வீழ விடுவமோ நாம்?

நீர் கண்டு பல நாட்களாகிப்போன
நிலம் போல நின்றார்கள் சோதரர்கள்.
யார் கண்டு அவர் புண்ணை ஆற்ற வந்தார்?
எதைக்கொண்டு அவர் நெஞ்சச்சூடணைப்பீர்?
ஊர் கண்டு ஒதுங்கித்தான் போனபோதும்
உலகத்தின் ஒளி இல்லாத் துயரின் போதும்
வேர்செத்த மரம்போல வீழும் அவர்கள்
விம்மியழும் உயிரோசை கேட்குதம்மா.

நோயுற்ற உடல் அழுகி சீழும் வீழ
நுரைதள்ளித் தெருவோரம் கிடந்து வாழும்
தேய்வுற்ற சோதரர்கள் கண்ணீர் எல்லாம்
தேகத்தைக் கண்டல்ல! ஒதுங்கிச்செல்லும்
ஓய்வற்ற மானிடர்காள்! நீங்கள் தள்ளி
ஒதுக்கிட்ட நிலை தந்த கண்ணீரன்றோ!
சாய்வுற்றுக்கிடக்கின்ற அவர்கள்பாடல்
சாவுக்கும் வாழ்வுக்கும் நடுவிலம்மா!விடுதலையும் சுய உணர்வும் வேண்டும் என்ற
வேட்கையினால் கோஷமிடும் எனது மக்காள்!
தொடுதலுக்கும் அஞ்சி மிகத் தூரத்தள்ளி
தீண்டாமை வட்டத்தைக் கீறிப் போனீர்.
முடிவதில்லை அவர்களாலே வட்டம் தாண்ட!
முன்பு நின்று கதறுகின்ற குரலைக்கேட்பீர்!
விடுதலையும் சுய உணர்வும் யார்க்கு வேண்டும்?
விம்மியழும் குரல் கேட்டு அழுவோர்க்கம்மா!


உலகத்தின் துன்பமெல்லாம் கூடினாலும்
உங்கள் நிராகரிப்பளித்த துயரைத் தாண்டா.
உலகத்தின் இருப்பிற்கு அப்பால் உள்ள
இருண்ட பெரு வெளிக்குள் அவர் தள்ளப்பட்டார்.
மலரொன்றைப் பிய்த்தெறிந்து பூச்சிதின்ன
மகிழ்ததனைப் பார்க்குமொரு வாழ்வும் வாழ்வா?
பலர்வாழ சிலர் சாகச் சொல்லும் உங்கள்
பசிமிக்க பேய்க்கூட்டம் மாறாதம்மா!

கனவுக்குள் இல்லையிந்த வாழ்க்கை! சுற்றிக்
காணுவீர் துன்பங்களே எஞ்சி நிற்கும்!
கனவுக்குள் நெய்யப்பட்ட ஆடையில்லை!
காணுவீர் கந்தல்களே விஞ்சி நிற்கும்!
கனவுக்குள் கனவொன்றாய் மாறிப்போனால்
காண்பதற்கு நீர் இருக்க மாட்டீர் மக்காள்!
கனவுக்குளிருக்காமல் இறங்கி வந்தால்
கண்ணீரைக் கண்டழுது மனிதராவீர்!

இழிவு, பழி, புறக்கணிப்பை சோதரர்க்கு
எழுதிவைத்தார் தலைவிதியாய் முன்னவர்கள்.
இழிந்தவர்கள் யார் என்றே கேட்கும் காலம்
இப்போது வந்ததடா! கேட்பாய் தம்பி!
பொலிவுபெற்ற வாழ்க்கையினைக் கனவுகாணப்
புலம்புவோர்க்கு சோதரரில் அன்பு இல்லை.
நலிவு பெற்று நடுநடுங்கிக் விட்ட கண்ணீர்
நாம் துடைத்து அணைக்காமல் நிற்பதில்லை.

புறக்கணிப்பைத் தவிர பெருங் கொடுமையில்லை
புறக்கணிக்க அவர்களென்ன பாவஞ்செய்தார்?
இரக்கமிக்க இதயமொன்றை எடுத்துப் பூட்டி
இது பற்றிச் சிந்திக்க எழுந்து வாரும்.
புறக்கணிக்கும் கொடுமையாலே உரிமை போகும்
புதைகுழிக்குள் விழுந்தவர்க்கு கைகொடுக்க
இரக்கமிக்க மனிதர்களாய் எழுந்து வாரீர்.
இன்று மாற்றம் இல்லாவிட்டால் நாளை இல்லை.

- ஆதித்தன்

1 comment:

மணிமேகலா said...

/விடுதலையும் சுய உணர்வும் யார்க்கு வேண்டும்?
விம்மியழும் குரல் கேட்டு அழுவோர்க்கம்மா!/ -

அருமையான கவிதை!பொருளும் செழுந்தமிழும் பொருந்திப் போகும் அழகில் விளைகிறது இலக்கியம்!

- கூடவே தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் ‘ஆத்ம ஜோதியை’யும் நினைவுறுத்திச் செல்கிறது.

பாராட்டுக்கள்!! ஆதித்தனுக்கும் அதனை பிரசுரித்த தமிழ் முரசு அவுஸ்திரேலியாவுக்கும்.