ்ச்சிகளை நடத்திப்பாத்தவைக்குத்            தான் தெரியும். என்ன சிக்கல்கள் எண்டு.

ஞானா:        நீங்களும் எத்தினையோ நிகழ்ச்சியள் நடத்தியிருக்கிறியள்தானே அப்பா. சொல்லுங்கோவன்             பாப்பாம்.

அப்பா:        சொல்லிறன் கேளுக்கோ. காது புளிச்சுப்போம். ஒரு சின்னக் கதம்ப நிகழ்ச்சி எண்டு வையுங்கோ.            மங்கல விளக்கேற்றல்,  தமிழ்த்தாய் வாழ்த்து,  நாஷனல் அந்தம், அகவணக்கம்,  வரவேற்புரை,         ஒரு நடனம், ஒரு வாத்திய இசை,  ஒரு சின்ன நாடகம்,  இடைவேளை, நன்றியுரை இவ்வளவும்            வைக்க வேணும்.

ஞானா:    இவ்வளவையும் அட்டவணைப் படுத்தி ஒவ்வொரு பகுதிக்கும் இவ்வளவு நிமிஷம் எண்டு கணக்குப் போட்டு ஒரு மூண்டு மணி நேரத்துக்குள்ளை அடக்க வேண்டியதுதானே.

சுந்தரி:        மெத்த லேசாய்ச் சொல்லிப் போட்டாய் ஞானா,  ஒவ்வோரு பகுதியாய் பாப்பம் வா. அதாவது            உதிலை சொல்லப்பட்டவை அத்தனை பேரும் நேரத்துக்கு வந்து தங்கள் தங்கள் பகுதியை            குறிக்கப்பட்ட நேரத்குத்குள்ளை முடிச்சால் தானே திட்டப்படி மூண்டு மணிநேராத்துக்குள்ளை            நிகழ்ச்சியை முடிக்கலாம்.

அப்பா:        நல்லாய்ச் சொன்னீர் சுந்தரி. விளக்குக்கேற்ற வரச் சொன்னவை நேரத்துக்கு வராட்டி என்ன            செய்யிறது? தமிழ்த்தாய் வாழ்த்துச் சொல்ல வாறன் எண்ட பிள்ளையள் சொன்ன நேரத்துக்கு            வராட்டி என்ன செய்யிறது? வரNர்ப்பு உரை செய்றியவரே நேரத்துக்கு வாராவிட்டால் என்ன             செய்யிறது? நடனமாடிற பிள்ளையளிலை ஒண்டு வராட்டில் என்ன செய்யிறது?

சுந்தரி:     எல்லாரும் நேரத்துக்கு வந்தாலும் அதுக்குள்ளையும் சிக்கல் இருக்கெண்டு நான் சொல்லிறன்.

ஞானா:        அதென்ன சிக்கல் எண்டு கேக்கிறன் நான்… நேரத்துக்கு ஆரம்பிச்சு நேரத்துக்கு முடிக்க                வேண்டியதுதானே.

அப்பா:        ஞானா உனக்கு உதிலை அனுபவம் இல்லை. எல்லாரும் நேரத்துக்கு வந்தாலும் பங்கேற்கிறவை            அவை அவைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள்ளை செய்து முடிக்கவெல்லே வேணும். எல்லாரும்            5 நிமிசம் தான் கூடஎடுக்கிறன் எண்டு சொல்லி எல்லாரும் இழுத்தடிச்சுக் கொண்டு போனால்            குறிப்பிட்ட நேரத்துக்கு நிகழ்ச்சியை எப்பிடி முடிக்கிறது?

ஞானா:        நான் செல்லட்டே அப்பா,  விளக்கேற்ற வாறன் எண்டவர் நேரத்துக்கு வராட்டில், அங்கை                 வந்திருக்கிற ஒரு பெரியவரை விளக்கேற்றச் சொல்லிறது. தமிழ்த்தாய் வாழ்ந்துப் பாட வாற             பிள்ளையள் நேரத்துக்கு வாராட்டில் முன்னெச்சரிக்கையாய் இசைத்தட்டைக் கொண்டுபோய்   தமிழ்த்தாய் வாழ்த்தைப் பேடிறது. நிகழ்ச்சிகளைச் செய்யிறவைக்குக் கண்டிப்பாச் சொல்லி             வைக்கிறது குறிப்பிட்ட     நேரத்துக்குக் கட்டாயமாய் முடிக்க வேணும் எண்டு. அப்பிடி அவையள்             முடிக்காட்டில் திரையை இழுத்து மூடிப்போட்டு அடுத்த நிகழ்ச்சிக்குப் போறது.

அப்பா:        அடியடா புறப்படலையிலை எண்டானாம். ஒருக்கால் செய்து பாத்தால் தெரியும் அதாலை வாற            வில்லங்கம். 
          
ஞானா:        என்ன வில்லங்கம் எண்டு கேக்கிறன்? ஒருக்கால், இரண்டு தரம் செய்து காட்டினால் பிறகு             எல்லாரும் வழிக்கு வருவினம். நிகழ்ச்சிகளும் நேரத்துக்குத் தொடங்கி நேரத்துக்கு முடியும்.    

அப்பா:        பிள்ளை ஞானா பூனைக்கு மணி கட்டிறது யார் மகளே?

சுந்தரி:        நான் சொல்லட்டே அப்பா,  இவள் பிள்ளையை விடுங்கோ ஒருநாளைக்கு…..நடத்திக் காட்டட்டும்.            அப்ப தெரியும் வில்லங்கம். சும்மா ஏன் நாளை வீணடிக்கிறியள். விட்டுத் தள்ளுங்கோ. அழி குடி            சொற்கேளாது. நடக்கிற மாதிரி நடக்கட்டும்.
                                (இசை)

No comments: