Eega - நான் ஈ





ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்திரி, சை, சத்ரபதி, விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா, மரியாதை ராமண்ணா, தற்போது ஈகா, இது தவிர, ராஜண்ணா என்கிற படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமான இயக்குனர் அவதாரம் வேறு. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயமாய் இருக்கிற காலத்தில் எட்டுப்படங்கள் ஹிட் கொடுத்து, ஒன்பதாவது படமும் ஹிட்டென்றால் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. தெலுங்கு பட உலகின் முடி சூடா மன்னன், கலெக்‌ஷன்கிங் என்றெல்லாம் பேசப்படுபவர். இந்த ஈகாவின் பட்ஜெட் சுமார் முப்பது கோடி.



கதை என்று பார்த்தால் மிகச் சாதாரணமான கதைதான். தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்லன். காதலன் ஈயாய் மறுபிறவி எடுத்து வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில்தான் மனுஷன் நின்று ஜெயித்திருக்கிறார். திரைக்கதையில், மேக்கிங்கில், எனறு ஆரம்பித்து ஒவ்வொரு டிபாட்மெண்டிலும் மனுஷனின் உழைப்பு தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.



காதலனாய் நானி. இதுவரை இவரின் நடிப்பை பார்த்தவரையில் இவ்வளவு எனர்ஜிடிக்காய் நடித்துப் பார்த்ததில்லை. இவருக்கும் சமந்தாவுக்குமான காதல் காட்சிகள் ஹாப்வேயில் ஆரம்பித்து சட்டென முடிந்துவிடுகிறது என்றாலும், படம் நெடுக நானியின் ப்ரெசென்ஸ் இருப்பதைப் போலவே உணர வைத்ததில் இயக்குனரின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு நானியின் பங்கும் இருக்கிறது. காதல் காட்சிகளில் சமந்தா அலைய விடும் போதெல்லாம் அதை பாசிட்டிவான விஷயமாய் மாற்றி பேசும் இடங்களில் எல்லாம் காதல் இயல்பாக நிகழ்கிறது. சாட்டிலைட் டிஷ்ஷையும், டார்ச் லைட், ரிப்ளெக்டர் பேப்பரை வைத்து கரண்ட் கட்டின் போது லைட் கொடுக்கும் ஐடியாய் சினிமாத்தனமாய் இருந்தாலும், க்யூட். அது போல ரெண்டு வருஷமா அவ பின்னாடி சுத்துறே.. இப்பபாரு அவளுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு, லைட்டெல்லாம் போட்டு இருக்கே அவ கண்டுக்காம ஜன்னலைச் சாத்திட்டு தூங்கப் போயிட்டா? அவ உன்னை காதலிக்கவேயில்லை என்று நண்பன் சொல்ல, அதற்கு நானி, இல்லைடா அவ என்னை ரொம்பவே காதலிக்கிறா.. இப்ப கதவை சாத்தினது எதுக்குன்னா. ஒரு வேளை சாத்தாம போயி நான் அவளுக்காக இங்கேயே நின்னுட்டு இருந்தா ராத்திரி பனியில நனைஞ்சு உடம்பு சரியில்லாம போயிருமேன்னுட்டுத்தான் கதவ சாத்தி அவ தூங்க போறத சொல்லி என்னையும் தூங்கச் சொல்லுறா என்று சொல்வதும், அதை சமந்தா படுத்தபடியே கேட்டு புன்னைகைப்பதும் அதை விட செம க்யூட்.

சமந்தா படம் நெடுக மலர்ந்த பூவைப் போல ப்ரெஷ்ஷாக இருக்கிறார். அதிலும் நானியின் காஉலதலை டீஸ் செய்யும் காட்சிகளில் அவர் கண்களில் தெரியும் குறும்பும், காதலும் நன்றாக இருக்கிறது.



இவர்களை விடவும் பாராட்டப்படவேண்டிய ஒருவர் யாரென்றால் படத்தின் வில்லனாய் இருந்தாலும், ஹீரோவாக வலம் வந்து தன் சிறந்த நடிப்பால் நம்மை கட்டிப் போடும் சுதீப்தான். கண்களில் தெரியும் வில்லத்தனம், காமம், அடையத் துடிக்கும் வெறி, ஈயினால் பாதிப்பு வந்துவிடுமோ என்று கண்களில் தெரியும் பயம், என்று மனுஷன் பிய்த்து உதறியிருக்கிறார். அதிலும் முழுக்க முழுக்க, சிஜியில் ஈ எங்கேயிருக்கிறது என்று உத்தேசமாய் நடித்து ரியாக்ட் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. க்ரேட் பர்பாமென்ஸ்.



படத்தின் முக்கிய ஹீரோக்கள் மூன்று பேர், ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இசையமைப்பாளர் மரகதமணி, சிஜி செய்த மேக்ஸிமா குழுவினர். அற்புதமான ஒளிப்பதிவை அளித்திருக்கிறார் செந்தில். அதே போல இரண்டே பாடல்கள்தான் படத்தில் முழுவதுமாய் வருகிறது. மற்ற பாடல்கள் பின்னணியிசையாய் உபயோகித்திருப்பது சுவாரஸ்யம். செகண்ட் ஹாப்பில் நானி ஈயாய் மாறி சுதீப்பை துறத்த ஆரம்பித்ததும், வரும் பின்னணி இசை அட்டகாசம். அதே போல ஆரம்பக்காட்சியில் ஈ யின் சிஜி கொஞ்சம் ப்ளாஸ்டிக்காய் தெரிந்தாலும், போகப்போக, அது ஒரு கேரக்டராய் மாறி ஹீரோயினிடம் வசனமாய் இல்லாமல் ஆக்‌ஷனிலேயே பேசும் போது நாமும் இன்வால்வ் ஆவதிலேயே அவர்களின் வெற்றி தெரிந்து விடுகிறது. எனக்கு தெரிந்து சமீபத்தில் முழுக்க முழுக்க, சிஜியிலேயே எடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் நல்ல உழைப்பு என்று சொல்லக்கூடிய படங்களில் சிறந்ததாய் ஈகா இருக்கும்.

எஸ்.எஸ்.ராஜமெளலி தான் ஒர் மாஸ் எண்டர்டெயினர் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். சின்னச்சின்ன வசனங்களாலேயே படத்தில் வரும் கேரக்டர்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. “நீங்க எத்தனை மணிக்கு வருவீங்க?' “உங்க டைமுக்கு” என்பது போன்றவை உதாரணங்கள். படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் கேரக்டர்களின் ப்ரச்சனைகளைச் சொல்லி, அடுத்தடுத்து நம்மை ஆகர்ஷிக்க, சுவாரஸ்ய பின்னல்களை முடிக்கிவிட்டபடியே இடைவேளையின் போது நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். மிக சாதாரணக்கதையை எப்படி சுவாரஸ்யமாய் சொல்வது என்பது அவருக்கு கை வந்த கலை. அதை இதில் இன்னும் மெருகோடு செய்திருக்கிறார். ஒரு ஈயை வைத்து எப்படி ஆறடி மனிதனை அழிக்க முடியும் என்பதை பற்றி கொஞ்சம் லாஜிக்கலாய் யோசித்தால் சப்பென்று இருக்கும். ஆனால் அதை வித்யாசமான ஐடியாக்களோடு நம்மை சில இடங்களில் சீட்டு நுனிக்கே கொண்டு வரும் காட்சிகள் சூப்பர். அதே தமிழில் சந்தானம் செய்திருக்கும் கேரக்டரில் வேறு ஒரு நடிகர் தெலுங்கில் செய்திருக்கிறார். அந்த சின்ன காமெடி ட்ராக்கை படம் முடிந்து டைட்டில் கார்டில் முடித்திருப்பது சுவாரஸ்மான காமெடி. அதே போல சமந்தாவை எதற்காக மினியேச்சர் ஆர்டிஸ்ட் கேரக்டராய் வடிவமைத்தார் என்று யோசிக்கும் போது அதை பயன்படுத்திய விதத்தைப் பார்த்ததும் அட என்று கைதட்ட வைக்கிறார்.


மைனஸ் என்று பார்த்தால் நானி, சமந்தாவின் காதல் இன்னும் கொஞ்சம் டெப்தாய் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.மீண்டும் ஈயாகவே பிறப்பெடுப்பது, என்பது போன்ற விஷயங்கள்.அது மட்டுமில்லாமல் இரண்டாவது பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் லேக் இருந்தாலும், அதைல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பது போல க்ளைமேக்ஸில் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கும் இபப்டம் நிச்சயம் தென்னிந்திய சினிமாவைத்தாண்டி வெற்றியடையப் போவது உறுதி.

ஈகா (எ) நான் ஈ = மாஸ் எண்டர்டெயினர்
நன்றி
கேபிள்சங்கர் (www.cablesankaronline.com)

No comments: