.
தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிகையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் அவளுடன் சக்திகணபதி என்றொருவர் தொலைபேசியில் பேசினார். அவளின் கவிதை பற்றி அவளுடன் விவாதிக்க விரும்புவதாகவும் முகவரி கொடுத்தால் வீட்டிற்கே நேரில் வருவதாகவும் சொன்னார்.
இவளுக்குச் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதுவரைக்கும் இவளின் கவிதை பற்றி கடிதமோ ஒரு பாராட்டோ வந்ததில்லை. இந்த தமிழ்ச் சமூகம் கவிதை பற்றிய புரிதல் எதுவுமில்லாமல் வறட்சியாக இருப்பதாக நினைத்துக் கொள்வாள். இப்போது ஒருவர் இவளுடன் நேரில் விவாதிக்க விரும்புகிறார். ஆனால் அவரை வீட்டிற்கு அழைக்க முடியாது. வீட்டில் கவிதையைப் பற்றிப் பேசுகிற சூழல் இல்லை. "அலுவலகத்திற்கு வாருங்கள் விவாதிக்கலாம்..." என்றும் சொன்னாள்.
ரஞ்சனி எட்டாம் வகுப்புப் படிக்கும் போதிருந்தே கையில் அகப்பட்டதையெல்லாம் எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். பாடப் புத்தகங்களை விட இப்படி வாசிக்கும் பகுதிகள் அவளுக்கு ருசியாய்த் தெரிந்தன.
பத்தாம் வகுப்புப் படிக்கும் போது எழுதுகிற கிறுக்கும் பிடித்தது. அதைப் போல வாக்கியங்களை மடக்கி மடக்கி எழுதுவது அவளுக்கு சுலபமாய்க் கை கூடியது.
நிறைய எழுதிப் பழகிய பின்பு, ப்ளஸ் டூ படிக்கும் போது அவள் எழுதிய ஒரு கவிதை காதல் பற்றியது - ஒரு தினசரியின் வாரப் பதிப்பில் வெளியானது. அடுத்த நாளே பள்ளியில் பிரபலமானாள். தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர்.
வீட்டில் அப்பாவிற்கு இவள் எழுதியது பிடித்திருந்ததா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. "படிப்புல கோட்டை விட்டுறாதம்மா" என்றபடி தலையைப் பிரியமாய்த் தடவிக் கொடுத்தார். இது பாராட்டா? துக்கமா? என்று அன்றைக்கு அவளால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமிழ்மன்றம், கவிதைப் போட்டிகள் என்று கனவுகளோடு அலைந்து கொண்டிருந்தாள். ஒரு பௌர்ணமி இரவில் விடுதியின் மொட்டை மாடியில் தோழிகள் புடைசூழ உட்கார்ந்து கொண்டு அவர்கள் கொடுத்த தலைப்புகளுக்கு சுடச்சுட கவிதை எழுதி வாசித்து கை தட்டல்களை அள்ளிக் கொண்டது மறக்கவே முடியாதபடிக்கு மனதில் ஆழப் பதிந்திருக்கிறது.
ரஞ்சனி அவளின் முதலிரவில் அன்றைய பிரபல வாரப் பத்திரிகையில் முழுப்பக்கத்திற்கு வந்திருந்த அவளின் கவிதையை தன்னுடைய கணவன் மனோகரனுக்கு வாசித்துக் காட்டினாள். கவிதை அவனுக்குப் புரிந்ததா, பிடித்திருந்ததா என்பது பற்றி எதுவும் சொல்லாமல், "நீ கவிதை எல்லாம் எழுதுவியா, அதுபத்தி உங்க வீட்டுல யாரும் எதுவும் சொல்லலியே" என்று குற்றம் சுமத்துகிற தொனியில் சொன்னான்.
அப்புறம் "குடும்பப் பொண்ணுக்கு இது லட்சணமில்ல. அப்பாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப சத்தம் போடுவார். அதனால இனிமே எழுதாத" என்று முடித்தான். ரஞ்சனிக்கு முதல் தடவையாக ஆற்றவே முடியாத அளவிற்கு மனதில் துக்கம் பொங்கியது.
ஒருமுறை வீட்டிற்குப் போயிருந்த போது அப்பாவிடம் இது பற்றிச் சொல்லி வருத்தப்பட்டாள். அவரும் "அவங்களுக்குப் பிடிக்கலைன்னா எழுதாதம்மா. வாழ்க்கைய விட கவிதை அத்தனை முக்கியமா?" என்றார் சாதாரணமாக.
அந்த நிமிஷத்திலிருந்து அப்பாவிற்கும், புருஷனுக்கும் அவளின் மனதில் துளியும் இடமில்லாமற் போனது. ரஞ்சனிக்கு வாழ்க்கையைவிட கவிதைதான் முக்கியமாக இருந்தது. ஆனாலும் அவள் எழுதுவதைக் குறைத்துக் கொண்டாள். எழுதியே தீர வேண்டுமென்கிற மண்டைக் குடைச்சலெடுக்கும் சமயங்களில் மட்டும் எழுதி அவளின் அலுவலக முகவரியிலிருந்து பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தாள்.
சக்திகணபதி எப்படியோ இவளின் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்து ஓர் அதிகாலையில் இவளின் வீட்டிற்கு வந்து விட்டார். அவர் வந்து கதவைத் தட்டியபோது ரஞ்சனி அவளின் புருஷனுடன் உறங்கிக் கொண்டிருந்தாள். மனோகரன் தான் போய்க் கதவைத் திறந்தான்.
இவளின் பெயரைச்சொல்லி கேட்கவும் இவள் வாசலுக்குப் போனாள். நான்கு பேர் நின்று கொண்டிருந்தார்கள். யாவரும் இளைஞர்கள். இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள்ளிருந்தார்கள். மளமளவென்று வீட்டிற்குள் நுழைந்து வரவேற்பறையில் கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டார்கள்.
சத்தம் கேட்டு வீட்டின் மற்ற அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அங்கே வரவேற்பறைக்கு வரவும், அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த ரஞ்சனி எழுதிய கவிதையின் பிரதியை எல்லோருக்கும் கொடுத்தார்கள்.
நன்றாக நினைவிருக்கிறது
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும்
ஏதோ தவறு செய்தேனென்று
தொடையில் சூடிழுத்தாள் அம்மா
சுரீரிட்ட வலியில் சுருண்டேன்.....
அதே வலியை
அனுபவிக்கிறேன் இப்போதும்
புருஷன் ஒவ்வொருமுறை
நெருங்கும் போதும்... என்று தொடங்கும் கவிதையில் ஆண், பெண் அந்தரங்க உறுப்புக்களின் பெயர்கள் சர்வசாதாரணமாக சுட்டப்பட்டிருந்தன. பெண்ணைப் போகப் பொருளாய்ப் பாவிப்பதில் புரட்சியாளர்களும் மதவாதிகளும் விதிவிலக்கில்லை என்று சாடி, எல்லா மதங்களும், தத்துவங்களுமே பெண்ணின் புழங்கு வெளிகளை முடக்குவதைத் தான் முன்மொழிகின்றன என்று முடித்திருந்தாள்.
"உங்கள் வீட்டுப் பெண் எழுதிய கவிதையை வாசியுங்கள் நண்பரே! எத்தனை ஆபாசமாய் எழுதியிருக்கிறார் என்று பாருங்கள்" என்றார் சக்திகணபதி. மலத்தை மிதித்தது போல் முகபாவம் காட்டினார்கள் கவிதையை வாசித்தவர்கள் அனைவரும். "என்னடி இந்த அசிங்கமெல்லாம்..." என்றபடி ரஞ்சனியை அடிக்கப் பாய்ந்தான் மனோகரன். வந்தவர்கள் மனோகரனைத் தடுத்து, "அடிக்காதீர் நண்பரே! சகோதரிக்கு அறிவுரை சொல்லுங்கள்" என்றார்கள்.
"என் கவிதை ஒன்றும் ஆபாசமாயில்லை. உங்களுக்குக் கவிதை பற்றி ஏதாவது விமர்சனமிருந்தால் அதை அந்தக் கவிதை பிரசுரமான இதழுக்கு எழுத வேண்டும். அதை விடுத்து கவிதை என்றால் என்னவென்றே தெரியாத என் வீட்டுக்காரர்களிடம் கவிதையைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிற செயல் தான் கொஞ்சமும் நாகரிகமில்லாதது. ஆபாசமானது. அருவருப்பானது. அராஜகமானதும் கூட..." என்று சீறினாள் ரஞ்சனி.
"உங்களோடதென்ன சங்கக் கவிதையா சகோதரி, அசை பிரித்து அர்த்தம் புரியாமப் போறதுக்கு. நேரடியான கவிதை தான். சரி எங்களுக்குப் புரியவில்லைன்னே வச்சுக்கலாம். நீங்கதான் அர்த்தம் சொல்லுங்களேன். உறவின் போது வலி இருந்தா அதை உங்க புருஷன்கிட்டச் சொல்லுங்க. அதை ஏன் பொதுவெளிக்குக் கொண்டு வந்து நாங்க நம்புகிற தத்துவங்களை எல்லாம் கொச்சைப் படுத்துறீங்க?" என்று அவர்களும் சண்டைக்கு வந்தார்கள்.
அதற்குள் அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க கூடிவிட்டார்கள். "உங்க ஏரியா பொண்ணு எழுதியிருக்கிற கவிதைய வாசிச்சுப் பாருங்கள்" என்று கவிதையின் பிரதிகளை ஆளுக்கொன்றாகக் கொடுத்தார்கள்.
"இப்படியெல்லாமா பொம்மனாட்டிங்க அசிங்க அசிங்கமா எழுதுறது" என்று குசுகுசுத்துக் கொண்டிருந்தது கூடியிருந்த கும்பல்.
அவர்களில் வயதான பெண் ஒருத்தி, "அவள் அப்படி என்ன தப்பா எழுதியிருக்கா? தினம் டீ.வி.யில சீரியல்ன்னு போடுறாங்களே, சினிமாவுல குத்துப் பாட்டுன்னு கூத்தடிக்கிறாங்களே... அதில இல்லாத அசிங்கமும் வக்கிரமுமா? டி.வி. ஸ்டேஷனுக்கு முன்னால, இல்லைன்னா சினிமாக்காரங்க வீடுகளுக்குப் போய் தகராறு பண்ணிப் பாருங்களேன். எலும்ப எண்ணிடுவான். குடியிருப்பு பகுதியில் வந்து கூச்சல் போட்டுக்கிட்டு இருக்கீங்க. வெளியில் போங்கடா வெட்டிப் பயலுகளா..." அவர்களுடன் சண்டைக்குப் போனாள்.
"அர்த்தம் புரியாம வக்காலத்து வாங்காதீங்க பாட்டிம்மா" என்றொருவன் விளக்கம் சொல்ல அவளை அணுக, "எனக்கு எல்லாம் புரியும். உங்க துருத்திய மூடிக்கிட்டுப் போங்கடா" என்று அவர்களின் மீது பாயப் போனாள். அவர்கள் கிளம்பிப் போனார்கள்.
அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் கலைந்து போனபின்பு, "எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது தாயி. நீ சரியாத்தான் எழுதியிருப்ப. பொம்பள உடம்பப் பத்தி ஆம்பளை எழுதுனா ரசிப்பாங்க. அதையே பொம்பள எழுதுனா குடியே முழுகிப் போச்சுன்னு குதிப்பாங்க. கவனமா நடந்துக்க தாயி" என சொல்லி விட்டுப் போனாள். ரஞ்சனிக்கு ஒளவையாராகத் தெரிந்தாள் அப்பாட்டி.
ஒரே நாளில் அப்பகுதி முழுவதும் பிரபலமானாள் ரஞ்சனி. அவள் வேலைக்குப் போகும்போது வீடுகளில் நின்றபடி எல்லாப் பெண்களும் இவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆண்டாளும் ஒளவையும் என்னை விட வெளிப்படையாக எழுதியிருக்கிறார்களே. அதையெல்லாம் இந்த ஆண்கள் எப்படி சகித்துக் கொண்டார்கள் அல்லது அவர்களையும் இப்படித்தான் கேவலப்படுத்தியிருப்பார்களோ, அது பற்றி எந்தப் பதிவும் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டாள்.
வீடும் அன்று முழுவதும் அவளை இறுக்கமாகவே எதிர்கொண்டது. ஏதோ வியாபார நிமித்தமாக வெளியூர் போயிருந்த அவளின் மாமனார் இரவு பதினோரு மணிக்கு மேல் வீடு திரும்பியவர் வந்ததும் வராததுமாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி சத்தம் போட்டார்.
ரஞ்சனியும் பதிலுக்கு வாக்குவாதம் செய்ய, "எங்க அப்பாவையே எதிர்த்துப் பேசுறயா? உனக்கு என்ன திமுருடி?" என்று அந்த அர்த்த ராத்திரியில் அவளை இழுத்துப் போட்டு அடித்தான் மனோகரன்.
அப்புறம், "இனி உனக்கு இந்தவீட்டுல இடமில்லை. இப்பவே வெளிய போ" என்று சொல்லி அவளையும் அவளின் உடமைகளையும் வெளியில் வீசிக் கதவைப் பூட்டினான்.
அவளுக்கு என்ன செய்வது? எங்கு போவது? என்று எதுவும் புரியவில்லை. அழக்கூடாது என்று வைராக்கியமாய், மெதுவாய் கால் போன போக்கில் வழக்கமாய் அலுவலகம் போகிற பாதையில் நடக்கத் தொடங்கியவளுக்கு, முத்துராமனின் நினைவு வந்தது. அவனின் வீட்டிற்குப் போய் கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்தவன் இவள் கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். அவளை அறைக்குள் அழைத்து உட்காரவைத்து அவள் ஆசுவாசமானதும் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவன் தனியாள். எப்போதாவதுதான் அவனுடைய அம்மா அவனைப் பார்க்க கிராமத்திலிருந்து வருவாள். அவள் தாசில்தாரராக வேலை பார்க்கிறாள்.
அன்றைய இரவு ரஞ்சனியை அறைக்குள் படுக்க வைத்து விட்டு இவன் மொட்டை மாடியில் போய்ப் படுத்துக் கொண்டான்.
முத்துராமன், சென்னையின் புறநகர்ப் பகுதியான நேரு நகருக்குக் குடி வந்து ஒருசில மாதங்கள்தான் ஆகியிருந்தது. அதற்கு முன்பாக திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்தான். அறையிலிருந்த புழுக்கமும், நாற்றமும், அவனை மூச்சுத் திணற வைத்ததில், புறநகர்ப் பகுதிக்கு வந்து தனியாக வீடெடுத்துத் தங்கச் செய்தது.
அவன் தாம்பரத்தைத் தாண்டி ஒரு கட்டுமானக் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்தான். அன்றைக்கும் அவசரமாய் வேலைக்காக பைக்கில் போய்க் கொண்டிருந்த போது அந்தப் பெண்ணைப் பார்த்தான். இடது கால் பாதம் இலேசாய்த் திரும்பி இருக்க கெந்திக் கெந்தி நடந்து போய்க் கொண்டிருந்தாள். வண்டியை நிறுத்தி அவளை ஏற்றிக் கொள்ளலாமா என்று ஒவ்வொரு முறையும் யோசித்து, அப்புறம் ஒரு பெண்ணிடம் எப்படிப் பேசுவது? என்ற நினைப்பில் சில நாட்களாக அவளைக் கடந்து போனவன், அவளுக்கு முன்னால் போய் வண்டியை நிறுத்தி, "எக்ஸ்கியூஸ் மீ... ஏறிக்கிறீங்களா? நானும் இரயில்வே ஸ்டேஷனுக்குத் தான் போறேன்" என்றான்.
அவள் ஒரே ஒரு நொடி தயங்கி பின்னர் ஏறிக் கொண்டாள். வழியில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தவும் ஆங்கிலத்தில் நன்றி சொல்லி இறங்கிப் போனாள். அவன் இரயில் நிலையம் போனபோது அவள் முந்தின இரயிலில் ஏறிப் போயிருந்தாள்.
அடுத்த நாளும் வழியில் அவளைச் சந்தித்த போது, வண்டியை நிறுத்தி மிகவும் சாவதானமாக "ஏறிக்குங்க" என்று பின் சீட்டைக் காட்டினான். அவளும் அதிக தயக்கங்களின்றி ஏறிக் கொண்டாள். "ரொம்ப நன்றிங்க. உங்க புண்ணியத்துல நான் வேலையில சேர்ந்த இத்தனை நாள்ல நேத்துத்தான் நேரத்துக்கு ஆபீஸூக்குப் போய், மேனேஜர் கிட்டருந்து திட்டு வாங்காம தப்பிச்சேன்" என்றாள்.
மெதுவாய்ப் பேச்சுக் கொடுத்து அவளுடைய பெயர் ரஞ்சனி என்றும் அவள் எழும்பூரில் ஒரு டிராவல்ஸில் கிளார்க்காக வேலை பார்க்கிறாள் என்றும் பச்சையம்மன் கோயிலைத் தாண்டி ஓரிடத்திலிருந்து வருகிறாள் என்றும் தெரிந்து கொண்டான். "வீட்லருந்து யாரையாவது டிராப் பண்ணச் சொல்லலாமில்ல" என்றான்.
அவள் அமைதியாக இருந்தாள். இவனுக்கு மனசுக்கு சங்கடமாக இருந்தது. ஒருவேளை அவளின் வீட்டில் வண்டி எதுவுமில்லையோ என்ற சந்தேகத்தில், "வீட்ல வண்டி இருக்குல்ல". என்று கேட்டான்.
"அதெல்லாம் இருக்கு. யாருக்கும் மனசுதான் இல்ல." என்றாள் சலிப்புடன்.
"அப்பா, அண்ணான்னு யாருமில்லையா?"
"அவங்கல்லாம் ஊருல இருக்காங்க".
"அப்ப, இங்க யாரு வீட்ல இருக்கீங்க?"
"ம்... யாரு வீட்ல இருப்பாங்க? புருஷன் வீட்லதான்".
"உங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சா?" அவனின் குரலில் ஆச்சர்யமும் பதற்றமும் அப்பட்டமாய் பீறிட்டு வெளிப்பட்டது. "இதுக்கு ஏன் இவ்வளவு பதற்றப்படுறீங்க? நம்ம ஊர்ல பொண்ணுகளுக்கு எது கிடைக்குதோ இல்லையோ, இருவது முப்பது வயசுக்குள்ள புருஷன்ங்கிற உறவு மட்டும் கண்டிப்பா கிடைச்சுடும். அவங்கள அதிகாரம் பண்ண" என்று கொஞ்சம் நிறுத்தியவள் "ஏன் கல்யாணமான பொண்ணுகள உங்க வண்டிக்குப் பின்னால ஏத்திக்க மாட்டீங்களா?" என்றாள் நக்கலாய்.
"அய்ய்ய்யோ... அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. உங்களப் பார்த்தா ரொம்ப சின்னப் பொண்ணாத் தெரியுது, அதான்." என்றான்.
அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்குள் ஒரு சின்ன நெருக்கம் ஏற்பட்டிருந்தது. அன்றைக்கு வண்டியிலிருந்து இறங்கியவள், இவன் வண்டியைப் பார்க் பண்ணி வருவதற்காகக் காத்திருந்தாள்.
"நான் நொண்டிக் கால வச்சுக்குட்டு நடந்து போய் இரயிலப் புடிக்கிற வரைக்கும் கூட நீங்க ஸ்டேஷனுக்கு வர்றதில்லையே, தினம் எங்க போறீங்கன்னு தெரிஞ்சுக்கிறதுக்காகத் தான் காத்திருந்தேன்" என்று உரிமையாய்க் கடிந்து கொண்டாள்.
"எங்கயும் போறதில்லைங்க. டிபன் சாப்பிட்டு வருவேன். அவ்வளவுதான். இன்னைக்கு நீங்களும் என் கூட வாங்களேன், டிபன் சாப்பிடலாம்" என்று அழைப்பு விடுத்தான். அவளும் சரி என்று அவனைப் பின் தொடர்ந்தாள். பிகு பண்ணாமல் அவன் அழைத்தவுடனே வந்தது அவனுக்குப் பிடித்திருந்தது. ஆர்வமாய் அவள் சாப்பிடுவதைக் கவனித்தவன், "நீங்க, காலையில எதுவும் சாப்புடலையா?" என்றான்.
"என்னைக்குமே காலையில எதுவும் சாப்புடுறதில்ல. அதுக்கான அவகாசமும் இருக்குறதில்ல. சாப்புடச் சொல்லி வற்புறுத்துறதுக்கும் யாருமில்ல. பணம் இருக்கு. ஆனாலும் ஒரு பெண் தனியா ஹோட்டலுக்கும் டீக்கடைக்கும் போக முடியுமா? இந்த இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டுலயும் பொது வெளிங்குறது பொண்ணுகளுக்கு மறுக்கப்பட்டதாகத்தான் இருக்கு" என்றாள் கண் கலங்கியபடி.
"நீங்க கவிதை எழுதுவீங்களோ?" என்று எதார்த்தமாய்க் கேட்டான். "ஆமாம் அதெப்புடி அவ்வளவு கரெக்டா கண்டுபுடிச்சீங்க?" என்று ஆச்சர்யம் காட்டினாள். "நீங்க பொதுவெளி, மனவெளின்னு பேசுறீங்கள்ல, இந்த மாதிரி வார்த்தைங்கள்ளாம் கவிதை எழுதுறவங்களுக்குத்தான் சரளமா வரும். அத வச்சுத்தான் கேட்டேன்" என்றான்.
"ஒரு காலத்துல எழுதிக்கிட்டிருந்தேன். இப்பல்லாம் அதிகம் எழுதுறதில்லைங்க" என்றாள்.
"ஏங்க அப்புடி? வேலைப் பளுவுல நேரங் கெடைக்குறதில்லையோ? நம்ம பெண்கள் கல்யாணமாயிட்டாலே முழு நேரத்தையும் புருஷனுக்குப் பணிவிடை செய்றதுலயே செலவழிக்குறாங்க" என்றான்.
அவள் சிரித்தபடி, "நேரமெல்லாம் பெரிய பிரச்சினை இல்லைங்க. சீரியல் பார்க்குறத தவிர்த்தாலே தாராளமா நேரம் கிடைக்கும். வீட்ல எழுதுறதுக்கான சூழல் இல்லைங்க. எந்தக் காலத்துலயும் ஆதிக்க சமூகம் பெண்களோட சுதந்திர வெளிப்பாட அனுமதிக்குறதே இல்லயே" என்றாள்.
"ஒருநாள் உங்க கவிதைகளை எல்லாம் கொண்டு வாங்களேன். படித்துப் பார்க்கிறேன்" என்றான் முத்துராமன். அடுத்த நாளே தான் எழுதி வைத்திருந்த மொத்தக் கவிதைகளையும் கொண்டு போய்க் கொடுத்தாள்.
வாசித்து விட்டு, "உங்களோடதுதான்ங்க அப்பட்டமான பெண்ணியக் கவிதைகள். நம்முடைய கவிதாயிணிகள் எல்லாம் ஆண்களின் கவிதைகளைத்தான் எழுதிக்கிட்டு இருக்குறாங்க" என்று ஒவ்வொரு கவிதையாக சிலாகித்தவன், "இதையெல்லாம் தொகுத்து புத்தகமாகப் போடுங்களேன்" என்றான்.
"நிறையப் பதிப்பகங்கள் கிட்டக் கேட்டுப் பார்த்தேன்ங்க. மொத்தச் செலவையும் நானே ஏத்துக்கிட்டா மட்டும் தான் புத்தகம் போடமுடியும்னு சொல்லீட்டாங்க" என்றாள் வெறுப்புடன்.
"நான் செலவு பண்ணி புத்தகம் போடுறேன்ங்க" என்று மனோகரன் சொல்லி,
சொன்னபடி ஒரு பிரபலமான பதிப்பகத்தின் மூலம் அவளின் கவிதைத் தொகுதியை வெளிக் கொண்டு வந்தான்.
அப்போதிருந்து இருவருக்கும் நட்பு ரொம்பவே இறுகியது. ரஞ்சனி பற்றிய நினைவுகளினூடே அவன் தூங்கிப் போனான்.
அடுத்தநாள் அவளை ஒரு பெண்கள் விடுதியில் சேர்த்து விட்டான். சிலநாட்கள் கழித்து அவளின் பிறந்த வீட்டிற்குப் போனபோது, அங்கும் அவளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவர்களும் புருஷன் வீட்டை அனுசரித்துத்தான் வாழ்ந்தாக வேண்டுமென்று அவளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி விட்டார்கள்.
விவாகரத்திற்கு முயன்ற போது, மனோகரன் வீட்டில் வேண்டுமென்றே பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதிக்க மறுத்து இழுத்தடித்தார்கள். கோர்ட்டில் மனுச் செய்து அங்கும் கவுன்சிலிங், வாய்தா என்று நாட்கள் கடத்தப்பட்டு அப்புறம் தான் விவாகரத்து கிடைத்தது.
குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்ததும் முத்துராமனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இனி அவன் ரஞ்சனியைத் திருமணம் செய்து கொள்வதற்கு எந்தவிதத் தடையுமில்லை. ஆனால் ரஞ்சனியின் முகத்தில் மகிழ்ச்சியின் துளி கொஞ்சமும் இல்லாமல் கண்கள் பொங்க எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆண்களின் மனது அந்தந்த நேரத்து சந்தோஷங்களை அவ்வப்போதே ஆரவாரமாய்க் கொண்டாடித் தீர்க்க, பெண்களோ, சந்தோஷத்திற்குப் பின்னாலுள்ள வலிகளையே நினைத்து மனம் புழுங்குகிறார்களோ என்று நினைத்துக் கொண்டான்.
வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, முத்துராமன் "என்ன ஆச்சு ரஞ்சனி இந்த விவாகரத்து கிடைச்சதுல உனக்கு சந்தோஷமில்லையா?" என்றபடி அவளின் கைகளை மெல்லப் பற்றினான். கைகள் வேர்த்து வெதுவெதுவென்றிருந்தது.
"அதெல்லாம் ஒண்ணுமில்லையே," என்றபடி முகந்திருப்பி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "மனசளவுல நான் மனோகரன் கிட்டருந்து எப்பவோ வெலகியாச்சு. இனிமே ஒரே ஒரு நிமிஷம்கூட அந்த மாதிரி ஆளுகூட என்னால இணக்கமா வாழ முடியாதுதான். ஆனாலும் அதை ஒரு மூன்றாம் மனுஷர் அதிகாரப் பூர்வமா அறிவிக்கும் போது மனசுக்கு ஏனோ ரொம்ப சங்கடமா இருக்கு" என்றாள். மறுபடியும் கண் கலங்கியபடி.
"அம்மாட்டச் சொல்லி நம்ம கல்யாணத்துக்கு நாள் குறிக்கச் சொல்லட்டுமா ரஞ்சனி?" என்றான்.
"இன்னொரு கல்யாணமா!? அய்யோ சாமி ஆளை விடுப்பா. ஒரு கல்யாணத்தின் மூலமே ஏழேழு ஜென்மங்களுக்கும் போதுமான வலிகளையும் அவமானங்களையும் அனுபவிச்சாச்சு. இனியொரு கல்யாணத்துக்கு நான் எப்பவுமே தயாரில்ல. என்ன விட்டுரு முத்து" என்றாள் தீர்மானமாக.
தவறான நேரத்தில் அவசரப்பட்டு தான் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டமோ என்று தோன்றியது அவனுக்கு. அம்மாவால் ரஞ்சனியிடம் பக்குவமாய்ப் பேசி அவளைக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைத்து விட முடியும் என்று நம்பினான்.
முத்துராமனின் அம்மா கிராமத்திலிருந்து வந்திருந்த போது ரஞ்சனியிடம் நேரிடையாகவே கேட்டாள். "என் புள்ளயக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுட்டியாமே, ஏம்மா அவனப் புடிக்கலயா?"
"அய்யோ அப்படியெல்லாம் இல்லம்மா. அவர் மட்டும் இல்லைன்னா நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன். இந்த மூணு வருஷமும் அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தார். எவ்வளவோ பேர் என்கிட்டருந்து அவர விலக்க முயற்சி பண்ணாங்க. அசிங்க அசிங்கமா கதை கட்டி அவரை அவமானப்படுத்துனாங்க. ஆனா அவர் அதுக்கெல்லாம் அசரவே இல்ல. எனக்கு முத்துராமன ரொம்பப் புடிக்கும்மா. ஐ லவ் ஹிம் ஸோ மச். ஆனா கல்யாணம்ங்குற குங்குமச் சிமிழுக்குள்ள மறுபடியும் அடைபடுறதத்தான் நான் வெறுக்கிறேன்" என்றாள் ரஞ்சனி.
"இதென்னம்மா அசட்டுத்தனம், தெனாலிராமன் பூனை மாதிரி ஒரு தடவை உன் கல்யாணம் தோத்துப் போனதுக்காக அந்த ஏற்பாட்டையே வெறுக்குறது என்னம்மா நியாயம்"?
"அதுக்கில்லைம்மா. நம்மூர்ல கல்யாணம் பண்ணுறது ரொம்ப ஈஸியா இருக்கு. ஆனா ஏதோ காரணங்களுக்காக அதை முறிச்சுக்கணும்னு நெனச்சா அது கல்யாணத்த விட பெரிய சித்திரவதையா இருக்கும்மா அதான். வேணுமின்னா நீங்களும் அவரும் சம்மதிச்சா நாங்க கல்யாணம் பண்ணிக்காமலே சேர்ந்து வாழறோம். அதாவது லிவிங் டு கெதர். மனசுக்குப் பிடிக்கலைன்னா எப்ப வேணுமின்னாலும் பிரிஞ்சு போய்க்கலாம்."
"வேண்டாம்மா. நீ கல்யாணமே பண்ணிக்காம தனியாவே வேணுமின்னாக் கூட வாழ்ந்துக்கோ. ஆனா எந்த ஆம்பிளைகூடயும் சேர்ந்து வாழ்ற - லிவிங் டு கெதர் - தப்ப மட்டும் பண்ணீடாதம்மா. அதுக்கு இந்த சமூகம் தர்ற பேரே வேறு. லிவிங் டு கெதர்ன்கிறதை கல்யாணத்துக்கு மாற்றா என்னால ஏத்துக்க முடியாது ரஞ்சனி."
"சின்ன வயசுல நானும் முத்துராமனோட அப்பாவும் காதலிச்சோம். எங்க காதலுக்கு சாதி, அந்தஸ்துன்னு ஏகப்பட்ட தடைகள். எங்களால கல்யாணம் பண்ணிக்கவே முடியல. அதனால என்ன போங்கடான்னு நாங்க சேர்ந்து வாழத் தொடங்கிட்டோம். எங்களச் சுத்தி இருக்குறவங்களுக்குப் பதில் சொல்லியே பாதி ஆயுள் போயிருச்சும்மா. அவர் ஒரு விபத்துல செத்துப் போகவும், என்னோட வாழ்க்கையே இருளடஞ்சு போச்சும்மா. பிள்ளைக்கு அப்பான்னு சொல்லிக்க யாருமில்லாம, நான் அவரோட சேர்ந்து வாழ்ந்ததுக்கான அங்கீகாரமில்லாம, எவ்வளவு அவமானங்கள், வலிகள் - அனுபவசாலி நான் சொல்றேன். லிவிங் டு கெதர் கல்ச்சர் எல்லாம் வேண்டாம். புரிஞ்சுக்கோ."
"உங்க காலத்துல அது தப்பா இருந்துருக்கலாம். ஆனா இப்ப நீதிமன்றமே ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்காம சேர்ந்து வாழ்றது பெரிய பிசகில்லைன்னு சொல்லிருச்சும்மா."
"நீங்க நீதிமன்றத்துக்குள்ள போயா குடித்தனம் பண்ணப் போறீங்க? இந்த சமூகத்துக்குள்ளதான வாழ்ந்தாகணும். இந்த சமூகத்துக்கு இன்னும் அந்தப் பக்குவம் வரலியே. அது அதன் சட்ட திட்டங்கள மீறி வாழ்றவங்கள பழிக்கும். சந்தர்ப்பம் கிடைக்குறப்பல்லாம் அவமானப்படுத்தும். வாழ்க்கை முழுக்க எப்படிம்மா வலியோடயே நாட்கள கடத்த முடியும். திருமணம்ங்குற ஏற்பாடு நீ சொன்ன மாதிரி குறுகியதா குங்குமச் சிமிழா இருந்தாலும் இப்போதைக்கு அதுதான் உனக்கு அடையாளமும் பாதுகாப்பும் தரும்", என்றாள் முத்துராமனின் அம்மா.
"சரிம்மா. என் முடிவ ரெண்டொரு நாள்ல சொல்லட்டுமா" என்றாள் ரஞ்சனி.
"தாராளமா யோசிம்மா. எத்தனை நாள் வேணுமின்னாலும் எடுத்துக்க. ஆனா என் பிள்ளைய முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீ சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்", என்றாள் முடிவாக.
நன்றி: தினமணி கதிர்

No comments:
Post a Comment