ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் கைது
கொழும்பு, ஜூலை 15: ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 101 தமிழர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை கடற்கரையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 101 தமிழர்களும், 8 சிங்களர்களும் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்கள் அனைவரும் 25 கடல் மைல் தூரத்தில் கைது செய்யப்பட்டனர் என்று இலங்கை படற்படை செய்தித் தொடர்பாளர் கோசாலா வர்ணகுலசூரியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவில் குடியேறத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோன்று இலங்கையின் மேற்கு கடற்கரைப் பகுதியான சிலாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட இருந்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ""கடந்த மே மாதத்திலிருந்து இதுபோன்று தப்பிச் செல்ல முயன்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகனா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு 43 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா ஒப்பந்தம்
கொழும்பு, ஜூலை 14: இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ரூ.1,512 கோடி செலவில் 43 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதிக்கட்டப் போர் கடந்த 2009-ல் நடைபெற்றது. இப்போரினால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்நாட்டு அகதிகளாக மாறினர். அவர்களைத் தங்களின் சொந்தப் பகுதிகளில் மறுகுடியமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்நிலையில், தமிழர்களுக்கு சுமார் ரூ.1,512 கோடி செலவில் 43 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஐ.நா. அமைப்பான ஹேபிடட், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கம், இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை தேசிய வளர்ச்சி ஏஜென்சி ஆகியவையும் இணைந்து கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்டித் தரப்படுவதற்குப் பதிலாக அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படும். இத்திட்ட அமலாக்கத்துக்கான அமைப்புகள் தீவிர பரிசீலனைக்குப் பின்பே தேர்வு செய்யப்பட்டதாக இந்தியத் தூதர் அசோக் காந்தாவும், இலங்கை பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் பாசில் ராஜபட்சவும் தெரிவித்தனர்.
யாழில் சிறுமிகளை இலக்கு வைத்து பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் - பொலிஸ்மா அதிபர்
யாழில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் சிறுமிகள் இலக்குவைக்கப்படுவதாக யாழ். பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக்பெரகரா தெரிவித்தார். யாழ். சிரோஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று (14) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்டபகுதியில் 15 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் தலமைறைவாகியுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியில் 4 வயதுசிறுமி ஒருவர் வீதியில் பயணித்த ஒருவரினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் யாழ்.மாவட்டத்தை விட்டுவேறு மாவட்டத்திற்கு தலைமறைவாகியுள்ளார். இருந்தும் அவரைக் கைது செய்வதற்குந டவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. யாழில் சிறுபிள்ளைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் சம்பவங்களைத் தடுப்பதற்கு பெற்றோர்கள் பிள்ளைகள் மட்டில் விளிப்பாய் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்தோடு பிள்ளைகளிடத்தில் பெற்றோர் கூடிய அக்கறை எடுத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கிழக்கு மாகாணசபை திருகோணமலை மாவட்டத்திற்கு கூட்டமைப்பு இன்று வேட்பு மனு தாக்கல்
கிழக்கு மாகாணசபை திருகோணமலை மாவட்டத்திற்கான தமது வேட்பு மனுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று தாக்கல் செய்துள்ளது.
கிழக்கு மாகாணசபைக்கான வேட்பாளர் தெரிவு, உட்பட பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்திருந்த நிலையில் இன்று திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 9 பேர் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனையவர்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் விபரம் வருமாறு:
இலங்கை தமிழரசுகட்சி சார்பில்
சி.தண்டாயுதபாணி முதன்மை வேட்பாளர் - கல்வி நிபுணத்துவ ஆலோசகர்.
க.கோணேஸ்வரன் - தபால் அதிபர்
இந்திராணி தர்மராஜா - சுதேச மருத்துவர்
எஸ்.அந்தோனிப்பிள்ளை - சமாதான நீதவான்
எம்.எஸ்.பளீல் - புல்மோட்டை
க.நாகேஸ்வரன் - மூதூர்
எஸ்.விஜயகாந்த் - பிரதேச சபைத் தலைவர் வெருகல்
க.வியஜரெட்ணம் - பதிவாளர் தம்பலகாமம்
க.ஜனார்த்தனன் - பல்கலைக்கழக மாணவர் ஒன்றிம்
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சட்சி சார்பில்
வெ.சுரேஷ் - தமிழர் விடுதலைக் கூட்டணி
பு.யுகநாதன் - ஈ.பி.ஆர.எல்.எப்
ந.குமணன் - புளொட்
க.நித்தியானந்தம் - ரெலோ
No comments:
Post a Comment