பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!- சுவனப்பிரியன்


Bookmark and Share

பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!
பர்மியர்களோடு நான் தபூக்கில் இருந்த போது நிறைய பழகி இருக்கிறேன். சொந்த தொழில் செய்வதில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். மியான்மரில் இவர்களுக்கு கொடுக்கப்படும் கொடுமைகளை கருத்தில் கொண்டு அகதிகள் அந்தஸ்தில் பல லட்சம் பேர்களை சவுதி அரசு பராமரித்து வருகிறது. அவர்களுக்கு அகதிகள் என்ற தனி அட்டை ஒன்றை கொடுத்து பர்மாவில் பிரச்னைகள் முடியும் வரை சவுதியில் குடும்பத்தோடு தங்க அனுமதிக்கப்பட்டள்ளனர். அந்த வகையில் பல பர்மிய நண்பர்களை பெற்றுள்ளேன்.


சுமார் 15 இலட்சம் முஸ்லி்ம்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இதில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பர்மியர்கள். மீதமானவர்கள் வங்காளிகள். இந்தியாவில் இருந்து சென்றவர்கள். தமக்கென தனியான மொழி கலாச்சாரங்களை கொண்டவர்கள். அராபிய மன்னன் அரகனினால் பலாத்காரமாக நாடுகடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள் வணிக கலம் நடுக்கடலில் விபத்துக்கு உள்ளானதனால் பர்மாவின் பக்கம் வந்து சேர்ந்தனர். பர்மிய பெண்களை மணந்து அங்கேயே கீழைத்தேய வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இது நடந்தது 9ம் நுற்றாண்டுகளில். மொகாலாய படைகள் தங்கள் எல்லைகளை விரித்த போது இவர்கள் அவர்களிற்கான வர்த்தக முகவர்களாக செயற்பட்டனர். இதன் பலனாக அதிகாரம் மிக்கவர்களாகவும், பணபலமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். இது தான் இன்றைய தினத்தில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. பர்மாவை காட்டி கொடுத்தவர்கள். பர்மாவின் செல்வங்களை அரேபியாவிற்கு சுரண்டி விற்றவர்கள், பர்மிய பெண்களை கற்பழித்தவர்கள் பலாத்காரமாக மணந்தவர்கள் போன்ற அரசியல் குற்றச்சாட்டுகளே இன்றைய இனவாத சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.

1950 களில் ரோகீங்கியா பிரதேசம் தனி பிரதேசமாக இனங்காணப்பட்டது. இதில் இந்திய வங்காள இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து காணப்பட்டனர். அராஜகமான தங்கள் இராணுவ அரசியல் இருப்பினை பேணிக்கொள்ள பர்மிய ஜெனரல்கள் ரோகீங்கிய முஸ்லிம்களிற்கு எதிரான இனவாத அரசியலை அதன் செயல்நெறிகளில் சுயமாக செயற்பட அனுமதியளித்தனர். பிக்குகள் சொல்லும் திசையில் சுடுமாறு போலிஸாரையும் பிக்குகள் காட்டும் பக்கத்தில் குண்டெறியுமாறு இராணுவத்தையும் பணித்தார்கள் இந்த பாசிஷ இராணுவ ஆட்சியாளர்கள். 

பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.

(இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது? என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?)

கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட முடியாது. மதரஸா நடத்த முடியாது. 

பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.

இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும்.

மியன்மாரின் இரசாயன கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.

கடல்களில் மீன் பிடிக்க முடியாது. 

1 ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது.

அவசர பந்தோபஸ்து சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் தடுத்து வைக்க முடியும்.

பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப கட்டுப்ப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.

கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம்.

(இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)

இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார். 

பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள். 

(சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)

இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன. இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள் மௌனிக்கின்றன.



16.March.1997 - மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர். 100 பிக்குகள் கைது செய்ய்ப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள். மற்றுமொரு காத்தான்குடி)

12.February.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது. நகரம். கொலை. கொள்ளை. சித்திரவதை. கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர்.

(இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே!) 

15.May.2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது. முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில் செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது” என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக பர்மாவில் உருப்பெருகிறது. 

(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)

பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர். 

2012 June. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன. 


கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. எகிப்தின் முர்ஸி பற்றி பெருமிதப்படும் இஹ்வான்கள் ஒரு அறிக்கையுடன் மியன்மாரை மறந்து விட்டனரா? கிலாபா கனவுகானும் ஹிஸ்பு தஹ்ரீர் தோழர்கள் ரத்தத்தினால் நிரம்பும் மியன்மார் பற்றி சிந்திக்க மாட்டார்களா. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?

மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சில வாரங்கள் முன்பு லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூசீ ‘’ கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பர்மாவின் நிரந்தர பிரஜைகள் அல்ல’’ என்ற ரீதியில் தனது கருத்தை தெரிவித்தார். மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை,மாறாக நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.மிகவும் நுணுக்கமாக கையாளா வேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார். இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை.

தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்

எனவே தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர்.

"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென்.


வரும் ரமலானில் இந்த மக்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். சவுதியில் ஜூம்ஆ பிரசங்கத்தில் சிரிய முஸ்லிம்களுக்காகவும் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்திக்கப்படுகிறது. உங்களின் பிரார்த்தனையில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த மக்களுக்கு உங்களால் ஆன சிறு உதவிகளையும் செய்ய மறக்காதீர்கள். 

பர்மிய முஸ்லிம்களும், ஈழத்து தமிழர்களும், சிரிய முஸ்லிம்களும் தங்களின் சொந்த நாட்டு பிரச்னைகளை சுமுகமாக முடித்து எல்லா வளமும் பெற்று சுகமாக வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இறைஞ்சி இந்த பதிவை முடிக்கிறேன்.

டிஸ்கி: இப்படி ஒரு பதிவை பதியச் சொல்லி வேண்டுகோள் விடுத்த குவைத்தில் உள்ள முபாரக்குக்கும், உடன் லிங்குகளை அனுப்பித் தந்த வாஞ்சூர் அண்ணனுக்கும், கைபர் தளத்துக்கும், விக்கி பீடியாவுக்கும் நன்றிகள்

Nantri globaltamilnews

No comments: