இலங்கைச் செய்திகள்


வடக்கு கிழக்கில் அறுபதினாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இடையில் விலகினர்
பி.பி.சி
அடுத்து என்ன

குடாநாட்டில் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமாக அதிகரிப்பு

மகளிர் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் கொழும்பு வருகை

ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு!- ஆசிய மனித உரிமைகள் ஆணையம்

அநுராதபுரம் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்

பத்திரிகையின் விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்: பத்திரிகைகள், மோட்டார் சைக்கிள் எரிப்பு

ரிசானாவின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த சவூதி தனவந்தர்

பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர்



வடக்கு கிழக்கில் அறுபதினாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இடையில் விலகினர்
பி.பி.சி
school childrenஇலங்கையின் வடக்கே யுத்தத்தின் பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து இருபத்தாறாயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியிருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

இதில் அதிகூடிய எண்ணிக்கையாக 38 ஆயிரத்து 321 மாணவர்கள் வடமாகாணப் பாடசாலைகளில் இருந்து இடையில் விலகியிருப்பதாகவும், கிழக்கு மாகாத்தில், 24 ஆயிரத்து 614 மாணவர்கள் இடையில் விலகியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.

நாட்டில் இலவச கட்டாயக் கல்வி நடைமுறையில் இருக்கின்ற போதிலும், பாடசாலைகளில் இடை நிலை வகுப்புகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகிச் செல்வது கவலைக்குரியது என சேவ் த சில்ரன் என்ற சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மேனகா கல்யாணரட்ன அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவே மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிச் செல்வதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.

வறுமையில் வாடும் குடும்பங்களில் சிறுவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதிருப்பது, ஏனைய அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலிருப்பது போன்ற காரணங்களினாலும், மாணவர்கள் இடையில் தமது கல்வியைக் கைவிட்டுச் செல்கின்றனர் என்றும் மேனகா கல்யாணரட்ன அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

வடமாகாணத்தில் யாழ் குடாநாட்டில் பாடசாலைகளில் இருந்து பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் இடைவிலகியிருப்பது அதிர்ச்சியளிக்கத்தக்க விடயம் என கூறியுள்ள யாழ் வணிகர் கழகம், இடை விலகியுள்ள மாணவர்கள் மீண்டும் தமது கல்வியைத் தொடர்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது.

இது குறித்து பிபிசிக்கு கருத்து வெளியிட்ட யாழ் வணிகர் கழகத் தலைவர் ரட்னலிங்கம் ஜெயசேகரன், யாழ் அரச அதிபர் மற்றும் பிரதேச அரச அதிகாரிகளின் உதவியோடு முதல் கட்டமாக 491 மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

'அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு பெறுவதற்குக் குறைந்த பட்சமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை அல்லது உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும். இதனால், இடைநிலை வகுப்புக்களில் இருந்து கல்வியைக் கைவிடுபவர்கள் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பைப் பெற முடியாமல் போவதுடன், அவர்களது வாழ்க்கையும் கேள்விக்குறிக்கு உள்ளாகிவிடும். இதன் காரணமாகத்தான் இடைவிலகுகின்ற மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்குரிய நடவடிக்கைகளை யாழ் வணிகர் கழகம் எடுத்திருக்கின்றது' என்றும் யாழ் வணிகர் கழகத் தலைவர் கூறினார்.

இதனிடையில் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து 2012 ஆம் ஆண்டில் மாணவர்களின் இடைவிலகல் வீதம் குறையத் தொடங்கியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.
நன்றி தேனீ   




 அடுத்து என்ன

நீதிபதி ஒருவரின் உரிமைகளைப் பாதிக்கும் விதத்தில் தீர்மானத்தை எடுப்பதற்கோ அல்லது அந்த நீதிபதியை குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தவோ பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லையென நேற்று முன்தினம் உயர்நீதிமன்றம் வியாக்கியானத்தை வெளியிட்டிருப்பது பிரதம நீதியரசர் கலாநிதி சிரானி பண்டார நாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் மூன்று பிரதான அங்கங்களான நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் (பாராளுமன்றம்), நீதித்துறை ஆகியவற்றுக்கிடையில் உக்கிரமான மோதலுக்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கிறது.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலமைப்பை வியாக்கியானம் செய்வதற்குரிய ஒரேயொரு, பிரத்தியேகமான அதிகாரமுடையதாக உயர்நீதிமன்றம்  மட்டுமே விளங்குகிறது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளில் அவதானிக்கக்கூடிய குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்திருக்கும் உயர் நீதிமன்றம், பிரதிவாதியின் உரிமை தொடர்பாகத் தெளிவான வியாக்கியானத்தை முன்வைத்திருக்கிறது. பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட அமர்வுகள் சட்ட ரீதியான முறையில் பரிசீலிக்கப்பட்டவை அல்ல என்றும் அமர்வை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தியமை சட்ட ரீதியானதல்ல என்றும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டம் என்ன? என்பதே பெரும்பாலான பொதுமக்கள் மத்தியில் தற்போது எழுந்திருக்கும் கேள்வியாகும்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு, அவரைக் குற்றவாளியாகக் கண்டு தனது அறிக்கையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளித்திருந்தது. இந்நிலையில், எதிர்வரும் 8 ஆம் திகதி குற்றப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இதனையடுத்து நீதிமன்றம் பாராளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு ஆஜராகுமாறு அறிவித்தல் கொடுத்திருந்தது. இந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற அழைப்பாணையைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஆளும் கட்சி மற்றும் ஐ.தே.க. உறுப்பினர்கள் 9 பேர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் மட்டுமே நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
மேன் முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை அறிவித்திருக்கும் நிலையில் நீதித்துறைக்கும் சட்டவாக்கத்திற்கும் (பாராளுமன்றம்) மோதல் தீவிரமடையும் களம் உருவாகியிருக்கிறது. "இதனை இல்லை என்று என்னால் கூற முடியாது' என்று அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவும் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றமே மேலாண்மையுடையது என்று சபாநாயகர் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கும் நிலையில், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கு அமைவாக அரசாங்கம் செயற்படுவதற்கான சாத்தியப்பாடு காணப்படவில்லை என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேபோன்றதொரு சர்ச்சை தென்னாபிரிக்காவில் ஏற்பட்டிருந்தது. கடந்த ஜூலை 8 இல் அந்நாட்டில் இடம்பெற்ற நீதிபதிகள் மாநாட்டில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சூமா பிரதான உரையை ஆற்றியிருந்தார். "நிர்வாகம், கொள்கை வகுப்புப் பணிகளில் சாத்தியமான அளவுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கு நிறைவேற்று அதிகாரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டும். பொருத்தமான கொள்கைகள் தொடர்பாக அரசாங்கமானது தீர்மானம் மேற்கொண்டால், அரசின் நிறைவேற்று பகுதியினால் எடுக்கப்பட்ட கொள்கைகளை மாற்றுவதற்கு அதன் சட்ட ரீதியற்ற தன்மையென்ற விடயத்தை எழுப்பி, குறித்த சட்ட மூலத்தை அல்லது அதன் பகுதிகளை நீதித்துறை வலுவிழக்கச் செய்ய முடியாது' என்று எச்சரித்திருந்தார்.
தேர்தல் மூலமே அரசியல், நிர்வாகக் கட்டமைப்புக்கான ஆணை பெறப்பட்டிருக்கும் நிலையில் இந்த அதிகாரங்களுக்கும் மேலானதாக நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் இருக்க முடியாது' என்றும் சூமா சுட்டிக்காட்டியிருந்தார். சூமாவின் கருத்துக்கு தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதம நீதியரசர்  ஆர்தர் ஷாஸ் கலீசன் உடனடியாக தனது கருத்தை வெளியிட்டிருந்தார்."அரசாங்கத்தின் மூன்று அங்கங்களான நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் (பாராளுமன்றம்), நீதித்துறை ஆகியவற்றுக்கிடையில் பதற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததொன்று. ஆனால்,  அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இந்த விடயம் ஆரோக்கியமானது. ஜனநாயக முறைமைகள் பலவற்றில் அரசின் இந்த மூன்று கிளைகளில் ஒவ்வொன்றும் தத்தமது தனியான அதிகார வரம்புகளை  தமக்கே உரித்தானவையென்ற சந்தேக உணர்வுடன் பார்த்துக்கொண்டு அதனை நியாயப்படுத்த முற்படும் போது பதற்ற நிலைமை உருவாகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது தத்தமது நியாயாதிக்க எல்லைகளை விரிவுபடுத்த இவை முயற்சிக்கின்றன. அதாவது மற்றைய அங்கங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவை சந்தர்ப்பம் கிடைத்தால் தத்தமது நியாயாதிக்கத்தை விஸ்தரிக்க எத்தனிக்கின்றன' என்று தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் ஆர்தர் ஷாக்ஸ் கலீசன்  கூறியிருந்தமை இலங்கையின் தற்போதைய நிலைவரத்திற்கும் பொருத்தமானதாகக் காணப்படுகிறது. ஆனால், அரசியலமைப்பையும் சட்ட ஆட்சியையும் கொண்டதாகவே நாட்டின் முறைமை உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை பலம் என்பது நாட்டின் அன்றாட முறைமையாக (குதூண்tஞுட்)  இல்லை.  இதன் அடிப்படையில் சட்டத்தை வியாக்கியானம் செய்யும் அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்தைக் கொண்டதாக உயர்நீதிமன்றம்  மட்டுமே உள்ளது. யதார்த்த நிலைமை இவ்வாறு இருக்கும்போது இந்த முட்டுக்கட்டை நிலைமைக்கு சுமுகமான தீர்வொன்றை எட்டுவதற்கு இங்கு ஜனநாயக ரீதியான விட்டுக்கொடுப்பே முக்கியமான தேவையாகும்.  நன்றி தினக்குரல்







குடாநாட்டில் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமாக அதிகரிப்பு
sexயாழ்.மாவட்டத்தில் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் மட்டும் 5 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு சிறுமி படுöகாலை செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 சிறுமிகள் அவர்களது தந்தையாலேயே  பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்றுக் காலை யாழ்.பொலிஸ் தலைமை அலுவலகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
கடந்த 27 ஆம் திகதி மண்டைதீவில் 4 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.கொன்வென்ட் வீதியில் உள்ள 17 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த 9 ஆம் மாதம் 5 திகதி அவருடைய தந்தையாலேயே பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தினை அடுத்து மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட சிறுமி கர்ப்பமுற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரால் கடந்த மாதம் 29 ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை திருகோணமலைக்குச் சென்று தலைமறைவாகியுள்ளார். இதனால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
இதேபோன்று அன்றைய தினமான 29 ஆம் திகதி யாழ்.நல்லூர் வீதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியும் அவரது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார். இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து 15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இடம்பெற்ற விசாரணையில், இந்தச் சிறுமியை வவுனியாவிற்குக் கொண்டு சென்று தடுத்து வைத்ததாகவும், தங்கள் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இதற்கு உடந்தையாக இருந்த வவுனியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை மருதடிப் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி 17 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயது குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.      நன்றி தினக்குரல்


மகளிர் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் கொழும்பு வருகை
By V.Priyatharshan
2013-01-08

இராணுவத்தின் மகளிர் படையணியில் அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் இன்று கொழும்புக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இராணுவத் தளபதியின் பாரியாரை சந்தித்து கலந்துரையாடினர்.







நன்றி வீரகேசரி 



ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு!- ஆசிய மனித உரிமைகள் ஆணையம்
By General
2013-01-09
ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த அப்பாவி இலங்கைப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் புறக்கணித்து வந்தார்கள் என்றும் அவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கு குறித்து மேன்முறையீடு செய்வதற்கான நிதியை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவில்லை என்று அந்த ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குனரான பஷில் பெர்ணாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கொலை செய்ததாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரை நேரடியாகச் சந்தித்து அவர்களிடம் ரிசானா நபீக் சார்பில் மன்னிப்பு பெற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது.

அந்தக் குடும்பத்தோடு நேரடியாகப் பேசி அவர்களை சமரசம் செய்திருந்தால் மாத்திரமே ரிசானாவை காப்பாற்றியிருக்க முடியும் என்ற நிலை இருந்த வேளையில், இலங்கை முஸ்லிம் அமைச்சர்கள் எல்லாம் சவுதிக்கு சும்மா வந்து தங்கிவிட்டுப் போனார்களே ஒழிய, இறந்த குழந்தையின் பெற்றோர்களுடன் அவர்கள் நேரடியாக பேசவில்லை.

சர்வதேச மட்டத்தில் இந்த விடயத்தில் உருவாகியிருந்த ஒரு சாதகமான நிலையையும் இலங்கை அரசாங்கம் பயன்படுத்தத்தவறிவிட்டது என்றார். நன்றி வீரகேசரி 


அநுராதபுரம் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்
By Nirshan Ramanujam
2013-01-09

அநுராதபுரம் மல்வத்து ஓயாவில் அமைந்துள்ள பள்ளிவாசல், இன்று புதன்கிழமை  அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள பள்ளிவாசல் மீது ஏறிய இனந்தெரியாத குழுவினர் அதன் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.

பள்ளிவாசல் சேதப்படுத்தப்படும் சத்தம் கேட்டு அயலவர்கள் வந்து பார்க்கையில் அக்குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
   நன்றி வீரகேசரி




பத்திரிகையின் விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்: பத்திரிகைகள், மோட்டார் சைக்கிள் எரிப்பு

By General
2013-01-10


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் யாழ்-பருத்தித்துறை வீதியின் கரவெட்டி மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை உதயன் அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்ற வேளை மாலுசந்திப்பகுதியில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரால் இவர் அடித்து விழுத்தப்பட்டு பொல்லுகளால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதாக உதயன் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இவரின் தலைப்பகுதியில் தாக்க முற்பட்ட வேளை அவர் கையால் தடுத்துள்ளார். எனினும் அவர்களது தாக்குதல் கைப்பகுதியில் பலமாய் விழுந்ததினால் அவரது கையும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவரை அருகில் உள்ள கானுக்குள் தூக்கி வீசியதுடன் மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகளை எரித்து விட்டு நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.அதிகாலை வேளை இடம்பெற்ற இத்தாக்குதலில் காயமடைந்த விநியோகப்பணியாளர் வீதியால் பயணித்த பேருந்தில் தப்பித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பிரதீபன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்று காலை மற்றுமொரு உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மாலுசந்தியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்கள் சிலரினால் துரத்தப்பட்டுள்ளதாகவும் உதயன் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயினும் அவர் தன்னைப்பாதுகாத்துக் கொண்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.நன்றி வீரகேசரி 

 

 

 

ரிசானாவின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த சவூதி தனவந்தர்

By L.Thev
2013-01-10 12:22:08

சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சவூதி தனவந்தர் ஒருவர் முன் வந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சவூதியில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரிசானா நபீக்கின் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்திற்கொண்டு அவர் எந்த நோக்கத்திற்காக சவூதிக்குச் சென்றாரோ அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தொடர்பில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் ஒருவர் இதற்கு முன்வந்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவருடன் கலந்துரையாடிய போது 04 மாத காலத்திற்குள் ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு அவர் முன் வந்துள்ளதாகவும் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.   

நன்றி வீரகேசரி

 

 

 பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர்

By General
2013-01-10



பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் தெரிவுக்குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நேரத்தில் தெரிவுக் குழுவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்;டம் நடத்துவதற்கு இவர்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.     நன்றி வீரகேசரி

 

No comments: