இலங்கைச் செய்திகள்

மனித உரிமை மீறல்கள் எனது கடத்தல் மூலம் அம்பலம் ஆஸியிலிருந்து பிரேம்குமார்

போதிய வசதிகளின்றிய நிலையில் இயங்கும் 17 பாடசாலைகள்

அரசியல் தீர்வு பற்றி அரசு இனி எப்போது பேசும்?


தொடரும் மனித உரிமை மீறல்கள்

நெருக்கடியான தருணத்தை அரவணைக்கும் இலங்கை 




மனித உரிமை மீறல்கள் எனது கடத்தல் மூலம் அம்பலம் ஆஸியிலிருந்து பிரேம்குமார்


12/4/2012

இலங்கையில் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்படுகின்றதென்ற செய்தி சர்வதேசத்துக்கும் உள்நாட்டிற்கும் எனது கடத்தல் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டவருமான பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்தார்.


நான் ஒரு தமிழன் எனவே தான் என்னை பயங்கரவாதியா அரசாங்கம் உருவகப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.

மாதிவெலவில் உள்ள முன்னிலை சோசலிச கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஸ்கைப் மூலமான உரையாடலின் போதே அவுஸ்திரேலியாவிலிருந்து பிரேம்குமார் குணரட்ணம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்கைப் மூலமான உரையாடலில் மேலும் கருத்து தெரிவித்த பிரேம்குமார் குணரட்ணம், கடந்த 07ம் திகதி கிரிபத்கொடையில் வைத்து ஆயுதம் தரித்தவர்கள் வெள்ளை வானில் என்னை கடத்திச் சென்றனர். 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரித்தனர். கடத்தப்பட்ட தினத்தன்று கடுமையான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

கடத்தி வந்து என்னை தடுத்து வைத்த இடத்தில் சங்கிலிகள் காணப்பட்டது. வதை முகாம் ஒன்று போல் தோன்றியது. ஆனால் எனது கால்கள் கட்டப்படவில்லை. அனைத்தையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இரண்டாவது நாள் என்னை நன்றாக நடத்தினார்கள்.

விடுதலைப்புலி பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா? ஆயுத கிளர்ச்சிக்கு தயார் செய்யப்படுகிறதா? கட்சிக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது? என்றெல்லாம் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தினார்கள். இதன்போது கடத்தப்பட்ட திமுது ஆட்டிகல சகோதரியின் குரலை கேட்க முடிந்தது. ஆனால் நேரில் காணக் கிடைக்கவில்லை.

நாட்டில் கடத்தல்கள், காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயகம் இல்லாமை தொடர்பாக குரல் கொடுத்து நாட்டையும் மக்களையும் மீட்கவே உண்மையான இடதுசாரி கொள்கையுடனான எமது கட்சியை ஆரம்பித்தோம். இதற்கு பயந்தே அரசாங்கம் படையினரை பயன்படுத்தி என்னை கடத்தியது.

இரண்டாவது நாள் என்னை தெமட்டகொடையிலுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அவுஸ்திரேயாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.

வீசா காலம் முடிவடைந்தும் மேலதிகமாக 6 மாத காலம் இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டே பொலிஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அரசாங்கம், உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை அவுஸ்திரேலியப் பிரஜையென்ற ரீதியில் அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தங்கள்.

மனித உரிமை அமைப்புக்கள், அரசியல் தலைவர்கள் இக் கடத்தலை கண்டித்ததன் காரணமாகவே நான் தப்பினேன். இல்லாவிட்டால் நான் உயிரோடு மீண்டிருக்க மாட்டேன். நான் ஒரு தமிழன். உண்மையான பெயர் பிரேம் குமார் குணரட்ணம். ஆனால் வடக்கு, கிழக்கு தெற்கு நாடு முழுவதும் வாழும் சிங்கள, முஸ்லிம் அனைத்து இனத்தினரின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்ததன் காரணமாகவே பயங்கரவாதியாக, ஆயுதக் கிளர்ச்சியாளனாக சித்திரிக்கப்பட்டேன். அரச ஊடகங்களும் சில தனியார் ஊடகங்களும் இதனை மிகைப்படுத்தியது.

நான் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் ஆதாரங்களோடு என்னை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அரசாங்கமே சட்ட விரோதமாக என்னை கடத்தி நாடு கடத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் வெள்ளை வான் ஆட் கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதையும் அதற்கு அரசாங்கத்தின் ஆதரவுடன் படையினர் பயன்படுத்தப்பட்டு இச்சட்ட விரோத செயல் நடைபெறுவதையும் சர்வதேசத்திற்கும் உள்நாட்டிற்கும் அம்பலப்படுத்தியுள்ளது.

நியாயமான அரசியலை நடத்த முடியாததன் காரணமாகவே பெயர் மாற்றத்தோடு நடமாட வேண்டிய நிலை உருவானது. நாட்டில் ஆட்சியாளர்களால் அரசாங்கம் அடக்கு முறை, காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

எனவே, இன, மத, மொழி, அரசியல் பேதங்களின்றி அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்த வேண்டிய காலம் வந்துவிட்டதையும் பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி

போதிய வசதிகளின்றிய நிலையில் இயங்கும் 17 பாடசாலைகள் Wednesday, 11 April 2012

முல்லைத்தீவு, மாந்தைகிழக்கு பிரதேசத்திலுள்ள 17 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் போதிய வசதிகளின்றி இயங்கி வருவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இப் பிரதேசத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகளிலுமுள்ள 17 பாடசாலைகள் பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் விடுதிகள் இல்லாமை, பௌதீக வளப்பற்றாக்குறை போன்றவற்றுடன் நீண்டகாலமாக இயங்கி வருகிறது.


இதனால் வறிய மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்றறைச் சீர்செய்து பின்தங்கிய பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி தினக்குரல்

அரசியல் தீர்வு பற்றி அரசு இனி எப்போது பேசும்?
Monday, 09 April 2012

ஜெனீவாவுக்குப் பிறகு இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான செயல்முறைகள் பற்றி எதையுமே பேசுவதாக இல்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளில் முக்கியமானவற்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையைக் கேட்டிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்களித்த இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்தைத் தணிப்பதில் அக்கறை கொண்டிருக்கும் நிலையில் தற்போதைக்கு அரசியல் தீர்வுக்கான செயன்முறைகளைப் பொறுத்தவரை எந்தவிதமான வற்புறுத்தலையும் செய்யுமென்று எதிர்பார்ப்பதற்கில்லை.


தீர்மானத்தைக் கொண்டுவந்த அமெரிக்காவும் கூட வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அடுத்த மாதம் ஹிலாரி கிளின்டனுடன் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அரசியல் தீர்வு குறித்து புதிதாக எதையும் பேசுவதற்கு வாய்ப்பில்லையென்றே தோன்றுகிறது. ஜெனீவாத் தீர்மானத்திற்கு எதிரான சண்டமாருதத்தைத் தொடருவதன் மூலமாக பொருளாதார நெருக்கடி உட்பட மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தைத் தொடர்ந்தும் திசை திருப்பிக் கொண்டிருக்க முடியுமென்பதை நன்குணர்ந்திருக்கும் அரசாங்கம் "கலரிக்கு விளையாட்டுக் காட்டும்' தந்திரோபாயமாகத் தன்னை ஒரு அமெரிக்கமேற்குலக வல்லாதிக்க நாடுகளின் நோக்கங்களுக்கு எதிரான ஏகாதிபத்திய விரோத சக்தியாகக் காட்சிப்படுத்தும் கைங்கரியங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது.

இத்தகையதொரு பின்புலத்தில், இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை நோக்கிய செயன்முறைகளில் அக்கறை காண்பிக்க வேண்டிய தேவை தனக்கிருப்பதாக அரசாங்கம் கிஞ்சித்தேனும் கருதுமென்பதற்கான அறிகுறி எதையும் காணமுடியவில்லை. ஜெனீவாவுக்கு முன்னரான காலகட்டத்தில் அரசியல் தீர்வுக்கான செயன்முறையாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்தது. கடந்த வருடம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கம் ஒரு இடைக்கட்டத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பெயர்களை அறிவித்தால் மாத்திரமே மேற்கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியுமென்று நிபந்தனை தெரிவித்தது. தங்களுக்கும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் காணப்படக்கூடிய இணக்கப்பாட்டைத் தெரிவுக்குழுவின் பரிசீலனைக்குச் சமர்ப்பிப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு முன்வரவில்லை.

இத்தகைய உறுதிமொழியொன்றை கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தாங்கள்அளிக்கவில்லையென்று அரசாங்கத் தலைவர்கள் ஒருபோதுமே மறுதலிக்கவில்லை. அத்துடன், வேறு யாருமல்ல ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுக்குச் சமாந்தரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான தனியான பேச்சுவார்த்தையை அரசாங்கம் தொடருவதில் எந்தப் பிரச்சினையுமே இல்லையென்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பகிரங்கமாக அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கமும் அல்லது கூட்டமைப்பின் தலைவர்களும் தங்கள் தங்கள் நிலைப்பாடுகளில் தொடர்ந்தும் உறுதியாக நின்றதன் காரணத்தால் முட்டுக்கட்டை நிலை தொடர்ந்தது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக அரசியல் தீர்வுக்கான யோசனைகளை வகுப்பதற்கு ஆறு மாத கால அவகாசம் போதுமானதென்று அரசாங்கத் தலைவர்கள் கூறிக்கொண்டிருந்தனர். தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்ட பிறகு தற்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. ஜெனீவா பரபரப்பில் தெரிவுக்குழு பற்றி பேச்சுகள் அமிழ்ந்து போயின. ஜெனீவாவுக்குப் பிறகு அதைப் பற்றி எந்த அரவத்தையும் காணோம். ஜெனீவாத் தீர்மானத்தின் விளைவாக மூண்டிருக்கும் சர்ச்சையைத் தனக்கும் சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையேயான ஒரு இராஜதந்திரத் தகராறாகக் காட்டிக்கொண்டு இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கு முன்னெடுக்க வேண்டிய செயன்முறைகள் பற்றி அரசாங்கம் வஞ்சகத்தனமாகப் பேசாமல் இருக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலை தோன்ற வாய்ப்பிருக்கிறது!
நன்றி தினக்குரல்


தொடரும் மனித உரிமை மீறல்கள்
Tuesday, 10 April 2012
 
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த ஆரம்பித்ததன் விளைவாகவே அண்மையில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கெதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவேண்டிய சூழ்நிலை தோன்றியது. மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.


அத்துடன், அந்தச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படுகின்ற பிரதிபலிப்புக்கள் மேலும் கவலையைத் தருகின்றன. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் முடிவடைகின்ற நிலையிலும் கூட நிலைவரங்களில் மேம்பாட்டைக் காண முடியவில்லை. ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யிலிருந்து பிரிந்து சென்று புதிய இடதுசாரிக் கட்சியொன்றை அமைக்கும் பணிகளில் இறங்கியிருக்கும் குழுவின் தலைவர் என்று கூறப்படும் பிரேமகுமார் குணரட்ணம் மற்றும் முக்கிய உறுப்பினரான திமுது ஆட்டிகல ஆகியோர் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதையடுத்து பெரும் சர்ச்சைகள் மூண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் குணரட்ணம் காணாமல் போன விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தையே குறைகூறுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் காணாமல் போயிருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்பில் விபரங்களைத் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் ஆட்கள் கடத்தப்படுவதென்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கும் விக்கிரமசிங்க நாட்டில் சட்டம் ஒழுங்கு படுமோசமாகச் சீர்குலைந்திருப்பதன் வெளிப்பாடே இது என்றும் கூறியிருக்கிறார். கடந்த ஆறு மாதங்களில் இலங்கையில் ஆட்கள் காணாமல் போன 56 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பெப்ரவரியிலும் மார்ச்சிலும்அதுவும் குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராயப்பட்ட காலகட்டத்தில் மாத்திரம் 19 பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வுப் போக்குகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இலங்கையின் பெயரை மேலும் களங்கப்படுத்திவிடும். இந்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்து நிலைவரங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. இன்று வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சாதாரண பிரஜைகள் என்று சமுதாயத்தின் சகல மட்டத்திலும் பலர் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். மக்கள் பயமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வந்திருக்கக்கூடிய மனித உரிமை மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்திலிருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் போன்று சுதந்திரமாக நடமாடக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதே உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானதாகும். உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் சுதந்திரமாகச் செயற்படக்கூடியதாக இருப்பது மாத்திரமல்ல, அவர்கள் அரச இயந்திரத்தின் அனுசரணையை நினைத்த நேரத்தில் பெறக்கூடியதாகவும் இருப்பது மிகவும் பாரதூரமான ஒரு நிலைவரமாகும் என்றும் மனித உரிமைகள் அமைப்புக்களினால் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், மக்களின் குடியியல் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கின்ற சக்திகளை ஒடுக்குவதற்கு உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் நிலைவரம் மேலும் சீரழிவை நோக்கி செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கைக்கு அபகீர்த்தியைத் தேடித்தருகின்ற இன்றைய துரதிர்ஷ்டவசமான நிகழ்வுப் போக்குகள் குறித்து நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம் பற்றி உரத்துப் பேசி ஆரவாரம் செய்கின்ற "தேச பக்தர்கள்' எதையுமே பேசாமல் உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற சக்திகளுக்கு உற்சாகத்தைத் தரும் வகையில் நடந்துகொள்கிறார்கள் என்பதே மிகவும் வேதனை தருகிறது. மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த போரினால் அவலங்களை அனுபவித்த இலங்கை மக்கள் போரின் முடிவுக்குப் பிறகும் அமைதியாக, அச்சமின்றி வாழ முடியவில்லையென்றால் நாட்டில் மீண்டும் நிலைநாட்டியிருப்பதாக அரசாங்கம் பெருமையுடன் உரிமை கோருகின்ற அமைதியை வெறுமனே மயான அமைதி என்றே வர்ணிக்க வேண்டியிருக்கிறது.
நன்றி தினக்குரல்

நெருக்கடியான தருணத்தை அரவணைக்கும் இலங்கை
கடந்த காலங்கள் சில சமயம் எமக்கு வெட்கத்தைத் தரக் கூடியதாகவும் அமையக் கூடும். யுத்தம் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நாடு சிறப்பான முன்னேற்றத்திற்கான தடத்தில் சென்று கொண்டிருப்பதாக வங்கிகளின் வங்கியான இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கடந்த வாரம் சென்னையிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில தினசரியான “இந்து“ வுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த நிலையில் திங்கட்கிழமை வெளியிட்ட மத்திய வங்கியின் 2011 வருடாந்த அறிக்கையில் நாடு நெருக்கடியான தருணத்தை அரவணைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வீடுகள் நிர்மாணிக்கப்படுவதாகவும்(வடக்கில்) பாடசாலைகள் இயங்குவதாகவும் மின்சார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் மீன்பிடித்தொழில் , விவசாயம் சிறப்பாக இடம்பெறுவதாகவும் வடபகுதி மக்கள் தென்னிலங்கைக்கு தமது உற்பத்திகளை கிரமமாக அனுப்பி வருவதாகவும் முதல் தடவையாக 8 சத வீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை நாடு கொண்டிருப்பதாக ஆளுநர் அளித்திருந்த பேட்டியைப் பார்க்கும் போது உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால் 2012 இல் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகவே இருக்கும் என்று 2011 ஆண்டறிக்கையில் மத்திய வங்கி எதிர்வு கூறியிருக்கிறது. வர்த்தக நிலுவை இடைவெளி அதிகரித்துச் செல்லும் நிலைமையில் இந்த வருடம் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதுடன், வர்த்தக நிலுவை இடைவெளியை குறைப்பதற்காகவே வட்டி வீத அதிகரிப்பு , நாணயப் பெறுமதிக் குறைப்பு, இறக்குமதி வரியை இரு மடங்காக உயர்த்தியமை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக மத்தியவங்கி தெரிவித்திருக்கின்றது. அத்துடன் நிச்சயமற்ற சர்வதேச பொருளாதார நிலைமையும் வர்த்தக நிலுவை இடைவெளி விரிவடைந்து செல்வதுமே நெருக்கடியான எதிர்காலத்துக்கு கட்டியம் கூறுவதாக இருப்பதாக மத்தியவங்கி கூறுகிறது.
இரண்டு மாதங்களில் வட்டி வீதம் இரண்டாவது தடவையாக கடந்த வாரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடன் வழங்குவது முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் உண்மையிலேயே மத்திய தர வர்க்கத்தினரும் சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களும் தாங்கிக் கொள்ள முடியாத கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர். இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும் அதிகரித்துச் செல்லும் வர்த்தக நிலுவை இடைவெளியைக் குறைப்பதற்குமான அரசாங்கத்தின் உபாயமானது அந்நியச் செலாவணிக் கையிருப்பு தொடர்பாக எதிர்நோக்கும் அழுத்தத்தை குறைக்கும் என்பது உண்மைதான். ஆனால் கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை 0.25 %, 0.75% ஆகியவற்றால் 7.75%, 9.75% க்கு அதிகரித்திருக்கிறது. அத்துடன் கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்துமாறு வர்த்தக வங்கிகளுக்கு வலுவான அறிவுறுத்தலை மத்திய வங்கி கடந்த மாதம் விடுத்திருந்தது. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளின் மத்தியிலும் கடன் பெறும் வீதம் அதிகரித்து வருவதனாலேயே வட்டி வீதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வட்டி வீத அதிகரிப்பாலும் எரிபொருள் விலை உயர்வாலும் சிறிய வர்த்தக நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேவேளை நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கோழி வளர்ப்பில் ஈடுபடுவோரும் தமது தொழில் துறையில் தாக்குப்பிடிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக வேதனையை வெளிப்படுத்துகின்றனர். சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் பலர் மேலும் இழப்புகளைத் தாங்கக் கூடிய சக்தியில்லை எனவும் அதனால் தொழில் துறையை மூடிவிடுவது உசிதமானதாகத் தோன்றுவதாகவும் விரக்தியை வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.
ஆனால் பரும்படியாக்க பொருளாதார அடிப்படை அம்சங்கள் சிறப்பான வடிவத்தைக் கொண்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் “இந்து“ வுக்குக் கூறியிருக்கிறார். கடன் வீதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாகவும் 110 சதவீதமாக இருந்த அரச கடன் வீதம் 80 சத வீதத்திற்கு குறைவானதாக இருப்பதாகவும் கையிருப்புகள் சுமார் 3 1/2 மாத காலத்துக்குப் போதியதாக 6 பில்லியன் டொலராக இருப்பதாகவும் சகல துறைகளுமே கடந்த காலத்தை விடச் சிறப்பானதாக இருப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் நாட்டுக்குக் கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அனுப்பும் பண வரவில் அதிகளவான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 2010 இல் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர் அனுப்பும் நிதி 83 சதவீதமாக இருந்தது. ஆனால் 2011 இல் அத் தொகை 53 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பில் துண்டு விழுவதை ஈடுகட்ட வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் தொகையையே பயன்படுத்தும் உபாயத்தை அரசாங்கம் பயன்படுத்தி வந்துள்ள நிலையில் இத்தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சி பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கமாகும்.
உள்சார் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் பாரிய தொழில் முயற்சிகளுக்கு சலுகைகள் வழங்கி ஊக்குவிப்பதும் நீண்டகால அபிவிருத்தி இலக்கு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கையில் சிறப்பானதாகவே அமையும். ஆனால் இது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் பொருளாதார நலன்களையே போஷிப்பதாகவே காணப்படுகிறது. சாதாரண மக்கள் குறிப்பாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளையே எதிர் நோக்குகின்றனர். நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையானவர்களாக உள்ள மத்திய தர வர்க்கத்தினர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உபாயங்களை முன்னெடுப்பதே உடனடித் தேவையானதாகும். வாகன இறக்குமதிகளைக் குறைக்க வரிகளை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் அரச வருவாயை அதிகரிக்கச் செய்தாலும் அடிப்படைத் தேவைகளையாவது நெருக்கடிகள் இன்றி சாதாரண மக்கள் முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டியது தார்மீக கடப்பாடாகும்.
யுத்தத்திற்குப் பின்னரான கால கட்டப் பொருளாதாரத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது குறிப்பிடத்தக்க அளவுக்கு தாழ்ந்த மட்டத்தில் இருப்பதாக புதிய நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் மத்திய வங்கி கூறுகிறது. பரந்தளவிலான ஊழல் மோசடிகள், பாரியளவிலான சமூக பொருளாதார சமத்துவமின்மை இடைவெளிகள் என்பனவற்றுடன் மனித உரிமை விவகாரங்களினால் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனத்தில் நாடு சிக்கியிருக்கும் நிலைமையில் வெளிநாட்டு நேரடி முதலீடு எதிர்பார்ப்புகள் சாதகமான பெறுபேற்றை ஏற்படுத்தாது. அடுத்த தசாப்தத்தில் உலக பூகோள அரசியலில் அமெரிக்க பொருளாதார வலயம் , சீன பொருளாதார வலயம் , இந்திய பொருளாதார வலயம் , என்பனவே மேலாதிக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர். இந்த பூகோள அரசியல் கள யதார்த்தத்திற்கமைய வியூகங்களை வகுத்து செயற்பட்டால் மாத்திரமே இலங்கை திட்டமிட்ட பொருளாதார இலக்கை எட்ட முடியும்.
நன்றி தினக்குரல்








No comments: