“இனங்களின் புரிந்துணர்வுக்கு இலக்கியப்படைப்புகளின் மொழிபெயர்ப்பு அவசியம்”
கொழும்பில் நடந்த மூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டில் கருத்து
சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் அவற்றிடையே புரிந்துணர்வை வளர்ப்பதிலும் இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. அந்த நோக்கோடு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு 08.01.2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயற்குழுக்கூட்ட அறையில் நடந்தது.
டொக்ரர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்கல விளக்கினை வீரகேசரி வாரப்பதிப்பின் முன்னாள் ஆசிரியர் வி. தேவராஜ், திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம, கொடகே பதிப்பக அதிபர்சுமணஸ்ரீ கொடகே, டான் (தமிழ் ஒளி) தொலைக்காட்சியின் பணிப்பாளர் ‘ பாரிஸ் ஈழநாடு’குகநாதன் உள்ளிட்ட பலர் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து எழுத்தாளர் திக்குவல்லை கமால் வரவேற்புரை நிகழ்த்தி அனைவரையும் வரவேற்றார்.
இதனையடுத்து, நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்களமொழிபெயர்ப்பு சமணல வௌ பற்றிய அறிமுகத்தை ஊடகவியலாளர் கலாநிதி ஹேமசிறி குருப்பு நிகழ்த்தினார். இந்த நாவலை பிரபல மொழிபெயர்ப்பாளர் மடுளுகிரிய விஜேரத்ன மொழிபெயர்த்திருந்தார். அவரே இதனை பதிப்பித்து வெளியிட்டிருந்தார். ஏற்கனவே இந்த நாவல் ஆங்கிலத்தில் Butterfly Lake என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகி பரந்த அறிமுகத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடேசனின் உனையே மயல்கொண்டு என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு டுழளவ ஐn லுழர நடேசனின் ஆங்கில நாவலுக்கான அறிமுகத்தை பிரபல ஆங்கில விமர்சகரும் ஐலண்ட் பத்திரிகையில் நீண்டகாலம் பணியாற்றியவருமான கே.எஸ். சிவகுமாரன் வழங்கினார்.
‘உனையே மயல் கொண்டு’ நாவலை, மித்ர பதிப்பகம் தமிழ் நாட்டில் வெளியிட்டிருந்தது. தற்போது இந்த நாவலை தமிழகத்தைச் சேர்ந்த பார்வதி வாசுதேவ் டுழளவ ஐn லுழர என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
தொடர்ந்து ஊடகவியலாளரும் சமூகச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான முருகபூபதியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூலான மதக செவனெலி (நினைவின் நிழல்கள்) என்ற சிங்களச் சிறுகதைதொகுப்பு நூலின் அறிமுகம் நடைபெற்றது. இந்த நூலை வெளியிட்டிருக்கும் தோதன்ன பதிப்பகத்தின் இயக்குநரான சிட்னி டயஸ் மார்க்கஸ் விரிவான அறிமுகத்தைச் செய்தார்.
இந்த நூலிலுள்ள சிறுகதைகளை தமிழிலிருந்து சிங்கள மொழியில் பிரபல மொழிபெயர்ப்பாளரும் கல்விமானுமாகிய ஏ.ஸி.எம் கராமத் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலின் வெளியீட்டு முயற்சிக்கு படைப்பாளியும் கல்வித்துறை அதிகாரியுமாகிய திக்குவல்லைக் கமால் முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
இந்த மூன்று நூல்களும் தமிழ்ப்படைப்பாளிகளால் எழுதப்பட்டு பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் பிற மொழியில் வாசிப்போருக்கு தமிழ்ச் சமூக நிலைபற்றிய அறிமுகத்தையும் அதன் வழியாக தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுள்ள வாழ்க்கைச் சவால்களையும் அனுபவங்களையும் அறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்புப் படைப்புகளை அதிகமாக வெளியிட்டு அவற்றைப் பரவலாக்குவதன் மூலமாக ஆழமான சிந்தனையைச் சமூகங்களுக்கிடையில் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதுடன், ஒவ்வொரு சமூகங்களுக்குமிடையில் நல்லதொரு ஊடாட்டத்தையும் நிகழ்த்த முடியும் என இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
போருக்குப் பிந்திய நிலையிற்கூட இலங்கைச் சமூகங்கள் தனித்தனியாக பிளவுண்ட நிலையில் இயங்கி வருவது வருத்தத்திற்குரியது என்றும் இந்த நிலை மாற்றமடைய வேண்டும் என்றும் நிகழ்வுக்குத் தலைமை வகித்த டொக்ரர் நரேந்திரன் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடும்போது போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்லும் தமிழ், சிங்கள மக்கள் அங்குள்ள நிலைமைகளை உணர்ந்துகொள்வது முக்கியமானது எனவும், பரஸ்பர உரையடல்கள் நிகழ்வது அவசியமானது என்றும் வலியுறுத்தினார்.
பதிலுரையை நடேசன் ஆற்றினார். நன்றியுரையை முருகபூபதி நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில், தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் தனபாலசிங்கம், வாரப்பதிப்பு ஆசிரியர் இராஜநாயகம் பாரதி, வீரகேசரி துணை ஆசிரியர்; ரவிவர்மன், அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த மாவை நித்தியானந்தன், டொக்ரர் ரவந்திர ராஜா, கனடாவிலிருந்து வருகை தந்திருந்த சபேசன், இங்கிலாந்திலிருந்து வருகைதந்திருந்த நூலகர் என். செல்வராஜா, நியூசிலாந்திலிருந்து வருகைதந்த ஸ்ரீதரன், கலைக்கேசரி ஆசிரியர் திருமதி அன்னலட்சுமி இராசதுரை, மூத்த எழுத்தாளர்கள் தெளிவத்தை ஜோசப், கே.விஜயன் மொழிபெயர்ப்பாளர்கள் சிவகுருநாதன், சடகோபன், கேதாரநாதன், விஜிதயாப்பா வெளியீட்டு நிறுவன அதிபர் விஜித்த யாப்பா கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஸி.பாஸ்கரா உட்படப் பல தமிழ் சிங்கள ஆங்கில ஊடகவியலாளர்களும் படைப்பாளிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா அமைப்பு இந்நிகழ்வை ஒழுங்குசெய்திருந்தது.
(தகவல் கருணாகரன்)
No comments:
Post a Comment