தமிழ் சினிமா

நீதானே என் பொன்வசந்தம்

காதல் ஜோடியின் மூன்று காலகட்டத்திலான ஊடலும், கூடலுமாக கலந்த கதையே நீதானே என் பொன்வசந்தம்.
மின்னலே, விண்ணைதாண்டி வருவாயா போன்ற காதல் படங்களைக் கொடுத்த கௌதம் மேனன் மீண்டும் ஒரு முறை காதல் படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்.
கல்லூரியில் சமந்தாவை பார்க்கும் ஜீவா, பள்ளி காலத்தில் அவரோடு பழகியதை நினைவு கொள்கிறார்.
2ம் வகுப்பு படிக்கும்போதே ஜீவாவும், சமந்தாவும் நண்பர்களாக இருக்கின்றனர். பின்பு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டைபோட்டு பிரிகிறார்கள்.
மீண்டும் 10ம் வகுப்பு படிக்கும்போது ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர்.
பழைய பகையை மறந்து மீண்டும் நட்பாக பழகுகின்றனர். இந்த நட்பு 11ம் வகுப்பு வரை தொடர்கிறது. அதன்பின் மீண்டும் சண்டை போட்டு பிரிகின்றனர்.
அதன்பின்பு தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள் இருவரும் பல கல்லூரிகள் பங்கேற்கும் விழாவில் நேரிடையாக சந்திக்கின்றனர்.
அப்போது, தங்களுடைய பகையை மறந்து நெருக்கமாக பழகுகின்றனர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.
கல்லூரி முடிந்து வெளிவந்த பின்பும் தொடர்ந்து காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை வர சண்டைபோட்டு பிரிகிறார்கள்.
பல வருடங்கள் கழித்து, தனது காதலியான சமந்தாவை பார்க்க ஒரு கடலோரக் கிராமத்திற்கு ஜீவா வருகிறார்.
அங்கு இருக்கும் சமந்தாவை சந்திப்பதற்காக 10 நாட்கள் அங்கேயே தங்கிவிடுகிறார்.
சமந்தாவை சந்தித்து பேசும்போது, அப்போதும் இருவருக்கும் சண்டை வருகிறது. அதனால், மறுபடியும் பிரிந்து செல்கிறார்கள்.
சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக சமந்தாவிடம் ஜீவா சொல்கிறார். அதைக்கேட்டு சமந்தா பிரமிப்படைகிறார்.
இறுதியில் ஜீவாவுக்கு கல்யாணம் நடந்ததா? அல்லது ஜீவா-சமந்தா காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.
மீண்டும் பிக்கப் பண்ணும் எண்ணத்தோடு ஜீவா, 'நினைவெல்லாம் நித்யா' படத்திலிருந்து நீதானே என் பொன் வசந்தம்... என்ற பாடலை பாட நித்யாவான சமந்தா, வருண் என்கிற ஜீவாவின் பாடலை ரசிக்கிறார்.
முக்கியமான சினிமா பாடல்களையெல்லாம் கூச்ச நாச்சமில்லாமல் சொந்த காதல்களுக்கு டெடிகேட் பண்ணி வரும் இந்த கால இளசுகளுக்கு நேர்கிற மாதிரியே எல்லாமும் நடக்கிறது.
பள்ளி மாணவனாக, கல்லூரி மாணவனாக, வேலைக்கு செல்லும் இளைஞனாக என்று மூன்று காலகட்டத்திலும் வரும் ஜீவாவை பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
ஆனால், சமந்தா காதலில் கலந்து ரசிகர்களை கரைய வைக்கிறார். ஜீவாவின் காதலுக்குக்காக ஏங்கும் போதும், அவரை வெறுத்து ஒதுக்கும் போதும் நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்.
'சுடிதாருக்குச் சாயம் போனாத்தானே உங்களுக்கு பேன்ட், ஷர்ட்லாம் கண்ணுக்குத் தெரியும்’, 'சில்-அவுட் மச்சான்’- மாறி மாறி வரும் ஊடல் கூடல் வசனங்களுக்கு மத்தியில், சந்தானத்தின் ஒன் லைன் பஞ்ச்கள்தான் சின்ன ஆறுதல்.
சமந்தாவை பிரிய ஜீவா சொல்லும் காரணம் அவ்வளவு ரகசியத்திற்குட்பட்டதல்ல.
அதை சமந்தாவிடமே சொல்லிவிட்டு படிக்க போயிருக்கலாம். அவர் சமந்தாவை மீண்டும் சந்திக்கும் போதாவது சொல்வார் என்றால், அதுவும் இல்லை.
சமந்தா அண்ட் கோவுக்கு நடுவில் ஒரு குண்டு பெண் வருகிறார். (பிரபல நடிகர் மோகன்ராமின் மகளாம்) போகிற போக்கில் நடிப்பை ஊதி தள்ளுகிறார்.
நகைச்சுவை வேடத்தில் நடிக்க பெண்களே இல்லை என்ற சமீபகால வறட்சியை போக்குவாரா. இவருக்கும் சந்தானத்திற்கும் ஒரு விண்ணை தாண்டிய லவ்வை காட்டி, தன் முந்தைய படத்தையே லந்து பண்ணுகிறார் கௌதம். இருந்தாலும் ரசிக்க முடிகிறது.
இந்த படத்தில் முதலும் முற்றுமாக இருந்தவர் இசைஞானி இளையராஜாதான்.
இன்னமும் இந்த உலகத்தை தனது இசையால் நிரப்பிக் கொண்டிருக்கிற இந்த ராஜா, இப்படத்திற்காக தந்திருக்கும் பாடல்கள் எல்லாமே அற்புதம். அதுவும் 'சாய்ந்து சாய்ந்து' என்கிற பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட்.
ஆனால் படம் முழுவதும் பிரிவதும் சேர்வதுமாக கதை மெதுவாய் நகர்கிறது. திரைக்கதை ரசிகர்களை அதிகளவில் வெறுப்பேற்றுகிறது.
கௌதம் மேனனின் படங்களில் வசனம்தான் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். அதுமட்டுமே இந்த படத்தில் இருப்பது இப்படத்திற்கு பலவீனமாக உள்ளது.
வசனங்களுக்கேற்ற ஆழமான காட்சிகள் இல்லை. காட்சிகள் அனைத்தும் செயற்கையாகவும், நாடகத்தனமாகவும் இருக்கின்றன.
இவையெல்லாம் படம் முழுக்க இருப்பதால் படத்தை ரசிக்கமுடியாமல் போய்விட்டது.      நன்றி விடுப்பு 

No comments: