ஒரு பறவையின் மரணச்சடங்கு - செ.பாஸ்கரன்

.
.
ஒரு மனிதன் இறந்துவிட்டால் உற்றார் உறவினர் நண்பர்கள் கூடுவார்கள் துன்பத்தில் வாடுவார்கள் அழுவார்கள் துடிப்பார்கள் இது இயல்பாக நடக்கின்ற ஒன்று . பெரும்பாலனவர்கள் இறந்தவரின் நல்லவற்றைப்பற்றி பேசுவார்கள் "பாவம் நல்ல மனிதன்" என்ற முத்தாய்ப்போடு முடிப்பார்கள் சிலர் இறந்தவரின் தவறுகளை சொல்லிக் காட்டுவதும் நடக்கும். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டாம் நமக்கும் அதுவழியே " என்ற பாடல் தெரிந்திருந்தாலும் யாராவது அழாமல் இருந்ததுண்டா .அதுதான் மனித இயல்பு கூட்டம் கூட்டமாக நின்று துக்கம் பேசிக்கொண்டிருப்போம். இன்று காலை வேலைக்கு சென்றுகொண்டிருக்கும்போது High way ஓரத்தில் கூட்டமாக cockatoo பறவைகள் அமர்திருந்தன இயல்பாக கத்தி சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் அந்த பறவைகள் மிக அமைதியாக அமர்ந்திருந்து ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருந்தன. என்ன இவைகள் இப்படி இருக்கின்றன என்று யோசிக்கும் தருணம் வீதியில் வாகனத்தில் அடிபட்டு பறவை ஒன்று இறந்து கிடந்தது .


 இப்போது அந்த பறவைக்கூட்டத்தை பார்த்தபோது அவைகளின் முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது . புரியாத வேளைகளில் என்னசெய்வது என்று மனிதன் கைகளைப் பிசைவதைபோல் சில பறவைகள் அலகினால் செட்டையைக் கிளறிக்கொண்டிருந்தன. அந்த சோகம் என்னவோபோல் இருந்தது. சின்ன வயதில் நான் கிளி பிடித்துக்கொண்டு வந்தால் வாய் பேசாத பறவையை வருத்தாமல் விடடா என்று என் அம்மா கூறுவது என்மனதில் அறைந்ததுபோல் இருந்தது . வாய் பேசாத பறவையா ? அப்படிஎன்றால் இந்த சோகத்தை அவை எப்படி பகிர்ந்துகொண்டன. எப்படி எல்லா பறவைகளும் சாவீட்டிட்கு வந்து எதுவும் பேசாது அமர்திருக்கின்றது ? எத்தனை அறிவு இந்த பறவைகளுக்கு ? இவைகளையும் மரணம் வாட்டுகின்றதா ? குடும்ப உறவு ,பந்தம், பாசம் இவைகள் இருக்கின்றதா மனிதனைப்போலவே நல்லது கெட்டது என்று பேசிக்கொள்ளுமா? போட்டி பொறாமை இருக்குமா ? சிந்தனை பலவழிகளில் சிறகடிக்க, சிறகடிக்காது இறந்துகிடந்த அந்த cockatoo பறவையும் அதன் மரணச்சடங்கில் கலந்துகொண்ட கூட்டத்தையும் எண்ணியவண்ணம் வேலையை வந்தடைகிறேன் .

2 comments:

யசோதா.பத்மநாதன் said...

நல்லதொரு விடயத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள் பாஸ்கரன். இதனைப்படித்த போது எனக்கு இரண்டு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன.

1, ஒரு தடவை வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு வாகனத்தால் அடியுண்டு ஒரு குயில் நடு வீதியில் இறந்து கிடந்தது. நடு வீதியென்ற எந்த நினைப்போ பயமோ இல்லாமல் நடு வீதியிலேயே அதன் சோடிக்குயில் குந்தியிருந்து தன் சோடியையு.ம் ஓடுகின்ற வாகனங்களையும் பார்த்தவாறிருந்தது. வாகனங்கள் அதனை விலத்தி ஓடிக்கொண்டிருந்தன. மனதில் நிலைத்து விட்ட ஓர் கணம் அது. அதனிடம் இருந்தது குற்றச்சாட்ட்டா கவலையா, ஏதும் செய்ய முடியாத அதன் அந்தரநிலையா என்று பகுத்தறிய முடியவில்லை.

2.வேலைமுடித்து கார்பார்க் நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். வேலையாளர்கள் வேலை முடித்து வீடுநோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். நான் நடந்து போய்க் கொண்டிருந்த பாதையில் பெயர் தெரியாத பறவை ஒன்றின் கோபக்குரல். நான் அருகே நெருங்கிய போது தத்தி தத்தி நடைபயிலும் குஞ்சொன்றும் தாயும். நான் அந்த பாதையைக் கடந்த போது மஞ்சள் அலகினைக் கொண்ட அந்தத் தாய் பறவை எந்த ஒரு தயக்கமோ பயமோ அற்று அருகில் வந்து அவலமும் கோபமும் சோகமும் கலந்த ஒருவித குரலில் ஏதோ சொல்லியது. குஞ்சுக்குருவி அருகில் வர ஏதோ பேசி தூர அனுப்பியது. நான் நின்றேன். அதற்கு பேசியோ கதறியோ தீரவில்லை. என் பின்னால் இன்னொருவர் வேலை முடித்து வர அது என்னை விட்டுவிட்டு அவரிடம் சென்று அதே தொனியில் மீண்டும் அந்த முறைப்பாட்டை ஒப்புவித்தது. அதே நேரம் அருகில் வரும் அதன் பிள்ளையையும் பேசிப் பேசி அருகில் வரவிடாமல் கலைத்தது.

சிலர் நின்று பார்த்தனர். சிலர் கடந்து சென்றனர். சிலர் கைத்தொலைபேசியால் படம் பிடித்தனர். எனக்கது என்ன சொல்லவந்தது என்று தெரியவில்லை. சற்று நேரம் நின்று விட்டு கார் நோக்கி நகர்ந்தேன்.

கரும் பூனை ஒன்று பதுங்கிக் கொண்டு ஓடியது. அந்தத் தாய் பறவையின் வெப்பியாரக் குரலை; நீதிகேட்ட அதன் வீரியத்தை மறக்க இயலாது. ஏதாவது செய்யுங்கோ என்ற அதன் நியாயக்குரல் இன்றும் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அவைகளுக்கும் அன்பு, பாசம், பந்தம், தோழமை, வலி, மகிழ்ச்சி, தமக்கென்று ஒரு மொழி எல்லாம் உண்டு.

உங்களுடய இந்த மனிதம் கொண்ட பதிவுக்கு மிக்க நன்றி. நினைவில் நிறந்திருந்த இரு பறவைகளை அது நினைவுறுத்திச் சென்றது.

Ramesh said...

எழுத்து நன்றாக இருக்கிறது பாஸ்கரன். அந்த பறவைகளின் சோகத்தைப்பார்ப்போமென்றால் படம் வருகுதில்லையே. படத்தையும் சோகம் அப்பிக் கொண்டதோ?
ஒரு பறவையின் சாவிற்கு இவ்வளவு பறவைகள் அழுதது நம்மஊரிலயும் மனிசர் செத்தினம் ????