உலகச் செய்திகள்

.
டெல்லி வல்லுறவு விவகாரம்: எனது மகளின் பெயர் ஜோதிசிங் பாண்டே வெளியிட்டார் தந்தை

 "நாங்கள் தவறு செய்யவில்லை வழக்கை எதிர்கொள்வோம்": டெல்லி பாலியல் குற்றவாளிகள்

சிரியாவில் 10 லட்சம் பேருக்கு உணவு தர இயலாது : ஐ.நா. சபை

சீனாவில் பனியில் சிக்கிய கப்பல்கள்!

டெல்லி வல்லுறவு விவகாரம்: எனது மகளின் பெயர் ஜோதிசிங் பாண்டே வெளியிட்டார் தந்தை


டெல்லியில் 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கடந்த மாதம் 16 ஆம் தேதி ஓடும் பஸ்சில் கொடூரமாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பெண்ணின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.




அந்த சட்டத்துக்கு அந்த பெண்ணின் பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது தந்தை ஏற்கனவே கூறினார்.
ஆனால் அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்நிலையில், டெல்லி மாணவியின் தந்தையான பத்ரிசிங் பாண்டே (53) என்பவர், இங்கிலாந்திலிருந்து வெளியாகும் 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு, தனது சொந்த ஊரான பாலியாவில் பேட்டி அளித்தார்.
அவரது அனுமதியுடன், பாலியல் வன்கொடுமைக்கு பலியான மாணவியின் பெயரையும், பத்ரி சிங் பாண்டேவின் புகைப்படத்துடன் கூடிய அவரது பேட்டியையும் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

என் மகளின் பெயர் ஜோதிசிங் பாண்டே என்பதை இந்த உலகம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். எனது மகள், தப்பாக எதையும் செய்யவில்லை. தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் அவள் இறந்து விட்டாள். அவளை நினைத்து நான் பெருமைப்படுகின்றேன்.

அவள் பெயரை வெளியிடுவதால் இதைப் போன்ற பாலியல் வன்முறைகளில் இருந்து மீண்டுவந்த பெண்களுக்கு துணிச்சல் பிறக்கும். என் மகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களின் முகங்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், இப்போது அந்த விருப்பம் என்னை விட்டு நீங்கி விட்டது. அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
அவர்கள் அனைவரும் தூக்கிலடப்படுவார்கள் என்ற செய்தியை மட்டும் என் காதுகளால் கேட்க விரும்புகிறேன்.
அந்த 6 மிருகங்களுக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும். இந்த சமுதாயத்தில் இனி இதைப்போன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்பதற்கு உதாரணமாக அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அமைய வேண்டும் என்று கூறியுள்ள ஜோதியின் தந்தை பத்ரிசிங் பாண்டே, டெல்லி விமான நிலையத்தில் சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். அவரது மனைவி பெயர் ஆஷா (46). மகன்கள் கவுரவ் சிங் (20) சவுரவ் சிங் (15) என்பதும் தெரிய வந்துள்ளது என்றார்.
நன்றி வீரகேசரி   

 

 

 

 

"நாங்கள் தவறு செய்யவில்லை வழக்கை எதிர்கொள்வோம்": டெல்லி பாலியல் குற்றவாளிகள்

By General
2013-01-09 10:03:24

எந்த தவறும் செய்யவில்லை என்று டெல்லி மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் 3 பேர் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் எம்.எல். சர்மா இதனை தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 16ம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது மூடப்பட்ட நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், அக்சய் தாக்கூர் ஆகிய 3 பேரும், தாங்கள் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும், வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகிய 5 பேரும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.     நன்றி வீரகேசரி 




 சிரியாவில் 10 லட்சம் பேருக்கு உணவு தர இயலாது : ஐ.நா. சபை

By General
2013-01-09

சிரியாவில் இடம்பெற்றுவரும் தொடர் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 10 லட்சம் பேருக்கு உணவு விநியோகப்பது இயலாத காரியமென என ஐ.நா. சபையின் உணவு அமைப்பு அறிவித்துள்ளது.
அந்நாட்டின் எல்லை புற நகரங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
முக்கிய நகரங்களில் இரவு பகலாக சண்டை நடப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
போதிய பாதுகாப்பு இன்மையால் ஐ.நா. தன் அலுவலர்களை அங்கிருந்து மீளப்பெற்றுள்ளது. பல மாதங்களாக நீடிக்கும் சண்டையில், 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும், போரின் காரணமாக மூடப்பட்டிருப்பதால், மக்கள் வருவாயின்றி, ஐ.நா. சார்பில் அளிக்கப்படும் உணவை, பயன்படுத்தி வருகின்றனர்.

சிரியா ஜனாதிபதி ஆசாத், விடுத்துள்ள அமைதி திட்டத்தை, கிளர்ச்சியாளர்கள் நிராகரித்து விட்டனர்.
இதனால், சிரியாவில் மோதல் நிறுத்தம் ஏற்படுவதற்கான சூழல் இல்லை. நாளுக்கு நாள், இலவச உணவை எதிர்பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிரியாவில் சேவையில் ஈடுபட்டுள்ள செம்பிறை சங்கத்தினர், 25 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஐ.நா., உணவு அமைப்பின் தகவல் தொடர்பாளர், எலிசபெத் பிர்ஸ் குறிப்பிடுகையில், "நாங்கள் பெருமுயற்சி எடுத்து, 15 லட்சம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
ஆனால், மீதமுள்ள 10 லட்சம் பேருக்கு எங்களால் உணவு அளிக்க முடியாது' என தெரிவித்துள்ளார்.      நன்றி வீரகேசரி 

 

 

 

 சீனாவில் பனியில் சிக்கிய கப்பல்கள்!

By General
2013-01-06

சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் உறைபனியில் 1000 கப்பல்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்கிறது.

பொதுவாக அங்கு (-15.3) பாகை தட்பவெப்ப நிலை நிலவும். குளிர்காலத்தில் ( -3.8) பாகை வரை செல்லும்.
இது கடந்த 42 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு அங்கு (-7.4) பாகையாக தட்பவெப்ப நிலை குறைந்துவிட்டது. எனவே எங்கும் பனிக்கட்டி மயமாக காட்சி அளிக்கிறது.
இதனால் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக சீனாவின் சுற்றுலா துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
வடமேற்கு சீனாவில் போகல் கடல் உள்ளது. தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த கடல் நீர் பனிக் கட்டியாகி விட்டது. கடல் முழுவதும் சுமார் 27 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு பனிக்கட்டியாக மாறிவிட்டது.
எனவே அக்கடலில் பயணம் மேற்கொண்ட 1000 கப்பல்கள் பனிக் கட்டிக்குள் சிக்கி கிடக்கின்றன. தென்கிழக்கு சீனாவில் சிசுவான் மாகாணத்தில் மலை முழுவதும் பனி படர்ந்துள்ளதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு 1000 பேர் சிக்கி தவிக்கின்றனர். தெற்கு சீனாவில் இரவில் பனிப்புயல் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.     நன்றி வீரகேசரி

No comments: