மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 3

.

வரலாற்று நாடகம்
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)

(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)

- காட்சி நான்கிற்கு முன்னுரை -

நாட்டை விட்டு விரட்டப்பட்ட துட்டகைமுனு
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில்,
தீகவாப்பிப் பிரதேசத்தில் உள்ள காட்டில்
மறைந்து வாழ்ந்துவருகிறான்.
வருடங்கள் பல உருண்டோடிவிட்டன.
மன்னன் கவந்தீசன் தனது இளைய மகனும், துட்டகைமுனுவின் தம்பியுமான சதாதீசனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இறந்து விடுகின்றான். தந்தை இறந்ததையும்,
தம்பி அரியணையில் அமர்ந்ததையும்
அறிந்த துட்டகைமுனு நாடுதிரும்புகிறான்.
சதாதீசனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சிசெய்கிறான். ஒருநாள் மாறுவேடத்தில் அரண்மனையினுள்
தந்திரமாகப் புகுந்த அவன்,
அரண்மனைப் பூங்காவில் உலவிக்கொண்டிருக்கும் சதாதீசனைக் காணுகிறான்.


காட்சி 4

களம்:- அரண்மனைப்பூங்கா
பங்குகொள்வோர்:- துட்டகைமுனு
சதாதீசன்
தாய் விகாரமகாதேவி.

(சதாதீசன் பூங்காவிலே உலவிக்கொண்டிருக்கிறான் திடீரென துட்டகைமுனு அவன் முன் தோன்றுகிறான்)துட்டகைமுனு:- மகாமன்னர் பெருமானுக்கு இந்த ஏழையின் சிரந்தாழ்ந்த
வணக்கங்கள்!!

சதாதீசன்:- யாரது? ஓ..அண்ணா நீயா?

துட்டகைமுனு:- ஏன் மன்னனாகியபின் அண்ணனை மதிப்பதுகூடக்
க~;மாயிருக்கிறதோ?

சதாதீசன்:- அப்படியல்ல. இங்கு திடீரென்று எப்படிவந்தாய் என்றுதான் கேட்கிறேன்.

துட்டகைமுனு:- ஏன் வரக்கூடாதென்று பலத்த காவல் போட்டிருந்தாயோ?

சதாதீசன்:- தேவையற்றகேள்வி. திடீரென்று வந்தமைக்குக் காரணமென்ன என்பதுதான்
எனது கேள்வி.

துட்டகைமுனு:- காரணமில்லாமல் வேலைகள் செய்வதற்கு நான் உன் அப்பன்
கவந்தீசனல்ல.

சதாதீசன்:- அண்ணா! இறந்துவிட்டதந்தையை இகழ்ந்து பேசுவதை நான் ஒருபோதும்
அனுமதிக்கமாட்டேன். உனக்குந்தான் அவர் தந்தை. தந்தையைத் தூற்றுவதை விட்டு, வந்த வி~யத்தைச் சொல்.

துட்டகைமுனு:- ஓ...வந்த வி~யத்தைச் சொல்லவா? அந்த அளவுக்கு
உயர்ந்துவிட்டாயா? ஓ மறந்து விட்டேன். இப்போது மன்னனல்லவா நீ?
சரி சொல்கிறேன். நீ...இறங்கவேண்டும். நான் ஏறவேண்டும். இதுதான் எனக்கு
வேண்டும்.

சதாதீசன்:- என்ன சொல்கிறாய்?

துட்டகைமுனு:- விளங்கவில்லை? அரியணை எனக்குவேண்டும் என்கிறேன்.

சதாதீசன்:- அது கிடைக்காது.

துட்டகைமுனு:- மூத்தவன் நான்...

சதாதீசன்:- அது நாட்டுக்கே தெரியும். ஆனாலும் ஆட்சியில் உன்னை
அமர்த்தவில்லை. நாட்டைவிட்டே விரட்டப்பட்டாய்!

துட்;டகைமுனு:- நாட்டைவிட்டு விரட்டியது நாட்டுமக்களல்ல, எனது தந்தை.

சதாதீசன்:- வீட்டைவிட்டு விரட்டப்பட்டிருந்தால் விரட்டியது தந்தையென்று சொல்.
நீ நாட்டைவிட்டே விரட்டப்பட்டாய். விரட்டியது தந்தையல்ல இந்த நாட்டு
மன்னர்!

துட்டகைமுனு:- சதாதீ...சா! விளையாடுகிறாயா?

சதாதீசன்:- விளையாட இது தருணமுமல்ல, நாம் சிறுவருமல்ல.

துட்டகைமுனு:- நீயாக அரியணையைத் தரப்போகின்றாயா? அல்லது நானாக
எடுக்கட்டுமா?

சதாதீசன்:- நாட்டைவிட்டு விரட்டப்பட்ட உனக்கு ஆட்சிப் பொறுப்பை
நான்விட்டுத்தந்தால் தூற்றப்படுவது நீயல்ல நான்தான். தவறு செய்தது நானல்ல நீதான். அத்தோடு, உன்னை அண்டவிடுபவர்களின் தலை துண்டமாக்கப்படும் என்பது தந்தையின் கட்டளை. அது இன்னும் அமுலில் இருக்கிறது.

துட்டகைமுனு:- டேய் சதாதீசா கூடப்பிறந்த குற்றத்திற்காக, தம்பி என்பதற்காகப்
பார்க்கிறேன். இல்லாவிட்டால் இந்நேரம் உன் தலையைப் பந்தாடிவிட்டு, அரியணையை என் சொந்தமாக்கியிருப்பேன்.

சதாதீசன்:- நானும் அண்ணன் என்பதற்காகத்தான் பார்க்கிறேன். இல்லாவிட்டால்
இன்னேரம் சிறைக்கதவு ஒருமுறை திறந்து மூடியிருக்கும். ஆட்சியைப்பற்றி நினைக்காதே அதற்கு அருகதை இல்லை உனக்கு. மக்கள் உன்னை மறக்கவில்லை. ஏனென்றால் உன் கொடுமைகளை மறக்க முடியவில்லை. பெற்றவளைப் பார்ப்பதற்கு வேண்டுமானால் சற்று அவகாசம் தருகிறேன். பின்னர் இந்த நாட்டைவிட்டு ஓடிவிடு. நாடு உனக்குக்கேடு செய்யும்முன் நகர்ந்துவிடு இங்கிருந்து.

துட்டகைமுனு:- நிறுத்தடா சதாதீசா. நாடு..அதனால் எனக்குக் கேடு. ஹக்..ஹக்..ஹக்
ஹா... முடி சூடுவேன் அல்லது முடிவைத் தேடுவேன். எடு உன் வாளை.

சதாதீசன்:- தீஹவாப்பியில் நீ மறைந்திருக்கும் காட்டிற்கு உன்னைத் தேடிவந்து
கைதுசெய்ய எனக்கு நேரம் எடுத்திருக்காது. ஆனாலும் பொறுமையாக இருந்தேன்- அதற்கு முயற்சி எடுக்காது. இனி அதற்குத் தேவை இருக்காது.

துட்டகைமுனு:- என்ன சொன்னாய்..??

(இருவரும் வாட்சண்டையிடல். முடிவில் துட்டகைமுனு, சதாதீசனைக் கீழே விழுத்தி அவனைக் கொல்ல வாளை ஓங்கும்போது தாய் ஓடிவந்து குறுக்கிடல்)

விகாரமகாதேவி:- ஐயோ மகனே சதாதீசா!!!

விகாரமகாதேவி:- (அப்போதுதான் அவள் துட்டகைமுனுவைத் திரும்பிப்பார்த்து)
யார்..? கைமுனு! நீயா?

துட்டகைமுனு:- அம்மா...!?

விகாரமகாதேவி:- நீயா இந்தக் கொடுமையைச் செய்கிறாய்? கொடியவனே பாவி!

(கைமுனு ஓடிவந்து அவள் கால்களில் விழுதல்)

துட்டகைமுனு:- அம்மா! அம்மா!! என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நானும் உங்கள்
பிள்ளைதானே? முடிசூடும் அதிகாரம் எனக்கும் உண்டுதானே?

விகாரமகாதேவி:- ஓ..முடி ஆசையால் வந்த பிணக்கா? அதற்குச் சண்டை ஏன்?
சமாதானமாகவே பேசி முடித்திருக்கலாமே.

துட்டகைமுனு:- சமாதானமாகக் கேட்டேன். தம்பி மறுத்துவிட்டான் அம்மா.

விகாரமகாதேவி:- அதற்காக அவன் தலையை அறுத்துவிடத் துணிந்தாயா கைமுனு?
மகனே சதாதீசா..!

சதாதீசன்:- அம்மா.

விகாரமகாதேவி:- அண்ணன் கேட்பது நியாயந்தானே மகனே! அவனுக்கும் அரசில்
பங்கு உண்டுதானே? அவனும் நான் பெற்ற பிள்ளைதானே சதாதீசா!

சதாதீசன்:- அதை நான் மறுக்கவில்லையே அம்மா..ஆனால் தந்தை....

விகாரமகாதேவி:- அவனை வெறுத்துவிட்டார் என்பதற்காக அவனது உரிமைகளை
மறுத்துவிடுதல் நீதியா மகனே? தர்மம், நீதி, தயாளகுணம் என்றெல்லாம் தன் காலத்தை வீணாக்கி, தமிழ்மன்னன் எல்லாளனுக்குத் தலைபணிந்து வாழ்ந்தார் உன் தந்தை. அதனை எதிர்த்தான் கைமுனு. அதனால் அவனை வெறுத்தார் தந்தை. பொறுக்கமுடியாமல் சினந்து பேசினான். வேறென்ன குற்றம் செய்தான்? அப்போது நீ அரசியல் அறியாச் சிறுவன். ஒருநாள் தன் கால்களை மடக்கிச் சுருண்டு படுத்திருந்தான் கைமுனு. ஏன்மகனே இப்படிப் படுக்கிறாய் கால்களை நன்றாக நீட்டி வசதியாகப் படுக்கலாமே என்று நான் சொன்னேன். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? எப்படியம்மா நான் கால்களை நீட்டிப்படுக்கமுடியும்? ஒருபக்கம் எல்லாளனது இராச்சியம். மறுபக்கம் கடல். எந்தப்பக்கம் அம்மா நான் கால்களை நீட்டமுடியும் என்று கேட்டான். இரண்டு தலைமுறைகளாக அகன்ற நிலப்பரப்பை எல்லாளன் ஆண்டுவருவதை கைமுனுவால் மட்டுமல்ல என்னாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எவ்வளவோதடவைகள் நான் எடுத்துச் சொல்லியும் உன்தந்தைக்கு உறைக்கவேயில்லை. எல்லாளனை எதிர்க்கத் துணிவு வரவில்லை. அதற்காகவே பிறந்தவன் கைமுனு என்பதை அறிந்ததும் அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினார். காலம் வருமென்று காத்திருந்தேன். இப்போது கைமுனுவே வந்துவிட்டான்.

சதாதீசன்:- அம்மா..(அழுது) என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா.

விகாரமகாதேவி:- அதற்கு அவசியமேயில்லை. நீ மன்னன்! உனக்கு குடிமக்களின்
நல்வாழ்வுதான் குறிக்கோள். அவர்களின் வாழ்த்து மொழிகள் தான் ஊன்றுகோல். குடிமக்கள் பழி கூறக்கூடாதே என்பதற்காகத்தான் நீ அண்ணனைக் கடிந்தாய்.. அவனை எதிர்க்கத் துணிந்தாய். அது தவறல்ல மகனே!

சதாதீசன்:- அண்ணா! என்னை மன்னித்துவிடு உனக்கு எதிராக வாள்தூக்கிய
பண்புதெரியாத இந்தப் பாவியை மன்னித்துவிடு.

துட்டகைமுனு:- சதாதீசா! பண்பு தெரியாதவன் நீயல்ல. நல்ல பண்பும், நாட்டிலே
அன்பும், ஆட்சியில் மாண்பும் கொண்டவன் நீ. டேய் சதாதீசா!. நீ என் தம்பி!

விகாரமகாதேவி:- என்னருமை மக்களே நீங்கள் எப்போதும் இப்படியே ஒற்றுமையாக
இருக்கவேண்டும். உங்கள் ஒற்றுமையால் நாட்டின் எல்லையைப் பெருக்கவேண்டும். எல்லாளனை அழித்து நாடுமுழுவதையும் பிடிக்கவேண்டும். அதன்பிறகு இந்தத் தீவு முழுவதையும் இரண்டாகப்பிரித்து பாதியை ஒருவனும் மீதியை மற்றவனும் ஆளவேண்டும். அதை நான் பார்க்கவேண்டும்.

சதாதீசன்:- அம்மா! மன்னனுக்குச் சிறப்பு மண்ணைப்பெருக்குதல் அல்லவா. ஆகவே பாதி
நாட்டை எனக்குத்தந்தால் அண்ணன்மீது படையெடுத்து மீதியையும் பிடித்து விடுவேன் அல்லவா அண்ணா?

துட்டகைமுனு:- ஹ..ஹ..ஹ...ஹ, செய்தாலும் செய்வாய்..ஹ..ஹஹ..ஹா.

சதாதீசன்:- தந்தை அமர்ந்த இந்த நாட்டு அரண்மனையில் முழுவதாக அண்ணனே
அமர்ந்து அலங்கரிக்க வேண்டும். பாகத்தைப் பங்குபோட்டு எங்கள் பாசத்தைப் பிரிப்பதை நான் விரும்பவில்லை அம்மா!

விகாரமகாதேவி:- அப்படியானால் நீ என்ன செய்யப் போகிறாய்?

சதாதீசன்:- நானா? அண்ணன் மன்னன் என்றால் தம்பி என்னசெய்வான்? அரசனின்
ஆசனத்திலே அண்ணன் என்றால் அமைச்சரின் ஆசனத்திலே நான். போர்க்களத்திலே தேரில் போவது அண்ணன் என்றால் அங்கே வேற்படை ஏந்தி முன்னே செல்லுகின்ற வீரத் தளபதி நான் அம்மா! வீரத் தளபதி நான்!!

துட்டகைமுனு:- தம்பி! நீ வயதில்தான் எனக்குத் தம்பி. ஆனால் பண்பில், திறமையில்,
அரசியல் கலையில் என்னிலும் பலபடிகள் உயர்ந்தவன் நீ. உன்னைக் கொல்ல நினைத்தேனே நான்.

விகாரமகாதேவி:- கைமுனு... நடந்தவற்றை நினைத்து வருந்துவதற்கு இனி
நேரமில்லை. கணப்பொழுதையும் வீணாக்காது நம் கனவை நனவாக்கும் காரியங்களில் இறங்கவேண்டும். சதாதீசா, கைமுனுவின்மீதுள்ள தந்தையின் கட்டளையை இரத்துச்செய்து நாளைக்கே தண்டோராப் போடுவதற்கு ஆணையிடு. அப்படியே கைமுனுவின் வரவைப்பற்றியும் அறிக்கையிடு. கைமுனுவின் வரவில் எனக்கும் உனக்கும் மகிழ்ச்சியென்று மக்களுக்குத் தெரியட்டும். கைமுனுவே மன்னன் என்பது புரியட்டும். எல்லாளனும் இந்தச் செய்தியை அறியட்டும்.

சதாதீசன்:- அப்படியே செய்கிறேன் அம்மா. அப்படியானால் இப்போது நேராக நாம்
 அரண்மனை செல்வோமா?

விகாரமகாதேவி:- ஆமாம், வாருங்கள்.
---திரை---
(மாமன்னன் எல்லாளன் மீண்டும் வருவான்)

No comments: