பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்.. (கவிதை)


.


யிற்றில் யாரோ
கைவிட்டுப் பிசைந்ததுபோல் ஊறும்
அடிவயிற்று நாற்றம் தொண்டைக்குப் பொங்கிவரும்
வாந்தி வந்து வாந்தி வந்து பயமூட்டும்
எதிரே சோற்றுத் தட்டினைக் கண்டாலே
சகிக்க ஒப்பாத உணர்வு மேவும்
எதையும் தாங்க முடியாமலே நாட்கள் கடந்து பின்
கால்வீங்கும்
நீட்டினால் மடக்கினால் நின்றால்
அமர்ந்தாலும் வலிக்கும்
இடுப்பு வலி உயிர்விட்டுப் போகும்
அயர்ந்து அயர்ந்து கண்கள் மூடிப் போக
ஒரு மயக்க நிலை உடம்பெல்லாம் பரவி
கண்கள் சிலநேரம் சொருகி நிற்கும்
அதையும் தாங்கமறுப்பதாய் காதில் விழும் வசவுகளை
இன்னொரு வலியாக பெண்மை பொருத்தேக் கொள்ளும்
பின், மாதம் நெருங்க நெருங்க
முதுகுவலி முறித்துயெடுக்கும்,
நாட்கள் நெருங்க நெருங்க
அடிவயிறு பிய்ந்ததுபோல் வலிக்கும்,
நேரம் நெருங்கிவிடுகையில் -
உயிரோடு பச்சைசதை கிழியும்,
எலும்புகள் உடைந்ததுபோல் வலித்து வழிவிட நீங்கும்
உயிர்வழி அகற்றி இன்னொரு உயிர் ஜனிக்கும்;
கண்களின் வெளிச்சத்தை
யாரோ பிடுங்கிக் கொண்டதுபோல்




முற்றும் இருண்டு படாரென ஒரு வெளிச்சம் வரும்;
அதுவரை கூடநின்ற மரணம் –
குழந்தைப் பிறந்ததும் தனை விட்டுவிலகும்;
சோவென பெய்தமழை பட்டென நின்ற அமைதியில்
மனது ஒரு புது அமைதியை –
எதையோ உயிர்வலிக்க இறக்கிவைத்த நிம்மதியை அடையும்;
உடல் உயிர் உறவு வீடு உலகம் எதையுமே
மறந்த அந்த ஒரு நிர்வாண தருணத்தை உணர்த்திய
அந்த அடிவயிறு அறுத்த எனது வலிக்கு யார் பொறுப்பு ?
நிச்சயம் நானில்லை எனில் –
எனக்குப் பிறந்த அந்த பெண்குழந்தைக்கு மட்டும்
நானெப்படி பொறுப்பானேன் ?
காலம் வயிற்றில் தங்கி
பிச்சி உதறிப் போடுகையில் தனக்கான ஒரு பிறப்பினை
அதுவேப் பெற்றுக்கொள்ள – இடையே
கனம் தாங்கி வலி தாங்கி ஒரு மரணம் கடந்து வந்து
பின்பும் சபிக்கப் பட்டவள் நானெனில்; அது
இம்மண்ணின் குற்றமேயன்றி எனதில்லை..
---------------------------------------------------------
வித்யாசாகர்

No comments: