இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும் – கருணாகரன்

.

ஈழத்தில் கவிதைச் செயற்பாடுகளால் அறியப்பட்டவர் கருணாகரன். ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல்ப்பத்திகள் எழுதி வருகிறார்.
‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார்.
ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அவர் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட அந்த வரலாற்றின் கணிசமான காலத்தில் அதனுடன் பயணித்திருக்கிறார்.
அரசியல், இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியான அவதானிப்பையும் பங்கேற்பையும் கொண்டிருக்கும் கருணாகரனிடம் ஈழத்தின் கடந்த நாற்பது ஆண்டுகால சமூக, அரசியல், இலக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த உரையாடலை மேற்கொண்டிருக்கிறோம்.
கேள்வி: ஈழம் கடந்த பல தசாப்தங்களாக கொந்தளிப்பான சமூக அரசியற் களங்களைக் கொண்டிருக்கிறது. சாதிய முறைமைக்கு எதிரான போராட்டங்கள், இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டம் என நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் காலங்களில் உங்களின் அனுபவங்கள் அல்லது ஈடுபாடுகள் என்னவாக இருந்தன?
கருணாகரன்: தமிழர்களிடத்தில்தான் சாதிய ஒடுக்குமுறை மிகத் தீவிரமாக உள்ளது. அதிலும் யாழ்ப்பாணவாசிகளிடம். ஆகவே இந்தக் கேள்வி வடக்குத் தமிழர்களை – யாழ்ப்பாணத் தமிழர்களை மையப்படுத்துகிறது. எனவே, முதலில் இதைக் குறித்துப் பேசலாம்.
தமிழர்களில் ஒரு தரப்பினர் சாதிய ஒடுக்குமுறைகளையும் இன ஒடுக்குமுறையையும் கூட்டாகச் சந்தித்துள்ளனர். இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழர்கள். அல்லது தலித்துகள். அல்லது யாழ்ப்பாணத்து உயர்சாதியினரால் ஒதுக்கப்பட்ட ‘எளியன் சாதிகள்’ என்போர். அல்லது டானியல் போன்றவர்கள் சொல்லுகிற மாதிரிப் ‘பஞ்சமர்கள்’.



இன்னொரு சாரார் சாதிய ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, பிரதேச ஒதுக்கல் என்பவற்றைக் கூட்டாகச் சந்தித்துள்ளனர்.

ஒருசாராருக்கு இன ஒடுக்குமுறை மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் உயர் குழாத்தினர். ஏனையோருக்கு சாதி ஒடுக்குமுறை அல்லது சாதி ஒதுக்கல் தொடக்கம் இனப் பிரச்சினை வரையில் பல அடுக்குகளில் பிரச்சினை.

கேள்வி: பிற தமிழ்பேசும் தரப்பினர் குறித்து….

கருணாகரன்: பாருங்கள், இந்தக் கேள்வியில் தமிழ்பேசும் தரப்பினராகிய முஸ்லிம்களைப் பற்றிய கவனம் நம்மையறியாமலே விடுபட்டு விட்டது. மேலும் மலையக மக்களுந் தான்.

பொதுப் பார்வையொன்றில் நாம் இப்படித்தான் விடுபடல்களுடன் சிந்திக்கப் பழகிவிட்டோம். இந்தக் குறைபாடு நம்மையறியாமலே நம்மிடம் வந்து விடும் அளவுக்குப் பழக்கப் பட்டுள்ளோம். ஏனெனில் நமது உயர்குழாத்தினரின் மனதில் என்ன இருக்கிறதோ அதுவே அரசியலாகவும் பொது அபிப்பிராயமாகவும் பொது நிலைப்பாடாகவும் கொள்ளப்படுகிறது.

நீங்கள் சொல்கிறபடி தீவிரமான போராட்டங்களை நடத்தியவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழர்களாகவே பெரும்பாலும் உள்ளனர். அதாவது, தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று வகைப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோரே. இவர்கள் உயர்சாதித் தமிழர்களுடைய அநீதிகளுக்கெதிராகவும் போராட வேண்டியிருந்தது. சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடவேண்டியிருந்தது. சமநேரத்தில் இரட்டைக் குழல் பீரங்கியின் தாக்குதல்களுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இவர்கள் இருந்தனர்; இன்னும் அப்படித்தான் இருக்கின்றனர். ஆனால், இந்தப் போராட்டங்களில் இடதுசாரிகளும் மு.தளையசிங்கம் போன்ற அணியினரும் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள்.

நான் கடந்த எண்பதுகளின் இளைஞன். அந்த நாட்களில் இடதுசாரிகளின் தொடர்பேற்பட்டது. அவர்கள் புதிய வெளிகளைத் திறந்து காட்டினர். அவர்களுடனான உரையாடல்கள், உறவுகள், தொடர்புகளின் மூலம் பல விசயங்கள் தெரியவந்தன. பாடப் புத்தகங்களிலும் பள்ளிக் கூடங்களிலும் அறிந்திராத விசயங்கள். அங்கெல்லாம் மறைக்கப்பட்ட அல்லது பாராமுகமாக்கப்பட்ட விசயங்கள். எங்கள் வீட்டுச் சூழலில், உறவுச் சூழலில் அறிந்து கொள்ளமுடியாதிருந்த விசயங்கள். சாதிக் கொடுமையின் தீவிரத்தை, வர்க்க நிலையில் சமூக அடுக்குகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையை, மனிதர்களுக்கிடையிலான மதிப்புகள் அசமத்துவமாக்கப்பட்டுள்ள கொடுமையை அவர்களின் மூலமாக, அந்த நாட்களில் புரிந்தேன்.

தொடர்ந்து, இந்த விசயத்துடன் தொடர்பானவர்களோடும், பாதிக்கப்பட்டவர்களோடும் பழகவும் சேர்ந்து வாழவும் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இதனால், அவர்களுடைய உண்மை நிலையை, வலியை, துக்கங்களை, வேதனையை, கோபங்களை, அவர்களின் எண்ணங்களை, நிலைப்பாடுகளை, அபிலாஷைகளை, எதிர்பார்ப்புகளை, நியாயங்களையெல்லாம் புரிந்து கொள்ள முடிந்தது.


இது அவர்களுடன் மேலும் நெருக்கத்தை உண்டாகியது. இப்படியே அவர்களில் ஒருவனாகி விட்டேன்.


இதேவேளை இந்தக் காலப்பகுதியில் இன ஒடுக்குமுறையும் உச்சக் கட்டமடைந்தது. அதனால் இனஒடுக்குமுறைக்கெதிரான கவனமும் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டது. இயக்கங்களின் செயற்பாடுகள் பகிரங்கத் தளத்திற்கு வந்ததன. இந்த நிலையில், 1982 இறுதிப் பகுதியில் இடதுசாரிகளின் தொடர்புகளைக் கொண்டிருந்த ‘ஈழப்புரட்சி அமைப்பு’ என்கிற ஈரோஸ் (Eelam Revilationary Organations- EROS ) அமைப்புடன் இணைந்தேன். இந்த அமைப்பு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும் வர்க்க ஒடுக்கு முறைக்கெதிராகவும் இன ஒடுக்குமுறைக்கெதிராகவும் போராடும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஆகவே, பொதுவாக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பது, எதிர்கொள்வது என்ற நிலைப்பாட்டிற்குப் பொருத்தமாக இந்தத் தேர்வு அமைந்தது.


கேள்வி: ஈழத்தில் நிலவிய சாதிய முறைமைகள், அதற்கெதிரான போராட்டங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

கருணாகரன்: சாதி அமைப்பு என்றாலே அநீதியான ஒரு சமூகநிலை என்றுதான் பொருள். ஆயிரமாயிரம் ஆண்டுகாலத் தொடர்ச்சியுடைய அநீதிக் கட்டமைப்பு. இந்த அநீதியை எந்தக் கூச்சமும் இல்லாமற் தாராளமாகவே நடைமுறைப்படுத்தி வந்தனர் உயர்சாதியினர். அதற்கு அவர்களிடம் இருந்த அதிகாரமும் வளங்களும் வாய்ப்பளித்தன. உயர்சாதியினருக்கு இருந்த நிலம், அதிகாரம், பிற வளங்களின் அளவுக்கு ஒடுக்குமுறையைச் சந்தித்த சாதிப்பிரிவினருக்கு எதுவும் இருக்கவில்லை. இவர்களிற் பெரும்பகுதியினர் குடியிருப்பதற்கே வழியற்றிருந்தனர். அதனாற் பெரும்பாலும் உயர் சாதியினரின் நிலங்களிலேயே தங்கியிருந்தனர். இது அவர்களைப் பொருளாதார ரீதியிலும் வாழ்க்கையின் பிற அம்சங்களிலும் பிற்படுத்தியது; நெருக்கடிக்குள்ளாக்கியது. அவ்வாறே கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் பிற பொதுவசதிகள் எல்லாவற்றிலும் ஆதிக்கச் சாதியினரே அதிகாரத்தையும் பிடியையும் வைத்திருந்தனர். இவற்றில் பிற்படுத்தப்பட்ட சாதிப்பிரிவினர் நெருக்கடிகளைச் சந்தித்தனர்.

மொழியாலும் வாழிடத்தாலும் இனத்தாலும் மதத்தாலும் ஒன்றாக இருந்தாலும் தொழிலாலும் வாழ்க்கை நிலையாலும் வேறுபட்டவர்களைத் தள்ளி வைக்கும் கொடுமை, சாதியின் பேராற் தொடரப்பட்டது. இந்தியாவில் பிராமணிய ஆதிக்கம் இருந்ததென்றால், அந்த இடத்தில் இங்கே வெள்ளாள ஆதிக்கம் இருந்தது. இங்கே பிராமணர்களும் வெள்ளாளர்களின் ஒருவகைக் குடிமைகளே. இதில் வேடிக்கையான – ஆனால், கசப்பான இன்னொரு விசயத்தையும் நாம் கவனிக்க வேணும். இந்தச் சாதி மனப்பாங்கு பிற சாதிப்பிரிவினரிடத்திலும் உள்ளது. அவர்களும் சாதியைப் பேணுகிறார்கள். சலவைத் தொழிலைச் செய்யும் சமூகத்தினர் சீவல் தொழிலைச் செய்வோரை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. சீவற் தொழிலைச் செய்வோர் பறையடிப்போரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட உயர்சாதியினரின் உத்தியே.

ஐநூறு ஆண்டுகாலமாக ஐரோப்பியர்கள் ஆட்சிசெய்திருந்த போதும், ஈழத்தில் தமிழர்களிடம் நிலவிய சாதியத்தை அவர்களால் மாற்றியமைத்து விடமுடியவில்லை. அதேவேளை, சாதிய முரண்பாடுகளை அவர்கள் தமக்குச் சாதகமாகக் பயன்படுத்திக் கொண்டனர். இதற்காக அவர்கள் ஏற்படுத்திய உபாயங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் கல்விகற்கக் கூடியதொரு வாய்ப்புக் கிட்டியது. இது பின்னர் பிற்படுத்தப்பட்டிருந்த சாதிப் பிரிவினரிடத்தில் சில முன்னேற்றகரமான விசயங்களுக்கான அடிப்படைகளை வழங்கியது.

முன்னரே சொன்னதைப்போல, சாதியப் பிரச்சினை என்றால், அது பெரும்பாலும் வடபகுதித் தமிழர்களைப் பற்றிப் பேசுவதாகவே இருக்கும். அதாவது, வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டைப் பற்றிப் பேசுவதாகவே இருக்கும்.


‘யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்தார். இது தொடர்பாக அவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ‘நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்தச் சமூகத்தை மையப்படுத்தி அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள்’ என்று கேட்டேன். அப்போதுதான் அவருக்கு தான் குறிப்பிடுவது எந்தச் சமூகத்தைப் பற்றியது என்ற கேள்வி எழுந்தது.


அவர் ஆழமாகச் சிந்தித்து விட்டுச்சொன்னார், ‘எப்போதும் மேலாதிக்கம் பெற்றிருக்கும் தரப்புகள்தான் வரலாறாகப் பதியப் பெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களே ஆதிக்கச் சக்திகள். ஆகவே, தவிர்க்க முடியாமல், அவர்களுடைய வாழ்வும் வரலாறுமே பதியப் பெறுகிறது…’ என்றார்.


‘இதை நாம் வரலாற்றின் அதிகாரம் அல்லது அதிகாரத்தின் வரலாறு எனலாமா’ என்று கேட்டேன்.


அப்படித்தான் என்றார் அவர்.


சாதிய உளவியல் மிகப் பயங்கரமானது.


கேள்வி: சாதிய உளவியல் பற்றி சொல்லுங்கள்?


கருணாகரன்: தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சாதிய அமைப்பும் அதன்பேராலான ஒடுக்குமுறைகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உளவியலில் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஒன்றில் இவர்கள், ஒடுக்குமுறைக்கு எதிராக ஆவேசமாகக் கொதிப்பார்கள். அல்லது, வாயே பேசாமல் அடங்கிப் போவர்.


இவர்கள் ஒடுக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழும்போது அதை மேல்நிலைச் சமூகத்தினர் நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் மூலமும் அவர்களுக்குக் கிடைக்கின்ற அதிகாரம் மற்றும் வசதிகளின் மூலமாகவும் கட்டுப்படுத்துகின்றனர். அதேவேளை இந்த எதிர்ப்பை, நியாயத்தின் பாற்பட்ட போராட்டத்தை, பண்பாட்டு ரீதியாக உருவாக்கப்பட்டிருக்கிற கருத்துருவாக்கங்களையும் இதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால், அடக்கப்படுதலும் அடங்கிப் போதலும் நிகழ்கிறது. அடக்குதலையும் விடத் துயரமானது அடங்கிப் போதல்.


இந்த அடங்கிப் போதலில் இருக்கின்ற துயரம் சாதாரணமானதல்ல. நியாயமற்ற முறையில் அடங்கிப் போதல், அவமானப்படுதல், குறுகி நிற்றல்… என்ற மாதிரி ஒரு உளவியல் நெருக்கடி இதனால் உருவாகிறது.


ஆனால் இந்த இடத்தில் உயர்சாதி என்று சொல்வோரின் உளவியல் வேறு. அவர்கள் தங்களின் சாதியைச் சொல்வதிலேயே நிமிர்கிறார்கள். இறுமாப்படைகிறார்கள். அதிகாரத்தைச் செலுத்துவதிற் பூரிப்படைகின்றனர். இவர்களோ தங்களின் சாதி அடையாளத்தாலே குறுகிப் போவர்.


ஆனால், அநீதியை இழைப்பவர்களோ அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல், அதையிட்ட எத்தகைய குற்றவுணர்ச்சியுமில்லாமல் தாங்கள் பெருமைக்குரியவர்கள் என்று நிமிர்கிறார்கள். படித்த கல்விகூட இந்தத் தரப்பினருக்கு எத்தகைய குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.


அநீதியை இழைக்காதவர்கள், அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள் நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு சாதிய முறைமைகளால் குனிந்து நிற்கவும் குறையுணர்ச்சிக்கு ஆட்படவும் தாழ்வு மனப்பாங்குக்குட் படவும் வேண்டிய ஒரு சமூகநிலைமையை மேல்சாதியினர் ஆக்கிவைத்திருக்கின்றனர்.

எனக்கு இந்த இடத்தில் ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருகிறது. ‘நெரிதல்’ என்ற தொகுதியில் மணிவண்ணன் என்பவர் எழுதியதாக நினைவு. பறையசேரியைச் சேர்ந்த ஒருவன் தன்னுடைய வீடிருக்கும் இடத்தை மற்றவர்களுக்குச் சொல்வதற்கு வெட்கப்படும் – கூச்சப்படும் – அதைச் சொல்லாமற் தவிர்க்க முனைகின்ற – மனநிலையைப் பற்றிய கவிதை.


இதுதான் சாதியத்தின் பேரால் நிகழ்த்தப்படும் கொடுமை.


ஆகவே, ஒற்றைப்படைத்தன்மையாக நாம் ஏதோ ஒரு சமூகத்தை மட்டும் மையப்படுத்தி நமது பார்வையைச் செலுத்த முடியாது. அப்படி விளங்கிக் கொள்ளவும் முடியாது. அப்படிச் செய்தால், அது, ஏனைய சமூகங்களின் அடையாளங்களையும் இருப்பையும் நிராகரிப்பதாகவும் அவர்களை வரலாற்றில் இருந்து நீக்குவதாகவுமே அமையும்.


யாழ்ப்பாணக் குடா நாட்டில் 1950, 1960, 1970 களில் நடந்த சாதியத்துக்கெதிரான போராட்டங்கள் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான அடையாள நடவடிக்கைகளாகும். மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசம் தொடக்கம் நிச்சாமம், கைதடி, மிருசுவில், கரவெட்டி – கன்பொல்லை ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்கள் வரையில் ஏராளம் எதிர்ப்பு நடவடிக்கைகள்.


இதைப்பற்றி விவரமாக அறிந்து கொள்வதற்கு டானியல், டொமினிக் ஜீவா, தெணியான், கே.ஆர்.டேவிற், சுபத்திரன் தொடக்கம் இடதுசாரி அமைப்புகள் வரை வெளியிடப்பட்ட பல நூல்கள் ஆதாரமாக உள்ளன. அண்மையற்கூட அ.யேசுரத்தினத்தினால் எழுதப்பட்ட ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்’ என்ற பதிவு நூல் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வெளியிடப்பட்டிருக்கிறது.


கேள்வி: இப்போது சாதியத்தின் நிலை என்ன?

கருணாகரன்: இது தொடர்பாக விரிவான ஆய்வுகளும் அவதானிப்புகளும் வேணும். அதேவேளை அடிப்படையான மாற்றங்கள் என்றில்லை. ஆனால், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடந்த போராட்டங்களினால் ஏற்பட்ட முன்னேற்றம். மேலும் கல்வி, தொடர்பாடல், சர்வதேச ரீதியாக ஏற்பட்டிருக்கும் அரசியல் பொருளாதார அசைவுகளால் ஏற்பட்ட விளைவுகளின் வழியான மாற்றங்களும் முன்னேற்றமும். முக்கியமாக தொழில் நுட்பம், சட்டம் போன்றவவை இந்த மாற்றங்களுக்கான அடிப்படைகளை வழங்கியுள்ளன. இதனால், பொதுநிலையில் சாதியின் பேரால் அநீதிகளை இழைப்பதும் ஒதுக்குவதும் குறைந்துள்ளது. ஆனால், சாதியைப் பராமரிக்கும் உள்ளெண்ணங்கள் அப்படியேதானுள்ளன.


கேள்வி: புலிகள் சாதியத்திற்கெதிராக தனியான செயற் திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதை நீங்களும் சொல்லியுள்ளீர்கள். ஆனால், அதை ஆழமாகப் பார்த்தால், அது கூடச் சாதியத்திற்கெதிரான ஒரு நடவடிக்கை போலவே எனக்குப் படுகிறது. ஏனெனில் இதுவரையான சாதிய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் சாதித்ததை விட, புலிகள்தான் அதிகம் அதில் சாதித்திருக்கிறார்களே?

கருணாகரன்: இதை நீங்கள் எப்படி வரையறைப்படுத்தி அடையாளம் காணுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்களுடைய காலத்தில் சமூக நிலையே வேறாகி விட்டது. சூலும் மாறியிருந்தது. உலகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியையும் மாற்றங்களையும் தொடர்பாடற் கருவிகளின் பரம்பலையும் அரசியற் பொருளாதார மாற்றங்களையும் அவற்றின் ஊடாட்டங்களையும் நீங்கள் கவனிக்க வேணும். அத்துடன், புலம்பெயர்வினால் உருவாகிய பொருளாதார வருகையும் மேலும் சில அசைவுகளை ஏற்படுத்தியது.

அத்துடன், 1980க்குப் பின்னர் சாதி சமூக பிரதேச வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தமிழ்பேசும் மக்களுக்கெதிரான சிங்கள ஆதிக்கத்தினரின் வன்முறை தீவிரமடையத் தொடங்கியது. இது புலிகளின் காலத்தில் மிகத் தீவிரமடைந்தது. ஆகவே சாதிய முரண்பாடுகளை விடவும் இனவாத முரண்பாடுகள் கூர்மையடைந்தன. அப்படிக் கூர்மைப்படுத்தப் பட்டன. எனவே, முதலில் அதை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் எல்லோருக்கும் ஏற்பட்டது. பொதுப் பிரச்சினையாக இனவிடுதலைப் போராட்டம் மாறியது. பிறகு அது போராகியது. போர் மரணத்தை முன்னிறுத்தியபோது மற்றப் பிரச்சினைகள் பின்தள்ளப்பட்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் யாராவது சாதி பார்க்கும் நிலையிலா இருந்தார்கள்?


ஆனால், இப்போது அதே ஆட்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? மீண்டும் முருங்கை மரத்தில், வேதாளம்.


இதேவேளை நாம் இன்னொன்றையும் கவனிக்க வேணும். சாதி ஒழிப்பென்பதும் தலித் விடுதலை என்பதும் அவர்களுடைய அடையாள மறுப்புகளிலிருந்தும் அடையாள மறைப்பிலிருந்தும் உருவாகுவதல்ல. ஆனால், அத்தகைய முயற்சிகளே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. த. கலாமணியின் ‘வல்லமை தாராயோ’ என்ற கதை இதைத் தெளிவாகச் சுட்டுகிறது. அண்ணமார் என்ற தெய்வமும் அதற்கான வழிபாடும் அதனையொட்டிய அடையாளமும் வெள்ளாள மயப்படுதலின் பிரதிபலிப்பால், பிள்ளையார் கோவிலாகவும் வழிபாடாகவும் மாற்றப்படுகிறது. அப்படி மாற்றப்படுவதனூடாகச் சாதி அடையாளங்களை மறைக்க முற்படும் நிலையை இந்தக் கதையின் வழியாகச் சொல்கிறார் கலாமணி. இந்தக் கதை புலிகள் காலத்தில் அவர்களுடைய வெளியீடான வெளிச்சத்திலேயே வெளியாகியது. இதை நானும் கலாமணியும் பேசித் தீர்மானித்தே அதில் வெளியிட்டோம். தலித் அரசியலை அவதானமாக மேற்கொள்ள வேண்டும். அடையாள அழிப்புத் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இதைச் செய்தோம்.


நீங்கள் குறிப்பிடும் காலத்தை உள்ளடக்கி சாதியத்தின் இன்றைய நிலை தொடர்பாகவும் அதற்கான போராட்டங்கள் தொடர்பாகவும் நாம் விரிவாகப் பேசவும் ஆராயவும் வேண்டியுள்ளது.

கேள்வி: புலிகளின் காலத்தில் சாதியம் ஒரு முக்கியமான பேசுபொருளாக இருக்கவில்லை. நீங்களே ஏற்கனவே குறிப்பிட்டிருந்தீர்கள், இன முரண்பாடுகளின்பால் அனைவரும் அக முரண்பாடுகளை ஒதுக்கி விட்டு அணிதிரண்டார்கள் என்ற சாரப்பட. அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்குமிடையில் அரசியற் பிரச்சினைகள் என்பதில் வித்தியாசமில்லை. அரசியல் இலக்குகள் இன்னும் அடையப்படாமலே உள்ளன. புலிகளின் காலத்தில் பேசப்படாதிருந்த பிரச்சினையொன்றை இப்போது தூசி தட்டி எடுப்பது உள்நோக்கமுடையது என்ற கருத்தை ஏற்படுத்தாதா?


கருணாகரன்: அப்போது அகமுரண்பாடுகளை ஒதுக்கி விட்டு எல்லோரும் இனப் போருக்கு அணிதிரண்டார்கள் என்பதிலுள்ள யதார்த்தத்தையும் உண்மை நிலைமையும் நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். முதலில் சனங்கள் எல்லோரும் போருக்கு அணிதிரளவில்லை என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆனால், எல்லோரும் போர்ச் சூழலுக்குள் அகப்பட்டனர். எல்லோரும் அதனை எதிர்கொண்டனர். அப்படியே அனைவரும் தங்களினுள்ளே இருந்த அகமுரண்களை விலக்கிவிட்டு போராடத் தலைப்பட்டனர் என்றும் இல்லை. நடந்த போர், சாதி, சமூக, வேறுபாடுகளைப் பார்த்துத் தலைகளை அச்சுறுத்தவில்லை. ஆகவே அதை எதிர்கொள்ள வேண்டிய யதார்த்தத்தில் எல்லோரும் இருந்தனர் என்பதே உண்மை. இதனாலும் சாதியத்தைப் பகிரங்கமாகப் பேசுவதற்குப் புலிகள் இடமளிக்கவில்லை என்பதாலும் சாதியப் பிரச்சினைகள் உள்ளடங்கிக் கிடந்தன. இன்று அவை சந்தர்ப்பம் பார்த்து மெல்லத் தலையை நீட்டுகின்றன. அவ்வளவுதான்.


மற்றும்படி எந்தப் பிரச்சினையும் யாராலும் தூசி தட்டி உள்நோக்கங்களுடன் எடுக்கப்படவில்லை. அப்படியொரு உள்நோக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை. சாதியத்தை மீளெழுப்புவதே ஆதிக்க சாதியினரே தவிர, ஒடுக்கப்பட்டவர்களில்லை. இதை நீங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை


கேள்வி: அதேநேரம் இன்றைய யதார்த்தம் முன்னரைப்போல இல்லைத்தானே. அவர்களிற்குக் கல்வியிலோ தொழில்வாய்ப்புகளிலோ மற்ற எந்தத் துறையிலோ பாகுபாடு காட்டப்படுவதில்லையே. கல்வியினாலும் பொருளாதாரத்தினாலும் முன்னேறிய எத்தனையோ தாழ்த்தப்பட்ட சாதியினர் அந்த அடையாளங்களை விட்டு, வெளியில் வந்து விடுகிறார்கள். ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டால், வண்ணார்தான் சலவை செய்யவேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம் இல்லைத்தானே. அவர்கள் அந்த அடையாளத்திலிருந்து வெளியே வருவதற்குக் கல்வியும் தொழில்வாய்ப்புகளும் தேவை. சாதியப் போராட்டங்கள் என்று செய்து கொண்டிருந்த எந்த இடதுசாரித் தரப்பிடமும் இந்த வேலைத்திட்டம் இருக்கவில்லையல்லவா? ஆனாலும் புலிகள் அதனைச் செய்து கொண்டுதானே இருந்தனர்.

கருணாகரன்: யார் சொன்னது பாகுபாடுகளும் பேதங்களும் காட்டப்படவில்லை என்று? ஆளுமை உள்ளவர்கள், வாய்ப்புகளைப் பெறுவோர் முன்னே செல்கிறார்கள். ஏனையோர் வதைபடுகிறார்கள்.

இதேவேளை முன்னரைப்போல அழுத்தங்கள் அதிகம் இல்லை என்பது உண்மை. அதற்காகப் பாகுபாடுகள் இல்லை என்று சொல்ல முடியாது. பெண்களாக இருப்பதாலும் சாதியிற் குறைந்தவர்கள் என்பதாலும் உயரதிகாரிகளாக இருப்போர்கூடப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. சட்டம் சிலவற்றுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதால், இந்த மாதிரி இடங்களில் சாதிப் பாகுபாட்டை அதிகம் காட்டிக் கொள்ள முடியாமலிருக்கிறது. ஆனால், முதுகுக்குப் பின்னால் குசுகுசுக்கப்படும் நிலை என்பது சகித்துக்கொள்ளவே முடியாத அருவருப்பானது.


கோவில்களில் திருவிழாக்கள்கூடச் சாதி ரீதியாகவே இன்னமும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. அல்லது சில கோவில்கள் சில சாதியைச் சேர்ந்தவர்களாலேயே வழிபடப்படுகின்றன. இன்னும் ‘சாதிக்குறிச்சி’ என்று பிரிக்கப்பட்ட அடிப்படையில் பல கிராமங்கள் இருக்கின்றன. இங்கே கல்வித் தகுதியோ, பொருளாதாரமோ எதையும் செய்து விடமுடியவில்லை. வேண்டுமானால், காசுள்ளவர்கள் புதிதாகக் காணிகளை வாங்கிக்கொள்ள முடியும். தங்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொள்ள முடியும். சில காரியங்களைச் செய்து கொள்ளலாம். இந்த மாதிரி, பொருளாதார ரீதியான கொடுக்கல் வாங்கல்கள் கொஞ்சம் பரஸ்பரத் தொடர்பாடலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் விரும்பிய இடத்தில் காணிகளை வாங்கி விடலாம் என்றில்லை.


நீங்கள் சொல்வதைப்போல 60 களில் இருந்த நிலை இன்றில்லை. அதைப்போல 90 களில் இருந்த நிலைமையும் மாறியிருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது.


இனவிடுதலைப் போராட்டம் ஒருபுறத்தில் பலரை இலங்கைக்கு வெளியே புலம்பெயரவைத்ததன் காரணமாக பொருளாதார நிலையில் அடிநிலைச் சமூகங்களும் இன்று வளர்ச்சியடைந்துள்ளன. ஆகவே, சூழல் ஒரு பெரிய தாக்கத்தை இந்த விசயத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அடிக்கோடுகள் அழிந்து விடவில்லை. அதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது.


கேள்வி: எண்பதுகளில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தபோது சிறியதும் பெரியதுமாக சுமார் நாற்பது இயக்கங்கள் இயங்கியுள்ளன. அடுத்து வந்த பத்து ஆண்டுகளில் களத்தில் புலிகள் மட்டுமே தீவிரமாக இருந்தனர். மேலுமிருந்த இரண்டொரு இயக்கங்கள் அரசுடன் இணைந்து விட்டன. இந்தக் காலகட்டத்தை விளக்குங்கள்?


கருணாகரன்: ‘நூறு பூக்கள் மலரட்டும் ஆயிரம் எண்ணங்கள் முட்டி மோதட்டும்’ என்று மாவோ சொன்ன மாதிரி ஏராளம் இயக்கங்கள். ஏராளம் நிலைப்பாடுகள். ஏராளம் வழிமுறைகள். இறுதியில் எல்லாமே தமிழீழத்துக்கே போய்ச் சேரும் என்றார்கள். அதனால், தங்களுக்குக் கிடைத்த சான்ஸை வைத்துக் கொண்டு, அவரவர்களுக்குக் கிடைத்த தொடர்புகளின் வழியாக அனேகமானவர்கள் இயக்கங்களில் சேர்ந்தார்கள். சிலர் மட்டும் தேர்வுகளின் அடிப்படையில், தங்கள் சிந்தனைக்கும் செயற்பாட்டுக்கும் பொருத்தமான இயக்கம் எது என்று தெரிவு செய்து அவற்றில் சேர்ந்து கொண்டனர். (இந்தக் காலகட்ட நிகழ்ச்சிகளைப் பற்றியும் உணர்நிலையைப் பற்றியுமான பதிவுகளை அன்றைய காலகட்டத்தில் போராட்டத்தில் இணைந்திருந்த ஐயர், குருபரன், நேசன், சி.புஸ்பராஜா, செழியன் எனப் பலர் எழுதியுள்ளனர்; எழுதி வருகிறார்கள்).

இதேவேளை சில இயக்கங்களின் ஆரம்பத்தைக் குறித்தும் நாம் சற்று அவதானிக்க வேண்டும். சர்வதேச, பிராந்திய, உள்நாட்டு அரசியல், சமூக நிலவரங்களைக் கருத்திற் கொண்டு தமது கோட்பாட்டையும் வழிமுறைகளையும் வகுத்துக் கொண்ட அமைப்புகளும் உண்டு. அவற்றில் சில குறைபாடுகளோ அதீத கற்பனாவாத நிலைப்பாடுகளோ இருந்தாலும் அவை கோட்பாட்டின் அடிப்படையில் உருவாகின. ஏற்கனவே செல்வாக்கில் இருந்த தமிழரசுக் கட்சியின் அரசியற் சிந்தனைகளை அடிப்பொருளாகக் கொண்டு ஆரம்பமாகிய இயக்கங்களும் இவற்றில் இருந்தன. இவையே பின்னர் ஆதிக்கம் பெற்றன. (இதனாற்தான் போராட்டத்தின் போக்கு விரிவடைவதற்குப் பதிலாக ஒடுங்க வேண்டியேற்பட்டது).

இனமுரண்பாட்டின் கூர்மையில் உருவாகிய ஆயுதப் போராட்டத்தை பிராந்திய சக்தியாகிய இந்தியா தன்னுடைய நலன்களுக்காகப் பயன்படுத்த முற்பட்டது. இதனால் இயக்கங்கள் இயல்பான வளர்ச்சிக்கு அப்பால், திடீர் வீக்கத்தைக் கண்டன.


முதிர்ச்சியுறா நிலையிலிருந்த தலைமைகளிற் பலவும் தமக்கிடையிலான மோதல்களுக்குக் களத்தை உருவாக்கிக் கொண்டன. உட்கட்சிப் பூசல்களாலும் ஜனநாயக நெருக்கடிகளாலும் பல இயக்கங்கள் உடைந்து சிதறின.


அடுத்தது, அது பனிப்போர்க் காலம். சர்வதேச அரசியலும் அதனுடைய அணுகுமுறையும் போக்கும் வலையமைப்பும் வேறாக இருந்தது. அந்தக் காலம் மாற்றமடையும்போது அந்த மாற்றங்களை உள்வாங்க முடியாமல், புதிய திசைமாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கவனத்திற் கொள்ளாமல் தமது நிலைப்பாடுகளைக் கொண்டமை இயக்கங்களினுள்ளே நெருக்கடிகளை உட்குவிக்கக் காரணமாகியது.


சாதாரண அரசியற் கட்சிகளின் சீரழிவும் விரோதமும் வேறு. ஆயுதந் தாங்கிய இயக்கங்களின் சீரழிவு வேறு. இயக்கங்களின் சீரழிவும் விரோதமும் உயிர்களையும் வாழ்க்கையையும் பெருந்தொகையானோரையும் பாதித்தது; பலியெடுத்தது.


எண்பதுகளின் நடுப்பகுதியுடன் இயக்கங்களின் காலம் முடிவுறத் தொடங்கியது என்றே இப்போது தோன்றுது. இதை ஏற்கனவே சிலர் கூறியுமுள்ளனர். இதற்குப் பிரதான காரணங்களில் ஒன்று இந்தியா. அடுத்தது இயக்கங்களில் நிலவிய ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகள். மற்றும் ஆதிக்கச் சிந்தனை. மேலும் பொதுவாகத் தட்டையான, ‘கறுப்பு – வெள்ளை அரசியல் நிலைப்பாடு’ போன்றவை எல்லாவற்றையும் சுருக்கத் தொடங்கியது. இப்படிப் பல.


இயக்க மோதல்கள் மற்ற இயக்கங்களின் செயற்பாடுகளை முடக்கியது. புலிகள் எழுச்சியடைந்தனர். அல்லது பலமடைந்தனர். பொதுவாகவே புலிகள் ஆயுத ரீதியாக வினைத்திறனுள்ள அமைப்பாக இருந்த காரணத்தினால், சமகாலத்திலேயே அவர்கள் ஏனைய இயக்கங்களுடனும் இலங்கை அரசுடனும் மோதிக் கொண்டனர். பின்னர் பகையான இயக்கங்களுடன் மோதிக்கொண்டே இந்தியாவுடனும் மோதினர். பிறகு தமக்குப் பகையான இயக்கங்களுடன் மோதிக்கொண்டே இலங்கை அரசுடனும் மோதினர். இது இராணுவ ரீதியாகப் புலிகளை மேலே உயர்த்தியது.


அடுத்தது, நீங்கள் கூறுவதைப்போல எடுத்த எடுப்பிலேயே ஏனைய இயக்கத்தவர்கள் இலங்கை அரசின் பக்கம் தாவவில்லை. புலிகளுடன் ஏற்பட்ட மோதலை அடுத்துத் தப்பியவர்கள் இந்தியாவுக்கு – தமிழகத்துக்குச் சென்றார்கள். அங்கே இந்தியாவோ உரிய வரவேற்போடு அவர்களை ஆதரிக்கவில்லை. அரசியல் நிலைமைகள் மாறிவிட்டதால் தமிழ்த் தரப்புகளை விடவும் கொழும்பைக் கையாள்வது அதிக நன்மையைத் தரும் என்று கருதியது இந்தியா.


இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த இயக்கங்களை கையாள முற்பட்டது இலங்கை. எனவே, அவர்கள் இலங்கை அரசுடன் நெருங்கினர். அது அவர்களைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்று. பிறகு அதிலிருந்து விலகினர் சிலர். இன்னும் அந்தப் போக்கிலேயே இருக்கின்றனர் சிலர்.


எங்கேயிருந்தாலும் – இடங்கள் மாறியிருந்தாலும் எப்படியோ எதிர்த்தரப்பைப் பலப்படுத்துவதிலேயே ஈழத் தமிழரின் அரசியற் செயற்பாடுகள் அமைந்திருப்பதே இதற்குக் காரணம்.


கேள்வி: நீங்கள் சொல்வதைப் போல புலிகளுடைய நிர்ப்பந்தத்தினால்தான் மற்றைய இயக்கங்கள் அரசுடன் சேர்ந்தது என்றால், அரசுடன் இருக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்களான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பவற்றின் ஒருபகுதியினர் புலிகள் முற்றாக இல்லாத இன்றைய நிலையிலும் எதனால், தமது பழைய இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. (இதன் அர்த்தம் அவர்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை)

கருணாகரன்: என்னுடைய பதிலை நீங்கள் விளங்கிக்கொள்வதாயின் அந்தக் காலச் சூழலையும் சில யதார்த்தங்களையும் இணைத்து நீங்கள் புரிந்து கொள்ள வேணும்.

களத்தில் நிற்பதற்குப் புலிகள் விடமாட்டார்கள். இந்தியச் சூழலும் அணுகுமுறையும் தலைமைத்துவமும் மாறிவிட்டன. தமிழகத்திலும் முன்னரைப்போன்ற ஆதரவு நிலைமைகள் இல்லை. அவ்வாறாயின் அரசியலைத் தொடர்வது எப்படி என்ற நிலையிற்தான் இந்தச் சக்திகள் இலங்கைக்கு – கொழும்புக்குத் திரும்புகின்றன. அதேவேளை இயக்க மோதல்கள் மற்றும் இலங்கை இந்திய உடன்படிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், இனி ஆயுதப் போராட்டத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்ற நிலைக்குச் சில தரப்பினர் வந்திருந்தனர். இடையில் ஆட்சிக்கு வந்த பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் இந்தத் தரப்பினர்களுக்கு குறைந்த பட்சமாகவேனும் சில நம்பிக்கைகளை ஊட்டியிருக்கின்றனர். ஒப்பீட்டளவில் இவர்களுக்கான களவெளியை நிபந்தனைக்குட்பட்ட வகையில் இலங்கை அரசே அப்போது வழங்கியது.

ஆகவே, இந்தமாதிரியான காரணங்கள் எல்லாம் இவர்களைக் கொழும்பு அரசுடன் இணைத்துவிட்டன.

இந்தியாவுக்கோ கொழும்புக்கோ திரும்பாமல் வேறு நாடுகளுக்குச் சென்றவர்கள் யாரும் ஒரு கட்சியாகவோ ஒரு செயற்பாட்டு அமைப்பாகவோ தாக்கமுறக்கூடிய அளவில் திரட்சியடையவில்லை என்பதையும் நீங்கள் பார்க்க வேணும். மாற்றுக் கருத்துகளைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தி வந்தனரே தவிர, வினையாற்றும் பெறுமானத்தை உருவாக்கவே இவர்களால் முடியவில்லை. இன்னும் இதுதான் நிலைமை.

இப்பொழுது, புலிகள் இல்லாத சூழலில், புலிகளை ஆதரித்தோ அனுசரித்தோ போகிறவர்களே புலம்பெயர் நாடுகளில் அரசியல் அடையாளத்துடன் செயற்படக் கூடியவாறான அமைப்பாகத் திரட்சியடைய முனைகிறார்கள். இதற்கு மேற்குலகத்தின் வரையறுக்கப்பட்ட ஆதரவும் அனுசரணையும் இருந்தாலும் இதிலும் ஏராளம் பிரச்சினைகள். பல அணிகள். இப்பொழுது புலிகள் இல்லாவிட்டாலும் அரசியலில் எவராலும் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் சென்று விடமுடியாது. அரசியல் என்பது தனியே விருப்பங்களின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதுமில்லை; அப்படி அமைந்து விடுவதுமில்லை. அது அடிப்படையான வழிமுறைகளாலும் சூழ்நிலைகளாலும் நிர்ப்பந்தங்களாலும் வாய்ப்புகளால், தீர்மானங்கள், திட்டமிடல்கள், முயற்சிகள், செயற்பாடுகள் எனப் பலவற்றாலும் அமைவது. இவை எல்லாவற்றையும் விளங்கிக் கொண்டு, அதற்கேற்ப வியூகங்களை வகுத்துச் செயற்படவேண்டியது.



இன்றைய சூழல் என்பது இலங்கையில் எவரும் சுயாதீனமாகச் செயற்பட முடியாத ஒரு நிலைமையையே உருவாக்கியுள்ளது. பொதுவாகப் போராட்டத்தின் தொடர் வீழ்ச்சியினால் அல்லது சிதைவினால் மக்கள் மிக மோசமாகப் பலவீனப்பட்டிருக்கிறார்கள். அதைப்போல, அவர்களைப் பிரதிபலிப்போருக்கும் இது நெருக்கடிக் காலமே. வெளியிலும் யதார்த்தத்துக்கு முரணான செயற்பாடுகளும் கருதுகோள்களும்.

தவிர, வரலாற்றில் முன்னகர்வதாயின் பின்னே திரும்பிச்செல்ல முடியாது.

கேள்வி: போராட்ட இயக்கங்களில், ‘படித்த இயக்கம்’, ‘ஓரளவு மிதவாத இயக்கம்’ என்று கருதப்பட்ட நீங்களிருந்த ‘ஈரோஸ்’ இயக்கமும் தொண்ணூறுகளில் இல்லாமற் போய்விட்டது. உங்கள் இயக்கத்தின் தோல்விக்குக் காரணங்கள் என எதைக் கருதுகிறீர்கள்?

கருணாகரன்: நான் சொல்லுகின்ற பதிலை அல்லது காரணத்தை ஈரோஸ் அமைப்பில் என்னுடன் சக போராளியாக இருந்த இன்னொருவரே மறுத்துரைக்கக் கூடும். அவருடைய பார்வையும் பதிலும் வேறாகவும் இருக்கலாம்.

படித்தவர்களை அதிகமாகக் கொண்ட இயக்கம் என்ற ஒரு தோற்றப்பாடு, பெருமை ‘ஈரோஸ்’ குறித்து இன்னும் பலரிடம் உண்டு. ஆனால், உண்மையில் அப்படியல்ல. படித்தவர்களும் அதில் இருந்தனர். மிக அடிமட்டக் கல்வி அறிவைக் கொண்டவர்களும் ஏழையான குடும்பச்சூழலில் இருந்து வந்தவர்களும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் மலையத்தைச் சேர்ந்தவர்களும் ஈரோஸில் அதிகமாக இருந்தனர். ஏனைய இயக்கங்களிலும் இந்த மாதிரியான நிலை இருந்தது.

ஆனால், ஈரோஸின் நடவடிக்கைகளும் வழிமுறைகளும் சனங்களை அதிகம் கலவரப்படுத்தாமல், அவர்களைப் பதற்றத்துக்குள்ளாக்காமல் அமைதியான முறையில் இருந்தன. மட்டுமல்ல, சனங்களின் மீதான கரிசனையில் அதிகமாகவும் குறைந்தளவு உறுப்பினர்களைக் கொண்டதாகவும் இருந்ததால் சனங்களுக்கு அதிக பாதிப்பு ஈரோஸினால் உருவாகவில்லை. இதெல்லாம் ஈரோஸின் மீதான அபிமானத்தையும் படித்த இயக்கம் என்ற ஒரு தோற்றப்பாட்டையும் உருவாக்கியது.

ஆனால், நீங்கள் ஈரோஸை மிதவாத இயக்கம் என ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருந்த திரு. கந்தசாமியின் கொலை வரையில் ஈரோஸ் இயக்கத்திலும் பழிகள் உண்டு. அன்று முக்கியமான இயக்கங்களாக இருந்த ஐந்து இயக்கங்களில் மென்தன்மையான இயக்கமாகத் தோற்றம் காட்டிய காரணத்தினால் சிலவேளை நீங்கள் அப்படிக் கருதக்கூடும்.

ஈரோஸின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை விட இயக்கங்களின் காலம் 1980 களின் நடுப்பகுதியிலேயே முடிவடைந்தது என்று நான் முன்னர் சொன்ன பதிலே இதற்கும் பொருந்தும். தமிழ்பேசும் மக்கள் தங்கள் அரசியல் வழிமுறைகளில் ஒட்டுமொத்தமாகத் தோற்றிருக்கிறார்கள்.

இதேவேளை, புலிகளின் நெருக்குவாரங்களே ஈரோஸின் தோல்விக்குக் காரணம் என்று சொல்லும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் புலிகளுடன் நிரந்தரப் பகையாளிகளாக உள்ளனர். சிலர் ஈரோஸின் காலம் முடிந்து விட்டது. அதனுடைய முன்னணிப் பொறுப்பிலுள்ளவர்களின் ஆளுமைக் குறைபாடுகளும் அர்ப்பணிப்புக் குறைந்த செயற்பாடுகளுமே ஈரோஸின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கருதுகிறார்கள். ஈரோஸ் தோற்றுப் போகவேயில்லை. அது தற்காலிகமாக இன்னொரு வடிவத்திற்கு மாறுவதற்கான அவகாசத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று வேறு சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஏராளம் பார்வைகளும் அபிப்பிராயங்களும்.

என்னைப் பொறுத்தவரை அதுவொரு கனவு. அந்தப் பருவத்தின் மறக்கமுடியாத கனவு. இப்போது சிதைந்துபோன கனவு. ஆனால், பல புரிதல்களுக்கான பயிற்சிக்களமாக அது – அந்த அமைப்பு இருந்தது. பலரை அறிமுகப்படுத்தியது. மறக்கவே முடியாத மனிதர்களையும் ஈரோஸில் சந்தித்தேன்.

கேள்வி: சரி, இனி இதே காலப்பகுதியில் ஆரம்பித்த உங்களின் இலக்கியச் செயற்பாடுகளைச் சொல்லுங்கள்?

கருணாகரன்: நான் 80 களின் முற்பகுதியில் எழுதத் தொடங்கினேன். நா.விஸ்வலிங்கம், டொமினிக்ஜீவா, வே.பாலகுமாரன், சோ. கிருஷ்ணராஜா, சின்னபாலா (இளையவன்), நந்தி, செம்பியன்செல்வன், க.தணிகாசலம், கே.ஆர்.டேவிற், முருகையன், புதுவை இரத்தினதுரை, வாழைச்சேனை அமர், சோலைக்கிளி போன்றவர்கள் இந்த எழுத்து முயற்சியை ஊக்கப்படுத்தினார்கள். எண்பதுகளின் நடுப்பகுதியில் ஈரோஸின் வெளியீடான ‘பொதுமை’ என்ற பத்திரிகையில் கட்டுரைகளை எழுதினேன். சில கவிதைகளும்.

பொதுமையின் ஆசிரியர் குழுவில் இருந்ததால், இது இன்னும் சாத்தியமாகியது. அப்படியே ஈரோஸின் மாணவர் வெளியீடான ‘நாங்கள்’ இதழிலும் சில கவிதைகள். அதேவேளை அந்தக் காலப்பகுதியில் மல்லிகை, தாயகம் போன்ற இதழ்களிலும் எழுதினேன். பிறகு முனைப்பு, உள்ளம், சிரித்திரன், ஈழமுரசு, திசை என்று….


கேள்வி: அன்றைய காலகட்டத்தில் உங்கள் எழுத்திற்கென குறிப்பட்ட இலட்சியம் அல்லது நோக்கம் ஏதுமிருந்ததா?

கருணாகரன்: அடக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் எதிரான வாழ்க்கையை மையப்படுத்தினேன். இப்பொழுதும் அதுதான் சாரம். இதன் மறுபக்கம் விடுதலைக்கான அவாவலே. வெளிநோக்கிய விருப்பே. ஆனால், எல்லாவற்றுக்கும் அடிப்படை வாழ்க்கையின் தரிசனங்களே.


கேள்வி: ஈழத்து இலக்கியத்தில் நுழையுமொரு இளைஞன் அதிக அரசியற் பார்வைகளுடன் நுழைகிறான். இது நல்ல இலக்கியம் உருவாகுவதைத் தடுக்கிறது என்ற சாரப்பட ஜெயமோகன் அண்மையிற் கட்டுரையொன்றிற் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் சில இடங்களில் அவர் உங்கள் கவிதைகள் குறித்தும் சிலாகித்திருந்த சம்பவங்களும் உண்டு. அரசியல் நோக்கம் கலந்த எழுத்துகள் உயர்ந்த பட்சக் கலைத்தன்மையுடையனவாக இருக்க முடியாதெனக் கருதுகிறீர்களா? ஆமெனில் உங்கள் ஆரம்ப எழுத்துகள் மிக அதிகமும் அரசியல் நோக்கமுடையனவாகவே இருந்தன. எந்தக் கட்டத்தில் நீங்கள் சுயவிமர்சனத்திற்கு உட்படுகிறீர்கள்? இதன்மூலம் உங்கள் கவிதை முறையில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்கள் என்ன?


கருணாகரன்: அரசியல் எப்படியோ எல்லாப் படைப்புகளிலும் ஏதோ வகையில் சாரமாகிவிடுகிறது. ஆனால், சிலர் அதற்குள் தேங்கிப் போகிறார்கள். அதாவது, கட்சிகள், தரப்புகள், தலைமைகள் என்ற வட்டத்துக்குள் அடங்கிப்போகிறார்கள். கட்சிகளும் தரப்புகளும் தலைவர்களும் காலத்துக்குக் காலம் மாறலாம். அல்லது அவர்களுடைய காலம் முடிந்து விடலாம்.

மானுடப் பொதுமையை, அது மையப்பட்டியங்கும் வாழ்வை, இயற்கையைச் சாரப்படுத்தி எழுதும்போது அது அதற்கப்பால் விரிந்த பரப்பில் பேசுவதாகிறது.

அரசியல் சார்ந்த இலக்கியம் என்பதை அவ்வக் காலத்தில் அதிகாரத்திலிருக்கும் தரப்புகளை ஆதரித்து அல்லது எதிர்த்து இயங்கும் ஒன்றெனக் கருதினால் அதற்கு என்னிடம் பதிலில்லை.

அக, புற நெருக்கடிகளின் பாதிப்புகளை எழுத்தாளனாலோ கவிஞனாலோ புறந்தள்ளிவிட முடியுமென்று நான் நம்பவில்லை. அவற்றுக்கு எதிர்வினையாற்றுவதும் அவற்றைச் சாரப்படுத்துவதும் இலக்கியப் பிரதிகளாக, கலை வெளிப்பாடுகளாக அமைகின்றன. எண்பதுகளில் இந்திரா காந்தி காலத்தில் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட அவசரகாலநிலை ஆத்மாநாமை அரசியற் கவிதைகளை எழுதத் தூண்டியது. அந்தக் காலகட்டத்தில் அந்த நெருக்கடி நிலை கொண்டுவரப்படாது போயிருந்தால், ஆத்மாநாம் வேறு திசைகளை நோக்கித் திரும்பியிருக்கக்கூடும்.


அவ்வாறே பலஸ்தீனக் கவிதைகளும் ஆபிரிக்க எழுத்துகளும். இந்த அடிப்படையிற்தான் ஈழத்துக் கவிதைகளும் இலக்கியமும். இதை இந்தப் பின்புலத்தில்தான் விளங்கிக் கொள்ள வேணும்.

ஆபிரிக்க எழுத்துகள், அரேபிய எழுத்துகள், ஒடுக்கப்பட்டோரின் எழுத்துகள், விடுதலைக்கான எழுத்துகள் என்ற மாதிரியான அடையாளங்களோடு அறியப்பட்ட இலக்கியப் படைப்புகள் மிகப் புகழ்பெற்றவையாகின்றன. குர்திஸ் கவிதைகளோ பலஸ்தீனக் கவிதைகளோ ஆபிரிக்கச் சிறுகதைகளோ லத்தீன் அமெரிக்கச் சினிமாவோ அழகியலைக் கொண்டிருக்கவில்லை, கலைப் பெறுமானங்களைப் பெறவில்லை என்று சொல்ல முடியுமா?

ஈழத்து இலக்கியத்தில் இயங்குவோரிற் பலர் இயக்கம், கட்சி சார்ந்த அடிப்படையிலும் அந்த மனோநிலையிலும் இயங்குவோராக மாறிய சூழலில் ஜெயமோகனின் விமர்சனம் பொருள்கொள்கிறது போலும்.

உலக வரலாறானது, எண்ணற்ற போர்களையும் போராட்டங்களையும் சந்தித்திருக்கிறது. மனித வரலாறே எண்ணற்ற பேரனுபவங்களையும் சிந்தனையையும் கொண்டது. பெரும் படைப்பாளிகள் இதையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். அல்லது பெரும் படைப்பாளிகளாகத் தகுதி பெறுவோர் புதிய ஒன்றையே தருகிறார்கள்.

இன்றுள்ள தொடர்புகளாலும் பரிவர்த்தனைகளாலும் உலகின் எந்த இலக்கியமும் எத்தகைய எழுத்தும் நமக்குக் கிடைத்து விடுகிறது. இந்த நிலையில், புதிதாக ஒரு எழுத்து, ஒரு சிந்தனை, ஒரு அனுபவம், ஒரு முறைமை வந்தாலே அது கவனிக்கப்படும். அதுவே பயனுடையது. இதற்குக் கீழே வரும் எதுவும் ஒரு பெரும் பரப்பைச் சென்றடையாது. அவை எந்த அலைகளை உருவாக்கப் போவதுமில்லை. மாதிரிகள் எப்போதும் புதினமாவதில்லை.

என்னுடைய கவிதைகளை நிகழ்காலத்தின் ஒரு உரையாடலாகக் கொள்ள வேண்டிய தேவையும் எனக்கிருந்தது. இதனால், வகைப்படுத்தல்களை மேற்கொள்ளும்போது அதற்கான போதாமைகள் தோன்றலாம். இந்தச் சுயவிமர்சனத்திலிருந்தே புதியவற்றுக்காக முயற்சிக்கிறேன். ஜெயமோகனே என்னுடைய கவிதைகள் தொடர்பாகக் கூறும்போது, ‘அவ்வப்போது கவித்துவம் கூடிவரும் தருணங்களைக் கொண்ட கவிதைகள்’ என்ற வகையில் தன்னுடைய அவதானிப்பைச் சொல்லியிருக்கிறார். அவருடைய பார்வையிலும் அணுகுமுறையிலும் என்னுடைய கவிதைகள் குறித்தும் போதாமைகளை அவர் உணர்ந்திருக்கக் கூடும். அது அவருடைய புரிதலும் பார்வையும். ஜனநாயகச் சூழலில் பலவிதமான பார்வைகளுக்கும் அணுகுமுறைகளுக்கும் கருத்துகளுக்கும் இடம் தாராளமாக உண்டு.

நானோ காயங்கள், வலிகள், இழப்புகள், துக்கங்கள், அவமானப்படுத்தல்கள், தோல்விகள் நிரம்பிய சூழற் பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கையில் என்னால் வேறு எப்படி எழுத முடியும்? ஏறக்குறைய இத்தகைய நிலையும் அனுபவமுமே ஏனையவர்களுக்கும்.

கேள்வி: உங்கள் கவிதைகள் இலங்கையைத் தவிர்த்து பிற நாடுகளில் எவ்வாறு அணுகப் படுகிறது? சேரனின் கவிதைகளுக்கு ஏற்பட்ட பரந்த வாசகர் தளம்போல, இலங்கையிற் பிற கவிஞர்களுக்கு ஏற்படாத காரணம் என்ன?

கருணாகரன்: முதற் கேள்விக்கான பதில் – ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் இலங்கை அரசியல் விவரங்களைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு விதமாக அணுகுகிறார்கள். நிலைமைகளின் தாற்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் ஈழக்கவிதைகளை அணுகும் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இதில் என்னுடைய கவிதைகளும் விலக்கல்ல. பிற தரப்பினரின் அணுகுதல்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. வந்த விமர்சனங்கள் அனைத்தும் மேற்சொன்ன விசயங்களை அடியொற்றியே இருக்கின்றன. ஈழக் கவிதைகளைத் தொகுத்துள்ள காவ்யா, காலச்சுவடு, விடியல் போன்றவையும் இந்த அணுகுமுறையில் இருந்து விடுபடவில்லை.

இரண்டாவது கேள்வி – சேரனின் கவிதைகளுக்கு ஏற்பட்ட பரந்த வாசகர்களும் பரந்த அறிமுகத்துக்கும் காரணங்கள் உண்டு.

1.சேரனின் கவிதைப் பொருட்தேர்வு. அரச பயங்கரவாதத்தையும் அதன் கொடுமையையும் மையப்படுத்தி எழுதத் தொடங்கிய சேரன், அதற்கான மொழியையும் வெளிப்பாட்டு முறையையும் பிரத்தியேகமாகத் தேர்ந்திருந்தார். அன்றைய நிலையில் சேரனின் கவிதைகள் ஒரு அதிர்ச்சியாகவே இருந்தன.

பின்னர், போராட்ட அமைப்புகளிடையே நிலவிய முரண்கள், ஜனநாயக மறுப்பு போன்ற விசயங்களை மையப்படுத்திய தேர்வு. இது சேரனையும் அவருடைய கவிதைகளையும் இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது. இதிலும் அவருடைய கவிதைகள் கொந்தளிக்கும் தன்மையுடன் இருந்தன. இதெல்லாம் அவரைப் பரந்த தளத்தில் அறிமுகமாக்கின.


2.கவிதைகள் எழுதப்பட்ட அந்தந்தக் காலத்திலேயே அவை உறக்கத்திலல்லாமல், நூல்களாக வெளியிடப்பட்டன. எழுதும் கவிதைகளை உரிய காலப்பகுதியில் வெளியிட்டுவிடும் இயல்பும் முயற்சியும் உள்ளவர் சேரன். இது அவருடைய கவிதைகளுக்கான அறிமுகத்துக்குக்கும் பரவலாக்கத்துக்கும் உதவின. அதிலும் சேரனுடைய புத்தகங்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் பிற இடங்களிலும் வெளியிடப்பட்டது இன்னும் இந்தப் பரந்த அறிமுகத்துக்கு வாய்ப்பளித்தது.
3.மூலமாக அவை குறித்த விமரிசனங்களும் அறிமுகங்களும் வைக்கப்படும். இதில் முக்கியமான விமரிசனம் – சேரனைத் துலக்கமாக அடையாளம் காண வைத்த விமரிசனம் – பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதிய ‘சேரன் கவிதைகள் பற்றிய ஒரு விமரிசனம் – கணிப்பிற்குரிய கவிஞனொருவன் வந்து சேர்ந்துள்ளான்’ என்பதாகும். இந்த விமரிசனங்களும் அறிமுகங்களும் சேரனுடைய கவிதைகளை இன்னும் இன்னும் பரவலாக்கின.

4.சேரன் கவிஞர் மட்டுமன்றி, அவர் ஊடகத்துறையில் அறியப்பட்டவராகவும் உயர்கல்வியாளராகவும் இருக்கின்றமை. மேலும் அவர் மனித உரிமைகள் அமைப்புகளின் செயற்பாட்டாளர், ஜனநாயகச் செயற்பாட்டு மையங்களின் உறவாளர் எனப் பல தளங்களில் உலகு தழுவிய அளவில் தொடர்புள்ளவர் என்பதும் சேரனுடைய கவிதைகளின் பரந்த அறிமுகத்துக்குக் காரணங்களாக உள்ளன.


இத்தகைய அதிக சாத்தியங்களைக் கொண்டுள்ள பிற கவிஞரொருவர் ஈழக்கவிஞர்களிடத்தில் இல்லை எனலாம். ஆகவே சேரனுக்கு மட்டுமே இந்த வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவருடைய முயற்சிகள் அவருக்கு வெற்றிகளைத் தந்தேயுள்ளன.


கேள்வி: மஹாகவி, முருகையன், நீலாவணன், வ.ஜ.ச. ஜெயபாலன், சண்முகம் சிவலிங்கம், தா. இராமலிங்கம், சேரன், சிவரமணி அதன் பின், நீங்கள், வாசுதேவன்… என்று உற்சாகமாக நீண்டு வந்த ஈழக்கவிதையின் தொடர்ச்சி இன்று வரையிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? பின்னாட்களில் உபரியாகச் சில கவிஞர்கள் தோன்றியிருந்தாலும் இந்தத் தொடர்ச்சியிருப்பதாகக் கருதமுடிகிறதா?

கருணாகரன்: ஈழக்கவிதையின் தொடர்ச்சி செழிப்பாகவே நீண்டு செல்கிறது. சு.வி, மு.பொ, சிவசேகரம், அ.யேசுராசா, சபேசன், ஊர்வசி, மைத்ரேயி, இளவாலை விஜயேந்திரன்… என்று. அது முன்னரையும் விட இன்னும் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. புலம்பெயர் வாழ்வனுவபவம் அதிலொன்று. உள்மோதல்களின் விளைவுகள், ஜனநாயக மறுப்புகளுக்கெதிரான பதிவுகள் மற்றும் போர் என்று அது இன்னும் நீளும். ஈழக்கவிதைகளில் சோலைக்கிளி முக்கியமான ஒருவர். மேலும் முஸ்லிம் கவிஞர்கள் இன்னொரு தளமாகின்றனர். கூடவே பெண்களும். அஸ்வகோஸ், நிலாந்தன், பா. அகிலன், நட்சத்திரன் செவ்விந்தியன், கலா, றஷ்மி, ஆழியாள், திருமாவளவன், ஜபார், மஜித், சித்தாந்தன், அமரதாஸ், சந்திரபோஸ் சுதாகர், வாசுதேவன் (பிரான்ஸ்) கி.பி. அரவிந்தன், றியாஸ் குரானா என்று ஏராளமானோருடன் புதிதாய் நீள்கிறது இந்தப் பயணம். த. மலர்ச்செல்வனில் இருந்து அனார் வரை புதியவர்களின் வருகை மேலுமுண்டு.


கேள்வி: கடந்த 30 வருடமாக எழுதிவருகிறீர்கள். ஈழத்தமிழர்களின் சமூக அரசியல் தேவைகள் அன்றிருந்த அளவிலேயே இன்றுமிருக்கின்றன. கவிதையின் உள்ளடக்கம் இந்த இடைப்பட்ட காலத்தில் ஏதாவது மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதா? அல்லது வெளிப்பாட்டு முறைமையில்? இல்லையெனில், அது சலிப்புணர்வை ஏற்படுத்தாதா?


கருணாகரன்: இது முக்கியமானது. அதிக சலிப்பூட்டுமளவுக்கு இன்றிருப்பது ஈழத்தின் அரசியலே. இதன் நிமித்தமாக அரசியலை அதிகமாகப் பேசிய எங்களின் கவிதைகளும் புலம்பல்களோ என்று எண்ணும்படியிருக்கின்றன. ஆனால், கவிதையின் உள்ளடக்கம் மாறியுள்ளது. சொல்லும் முறைமையிலும் மாற்றங்கள் உள்ளன.


‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைக் காலத்தைக் கடந்து வெகுதூரம் ஈழக் கவிதைகள் சென்று விட்டன. வெளிப்பாட்டுமுறையிலும் அப்படியே. என்றபடியாற்தான் அவை சலிப்பூட்டாமலிருக்கின்றன. இன்னும் கவனிக்கும்படியாகவும். வாய்பாடுகளை விட்டு வெளியேற வேண்டியது அவதானிப்பாளர்கள்.


முக்கியமாக நிலாந்தனின் ‘மண்பட்டினங்கள்’ மற்றும் ‘யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே’ வேறுபட்ட வெளிப்பாட்டு முறைமையைக் கொண்டது. கூடவே அஷ்வகோஸின் ‘வனத்தின் அழைப்பு’ம் பா. அகிலனின் ‘சரமகவிகளு’ம், வாசுதேவனின் ‘கோடோ வரும் வரையும்’. தவிர, றியாஸ் குரானா, மஜீத், றஸ்மி போன்றோரின் கவிதைகளும் வேறு வகையானவை. இவற்றைப் பற்றியெல்லாம் பேசப்படவில்லையே தவிர, மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.


தவிர, ஒவ்வொரு கவிஞரும் தங்கள் கவிதைகளை ஒவ்வொரு வகையில் அடையாளப் படுத்தியுள்ளனர்.
கேள்வி: மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளையும் தேவைகளையும் உக்கிரமாகவும் அழகியலுடனும் கவிதைகளில் பதிவு செய்த அளவுக்குப் புனைகதையில் பதிவு செய்யப்படவில்லை என்றொரு கருத்துண்டு. புனைகதையாளர்கள் வைதீகமான தன்மையை கடந்து வர முடியாமலிருப்பது போன்றதொரு உணர்வு உங்களுக்கு ஏற்படவில்லையா?

கருணாகரன்: அப்படியானதொரு உணர்வுண்டு. ஆனால், அதையே நாம் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. பலர் வைதீகத்தனமாக ஏராளமாக எழுதிக் குவிக்கிறார்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை.

ஈழத்துச் சிறுகதைகள் சரியான முறையில் வாசிக்கப்படவில்லை என்றே சொல்வேன். ரஞ்சகுமாரையும் உமா வரதராஜனையும் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களாக பேராசியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டதற்குப் பிறகு அதையே ஒரு வாய்ப்பாடாகக் கொண்டு இன்றுவரை அதைக் குறிப்பிட்டு வருகிறார்கள் பல விமர்சகர்களும்.


அ. முத்துலிங்கம், ஓட்டமாவடி அரபாத், சு. மகேந்திரன், மலைமகள், ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, திசேரா, யோ.கர்ணன், ராகவன் போன்றவர்களின் எழுத்துகள் முக்கியமானவை. தமிழகத்தின் அளவுக்கு எங்களுடைய பரப்பளவும் வகைகளும் தொகையும் இல்லை எனலாம். ஆனால், ஈழக்கவிதைகளுக்கு நிகராகவே ஈழத்துச் சிறுகதைகள் இருக்கின்றன.


கேள்வி: மிகப் பெரும் அவலங்கள் இடப்பெயர்வுகள், மனிதப்படுகொலைகள் எல்லாம் நடந்தும் இவையனைத்தையும் கவனப்படுத்தவல்ல ஒரு படைப்பு இங்கே ஏனின்னும் சாத்தியமாகவில்லை? யுத்தம் நடந்த சோவியத் நாடுகளில், வியட்நாமில், பலஸ்தீனத்தில், ஆபிரிக்க நாடுகளில் எல்லாம் இவை கலைப் படைப்பாகிய அளவில் இங்கு இடம்பெற்றுள்ளதாகக் கருதுகிறீர்களா?



கருணாகரன்: இன்றைய ஈழத்து இலக்கியம் பெரும்பாலும் அரசியற் கட்சி இலக்கியமாக இருக்க வேண்டும் என்ற தொனி உயர்ந்துள்ளது. மாற்றுப் பார்வைகளை விமர்சிக்கும் போக்கு வளர்ந்து அது ‘கறுப்பு – வெள்ளை’ என்ற வகைப்படுத்தலில் எந்தப் பக்கம் நிற்கிறது, எந்தப் பக்கம் சாய்கிறது? என்ற அளவுகோல்களால் மதிப்படப்படும் ஒரு நிலை தோன்றியுள்ளது. அவ்வாறே இன்றைய எழுத்துகளை அணுகும்போக்கும் உருவாகியுள்ளது. இது சுயாதீனமான எழுத்துகளுக்கான சவால்களை ஏற்படுத்துவது. இன்றைய ஈழத்துப் படைப்பாளி பல அரசியற் சவால்களைச் சிங்கள மற்றும் தமிழ்த் தரப்புகளிலிருந்து எதிர்கொள்ளவேண்டியுள்ளது. ஆனால், இந்தக் குறுகிய பார்வைகளுக்கு வெளியே நின்று, இந்த அரசியற் பரப்புக்கு அப்பாலான விசயங்களை எழுதினாலும் அதற்கு ஏதோ வர்ணங்களைத் தங்களுக்கு ஏற்றமாதிரிப் பூசும் போக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதுதான் இன்றுள்ள பிரச்சினை.

ஆனால், மெய்யான ஆளுமை மிக்க எழுத்தாளர்கள் இதையெல்லாம் கடந்து விடுவார்கள். ‘சூரியனைக் கைகளால் மறைக்க முடியாது’ என்று அவர்களுக்குத் தெரியும்.

நீங்கள் குறிப்பிட்ட மிகப் பெரும் அவலங்கள், இடப்பெயர்வுகள், மனிதப்படுகொலைகள் எல்லாவற்றைப் பற்றியும் நிச்சயமாக எழுதப்படும் என நம்புகிறேன். அதை யாராலும் தடுக்க முடியாது. யாருடைய விருப்பங்களுக்கேற்றமாதிரியும் அவை இருக்கப்போவதுமில்லை. இது உறங்குங்காலம். என்றால், நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும்.

கேள்வி: நவீன இலக்கியம் என்று வரும்போது கிட்டத்தட்ட தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் சம வயது. (வ.வே.சு ஐயரிற்கு முதலே ஈழத்தில் சிறுகதை எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதுண்டு) ஆனாலும் ஈழ இலக்கியமென்பது தமிழகத்தைப் பின்தொடர்வதாகவே இருந்து வருகிறது. இலக்கியம் சார்ந்து, புதிதாக எழும் கோட்பாடுகள், போக்குகள், எல்லாமே தமிழகத்திற் பரீட்சிக்கப்பட்டே ஈழத்திற்கு வந்திருக்கிறது. இந்திய என்ற பிராந்திய சக்தியிடம் அரசியல் ரீதியில் தப்பிக்க முடியாமல் சிக்கியுள்ளதைப்போல இலக்கியத்திலும் சிக்கியிருப்பதாக நினைக்கிறீர்களா? இவர்களால் சுயமாகவே இயங்க முடியாதா?

கருணாகரன்: இலங்கைச் சூழலையும் விட தமிழகத்தில் அதிக சாத்தியங்கள் எதற்கும் உள்ளன. அகன்ற இந்தியாவில் பிராந்திய – அயல்மொழி ஊடாட்டங்கள் நிறைய ஏற்படுகின்றன. உதாரணமாக இலங்கைத் தமிழர்களையும் விட தமிழகத்தின் பரப்பும் சனத் தொகையும் அதிகம். இதன் காரணமாக வெளிப்பாடுகளும் வெளிப்பாட்டாளர்களும் அதிகமாகின்ற ஒரு நிலையுண்டு. இதைத் தவிர, தமிழுக்கு அப்பால் மலையாளத்திலோ தெலுங்கிலோ கன்னடத்திலோ ஹிந்தியிலோ ஒரு கோட்பாடோ படைப்போ அறிமுகமாகினால், அயல்மொழி என்ற அடிப்படையில் அது தமிழுக்கும் வந்து விடுகிறது. அப்படியே தமிழில் இருந்து பிற மொழிச் சமூகங்களுக்கும் சென்று விடுகிறது. இதனால், தமிழகத்தில் எதுவும் அறிமுகமாகுவதும் பரிசீலிக்கப்படுவதும் சாத்தியமாகிறது.


தவிர, இலங்கையின் அரசியல் நிலைவரங்கள் படிப்படியாக எல்லாவற்றையும் அழித்ததைப்போல இலக்கியத்தையும் பின்னுக்குத் தள்ளியே விட்டன. இலக்கியம் பற்றிய சிந்தனைகளையும். இப்பொழுது ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கே இந்தியாவை, தமிழகத்தை நம்பியிருக்கும் நிலைகூட வந்து விட்டது.


கேள்வி: இந்திய இலக்கியத்தின் வால்போல நீண்டிருந்தாலும் ஈழ இலக்கியமென்றாலும் சரி, மலேசிய இலக்கியமென்றாலும் சரி, அவற்றிற்கும் தமிழகத்திற்கும் இடையில் இரு வழிப் பாதை கிடையாது. (விதிவிலக்குகள் தவிர்த்து) இவை தமிழகத்தைச் சென்றடைவதென்பது குதிரைக் கொம்பு. நிலவுகின்ற இந்தச் சூழல், ஒரு படைப்பாளியாக உங்களைத் திருப்திப்படுத்துகிறதா?


கருணாகரன்: இந்தியாவின் இந்த ஒருவழிப் பாதைக் கொள்கையைக் குறித்து இந்தியப் படைப்பாளிகளிடத்திலும் அரசியலாளர்களிடமும் இன்னும் வெட்கப்படும்படியான மௌனமே நீடிக்கிறது. இது மிகப் பெரிய தவறான அணுகுமுறையும் நடைமுறையுமாகும்.



அவர்கள் இதைக் குறித்துச் சிந்தித்ததாகவும் இல்லை. ஆனால், இலங்கைச் சந்தையை மையப்படுத்தியும் இலங்கை வாசகர்களை கருத்திற் கொண்டும் இந்தியப் புத்தக ஆக்கல்கள் நடக்கின்றன.



இந்த நோக்கம் பிழையானது. கண்டிக்கத் தக்கது. மேல்நிலை ஆதிக்கத்தில் தாமே நீடிக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் இதன் வழியே உருவாகிறது. இந்த நிலை நிச்சயமாக மாற்றப்பட வேணும். ஆனால், இதைக் குறித்து யாரும் அக்கறை கொள்வதாக இல்லை.


கேள்வி: இலங்கையினுள் இருந்து கொண்டு இலக்கியம் படைப்பது – அதன் விரிவாக்கத்திற்குத் தடையாக உள்ளதா? புலம்பெயர்ந்த நிலையில் ஷோபாசக்தி, அ.முத்துலிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் போன்றவர்களின் பரந்த வாசக தளத்தை அடிப்படையாக வைத்து இதைக் கேட்கிறேன்.


கருணாகரன்: நிச்சயமாக. இலங்கையில் இருந்து கொண்டு இலக்கியம் படைப்பதென்பது மிகச் சவாலான விசயமே. ஊடகத்துறைக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள சவாலே இதை உணர்த்தும். இலக்கியம் இதையும் விடச் சிக்கலும் ஆழமும் கூடியது. பெரும்பாலான ஆளுமை மிக்க – வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை எந்த நிலையிலும் இழக்க விரும்பாத படைப்பாளிகள் வெளியேறிவிட்டார்கள். ஏனையோரும் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


இன்னும் தலைமறைவில் இருந்து – தங்களை மறைத்துக் – கொண்டே எழுதவேண்டிய நிலைதான் இலங்கையின் நிலவரமாக உள்ளது. இது முதற் பிரச்சினை. அடுத்தது, இத்தகைய சூழலில் எழுதியவற்றை வெளியிற் கொண்டு வருவதும் பரவலாக்குவதும் மிகச் சிரமமான காரியங்களே. அடுத்தது, இலங்கையிற் குறிப்பிடத்தக்க பதிப்பகங்கள் எதுவும் இன்றில்லை. புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள் பெரும்பாலும் தமிழகத்தையே தங்களின் பதிப்புச் சூழலுக்கான தளமாகக் கொண்டுள்ளனர். இலங்கையிலுள்ள எழுத்தாளர்களிற் பலரும்கூட இப்பொழுது தமிழகத்தை நோக்கியே நகர்கின்றனர். இறுதியாக சென்னையில் நடந்த புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சிகளில் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் அல்லது ஈழம் தொடர்பான நூல்கள் அதிக அளவில் வந்திருந்தன. இதையொட்டி இவர்கள் அங்கே கூடியிருந்ததும் கவனிக்கத்தக்கது.


இதைவிட, இங்கே நீங்கள் குறிப்பிடும் ஷோபாசக்தி, அ.முத்துலிங்கம், வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் போன்றவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைக்கு வெளியேயான இதழ்களில் அதிகமாக எழுதியவர்கள். இதனால், இவர்களுடைய எழுத்துகளின் அறிமுகப் பிராந்தியமும் அறிமுக முறைமையும் வேறாகவே இருந்துள்ளன. ஆனால், இவர்களிற் பலரை (சேரனையும் ஜெயபாலனையும் தவிர்த்து) இன்னும் இலங்கையின் சராசரி வாசகர்கள் முறையாக – முழுமையாக அறியவில்லை. காலப்போக்கில் பிரமிளுக்கு நேர்ந்ததைப்போல இவர்கள் இயங்குகின்ற பிராந்தியங்களை மையப்படுத்தியே இவர்களின் படைப்புகள் அணுகப் படலாம். ஆகவே, இலங்கையிலிருந்து எழுதுவதென்பதும் அதை வெளியே பரவலாக்குவதென்பதும் மிகச் சிக்கலான – சிரமங்கள் நிறைந்த காரியமே.


கேள்வி: சரி, தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய சமூக மாற்றங்களில் முதன்மையானது பெண்களைப் பற்றிய கருத்தியல் மற்றும் செயற்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம். இந்தக் காலப்பகுதி வரையான (1990) உங்கள் அனுபவங்களில் இவற்றை எப்படி உணர்கிறீர்கள்?


கருணாகரன்: 80 களில் பல இயக்கங்களிலும் ஆளுமை மிக்க பெண் போராளிகள் இணைந்தியங்கினார்கள். பெண்களின் ஆற்றல்களையும் ஆளுமையையும் வெளிப்படுத்திக் காட்டியதில், பெண்களின் பரிமாணங்களைத் தமிழ்ச் சமூகத்திற்குக் காண்பித்ததில் ஈழப்போராட்டத்துக்கு முக்கியமான இடமுண்டு. முக்கியமாக அது வரையறைகளைத் தகர்த்தது. புதிய வெளியை அது விரித்தது. பெண்களுக்குக் காட்டிலும் கடலிலும் செயற்படுவதற்கு அது இடமளித்தது. சீதைக்குப் பின்னர் காட்டில் பெண்கள் வாழ்ந்ததற்கான எந்தச் சுவட்டையும் எந்த வெளிப்பாட்டிலும் நாம் காணவில்லை. ஆனால், ஈழப் போராட்டம் அதை மாற்றிப் புதிய வெளிகளை உருவாக்கியது. பெண்கள் தனித்துக் காட்டில் இயங்கவும் கடலிற் போரிடவும் கூடிய வல்லமைக்கு அது வாய்ப்பைக் கொடுத்தது. துப்பாக்கியும் பீரங்கியும் போர்க்களமும் பரிச்சயமாகிய தமிழ்ப் பெண்கள் உருவாகினார்கள். சமூக இயக்கங்களில், மக்கள் அமைப்புகளில் பெண்கள் ஆற்றலுடன் செயற்பட்டார்கள்.


அதைப் போலக் கண்டம் விட்டுக் கண்டத்துக்கு அவர்கள் தனியாகச் செல்லும் ஒரு விதியை – ஒரு தேவையை – ஒரு வாழ்க்கையை அது ஏற்படுத்தியது. இதெல்லாம் இதுவரையான தமிழ்ப்பெண்களின் வாழ்க்கைப் பரப்பில் நிகழ்ந்திராத அனுபவங்கள்; மேலும் நடந்திராத விசயங்கள்.


இந்தக் காலப்பகுதியில் பெண்களின் சிந்தனை வெளிப்பாட்டிலும் பொதுப்பரப்பில் அவர்களுடைய பிரசன்னம் என்ற அளவிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதற்கான ஆதாரமாக நாங்கள் ‘சொல்லாத சேதிகள்’ என்ற கவிதைத் தொகுப்பைப் பார்க்கலாம்.


ஆனால், பெண்களைப் பற்றிய நமது சமூகக் கருத்தியலில் பெரிய மாற்றங்களைக் காணமுடியவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட, வலுவான அரசியல் அடித்தளத்தைப் பெண்ணரசியல் கொண்டிருக்கவில்லை என்பதே இதற்குக் காரணம். ‘தேசிய விடுதலைப் போராட்டம்’ என்ற பெரு மையப்பரப்பில் பெண்ணரசியல் ஒடுங்கி விட்டது. ஒற்றைப் பரிமாணப்படுத்தப்பட்டுவிட்டது.

இதனால், இன்னும் பெண்களைத் தமது வரம்புகளுக்குள் அடக்கி வைத்திருக்கவே விரும்புகிறது தமிழ்ச் சமூகம். நான் முன்னரே குறிப்பிட்டிருப்பதைப்போல, பெண்கள், பெண் என்ற காரணத்துக்காகவே அவர்களின் முன்னேற்றத்தைக் குறித்து அங்கீகரிக்கத் தவறுகின்ற பொதுப்போக்குத் தொடர்ந்து நிலவுகிறது.

பொதுவெளியிற் பெண்ணையும் பெண்ணின் ஆளுமையையும் ஏற்றுக்கொள்ளவும் அங்கீகரிக்கவும் தயாராக இல்லை. இதுதான் யதார்த்தம்.

‘முன்னாள் போராளிகள்’ என்று சொல்லப்படுகிற பெண்போராளிகளை இன்று சமூகம் எதிர்கொள்ளும் முறைகளைப் பார்த்தால், பெண்களைக் குறித்த பார்வைகளில் எந்தப் பெரிய முன்னேற்றமும் இல்லை என்றே சொல்வேன்.

இடையில் போராளிப் பெண்களைக் குறித்து எழுப்பப்பட்ட மதிப்பு மற்றும் வியப்புப் பிம்பங்கள் எல்லாம் புலிகளின் வீழ்ச்சியோடு சருகாகி விட்டன. இவர்களுக்கே இந்த நிலை என்றால், சமூகத்தில் சாதாரணர்களாக இருக்கும் ஏனைய பெண்களின் நிலையைப்பற்றி நாம் அதிகம் பேசத்தேவையில்லை. பெண்களைச் சுற்றிப் பின்னப்பட்டிக்கும் நெருக்கடி வளையங்கள் இன்னும் அகன்று விடவில்லை. பெண்களைக் குறித்த அதே பார்வைகள், அதே அனுமானங்கள், அதே அணுகுதல்கள்…

இவ்வளவு பெரிய வீரத்தையும் தியாகங்களையும் சமகாலத்திலேயே செய்த பெண்களை, அவர்களுடைய ஆளுமைகளின் வியப்பை, அவர்களுக்கு வழங்கிய மதிப்பையெல்லாம் இவ்வளவு சடுதியாகவே இந்தச் சமூகம் திரும்பப் பிடுங்கிக் கொண்டது. இதை விடக்கொடுமையான துயரம் வேறென்ன?

கேள்வி: ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட பதிலாக அல்லாமல், ஈழப்போராட்ட வரலாற்றின் வழியான மனநிலையில் உங்கள் பதிலை எதிர்பார்த்தே 1990 என ஒரு கால கட்டத்தை வகுத்திருந்தேன். ஆனால், நீங்கள் நான் கேட்கவிருந்த கேள்விக்கான பதிலையும் ஓரளவிற்குச் சொல்லி விட்டீர்கள். இருந்தாலும் கேட்கிறேன். நாம் உருவாக்கியிருந்த பெண் தொடர்பான மாற்றங்களென்பது, மாறுபடும் அரசியல் நிலவரங்கள் போல சமுதாயத்தில் ஏற்பட்ட தற்காலிக மாற்றமென்பது போலவே தெரிகிறது. ஏனெனில், நீங்கள் சொன்னதைப்போல, முன்னாள் போராளிகளைச் சமூகம் எதிர்கொள்ளும் முறையே உதாரணமாகிறது. ஏற்பட்ட அந்த மாற்றம் இந்தச் சமூகத்தினால் தற்காலிகமானதென (தவிர்க்க முடியாமல்) தனக்குள் செய்து கொண்ட சமாதானமென உணர்கிறீர்களா? சனல் – 4 வீடியோவின் பெண்ணுடல் தொடர்பான காட்சிகளின் அதிர்ச்சி, நாம் பல தசாப்தங்களாக உருவாக்கி வைத்திருந்த பிம்பங்களைத் தகர்த்து விட்டதெனச் சொல்ல முடியுமா?

கருணாகரன்: நிச்சயமாக இது தற்காலிகத் தோற்றப்பாடே. அரசியல் நிலவரங்கள் நிச்சயம் மாறுபடும். அது அசைவுகளின் விளைவினால் உருவாகுவது. சமூக அசைவுகள், உள்நாட்டின் அரசியல், பொருளாதார ரீதியில் ஏற்படும் அசைவுகள், சர்வதேச நிலவரங்களினால் ஏற்படும் அசைவுகள், தொழில்நுட்பம் மற்றும் ஊடக இயக்கம் எனப் பலவற்றால் மாற்றமடையும். ஆனால், இந்த மாற்றம் என்பது வளர்ச்சியை நோக்கியதாக – தவறுகளைக் களைவதாக இருக்க வேண்டும். அப்படியானாற்தான் அதில் ஒரு தர்க்க ரீதியான வளர்ச்சி இருக்கும்.

ஆனால், ஈழத்தமிழ் அரசியலில் இந்த அடிப்படை இல்லை. அது தற்காலிக மாற்றங்களோடு மட்டுப்பட்டுள்ளது. எனவே இதை முன்னிறுத்தி பெண்களின் நிலையைப் பற்றி நாம் விவாதிக்கும்போதும் புரிந்து கொள்ள முற்படும்போதும் பெண்கள் தொடர்பாகக் கொண்டிருந்த கடந்த கால அணுகுமுறைகளும் மதிப்பீடுகளும் தற்காலிகமானவையே. பெண்களைத் தேசிய அரசியல் முன்னெடுப்புக்காகப் பயன்படுத்திய அளவுக்கு அவர்களுடைய அரசியல் விடுதலைக்கான வெளியை அளிக்கவில்லை. இதனாற்தான் முன்னாட் பெண் போராளிள் சமூகத்தில் பல எதிர்நிலைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.


இதை மறுத்தால், நம்மால் சரியான இடத்துக்கு நகர முடியாது. நீங்கள் கேட்டிருப்பதைப் போல, பெண்கள் தொடர்பாக ஏற்பட்ட மாற்றமானது, போராட்ட அமைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் அதனோடு இணைந்திருந்த மாற்றமாகவுமே மட்டுப்பட்டுள்ளது. அல்லது அவ்வாறே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


என்றபடியாற்தான், போராட்ட அமைப்புகளின் வீழ்ச்சியோடு, புலிகளின் வீழ்ச்சியோடு பெண்கள் தொடர்பாக வைத்திருந்த வியப்புகளையும் பெண்களுக்கு வழங்கியிருந்த மதிப்பையும் தமிழ்ச் சமூகம் மீண்டும் பிடுங்கிக் கொண்டது.


இல்லையென்றால், போராட்டத்தில் ஈடுபட்ட – ஒரு காலம் கொண்டாடப்பட்ட – பல பெண்கள் இன்று தங்களின் திருமணத்தைக் குறித்தே, சொந்த வாழ்க்கையைக் குறித்தே தீர்மானிக்க முடியாதவர்களாகவும் பொதுவாழ்வில் சகஜமாக ஈடுபடுவதற்கான தயக்கங்களோடும் இருக்க வேண்டியிருக்குமா?


அடுத்த விசயம், சனல் – 4 வீடியோவின் பெண்ணுடல் தொடர்பான காட்சிகளின் அதிர்ச்சி தொடர்பானது.


‘பெண்ணுடலைப் பற்றி நாம் பல தசாப்தங்களாக எத்தகைய பிம்பங்களை உருவாக்கி வைத்திருந்தோம்?’ என நீங்கள் எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.


அதற்கு முதல், பிம்பங்களை விடவும் நிஜத்தைப் பற்றிப் பேசவே நான் அதிகமும் விரும்புகிறேன். போரின்போது அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்களே. போரின் விளைவுகளை அதிகமாகச் சுமப்பவர்களும் பெண்களே. போர் ஒரு தரப்புக்குத் தோல்வியாக அமையும் பட்சத்தில், அந்தத் தரப்பின் பெண்கள் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுதான் யதார்த்தம். இதுதான் வரலாறு. தோற்கடிக்கப்பட்ட தரப்பின் சொத்துகளையும் பெண்களையும் சூறையாடும் வன்முறைச் செயல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. இதில் கால சூழல் வேறுபாடுகள் எல்லாம் கிடையாது.


இங்கே, போரிலே நேரடியாக ஈடுபட்டு எதிர்த்தரப்புடன் மோதியவர்களாகவும் பெண்களும் இருந்ததால், இந்த வன்மம் மேலும் அதிகரித்துள்ளது. ஆகவே அந்த வன்மத்தின் எல்லைக்கேற்ற அளவில் அதனுடைய பாதிப்பும் நிகழ்ந்துள்ளது.


ஆனால், ஈழப்போராளிப் பெண்கள் ‘வீரி’களாகவும் நெருக்கடிச் சூழலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உயிரையே கருவியாகப் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் நாம் நோக்க வேணும்.


கேள்வி: நீங்களிருந்த ‘ஈரோஸ்’ (EROS) அமைப்பு 1990 இல் கிட்டத்தட்ட இல்லாமற் போகிறது. (பிளவு படுகிறது எனவும் கொள்ளலாம்). தலைவர் வே. பாலகுமாரன் உட்பட நீங்கள் பெரும்பாலானவர்கள் புலிகளுடன் சேர்ந்து விடுகிறீர்கள். உங்களது தேர்வு விடுதலைப் புலிகளாக இருக்கக் காரணம் என்ன? உங்கள் தெரிவிலிருந்த இயக்கங்கள் அல்லது விடயங்களில் புலிகள் என்ன விதத்தில் முதன்மையானவர்களாக இருந்தனர்?


கருணாகரன்: 1990 ஜூனில் ஈரோஸ் அமைப்பு வெளிப்படையாகவே – உத்தியோக பூர்வமாகவே கலைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணத்தில் வைத்து திரு. வே. பாலகுமாரன் அறிவித்தார். இதன்மூலம் அந்த அமைப்பிலிருந்தவர்களைச் சுயாதீனமாகச் செயற்படவும் தீர்மானமெடுக்கவும் கூடிய ஒரு சூழலை அவர் உருவாக்கினார். இதன் மறுபக்கம், அந்த அமைப்பிலிருந்தோரை அவர் பாதுகாத்தார். இது முக்கியமான ஒன்று. இதில் விமர்சனங்கள் இருந்தாலும் இத்தகைய ஒரு தீர்மானத்தின் மூலமாக அந்த அமைப்பிலிருந்தவர்கள் பாதுகாக்கப்பட்டனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.


தொடர்ந்து அவர் புலிகளுடன் இணைந்து செயற்படத் தொடங்கினார். அவருடன் சிலரும் புலிகளுடன் உறுப்பினர்களாக இணைந்தனர். ஆனால், பாலகுமாரனின் இயல்பும் மனநிலையும் புலிகளிற்கு வெளிவளையத்தில்தான் இருந்தது. இதேவேளை நான் அவர்களுடன் உறுப்பினராக இணையவில்லை.


ஈரோஸின் சிதைவு தந்த படிப்பினைகள் என்னை ஒரு எல்லையில் நிறுத்திக் கொண்டன.


அதனால், வாழ்கின்ற சூழலில், வரையறுக்கப்பட்ட பொதுவெளியொன்றில் நிற்பதே உகந்தது என்று தீர்மானித்தேன்.


அதேவேளை புலிகளின் பாத்திரத்தையும் புலிகளிடமிருந்த குறைபாடுகளையும் விமர்சனங்களையும் நான் உட்படச் சில நண்பர்கள் புரிந்தேயிருந்தோம். எங்களுடைய இந்த நிலைப்பாட்டைப் புலிகளும் புரிந்திருந்தனர்.


இதேவேளை, நீங்கள் சொல்வதைப்போல ஈரோஸ் அமைப்புப் பிளவு பட்டதாக நான் உணரவில்லை. அது செயலிழந்தே விட்டது.


கேள்வி: இப்போது யோசிக்க, அன்று நீங்கள் எடுத்த முடிவு சரியென்று அல்லது தவறென்று ஏதாவது உணர்வுகளுண்டா?
கருணாகரன்: அதில் சரியும் உண்டு. தவறும் உண்டு. அது ஒரு யதார்த்த நிலை. இன்று எல்லாமே வருத்தத்துக்குரியனவாகி விட்டன. ஆறுதலளிக்கக்கூடியதாக இருப்பது சனங்களோடு இருக்கிறேன் என்பது மட்டுந்தான்.
கேள்வி: ஈழ இலக்கியப் பரப்பில் ‘வெளிச்சம்’ கலை, இலக்கிய சஞ்சிகையின் வகிபாகம் முக்கியமானது. அதன் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியிருக்கிறீர்கள். ஒரு போராட்ட இயக்கத்தின் கலை, இலக்கிய அரசியல் வெளிப்பாட்டு ஊடகங்களில் முக்கிய பொறுப்பிலிருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்? அவை சவால் மிக்கதாக இருந்ததா?

கருணாகரன்: ஒரு அரசியல் அமைப்பின் வெளியீடானது – ஊடகமானது – அந்த அரசியல் அமைப்பின் எதிர்பார்ப்பு மற்றும் சம்பிரதாயபூர்வமான வரையறைகளுக்கு உட்பட்டிருக்கும்; பரப்புரைத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு அப்பால் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் வெளிச்சத்தை வெளிக்கொணர்ந்தோம். இதை நான் ஆரம்பத்திலேயே வலியுறுத்தியிருந்தேன்.

வெளிச் சூழலிலும் பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதைப் புரிந்து கொண்டு, தங்கள் வரையறைகளைக் கடந்து ஒத்துழைத்தனர்.

வெளிச்சத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் எழுதினார். அ. யேசுராசாவும் எழுதினார். அன்ரன் பாலசிங்கமும் எழுதினார். தேசிய கலை, இலக்கியப் பேரவையைச் சேர்ந்த க. தணிகாசலமும் (தாயகம் ஆசிரியர்) எழுதினார். பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, கலாநிதி சபா ஜெயராசா ஆகியோரும் எழுதினர். செங்கை ஆழியானும் எழுதினார். சட்டநாதனும் எழுதினார். டானியல் அன்ரனியும் எழுதினார். முருகையன், குழந்தை ம. சண்முகலிங்கம், சாந்தன், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி, சு.வி, நிலாந்தன், மு.திருநாவுக்கரசு, த.கலாமணி, பா.அகிலன் என சகல தரப்பினரும் எழுதினர். மேலும் பலரை எழுதுவதற்கு நாங்கள் தூண்டியிருக்கலாம். ஆனால், அன்றைய நிலையில் ‘வெளிச்சம்’ இதழ் வெளிவந்த களத்துக்கு வெளியே இருந்தவர்களை எழுதக்கோருவதற்குப் பொருத்தமற்ற சூழல் நிலவியது. மற்றும்படி சாத்தியப்பட்ட அளவில் ஈழத்தின் இலக்கிய ஆளுமைகளிற் பெரும்பாலானவர்கள் எழுதுவதற்கான, பங்கேற்பதற்கான களத்தைத் திறந்தோம். மேலும் ஏராளம் புதியவர்கள் வெளிச்சத்தில் தொடர்ந்து அறிமுகமாகியவாறேயிருந்தனர். முஸ்லிம் படைப்பாளிகளைப் போதிய அளவில் உள்ளடக்க முடியாமற்போனமை பெரும் குறைபாடே. ஒரு சிலர் மட்டும் எழுதியுள்ளனர்.



இதேவேளை, வெளிச்சத்தின் அரசியற் பங்களிப்புப் போதாது என்ற குற்றச்சாட்டுகள் வெளியீட்டாளர்களின் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டன. அந்த நெருக்கடியை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தீவிர நிலைப்பாடுடைய அமைப்பில் வெளிச்சத்தை இவ்வளவுக்கு நெகிழ்ச்சியுடையதாகக் கொண்டு வந்தது பெரிய விசயம். குறிப்பாக எந்தத் தரப்பின் மீதான வசைகளுக்கும் தீவிர எதிர்ப்புக்கும் குறிசுடுதல்களுக்கும் வெளிச்சம் இடமளிப்பதைத் தவிர்த்தது. தவிர, எல்லோருக்குமான இடத்தை அளிப்பதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், யதார்த்த நிலைமையை உணர்ந்து கொள்ளக் கூடியவர்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வர். பின்னர் காட்சி ஊடகத்திற் பணி.. இந்தப் பணியில் அதிக சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டேன்.



ஒரு காட்சி ஊடகத்தின் பரிமாணங்கள் எப்படி அமையவேண்டும் என்பதில் பலருக்கும் புரிதற் குறைபாடுகள் இருந்தன. ‘பரப்புரை ஊடகமாக அதை இயக்க வேண்டும்’ எனப் பலரும்… இல்லை, அதற்கும் அப்பால், ‘அது ஒரு பொதுத்தளத்தில் இயங்குவதாக இருந்தாலே அதற்கான மதிப்பு அதிகமாகும்’ எனச் சிலருமாக ஒரு உள்மோதல் அப்போது நடந்தது. இதில் நான் வெற்றியடைய முடியவில்லை. நான் நிகழ்ச்சிக்காக அழைத்தவர்களிற் பலர் பங்கேற்க முடியாமல் திருப்பி அனுப்பப் பட்டனர். இதன்காரணமாக நான் பின்னகர வேண்டியிருந்தது.

கேள்வி: நீங்கள் போராட்ட வரலாறு முழுவதும் எரியும் நிலத்திலேயே வாழ்ந்து வந்த நாட்களைப் பற்றிச் சிலர் பேசியுமுள்ளனர். குறிப்பாக ஐ.நா. நிபுணர்குழு கூட அது பற்றி ஓரளவு பேசியிருக்கிறது. அந்த நாட்கள் எப்படியிருந்தன? அது பற்றி முழுமையாகவும் சரியாகவும் பேசப்பட்டு விட்டது என நினைக்கிறீர்களா?

கருணாகரன்: அது மரணத்தோடு வாழ்ந்த நாட்கள். மரணத்தோடு சவாலிட்ட நாட்கள். நான் முன்னரே எழுதியதைப் போல அந்த நாட்களில் எந்த மதகுருவுக்கும் எந்தக் குழந்தைக்கும் மதிப்பில்லை. முதுமைக்கு, இளமைக்கு, பொருளுக்கு, புகழுக்கு, கோவிலுக்கு, கோட்டைக்கு எதற்கும் மதிப்பேயில்லை. பிணத்துக்கும் மரியாதையில்லை. உயரோடிருக்கும் மனிதனுக்கும் மதிப்பில்லை. எனவேதான் யுத்தக் குற்றங்கள் தாராளமாகின.
போரிட்ட இரண்டு தரப்புகளுக்கிடையில் வெற்றி – தோல்வி என்ற இரண்டு புள்ளிகளைத் தவிர வேறு எதுவும் புலப்படவில்லை.

ஆனால், அந்த நாட்களைப் பற்றி வெளிவந்த எந்தப் பதிவிலும் இந்த முழுமையில்லை. அப்படி ஏற்படவும் முடியாது. ஏனென்றால், அவை பல முனைகளில் நடந்த பல்வேறு கொந்தளிக்கும் நிகழ்ச்சிகள். உயிர் வலியுடைய பல கணங்கள். ஒவ்வொருவருக்கும் பல்வேறு அனுபவங்கள். மிக ஆற்றலுடைய படைப்பாளிகள் அந்த நாட்களை ஓரளவுக்கு தங்கள் எழுத்தில் உள்ளடக்கலாம்.

ஐ.நா நிபுணர்குழு அறிக்கை வெளியே இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணம். அதற்குப் போதிய தரவுகளும் தகவல்களும் இருந்திருக்கலாம். ஆனால், அதிலும் முழுமையில்லை. அதேவேளை அது முக்கியமான ஒரு ஆவணம். நீங்களும் அந்தக் களத்தில் நின்றவர் என்பதால், உங்களுக்கே இதைப்பற்றித் தெரியும்.

முடியாத கதைகள், நாட்கள், கணங்கள், நிகழ்ச்சிகள், பிரச்சினைகள், அவலங்கள்…. உண்மைகள்.

கேள்வி: தமிழர்கள் எல்லா நம்பிக்கைகளும் வழிமுறைகளும் தோல்வியடைந்த பின்பு, இப்போது அவர்களிடம் போர்க்குற்ற ஆதாரம் என்ற ஒன்றே வெளிப்படையான ஆயுதமாக உள்ளது. இந்த நிலையில், புலிகள் தரப்பு குற்றங்களை முன்னிலைப்படுத்துவது அரசிற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தும், தமிழர்களின் போராட்ட முன்னெடுப்புகளை மழுங்கடிக்கும் என்றும் ஒரு வாதமுண்டல்லவா?

கருணாகரன்: முதலில் நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். உலகத்துக்குப் பகிரங்கமாகத் தெரிந்த விசயங்களை நாம் மறைப்பதும் நிராகரிப்பதும் எம்மைப் பலவீனப்படுத்தும். உண்மைகளே எப்போதும் நம்பகத்தன்மைகளையும் பலத்தையும் ஏற்படுத்துவன. பொய்களைச் சொல்லுந் தோறும் நாங்கள் தள்ளி வைக்கப்படுகிறோம். சந்தேகிக்கப் படுகிறோம். தோற்றுக் கொண்டிருக்கிறோம். பொய்களுக்கு யாரும் காது கொடுப்பதும் இல்லை. தங்கள் இதயத்தைத் திறப்பதும் இல்லை. எந்தப் பொய்யினாலும் இதயத்தைத் திறந்து விடமுடியாது. உண்மைக்கே அந்தச் சக்தி உண்டு. இதுவே கடந்த காலத்தில் நடந்தது. தவறுகளுக்காக வருந்துவதும் சுய விமர்சனத்தின் அடிப்படையில் அவற்றை ஒப்புக் கொள்வதும் நம்மை மேல்நோக்கி உயர்த்தும்; வழிகளைத் திறக்கும். மற்றும்படி புலிகள் களத்தில் இல்லாத நிலையில் இது தேவையற்ற அச்சமாகும்.

கேள்வி: யுத்த வலய நாட்களை யுத்த வலயத்துக்கு வெளியிலிருந்த அனேகர் ஏற்றுக்கொள்ளாத ஒரு போக்கே நிலவுகிறது. ஒரு தரப்பின் மீதான குற்றச்சாட்டுகளையே அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இது என்ன வகையான விளைவுகளை ஏற்படுத்தும்?



கருணாகரன்: யாருடைய விருப்பங்களும் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், பொதுத்தளத்திற்கு என்று சில கடப்பாடுகளும் பெறுமதியும் முறைமைகளும் உண்டு. அதைப் பின்பற்றவில்லை எனில் எதுவும் பயனற்றதே.



ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டும் எந்தக் காரியமும் எத்தகைய அணுகுமுறையும் வெளியரங்கில், பொது அரங்கில் ஏற்றுக்கொள்ளப் படாது. இத்தகைய அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் கடந்த காலத்தில் எத்தகைய பெறுமதிகளையும் தரவேயில்லை. ‘கறுப்பு – வெள்ளை’’துரோகி – தியாகி’ அணுகுமுறையில் இருந்து இவர்கள் விடுபட வேண்டும். ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதுடன் நின்று விடாமல், அதைப் பலமாக்கச் செயற்படவேணும்.

விமர்சனம், சுய விமர்சனம் என்பவற்றுக்கு இடமளித்துத் தவறுகளைக்கண்டுணர்ந்து அவற்றைக் களைய முயற்சிக்க வேணும். பகிரங்கமான தவறுகளையே மூடிமறைக்க முயலும் எத்தனங்கள், உண்மைகளையும் பெறுமதியற்றவையாக்கி விடும். உண்மைகளையே சிதறடித்து விடும்.

மட்டுமல்ல, தோல்விகளையே நிரந்தரமாக்கி விடும். தோல்விகள் ஏற்படுவதொன்றும் இழுக்கானதல்ல. ஆனால், நிரந்தரமாக வெல்லமுடியாதிருப்பதே வெட்கக்கேடானது.

இது தகவல் யுகம். எதையும் மூடிமறைக்க முடியாது. அப்படி மறைக்க முற்பட்டால் நாம் சந்தேகிக்கப்படுவோம். கைவிடப்படுவோம். மூடப்பட்ட எதையும் திறப்பதே இன்றைய உலகின் அரசியல் நெறி. அண்மைய உலக உதாரணங்கள் பலவும்கூட இதற்குச் சான்று.

கேள்வி: கிட்டத்தட்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் முழுவதும் அதனுடன் இருந்திருக்கிறீர்கள். இப்போது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க என்ன வகையான உணர்வு மிஞ்சுகிறது? வெளிப்படையாகப் பேசுங்கள்?

கருணாகரன்: நெஞ்சு நிரம்பிய மாபெருங்கனவுகளோடு எங்கள் இளமைப்பருவத்தில் போராடப் புறப்பட்ட நாங்கள், அந்தக் கனவுகள் பொய்த்துப் போன நிலையில் – கருகிப் போன நிலையில் இன்றிருக்கிறோம்.

இதற்கு எல்லோருமே பொறுப்பாளிகள். விகிதங்களில் வேறுபாடுகள் இருக்கலாம். சனங்கள் சிந்திய கண்ணீருக்கும் சிந்திய குருதிக்கும் இழந்த உயிர்களுக்கும் வெற்றிக்கும் தோல்விக்கும் எல்லோரும் பொறுப்பாளிகள். ஆகவே இனியாவது, சனங்களை சுயாதீனமாக விட்டு விடுவது நல்லது. கண்விழித்துச் சுயாதீனமாக எழுந்து நிற்க முயலும் ஒரு கன்றுக் குட்டியைப் போல, கூட்டிலிருந்து சுயமாகவே பறக்கப் பழகும் ஒரு பறவைக் குஞ்சைப் போல அவர்கள் இயங்கட்டும். அவர்களால் முடியும் எதையும் செய்ய; சாதிக்க; எதையும் கற்றுக் கொள்ள.

எத்தனை பிதாமகர்கள், எத்தனை தலைவர்கள், எத்தனை அமைப்புகள், எத்தனை கோட்பாடுகள், எத்தனை வழிமுறைகள், எத்தனை ஏற்பாடுகள், எத்தனை முயற்சிகள், எத்தனை நம்பிக்கையூட்டல்கள், எத்தனை எத்தனை நியாயப்படுத்தல்கள்…?

ஆனால், இறுதியில்?

கேள்வி: ஓட்டு மொத்தமாக நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் என்பது அரசியல் தவிர்த்து, சமூகப் பொருளாதார ரீதியில் ஈழத்தமிழரிடத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?

கருணாகரன்: எதிர் நிலைகளையே ஏற்படுத்தியுள்ளது.

நிலக்காட்சிகள், அடையாளங்கள் எல்லாம் சிதைந்து விட்டன. ஆயிரக்கணக்கான உயிர்களின் இழப்பு – இளைய தலைமுறையின் இழப்பு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. பல ஊர்களும் பட்டினங்களும் முற்றாகவே அழிந்து விட்டன. ஒரு பெருந்தொகைப் பெண்களும் சிறுவர்களும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உளப்பாதிப்புள்ளாகியோரின் தொகை மிக அதிகமாகியுள்ளது…. வளங்களும் பொருளாதார அடிப்படைகளும் முற்றாகச் சிதைந்து விட்டன. சுயபொருளாதாரப் பொறிமுறை, சுதேசியப் பொருளாதாரம் எல்லாமே சிதைந்து போயிற்று. கையேந்துவோரின் தொகை மூன்றில் இரண்டுக்கும் அதிகம். இப்போது எல்லோரும் கடனாளிகள். வட்டிக்கும் முதலுக்குமாக மாடாக உழைக்கும் காயம் பட்டோர்.

வாழ்க்கையிலும் அரசியலிலும் எதற்கும் உத்தரவாதமற்ற – ஸ்திரமற்ற நிலை உருவாகியிருக்கிறது.

பதிலாக யுத்தத்தின் பேரால் ஒரு தொகையினர் களத்திற்கு வெளியே அரசியல் ரீதியாகவும் வாழ்க்கை நிலையிலும் பொருளாதார நிலையிலும் பரவாயில்லாத – பாதிப்பில்லாத ஒரு சூழலில் வாழ்வதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது. அவர்களிடமும் கவலைகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் அபாயவெளிக்கு அப்பால் இருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் சுதந்திரமாகவும் சுயாதீனமாக இயங்கக்கூடியவாறும்.

அவ்வளவுதான்.

கேள்வி: அரசியல் ரீதியான அடைவு மட்டம் என்ன?

கருணாகரன்: மிகப் பெரிய வீழ்ச்சி. தமிழர்கள் எல்லாத் தரப்பினாலும் இலகுவாக நகர்த்தப்படும் ‘காய்கள்’ என்ற சுயாதீனமற்ற நிலையில். தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவு விரிசலடைந்துள்ளது.

கைவிடப்பட்ட கொடி. கைவிடப்பட்ட கட்சி, காலங்கடந்த சின்னம், மிகப் பழசாகிப் போன சுலோகங்களும் பிரகடனங்களும் வழிமுறைகளும் என்றவாறாக….

அன்று சேரன் எழுதினார் ‘காற்று வீசவும் அஞ்சும் ஓரிரவில்… என்று. இப்போது தீபச்செல்வனோ அல்லது வேறொருவரே இந்தக் கவிதையை மீண்டும் இன்னொரு முறையில் எழுதுகிறார்கள். அவ்வளவுதான். எங்கள் சந்திகளிலும் வீதிகளிலும் அன்று எச்சரிக்கையோடு நின்ற படையினர் இன்று சாவகாசமாகத் திரிகின்றனர். இதில் யாருக்கு முன்னேற்றம் என்று நான் இன்னும் சொல்லத் தேவையில்லை.

கேள்வி: இதுவரையான தமிழர்களின் போராட்ட முறைகள் பலனற்றுப் போனபின் அவர்கள் புதிய முறைகளை நாட வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களது அரசியல் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்கள் எதிர்காலத்தில் நாடும் வழிமுறையாக எதிருக்குமென நினைக்கிறீர்கள்?

கருணாகரன்: நிச்சயமாகப் புதிய முறைமைகளுக்குச் செல்லவேண்டிய அவசியத்தில் தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றனர். இதற்கு வளமான ஒரு படிப்பினையைத் தமிழர்களின் கடந்த காலம் கொடுத்துள்ளது. அவர்கள் யதார்த்தத்துக்கு மாறாகச் சிந்திக்கும் பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும். மிகைத்தன்மைகளிலிருந்தும் புனைவுகளிலிருந்தும் மீண்டு, ஜனநாயகம் குறித்த புரிதலுக்குச் செல்ல வேணும். மக்களை நம்பும் அரசியல் வழிமுறையொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். மக்களை அரசியலுக்காகப் பயன்படுத்தும் போக்குகளைக் கைவிட வேண்டும். குறைந்த பட்சமேனும் சனங்களோடு இருந்து, சனங்களை அறிந்து, சனங்களுக்காக இயங்கக்கூடிய ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். தவறுகளை இனங் கண்டு, ஒத்துக் கொண்டு அவற்றைக் களைய வேண்டும். இத்தகைய அடிப்படைகள் இருந்தாலே புதிய அரசியல் எதிர்காலம் குறித்த சாத்தியங்கள் உருவாகும்.

கேள்வி: ஈழப் போராட்டம் எனும்போது இந்தியாவின் பங்கையும் தலையீட்டையும் தவிர்க்க முடியாது. இயக்கங்களின் உருவாக்கத்திற்கும் வீழ்ச்சிக்கும் அந்த நாடே ஏதோ ஒரு விதத்தில் காரணமாகியிருக்கிறது. எல்லா இயக்கங்களின் பின்தளமும் ஒரு காலத்தில் இந்தியாவிலேயே இருந்தது. இந்தியர்களின் மறைமுக நிகழ்ச்சி நிரல் வெளிப்பட வெளிப்பட இயங்கங்கள் இலங்கைக்கு வரத் தொடங்கின. மாறியபடியிருந்த பூகோள அரசியற் சமன்பாடுகளின் போதெல்லாம் தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் பலியாடாகிக் கொண்டிருந்தனர். இது தவிர்க்கவே முடியாததா? அல்லது எமது தரப்பில் ஏதேனும் போதாமைகளுண்டென நினைக்கிறீர்களா?



கருணாகரன்: பிராந்திய சக்திகளின் ஆதிக்கம் அல்லது தலையீடு, அதைப் போல மேற்குலகின் அழுத்தங்கள், சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் அல்லது நெருக்கடிகள் என்ற வகையில் இந்த மாதிரி நெருக்கடிகள் இலங்கைக்கு – ஈழப் போராட்டத்துக்கு இருந்தே தீரும். ஈழப் போராட்டத்துக்கு மட்டுமல்ல ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடுகின்ற பலருக்கும் ஏற்படுகின்ற நெருக்கடி இது; அவலம் இது.



பலஸ்தீனப் போராட்டம், குர்திஸ் போராட்டம் போன்றவற்றை அவதானித்தாலே இது தெளிவாகப் புரியும்.

ஆனால், இந்தப் ‘பலியாட்டு அரசியலை’ நாம் வழிமாற்ற முடியும்; வழிமாற்ற வேண்டும். அதுவே அரசியற் தலைமைத்துவத்தின் ஆற்றலாகும்.



ஆனால், ஈழத்தமிழர்களின் அரசியற் தலைமைகளோ ஒன்றில் முழு எதிர்ப்பு அல்லது முழுச் சரணடைவு என்றவாறே செயற்படுகின்றன. இதனாற்தான் போராட்டம் பின்னடைகிறது. சனங்களும் அழிவைச் சந்திக்க வேண்டியுள்ளது.

அரசியல் என்பது ஒரு விஞ்ஞானபூர்வமான பொறிமுறைகளையுடைய செயல்முறை. இந்தப் பொறிமுறைகள் வெற்றியளிக்கவில்லை எனில், அதன் விளைவு உயிர்களையே பலியிடும். வாழ்வை அழித்து விடும். அதனோடு சம்மந்தப்பட்ட தரப்பை அழித்தே விடும். அது எத்தனை ஆயிரம், லட்சம் என்ற கணக்கில் என்றாலும்.


பிற துறைகளை விட அரசியல், மிக அபாயங்கள் நிறைந்த துறை. என்பதால் எல்லாவற்றையும் விட மிக உயரிய அவதானங்களும் கூர்மையான அறிவும் பொறுப்புணர்வும் இந்தத் துறையிற் செயற்படுவோருக்கு அவசியம்.


அவ்வாறு அமையும்போது நிச்சயமாக வெற்றியை நோக்கி, நம்பிக்கையை நோக்கி முன்னகர முடியும்.


கேள்வி: கடந்த போராட்ட வரலாற்றின் பெரும்பகுதியில் அதனுடன் சேர்ந்து நின்றதன் மூலம் மதிப்புக்குரிய பாத்திரமொன்றை ஏற்றிருந்த உங்களது நிகழ்காலத்தின் மீது அல்லது உங்கள் அரசியல் மீது ஒரு தரப்பு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. குறிப்பாகச் சில ஊடகங்களின் ஆசிரியர் பீடங்கள் கூட நேரடியாகக் குற்றம் சுமத்தியிருந்தன. இவை பற்றி நீங்கள் பொது வெளியில் இதுவரை பதிலளிக்கவும் இல்லை. எதற்காக இந்த மௌனம்? இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான உங்கள் பதிலென்ன?


கருணாகரன்: சமூக வெளியிற் செயற்படத் தொடங்கிய 1980 களின் தொடக்கத்திலிருந்தே கசப்பான அனுபவங்களையும் கடுமையான எதிர் வலையங்களையும் எதிர்கொண்டே வந்துள்ளேன். மேற்சொன்ன நிலைப்பாட்டுடன், வாழ்முறையுடன் இயங்கிய எவருக்கும் என்னவகையான அனுபவங்கள் கிட்டியிருக்கும் என்பது வரலாற்றை அறிந்தவர்களுக்குப் புரியும்.


ஆகவே கசப்புகளும் நச்சு வலையங்களும் எதிர்ப்புகளும் வசைகளும் புதிதல்ல.


தவிர, இது மௌனம் அல்ல. நான் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருக்கிறேன். என்னுடைய துறையில் இயங்கிக் கொண்டேயிருக்கிறேன்.

தமிழ்ச் சூழலிலுள்ள ‘கறுப்பு – வெள்ளை, துரோகி – தியாகி….’ அணுகுமுறையே இத்தகைய வசைகளையும் குறிசுடல்களையும் நிகழ்த்துவதற்கான காரணமாக உள்ளன. நான் சுயவிமர்சனம், சமூக விமர்சனம், மீள்பரிசீலனை என்ற அடிப்படையில், பகிரங்கமாகவே அனுபவங்களையும் உண்மையையும் கடந்த காலத் தவறுகளையும் யதார்த்தத்தையும் பேசுகிறேன். அதை எதிர்கொள்வோரிடந்தான் வேறுபாடுகளும் பிரச்சினைகளும் உள்ளன.

மேலும் விமர்சனம் வேறு. அவதூறு – வசை என்பது வேறு.


அவதூறு செய்யும் மனம் பிசாசின் மனதை ஒத்தது. அதை ஒரு போதும் குணப்படுத்தவே முடியாது. அதைத் திருப்திப்படுத்தவும் இயலாது. அதற்குப் பதிலளிக்கவேண்டிய அவசியமோ பொறுப்போ கிடையாது.


குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் முன்வைப்பவர்கள் மிகப் பாதுகாப்பான சூழலில் (உயிர்ப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, குடும்பப் பாதுகாப்பு, அடையாளப் பாதுகாப்புப் போன்றவற்றைப் பேணியவாறு) இருந்து கொண்டு, நியாயமான முறையிற் பிரச்சினைகளைப் பேசுவோரை அபாயவெளியை நோக்கித் தள்ளிவிடும் காரியங்களில் ஈடுபடுகின்றனர். உண்மையில் இவர்கள் என் போன்றவர்களை அபாயவெளியில் திட்டமிட்டுத் தள்ளுகிறார்கள். ஆனால் சூழலோ தலைமறைவு எழுத்தையே சாத்தியமாகக் கொண்டுள்ளது.

அவதூறுகளைச் செய்வோர் தமது தரப்பின் கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்குமே இடமளிக்கிறார்கள். மட்டுமல்ல அணியாகவும் செயற்படுகின்றனர். இவர்கள் அவதூறுகளிலேயே தங்களின் மையத்தைக் கட்டமைத்துக் கொண்டுள்ளனர்.


தார்மீக நெறிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் நேர்மையான விரமர்சனங்களுக்கும் நிச்சயமாகப் பொறுப்புக் கூறவேண்டும். அப்போதுதான் மேலும் நாம் மேலும் முன்னோக்கி நகர முடியும். அப்போதுதான் ஜனநாயகத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் மதிப்பளிக்க முடியும்.

அடுத்தது, நான் என்னுடைய நிலைப்பாட்டில் இருந்தே பேச விரும்புகிறேன். யாருடைய விருப்பங்களுக்காகவும் நாம் அவர்களுடைய குரலில் பேசி, மேலும் துன்பப்பட முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது. அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அடிக்கடி சொல்லும் ஒரு விசயத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தம். ‘உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் விருப்பத்துக்காக (தமிழீழக் கனவுக்காக) வன்னியிலிருக்கும் மூன்று லட்சம் சனங்கள் தங்களின் தலையைக் கொடுக்க வேண்டியுள்ளது’ என்று.


ஆகவே, இதைப் பற்றி நாம் பேசுவதுதான் முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.


மற்றவர்கள் தங்களின் அபிலாஷைகளையும் விருப்பங்களையும் வெளிப்படுத்துவது தவறல்ல. ஆனால், அதற்குரிய செயல் வடிவங்களைக் கொடுப்பதிலும் அவர்கள் பங்கேற்கவேண்டும். அதனால் வருகின்ற நன்மை – தீமைகளைச் சந்திப்பதற்கும் அவர்கள் தயாராக வேண்டும். அவ்வாறில்லாதபோது அவர்கள் தங்கள் எல்லைகளைக் குறித்த தெளிவோடு தங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அதனுடைய பாதிப்புகளை இங்கே இருப்பவர்களே அனுபவிக்க – எதிர்நோக்க – வேண்டியிருக்கும். இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. வரலாறு எத்தகைய தவறுகளையும் மன்னிப்பதேயில்லை. அதை எந்தப் பென்னாம் பெரிய சக்தி தலைமை தாங்கிச் செய்தாலும். ஆகவே, இது ஒரு விஞ்ஞானபூர்வமான அடிப்படை. இதை மறுதலிப்பவர்களுடன் எப்படி உரையாடமுடியும்?


என்னுடைய கவனமெல்லாம் அடிப்படைகளை உருவாக்குவதைப் பற்றியதே.


நேர்காணல்- யோ.கர்ணன், ம.நவீன்

வல்லினம் கலை இலக்கிய இதழ்-38 பெப்ரவரி, 2012



No comments: