குரங்குசூழ் உலகு - - நட்சத்ரன்

.
தத்தம் குரங்குகளுக்கிடையே விதவிதமாய்ச் சண்டை மூட்டி விளையாடிக் களிக்கிறார்கள் குரங்காட்டிகள்

கூண்டுக்குள்

அடைய மறுக்கும்

குரங்குகளை வைத்துக்கொண்டு

அலைகிறார்கள் வீதிகளில்

குரங்காட்டிகள்

உலகம்

குரங்குகளாலும் குரங்காட்டிகளாலும்

நிரம்பிவழிகிறது

குரங்குகளின் இரைச்சல்

சமுத்திரப் பேரலைகளின் இரைச்சலையும் விஞ்சி

எதிரொலிக்கிறது

பிரபஞ்சமெங்கும்!

தத்தம் குரங்குகளுக்கிடையே

விதவிதமாய்ச் சண்டை மூட்டி

விளையாடிக் களிக்கிறார்கள்

குரங்காட்டிகள்நகத்தை வைத்துப் பிராண்டியும்

குதித்தும் கர்ஜித்தும் கத்தியும்

குட்டிக்கரணமிட்டு வித்தைகாட்டியும்

களத்தில்

ஜரூராய் விளையாடிக்கொண்டிருக்கின்றன

குரங்குகள்

விளையாடும் குரங்குகளில்

எந்தக் குரங்கு பெருங்குரங்கு என்பது

அவை தன்னில் பெற்றுள்ள

விழுப்புண்களை வைத்து கணக்கிடப்படுகிறது.

கொடூரமாய் காயப்பட்டுத் திரும்பும் குரங்குகளை

பரிதாபமாய் வேடிக்கை பார்த்தவாறிருக்கின்றன

குட்டிக்குரங்குகளும் தாய்க்குரங்குகளும்

வெற்றிவாகை சூடிய குரங்கு

வீற்றிருக்கிறது கூரை உச்சியில்

தன் பிறப்புறுப்பை

தானே சவைத்தபடி.

No comments: