விஜயரகுநாதத் தொண்டைமான் கடிதம்

.
ராஜகிரி கஸ்ஸாலி

25.10.1801ஆம் நாளன்று புதுக்கோட்டை மன்னன் விஜயரகுநாதத் தொண்டைமான் கம்பெனியின் சென்னை நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம்..

திப்பு சுல்தான் மற்றும் மருதுவின் வீரமும், நாட்டுப்பற்றும், தியாகமும் தொண்டைமானுக்கு விளங்காததில் வியப்பில்லை. வீரத்தைப் போலவே வரலாறு நெடுகிலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் துரோகம் எப்போதும் தன்னை உயர்வாகவே கருதிக் கொள்கிறது. கருங்காலித்தனம், காரியவாதம், சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம் ஆகியவற்றையே புத்திசாலித்தனம் என்று கருதி தன்னை மெச்சிக்கொள்ளும் துரோகம், தான் பிழைத்திருப்பதையே புகழுக்குரியது என்பதற்கான ஆதாரமாய்க் காட்டுகிறது. ஆயினும் வரலாறு எதிர்காலத்தில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது.

ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக எழுந்த ஹைதர் அலி தனக்கு உதவுமாறு தொண்டை மானைக் கேட்கிறார். அவன் துரோகிக்கே உரிய ராஜ விசுவாசத்துடன் மறுக்கிறான். சினம் கொண்ட ஹைதர் அலி தஞ்சாவூரைக் கைப்பற்றிய பிறகு புதுக்கோட்டையின் மீதும் படையெடுக்கிறார். அப்போதும் ஆங்கிலேய விசுவாசத்தில் தொண்டைமான் உறுதியாக இருக்கிறான். நாயினும் மேலான இந்த நன்றிப் பெருக்கைக் கண்டு வெள்ளையர்களே சிலிர்த்திருக்கக் கூடும். இச்சமயத்தில்தான் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க' விஜய ரகுநாதத் தொண்டைமான் 1789ல் பட்டத்திற்கு வருகிறான். திப்பு கொலை செய்யப்பட்ட நான்காவது மைசூர் போரில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் படையனுப்பி உதவவும் செய்கிறான்.



ஹைதர் அலி, திப்பு சுல்தானை வெல்வதற்கு பூனாவை ஆண்டுவந்த மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு கம்பெனிக்குத் தேவைப்பட்டதுதான் வெள்ளையர்களின் இந்த நியாய உணர்ச்சிக்குக் காரணம். இதனால் கைதி துளஜாஜி மீண்டும் மன்னனானான். கம்பெனிக்கு ஆண்டு தோறும் 12 லட்சம் ரூபாய் பாதுகாப்புக் கட்டணம் தருவதாகவும், தேவைப்படும் போது கோட்டை கொத்தளங்களைக் கம்பெனிக்கு அளிப்பதாகவும் ஒப்புக்கொண்டான். இப்படி கம்பெனி போட்ட பிச்சையில் உயிர் பிழைத்தது தஞ்சை மராத்திய வம்சம்.

வேலூர்க் கோட்டையில் 1800 சிப்பாய்களும் 400 வெள்ளையர்களும் இருந்தனர். வேலூரில் இருந்த 23ஆவது ரெஜிமண்ட்டின் 2ஆவது பட்டாலியன் முழுவதிலும், முதல் பட்டாலியனின் 6 கம்பெனிகளிலும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து 1801ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட வீரர்கள் நிறைய இருந்தனர். மற்ற பிரிவுகளில், தமது மன்னனின் தியாகத்தை இன்னமும் மறக்க இயலாத திப்புவின் இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களும் விரவியிருந்தனர். திப்புவின் ஆறு மகன்களையும், எட்டு மகள்களையும் நூற்றுக்கணக்கான அவரது உறவினர்களையும் வேலூர்க் கோட்டையின் அரண்மனைகளில் சிறை வைத்திருந்தது கம்பெனி அரசு. சிறைப்பட்டிருந்த போதிலும் அரண்மனை வாழ்வு அவர்களைச் சுகபோகிகளாகவும், மந்தபுத்தி உடையவர்களாகவும் மாற்றி விடும் என்று எதிர்பார்த்தார்கள் வெள்ளையர்கள்.

ஆனால், திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் சிறையிலிருந்தபடியே சிப்பாய்களின் ஆங்கிலேய எதிர்ப்புணர்ச்சியை அரசியல் ரீதியாகப் பட்டை தீட்டிக்கொண்டிருந்தனர். சிறை வைக்கப்பட்ட நாளிலிருந்தே தூந்தாஜி வாக்குடனும், மைசூரில் கிருஷ்ணப்பா நாயக் தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பாளையக்காரர்களுடனும் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களது போராட்டத்தை ஊக்கப்படுத்தி வந்தார் ஃபத்தே ஹைதர்.

இதுபோக மைசூர்ப் பகுதியில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய 3000 மக்கள் வேலூர்க் கோட்டையின் சுற்றுவட்டாரத்தில் குடியேறியிருந்தார்கள். திப்புவின் மைசூரைச் சேர்ந்த ஃபக்கீர்கள் எனப்படும் ஏழை இசுலாமியச் சாமியார்கள் வேலூர் வட்டாரங்களில் வெள்ளையர்களை எதிர்த்து "மீண்டும் திப்புவின் அரசை நிறுவுவோம்' என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும், பாடியும், பொம்மலாட்டம் நடத்தியும் வந்தனர். வேலூர்க் கோட்டை கிளர்ச்சியின் கொதிகலனாக மாறிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் ஆங்கிலேயத் தளபதிகள் கிராடோக், அக்னியூ முதலியோர் ‘தலைப்பாகை, மீசை' குறித்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றனர். இவை தம்மை ஐரோப்பிய அடிமைகளாக்கும் சதித்திட்டம் என சிப்பாய்கள் குமுறுகின்றனர்.

வேலூரிலும், வாலாஜாவிலும் இருந்த சிப்பாய்கள் வெள்ளையர்கள் அறிமுகப்படுத்திய தலைப்பாகைகளை அணிய மறுத்துக் கலகம் செய்கின்றனர். இதைத் தூண்டிவிட்ட சுபேதார் வேங்கடநாயர் (ஏற்கெனவே திப்புவிடம் பணிபுரிந்தவர்) கைது செய்யப்படுகிறார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டு ஹவில்தார்களுக்கு 900 கசையடிகள் தரப்படுகின்றன. ஒரு தலைப்பாகை பற்றிய பிரச்சினைக்கு வெள்ளையர்கள் அளித்த இந்தக் கொடூர தண்டனைகள் சிப்பாய்களின் தன்மான உணர்ச்சியை மேலும் தூண்டி விடுகின்றன.

அந்தத் தன்மான உணர்ச்சி அரசியல் போராட்டமாக மாறுகிறது. ‘இனி, மீசையும் தலைப்பாகையும் பிரச்சினையல்ல, கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டுவதுதான் பிரச்சினை' என்று மாறுகிறது சிப்பாய்களின் போராட்டம். "வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றி எட்டு நாட்கள் வைத்திருந்தால் போதும், மீண்டும் திப்புவின் ஆட்சியை நிலைநாட்டலாம்'' என்று சிப்பாய்களும், திப்புவின் வாரிசுகளும் முடிவெடுக்கின்றனர். அதன் பின் சிப்பாய்களின் இரகசியக் கூட்டங்கள் நடக்கின்றன. சிப்பாய்கள் வாள் மற்றும் குர்ஆன் மீது சத்தியம் எடுத்துக்கொண்டு சபதத்தை நிறைவேற்றுவதாய் உறுதி எடுக்கின்றனர். இந்தச் செய்தி வேலூரில் மட்டுமல்ல, வாலாஜா, ஆற்காடு, சென்னை, ஜதராபாத் முதலிய இராணுவ முகாம்களில் இருக்கும் வீரர்களுக்கும் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஏனைய முகாம்களில் இருக்கும் வீரர்கள் வேலூர்க்கோட்டையின் வெற்றியைத் தெரிந்து கொண்டதும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது.

சுபேதார் ஷேக் ஆதமும், ஜமேதார் ஷேக் ஹுசைனும் சிப்பாய்களின் தலைவர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 1806 ஜூன் 17 அன்று எழுச்சியைத் தொடங்க வேண்டும் என நாள் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தத் திட்டம் முஸ்தபா எனும் துரோகிச் சிப்பாயின் மூலம் வெள்ளையர்களுக்குக் கசிந்து விடுகிறது. வெள்ளையர்கள் அதை நம்பவில்லை. என்றாலும் பாதுகாப்பு கருதி கிளர்ச்சிச் தலைவர்கள் திட்டத்தை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறார்கள். இந்தத் தள்ளி வைப்பு ஏனைய முகாம்களிலிருந்த வீரர்களுக்குத் தெரியாததால் ஜூன் 17 அன்று திட்டமிட்டபடி எழுச்சி தொடங்காதது அவர்களிடம் விரக்தி யையும் ஏற்படுத்தியிருந்தது.

இருப்பினும், ஜூலை 10 ஆம் தேதி கிளர்ச்சி வெடித்தது. 9ஆம் தேதி இரவு அமைதியாக இருந்ததால் படை முகாமைச் சுற்றிப்பார்க்கும் பொறுப்பை வெள்ளைத் தளபதிகள் இந்திய அதிகாரிகளிடமே ஒப்படைத்தனர். வேலூர்க் கிளர்ச்சியில் சிப்பாய்கள் மட்டுமல்ல, கம்பெனிப் படையின் இந்திய அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதக் கிடங்கைக் காவல் காத்துநின்ற வெள்ளைக்கார வீரர்களைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றி அதிகாலை 2 மணிக்கு கிளர்ச்சியைத் தொடங்குகின்றனர் சிப்பாய்கள். பின்னர் வெள்ளையர்களின் குடியிருப்புக்களை நோக்கிச் சுடத் தொடங்குகின்றனர். அத்தகைய சூழ்நிலையிலும் பெண்கள், குழந்தைகளின் மீது சிப்பாய்களின் விரல் கூடப்படவில்லை. 14 அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட வெள்ளையர்கள் இந்தியச் சிப்பாய்களால் கொல்லப்பட்டனர். அவர்களில் வேலூர்க் கோட்டையின் ஆணை அதிகாரி கர்னல் பான்கோர்ட்டும், லெப்டினண்ட் கர்னல் கெராஸ்ஸூம் முக்கியமானவர்கள். மீதமிருந்த வெள்ளையர்களில் பலர் படுகாயமடைந்தனர். சிலர் கோட்டையின் தடுப்புச் சுவரருகே பதுங்கிக் கொண்டனர்.

கிளர்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியவுடனே, வெள்ளையர்களின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்படுகிறது. வீரர்கள் திப்புவின் மகனை "வாருங்கள் நவாப்! வாருங்கள், அச்சமின்றி அரியணை ஏறுங்கள்'' என்று அறைகூவினர். ஆனாலும் இந்தச் சுதந்திரப் பிரகடனம் நெடுநேரம் நீடிக்கவில்லை. அதிகாலை ஆறு மணிக்கே வேலூர் கிளர்ச்சி குறித்த செய்தி அருகில் 14 மைல் தொலைவில் இருந்த ஆற்காட்டை எட்டிவிட்டது. அங்கு ஆணை அதிகாரியாக இருந்த கர்னல் கில்லெஸ்பி பெரும் படையுடன் காலை எட்டு மணிக்கு வேலூர்க் கோட்டைக்குள் நுழைந்துவிட்டான். எதிர்த்தாக்குதல் இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்பதைச் சிப்பாய்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அணிதிரண்டு தயாராவதற்குள் கில்லெஸ்பியின் படைகள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட ஆரம்பித்து விட்டன.

வேலூர்க் கோட்டையைப் பிடித்து எட்டு நாட்கள் வைத்திருக்கத் திட்டமிட்டிருந்த சிப்பாய்கள், அதனை எட்டு மணிநேரம் கைப்பற்றி வைத்திருப்பதற்கே தங்கள் இன்னுயிரைத் தரவேண்டியிருந்தது. சில சிப்பாய்கள் தங்கள் முதன்மை நோக்கத்தை மறந்து சூறையாடலில் ஈடுபட்ட போதும், சில சிப்பாய்கள் கோட்டையை விட்டு வெளியேறிய போதும், பல சிப்பாய்கள் சுதந்திர ஆவேசத்துடன் சாகும் வரையிலும் போரிட்டனர். அவர்களைச் சுட்டுக்கொன்றும், தூக்கிலேற்றியும், பீரங்கி வாயில் வைத்துச் சிதறடித்தும் மகிழ்ந்தன வெள்ளைப் படைகள்.

Nantri Keetru






No comments: