இலங்கைச் செய்திகள்

.
மாந்தை மேற்கு பாலியாற்றில் அரச அதிகாரிகளால் காணி அபகரிப்பு -பொது மக்களால் வேலிகள் உடைப்பு

நெடுந்தீவில் நடைமுறைப்படுத்தவிருந்த கடற்றொழிலுக்கான பாஸ்நடைமுறை நீக்கம்

மண்முனைப் பால வேலைத்திட்டம்- அமைச்சர் பசில் ஆரம்பித்து வைப்பு

 கே பி மீது எந்த வழக்கும் இல்லை"

மாத்தறைக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மூவரைக் காணவில்லை; இருவர் மீட்பு ஒருவரை பிடித்துச் சென்றனர்

மாந்தை மேற்கு பாலியாற்றில் அரச அதிகாரிகளால் காணி அபகரிப்பு -பொது மக்களால் வேலிகள் உடைப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு கிராமத்தில் பிரதேசச் செயலாளரும், அயல் கிராம அலுவலரும் இணைந்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேவன் பிட்டி, பாலியாறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேளாண்மைச் செய்கைக்காக ஓர் ஏக்கர் வீதம் வழங்குவதற்கு உலக உணவுத்திட்ட செயலகத்தின் மூலம் காடுகள் துப்புரவாக்கி மக்களுக்கு வழங்குவதற்கான அனுமதியும் பெறப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.




நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். குறித்த மீள் குடியேற்றத்தின் பின்னர்; பல முறை அரச அதிகாரிகளிடமும், காணி அமைச்சு வரைக்கும் அப்பகுதியில் உள்ள விவசாய அமைப்புக்களும்,மக்களும் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபரும்,அயல் கிராம கிராம சேவையாளர் ஒருவரும் இணைந்து 60 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அபகரித்து குறித்த காணியை துப்புரவாக்கி சுற்றுவேலியடைத்துள்ளனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்திரமடைந்து குறித்த அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு வேலிக்கட்டைகளையும் உடைத்து அகற்றியுள்ளனர்.

ஒரு சிறிய மரம் வெட்டுவதற்குக் கூட அனுமதி இல்லாத நிலையில் ஆயிரக்கணக்கான பெரும் மரங்கள் வெட்டப்பட்டு வேலி அடைக்கப்பட்டிருந்தது.

குறித்த அதிகாரிகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ் அதிகாரிகள் இந்திய வீட்டுத்திட்டத்திலும் வேறு நபர் ஒருவருடைய பெயரில் ஒப்பந்தங்களைப் பெற்று வீடு கட்டவும்,ஆற்றில் இருந்து பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மணல் அகழ்ந்து வியாபாரத்தில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்களும்,பொது அமைப்புக்களும் குற்றம் சாட்டுகின்றன.

இந்த விடயத்தில் உடன் தலையிட்டு காணி அபகரிப்பை நிறுத்துவதுடன் மாந்தை மேற்கில் வள அபகரிப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும்,பொது அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு.எம்.ஸ்ரீ ஸ்கந்தராசா அவர்களை பல தடவை தொடர்பு கொண்ட போதும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.  நன்றி வீரகேசரி 





  நெடுந்தீவில் நடைமுறைப்படுத்தவிருந்த கடற்றொழிலுக்கான பாஸ்நடைமுறை நீக்கம்
By Farhan
2012-10-16
 
நெடுந்தீவில் கடற்படையினரால் மீண்டும் அமுல்படுத்தப்படவிருந்த பாஸ் நடைமுறை (தொழில் அனுமதி) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பயனாக உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கடற்படையினர் நேற்றைய தினம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் பாஸ் (தொழில்) அனுமதி பெற்றுக் கொண்டதன் பின்னரே கடற்தொழிலில் ஈடுபடவேண்டுமென பணிப்புரை விடுத்தனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான பாஸ் நடைமுறையால் தாம் எதிர்கொண்ட இடர்பாடுகள் தொடர்பாகவும், நீக்கப்பட்டிருந்த பாஸ் நடைமுறையை கடற்படையினர் மீண்டும் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தாம் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாகவும் நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கொழும்பிலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதுடன் இவ்விடயம் தொடர்பில் தமக்கு உரிய தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையை கவனத்தில் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதுவிடயம் தொடர்பில் கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கடற்படை அதிகாரிகளுடனும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் அமுல்படுத்தப்படவிருந்த பாஸ்நடைமுறையை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனையடுத்து இப்பாஸ் நடைமுறையை உடனடியாக நீக்குவதற்கும் தமது கடற்றொழிலை இயல்பாக மேற்கொள்ளுவதற்கும் உதவிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரனுக்கும் (கமல்), ஈ.பி.டி.பியின் நெடுந்தீவு பிரதேச அமைப்பாளர் தானியேல் றெக்சியனுக்கும் (ரஜீவ்) நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.     நன்றி வீரகேசரி 






மண்முனைப் பால வேலைத்திட்டம்- அமைச்சர் பசில் ஆரம்பித்து வைப்பு
By Farhan
2012-10-16
மட்டக்களப்பில் மண்முனைப் பாலம் கட்டுமானப்பணியானது பொருளாதார அபவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹோபோ ஆகியோரால் சற்றுமுன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வைபவத்தில் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மலா கொத்தலாவல, ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன (ஜெய்கா) உயர் பிரதிநிதி .ஹரூமி ஆஓ மற்றும் கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட் ஆகியோரும் பங்கேற்றனர்.

இப்பாலம் கட்டுமானப்பணிக்காக 1,206 மில்லியன் ஜப்பானிய யென் (அண்ணளவாக 2 பில்லியன் இலங்கை ரூபாய்) ஜெய்கா நிறுவனத்தினால் நன்கொடையாக வழங்கப்படுகின்றது.

பாலம் அமையவுள்ள இவ் வாவியின் கிழக்குமுனையில் மட்டக்களப்பு நகரமும் மேற்கு முனை விவசாயப் பகுதியாகவும் கொண்டுள்ளது. தற்போது கிழக்கிற்கும் மேற்கிற்குமான போக்குவரத்துக்காக இயந்திரப்பாதை சேவை நடத்தப்பட்டுவரும் நிலையில் அவை அடிக்கடி பழுதடைந்து இடைநிறுத்தப்படுவதனால் மக்கள் சுற்றுபாதை வழியாகபயணிக்கவேண்டியிருக்கின்றது.

வாவியின் இருமருங்கிலும் 210 நீளமான புதிய பாலத்துடன் இரு பக்கவீதியாலும் இணைக்கப்படும். இது மேற்கு பகுதி விவசாய மக்களுக்கு கிழக்கு பகுதியுடன் இலகுவாக இணைந்து மற்றய இடங்களுக்கான ஒருமாற்றுப் பாதையாக அமைகின்றது.
 
நன்றி வீரகேசரி 






கே பி மீது எந்த வழக்கும் இல்லை"
பி.பி.சி
இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது உயிருடன் இருப்பவர்களில் மூத்த தலைவரான கே பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் அவர் மீது இனிமேல் எந்த குற்றச்சாட்டுக்களையும் பதியும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை என்றும் புதனன்று பிபிசியிடம் தெரிவித்தார் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் தலைவர் லக்ஷ்மண் ஹுலுகல்ல.
இலங்கையின் உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு கடுமையான சண்டையிடலுடன் முடிவுக்கு வந்தபோது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அந்த அமைப்பின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் கொல்லப்பட்டார்கள்.இந்த பின்னணியில் பத்மனாதன் தொடர்ந்தும் அரசின் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா என்று கேட்டபோது, இன்றைய நிலையில் அவர் எந்தவித காவலிலும் இல்லை என்றார் ஹுலுகல்ல.
அதேசமயம், இண்டர்போல் எனப்படும் சர்வதேச புலனாய்வுப் போலிஸ் அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் பத்மநாதன் பெயர் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத குற்றங்கள், மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்களை கொண்டு செய்த குற்றச்செயல்கள் தொடர்பில் இந்தியாவினால் அவர் தேடப்பட்டுவருவதாக இண்டர்போல் அமைப்பு கூறுகிறது.
அரசின் இன்றைய அறிவிப்பை பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டுப்போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபோது வெளிநாட்டில் இருந்த பத்மநாதன் ஒரு தேடப்படும் குற்றவாளி என்று கூறுயிருக்கிறார் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ஜெயலத் ஜெயவர்த்தன.
கேபியின் மர்மப்பின்னணி
பிரபாகரனின் இறப்புக்குப் பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டார். ஆனால் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அவர் மர்மமான முறையில் இலங்கைக்கு திரும்பினார்.
இலங்கையின் புலனாய்வு அமைப்பின் தலையீட்டின் பேரில், அவர் மலேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டதாகவும், சட்டவிரோதமான முறையில் அவர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அப்போது வெளிவந்த செய்திகள் தெரிவித்தன.
அப்போது இலங்கையின் அரச தொலைக்காட்சியில் அவர் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சதிசெய்ததாகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நிதி திரட்டியதாகவும் கூறப்பட்டது.விடுதலைப்புலிகள் அமைப்புக்கான ஆயுத கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளுக்கு அவர் தலைமை தாங்கிச் செயற்பட்டார்.
கேபி தற்போது எங்கிருக்கிறார்?
இதுநாள் வரை அவர் தடுப்புக்காவலில் இருப்பதாகவே அரச தரப்பில் கூறப்பட்டு வந்தது. அதேசமயம் அவர் இலங்கையின் வடபிராந்தியத்தில் செயற்படும் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததோடு, அதற்காக அவர் அடிக்கடி வடக்குப்பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டும் வந்தார்.
தற்போது பத்மநாதன் எங்கிருக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. ஆனால் அவர் விடுதலைப்புலிகளின் தலைமையகமாக செயற்பட்ட கிளிநொச்சியில் இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது இலங்கை அரசுக்கு வெற்றி என்கிறார் ஹுலுகல்ல. ஒரு காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழர்களுக்காகவும் இருந்தவர், இன்று இலங்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சிகாக உழைப்பதாக தெரிவித்த ஹுலுகல்ல, அதை செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் அதிகார மட்டத்தில் மிகவும் சிறிய பதவிகளை வகித்த பலர் இன்னமும் வழக்குகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலில், அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் சுதந்திரமாக நடமாட முடிந்தது எப்படி என்று பிபிசி சார்பில் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, பத்மநாதன் மீது எந்தவிதமான சட்ட ரீதியான புகாரும் இல்லாததால் அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று தெரிவித்தார்.
நன்றி தேனீ





 மாத்தறைக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மூவரைக் காணவில்லை; இருவர் மீட்பு ஒருவரை பிடித்துச் சென்றனர்

உதயகார்த்திக்

மாத்தறை குடாவெல கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக படகொன்றில் சென்ற ஆறு மீனர்கள்  இனம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் குறித்த படகில் பயணித்த மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இப்படகில் பயணித்த ஏனைய இரண்டு மீனவர்கள் நடுக்கடலில் தூக்கி எறியப்பட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கடந்த திங்கட்கிழமை இரவு காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறை பகுதியிலிருந்து மீன்பிடிப்பதற்காக 6 மீனவர்கள் இழுவைப் படகில் நடுக்கடலுக்குச் சென்றுள்ளனர். மறுநாள் 15 ஆம் திகதி இந்தப் படகு தங்காலையை அண்மித்து ஆழ்கடல் பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருக்கையில் பிறிதொரு படகில் வந்த 10 பேர், 6 மீனவர்கள் மீதும் தாக்குதலொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதலின் போது இந்தப் படகிலிருந்த மூவர் நடுக்கடலில் தூக்கி வீசப்பட்டதுடன் இருவர் அவர்களின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் பின்னர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
15 ஆம் திகதி காப்பாற்றப்பட்ட இருவரும் காலி துறைமுகத்தில் வைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒருவரை அவர்கள் தங்களுடன் கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடலில் வீசப்பட்ட மூன்று மீனவர்கள் மற்றும் பிடித்துச் செல்லப்பட்டவர் தொடர்பிலும் தாக்குதல் தொடர்பாகவும் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர்கள் கடற்கொள்ளையர்களாயிருக்கலாமெனக் கூறப்படுகின்ற போதிலும் அது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.   நன்றி தினக்குரல் 

No comments: