மௌனம் கலைகிறது 8 –நடராஜா குருபரன்


பல்லைப் பிடுங்கிய பாம்பாக கருணாவை பேழைக்குள் போட்ட சிங்கள பெருந் தேசியவாதம்:-மௌனம் கலைகிறது 8


நடராஜாகுருபரன்
பல்லைப் பிடுங்கிய  பாம்பாக கருணாவை  பேழைக்குள் போட்ட சிங்கள பெருந் தேசியவாதம்:-மௌனம் கலைகிறது 8
வன்னியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மகாநாட்டில் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதும் கிழக்கில் நிற்காது வெளிநாடொன்றிற்குச் சென்றுவிட வேண்டுமென்றும் அவ்வாறு செல்லும் பட்சத்தில் அவர் தன்னிடமுள்ள பணமனைத்தையும் கூடவே எடுத்துச் செல்ல முடியுமெனவும்  சமாதான முயற்சியில் ஈடுபட்ட இணைத் தலைமை நாடுகளில் ஏதாவதொன்றின் மூலம் இதற்கான  ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனவும் புலிகள் கூறியதாகவும் இதற்காகக் கருணாவுக்கு இரண்டு அல்லது மூன்று கிழமைகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும்  அப்போது  கசிந்த  தகவல்கள்   தெரிவித்திருந்தன.


ஆனால் கருணா அந்த ஏற்பாட்டுக்கு  இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. பதிலாகத் தான் தொடர்ந்தும் கிழக்கிலிருந்து செயற்படவுள்ளதாகவும் அதற்குப்  புலிகள் இடையூறு செய்யக்கூடாது எனவும் இடையூறு செய்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.  அவரது இந்தத்துணிவுக்கு இலங்கை ராணுவம் புலிகளினால் வரக்கூடிய சவாலை எதிர்கொள்ள உதவும் என்ற அவரின் நம்பிக்கையும் கிழக்கிலங்கையின் ராணுவத் தளபதியான சாந்த கோத்தகொடவுடன் அவர் கொண்டிருந்த மிக நெருக்கமான உறவுமே அடிப்படையாக அமைந்தன. ஆனால் இவை வெறும் பிரமைகளே என்பதைக் கருணா உணர்வதற்கு அதிககால மெடுக்கவில்லை.
புலிகளினால் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில் கிழக்கைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது படையணிகளைக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தார். இந்த அணிகளுக்கு கேணல் சொர்ணம் கேணல் பானு கேணல் றமேஸ் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் தலைமை தாங்கி இருந்தனர். பிரிகேடியர் பால்ராஜும் சென்றதாகக் கூறப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இவர்களைத்தவிரத் தயாமோகன் கௌசல்யன் றமணன் ஆகியோரும் சிறு அணிகளுடன் மட்டக்களப்பினுள் பிரவேசித்திருந்தனர்.
மட்டக்களப்பு நகரில் இருந்து வடக்காக சுமார் 68 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வெருகல் ஆற்றின் வடக்கு மருங்கில் புலிகளின் மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான சார்ஸ் அன்றனி படைப்பிரிவு தரையிறங்கியது. 
ஆனால் புலிகளின் தரையிறங்கலை வெருகல் ஆற்றிற்குத் தெற்காக எதிர்பார்த்த கருணா தனது போராளிகளை அங்கே குவித்திருந்தார். கருணாவின் மூத்த சகோதரரான லெப்டினட் கேணல் ரெஜி தலைமையில் சுமார் 500ற்கும் மேற்பட்ட போராளிகள் பலமான ஆயுதங்களுடன் அன்று அங்கு   கருணா தரப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 
கருணா அணியினர் வெருகல் ஆற்றைக் குறிவைத்து காத்திருக்க மறுபுறம் கடல் மூலமாகவும் வாவி மூலமாகவும் நகர்ந்த ஜெயந்தன் விஷேட படைப்பிரிவுப் போராளிகள் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களில் ஊடுருவி தம்மை பலப்படுத்தி விட்டிருந்தனர்.
இதேவேளை கடற்புலிகளின் சிறு சிறு வள்ளங்கள் மூலம் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசங்களில் புலிகளின் சில அணிகள் தரையிறங்கின. ஜெயந்தன் படைப்பிரிவின் முக்கிய தளபதிகளான ஜனார்த்தனன் மற்றும் ஜெயமோகன் தலைமையிலான சில படையணிகள் முன்னேறி எந்தவித எதிர்ப்புக்களும் இன்றிக் கஞ்சிகுடியாறு தளத்தை மீட்டார்கள். அதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களும் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அம்பாறை மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறை அலுவலகங்களும் புலிகளின் அரசியல் துறையினரால் பொறுப்பேற்கப்பட்டன.
அதேவேளை விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் ரமணன் தலைமையிலான படையணி ஒன்று நாவிதன்வெளி வழியாகப் படுவான்கரைப் பிரதேசத்தினுள் நுழைந்தது. அந்த அணி புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் கொக்கட்டிச் சோலையில் இருந்த மாவட்டச் செயலகம் தமிழ்அலை பத்திரிகைக் காரியாலயம் தாந்தா மலைப் பிரதேசத்தில் இருந்த சோலையகம் என்பனவற்றை கைப்பற்றியது.
இவ்வாறு புலிகள் கிழக்குமாகாணத்துக்குள் நுழைந்து தம்மை தாக்குவதற்கு இலங்கை அரசபடையினர் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர்கள் தமது பக்கம் நிற்பார்கள் எனவும்   கருணா தரப்பினர் நம்பியிருந்தனர். உண்மையில் கருணாவுடன் நின்ற அரச புலனாய்வுப் பிரிவினரும்  அரசபடையினரும் புலிகளைத் தடுத்து நிறுத்த விரும்பிய போதும் றணில்,  கருணா- புலிகள் மோதலில் படையினரைத்தலையிடாது விலகியிருக்கும்படி கிழக்கின் தளபதியான லெப்டினன் கேணல் சாந்த கோத்தகொட ஊடாகத் தெளிவான அறிவித்தலை வழங்கியிருந்தார். அத்துடன் முப்படைகளின் தளபதி என்ற வகையில்  ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார். 
புலிகளின் தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அரசாங்கமோ அல்லது படையினரோ எடுப்பது சமாதானப் பேச்சுவார்த்தையைக்  குழப்புவதாக அமைந்துவிடும் என்பதால் புலிகளின் உள்வீட்டுச் சண்டையில் அரசாங்கமோ படையினரோ தலையிடப் போவதில்லையென மிகச் சாதுரியமான பதிலையும் றணில் அப்போது தெரிவித்திருந்தார்.
உண்மையில் றணிலின் அரசாங்கமோ அல்லது ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவோ கருணா அணியினரைப் புலிகளுடன் மோத விடாது தென்பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து வந்திருக்க முடியும். அல்லது வன்னியில் இருந்து புறப்பட்ட புலிகளைக் கிழக்கிற் தரையிறங்க அனுமதிக்கப் போவதில்லை என றணிலின் அரசாங்கமோ ஜனாதிபதி சந்திரிக்காவோ உறுதியாகத் தெரிவித்திருக்க முடியும். அதற்கப்பாலும் யுத்த நிறுத்த காலத்தில் ஆயுத மோதல்களை அனுமதிக்க முடியாது எனக் கூறியிருக்கவும் முடியும். சமாதான காலத்தில் புலிகள் ஆயிரக்கணக்கான யுத்தநிறுத்தமீறல்களைச் செய்தார்கள் எனப் பட்டியலிட்ட அரசாங்கம் இதற்கு மட்டும் ஏன் அனுமதித்தது?
இந்தவிடத்தில்தான் இரணிலின் இராசதந்திரம் மற்றும் சிங்களப் பேரினவாதத் தலைவர்களின் ஒற்றுமை என்பன மிகத்தெளிவாகத் தெரிந்தன. 
• புலிகளிடமிருந்து வலிமையான ஒரு இராணுவத் தளபதியை உடைத்து எடுத்தல்
• வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான பிளவை இன்னும் ஆழப்படுத்தல்
• ஐந்தாயிரம் போராளிகளோடு கிழக்கில் பலமாக இருந்த கருணா அந்தப்பலத்துடனேயே இருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் தமக்குத் தலையிடியாகலாம் என்பதால் புலிகளையும் கருணாவையும் மோதவைத்துப் போரனுபவம் கொண்ட தமிழ்ராணுவத்தைப் பலமிழக்கச் செய்தல்
• கருணா என்னும் பாம்பின் பல்லைப் புலிகளைக் கொண்டே பிடுங்கிப் பின் தேவைப்படும் போது பாவிப்பதற்காக தமது மகுடிப் பேழைக்குள்  எடுத்தல்
எனப் பல நோக்கங்களைத் தனது இராசதந்திரத்தின் முலம் ரணில் சாதித்துக் கொண்டிருந்த போது கிழக்கில் ஆயிரக்கணக்கான  தமிழ்ப் போராளிகள் தமக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
சந்திரிக்காவும் றணிலும் கடுமையானதொரு அதிகாரப்போட்டியில் ஈடுபட்டிருந்தபோதும்  தங்களுக்குள் முரண்பாடுகளைக் கொண்டிருந்த போதும் கருணாவும் புலிகளும் தங்களுக்குள் அடிபட்டழிவது சிங்களப் பெருந்தேசியவாத்திற்கு நன்மையே என்பதில் ஒன்றுபட்டனர். ஆனால் புலிகளின் தலைமையோ அல்லது கருணாவோ இந்த ஒற்றுமையையோ அதன் பின்னால் உள்ள சிங்களப் பேரினவாதத்தின் நோக்கங்களையோ புரிந்து கொள்ளும் நிலையில் இருக்க வில்லை. இத்தனை 'ஆத்திரக்காரர்களுக்குப் புத்தி மத்திமம்'  எனப்பழமொழியிற் சொல்வார்கள்.
தமிழ்த்தேசியவாதம்  அதன் போராட்ட வரலாற்றில் பல தடவைகள் தானே தனது கண்ணில் குற்றிக்கொண்டுள்ளது. டெலோப் போராளிகளைக் கொன்ற போது  ஈ.பி.அர். எல் எ·ப் போராளிகளைக் கொன்றபோது இன்னும் சிறிய மாற்று இயக்கங்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் கொன்ற போதும் இரத்தம் வடிந்தது தமிழ்தேசியத்தின் கண்களில்தான். அந்த இரத்தம் தேசிய விடுதலை என்ற பெயரால் நியாயப்படுத்தப்பட்டது.  சரி இந்த இரத்தம் இனியொரு போதும் வடியாதென்று மக்கள் மாயையில் ஆழ்ந்திருந்த காலத்தில் மீண்டுமொருமுறை தமிழ் தேசியம் தனது கண்ணில் குற்றிக் கொண்டது.
 
(புலிகளுடன் மோதிய கருணாவின் சிறுவர் அணியினர் காயங்களுடன் வைத்தியசாலையில் )
41 நாட்கள் தொடர்ந்த கருணா புலிகள் மோதலில் முன்னூறு வரையான புலிகள் கிழக்கில் கொன்றொழிக்கப்பட்டனர். இதில் கருணாவின் மூத்த சகோதரர் லெப்டினட் கேணல் ரெஜி துரை விசு ஜிம்கலித்தாத்தா ராபர்ட் திருமாள் உள்ளிட்ட முக்கிய தளபதிகளும் அடங்குகின்றனர். இதேபோல் நீலன் என்ற புலனாய்வுப் பொறுப்பாளர் உள்ளிட்ட பல விடுதலைப்புலிகளைச் சேர்ந்த போராளிகளைக் கருணா அணியினர் கொன்றொழித்தனர். 
புலிகள் தமது அதிகாரத்தைக் கிழக்கில் நிலைநிறுத்த தாம் வளர்த்து உருவாக்கிய போராளிகளையே பலியெடுக்கத்துணிந்தனர். கருணாவோ தன்னைப் பாதுகாக்கவும் கிழக்கில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தவும்  தன்னை நம்பிப் புலிகள் அமைப்பில் இணைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட கிழக்கு போராளிகளைப் பலியாக்கினார்.
புலிகளுடன் மோதிய கருணாவின் அணியினர் காயங்களுடன் வைத்தியசாலையில் 
இங்கேதான் கிழக்கை வடக்கின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதற்காகவும் கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காகவும் தான்  புலிகளின் தலைமையுடன் முரண்பட்டேன் எனக்கூறிய'கிழக்கின் மைந்தனான கருணாவின்'  கோரிக்கைகள் பற்றி ஆழமான கேள்விகள் எழுகின்றன. 
புலிகளின் தலைமையுடன் முரண்பட்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறித் தனியாக இயங்க முடிவெடுத்த கருணா இலங்கை அரசிடம் கிழக்கு தொடர்பாக எந்த அரசியற் கோரிக்கைகளையும் வைத்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஐயாயிரம்  போராளிகளுடன் கிழக்கில் பலமாக இருந்த கருணா கிழக்கின் அபிவிருத்திக்குத் தேவையான குறைந்த பட்ச அதிகாரங்களையாவது பெறுவதற்கு அரசுடன் பேரம் பேச முற்பட்டிருக்க வேண்டும் அரசு எதையாவது வழங்கியிருக்குமோ என்பது சந்தேகமே. ஆனால் கருணா உண்மையிலும் ஒரு அரசியல் நோக்கோடுதான் புலிகளில் இருந்து பிரிகிறார் என்னும் ஒரு தோற்றப்பாடாவது உருவாகியிருக்கும். அது மட்டுமல்ல விடுதலைப்புலிகள் தம்மீது தாக்குதல்களில் ஈடுபடுவார்கள் எனத் தெரிந்திருந்தும் கிழக்கின் அனைத்துப் போராளிகளையும் சகோதரப் படுகொலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய எந்த முன்னேற்பாடுகளையோ அரசியல் முனைப்புக்களையோ கருணா செய்யவில்லை. கிழக்கில் இருந்த போராளிகள் அனைவரையும் வைத்துப்பராமரிப்பதில் உள்ள சிக்கல் காரணமாக கணிசமான போராளிகளை விடுகளுக்கு போங்கள் என்றும் கூப்பிடும் பொது வாருங்கள் என்றும் அனுப்பி வைத்த கருணா போரிடும் திறனும் அனுபவமும் கொண்ட ஒரு தொகையான  போராளிகளை மட்டும் (500க்கும்1000க்கும் இடையில்) தன்னுடன் வைத்திருந்ததேன்? 
(புலிகளுடனான பிளவின் பின் கருணா)
வன்னியில் இருந்து அனுப்பப்பட்ட புலிகளின் படை அணிகளுடனும் கிழக்கில் வன்னித் தரப்பினருக்கு ஆதரவாக இருந்த தளபதிகளின் அணிகளுடனும் மோதிக் கிழக்கைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க  அவ்வளவு போராளிகளும் போதுமென்று முன்னொரு காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அபிமான தளபதியாகவும்  இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொற்பனமாகவும் விளங்கிய கருணா அம்மான் கணக்கிட்டிருப்பாரேயானால் அது நம்ப முடியாததாகும்.  ஆனால் பிற்பாடு நான்கு லட்சம் படைகளுடன் பெரும் எடுப்பில் இலங்கை இராணுவம் வன்னிக்குள் நுழையும் போது  எல்லா வளங்கற்பாதைகளும் அடைபட்ட நிலையில்10000 ஆயிரம் போராளிகளுடன் வன்னியைக் காப்பாற்ற முடியுமென விடுதலைப்புலிகள்  சொல்லிக் கொண்டிருந்ததை நினைக்கும் போது கருணாவும் புலிகளும் ஒரேமாதிரியான சிந்தனையையே கொண்டிருந்ததை அறியமுடிகிறது. இது ஒன்றும் வியப்பானதல்ல. எனேனில் கருணாவும் புலிகளும் கொண்டிருந்த இராணுவ அறிவு அரசியலினால் வழிநடத்தப்படாத அறிவாகும். மேலும் இரு தரப்பினரினதும் இராணுவக்கணிப்புகளும் தவறாகிப் போனதற்கான அடிப்படை ஒன்றுதான். இருதரப்புமே நெருக்கடியான சூழ்நிலைகளில்  அவர்களின் சொந்த இருப்புக்கு அச்சுறுத்தல் வந்த போது தம்மைப்பாதுகாக்கக் கூடிய வழிகளை மட்டுமே சிந்தித்திருந்தனர். மக்களின் நலன்களில் இருந்து முடிவுகளை எடுக்கக்கூடிய அரசியல் அறிவையோ சிந்தனைப்புலத்தையோ இவர்கள் கொண்டிருக்கவில்லை. புலிகளிடம் பிற்பாடு வெளிப்பட்ட இந்தக் குணாம்சம் முன்னரே கருணாவிடமும் வெளிப்பட்டது.
எந்த விதமான அடிப்படைத் திட்டங்களும் முன்னேற்பாடுகளும் இல்லாமல் கிழக்கில் செயற்படப்போவதாக அறிவித்த கருணா தெரிந்தெடுத்த போராளிகளைத் தனது பாதுகாப்புக்காகக் கிழக்கில் பலியிட்டார். கருணா இந்த மோதல்கள் உருவாவதற்கு முன்பே (புலிகளுடன் முரண்பாடு முற்றிவந்த போதே) தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அரசாங்கத்தின் உதவியுடன் மலேசியா அனுப்பி வைத்துவிட்டார்.  இதன் போது விடுதலைப் போராட்டத்திற்கெனச்  சேகரித்த இலட்சக்கணக்கான் பணத்தையும் தனது மனைவியின்  தேவைக்காகக் கொடுத்து விட்டதனை கருணாவுடன் இருந்த போராளிகளே அம்பலப்படுத்தியும் இருந்தனர்.  கருணா தனது மனைவி பிள்ளைகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு  ஐக்கியதேசியக் கட்சியில் அமைச்சராக இருந்தவரும் பின்னாளில் மலேசியத் தூதராக இருந்தவருமான செல்லையா இராஜதுரையின் உதவியையும் பெற்றுக்கொண்டதாகத்  தகவல்கள் வெளியாகி இருந்தன ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையில் நடந்த  41 நாட்கள் மோதலில் கருணாவிடம் இருந்த போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகளும் அதன் தளபதிகளும் கொல்லப்பட்டனர். றணில் அரசாங்கம் எதிர்பார்த்தது போன்றே கிழக்குப் போராளிகளின் பலம் பெருமளவுக்கு  அழிக்கப்பட்டது. பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் மார்க்கன் இனியபாரதி போன்ற இளநிலைத் தளபதிகளும் சில அணியினரும் எஞ்சினர்.
இதில் வேதனைப்பட வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில் புலிகள் தமக்குள்ளே மோதி நூற்றுக் கணக்கான தமிழ்ப்போராளிகள் இறந்து கொண்டிருந்த போது தங்களது பிள்ளைகளை இப்படியும் இழக்க நேருமென்றெதிர்பாராத பெற்றோர் இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த போது கிழக்குத் தேசியம் பேசிய சிவராம் உள்ளிட்ட  இராணுவ ஆய்வாளர்களும்,எழுத்தாளர்களும் இந்தச்சமருக்கு புதிய இலக்கணத்தை அளித்தனர். அதுவரைகாலமும் எதிரிப் படைகளைச் சமரில் வெற்றி கொண்ட புலிகள் தாம் பயிற்றுவித்து வளர்த்து உருவாக்கிய தமது பலம்மிக்க அணிகளையும் எதிர் கொள்ளும் இராணுவப் புலமையைப் பெற்றுள்ளார்கள் என அவர்கள் புகழாரம் சூட்டினர். இது புலிகளின் அடுத்த கட்ட இராணுவ முதிர்ச்சி  எனவும் வியந்தனர்.   
எதிரியின் அரசியற் காய்நகர்த்தல்கள் இராணுவத்தந்திரங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து இடித்துரைத்து வழிகாட்ட வேண்டிய  மதியுரைஞர்களும் ஆய்வாளர்களும் இவ்வாறு கூழுக்குப் பாடிக் கொண்டிருந்தபோது சிங்களப்பெருந்தேசியவாதம் நான்காவது ஈழப்போருக்குத் தன்னைப்பட்டை தீட்டிக்கொண்டிருந்தது. 
விடுதலைப் புலிகளுடன் நிகழ்ந்த அதிதீவிர மோதல்களில்  தனது தனது பலத்தை இழந்த ஒரு இரவில் கிழக்கின் மைந்தனான கருணா தனது பால்ய மற்றும் பாடசாலை நண்பர் அலிசாகிர் மௌலானாவின் உதவியுடன் வெறுங்கையோடு சென்று சிங்கத்தின் காலடியில் விழுந்தார். 
லிசாஹிர் மொலானா கொழும்பில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதி

(சண்டையை கைவிட்டுவிட்டு பின்வாங்குமாறு அவரிடம் கூறினேன். அவரும் அங்கிருந்து தப்பி தொப்பிகலக் காட்டுப்பகுதிக்கு சென்றார். நான் அங்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு ‐ ஏப்ரல் 12 ஆம் திகதி ‐ கொழும்புக்கு வந்ததாகவும் அலிசாகிர் தனது செவ்வியில் தெரிவித்தார். ஆயுதங்கள் எதுவுமின்றி சாதாரண பயணிகள் போல வாகனத்தில் சென்றதால் வரும்வழியில் சோதனைசாவடிகளில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.
கொழும்புக்கு அழைத்துச் சென்ற கருணாவை முதல்நாள் ஜெய்க் ஹில்ட்டன் ஹோட்டலில் தங்கவைப்பதற்கு சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட நான், இது விடயம் சம்பந்தமாக சமாதான செயலக பணிப்பாளர் பேர்னாட் குணத்திலக்கவிடம் எடுத்துக்கூறி, கருணாவை அவரிடம் பொறுப்பளித்ததாக கூறுகிறார். தான் வெறுமனே டக்ஸி ஓட்டுநர் வேலை மட்டும் பார்க்கவில்லை. பொறுப்புடன் இந்த விடயத்தை செய்துமுடிதததாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.)

அலிசாகிர் மௌலானாவுடன் கருணா
இவ்வாறு அலிசாகிர் மௌலானாவின் உதவியுடன் 2004 ஏப்ரல் 12ஆம் திகதி கருணா கொழும்பு அழைத்து செல்லப்பட்ட செய்தியை அன்றே இரவு 9.15 மணிச் சூரியன் செய்தியில் வெளியிட்டு இருந்தேன். இது எல்லோருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. காரணம்   மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டு கருணா கொழும்பு வருவதற்கு முன்பே சூரியன் எ·ப் எம் வானொலியில் அச் செய்தி ஒலிபரப்பானமை கருணாவின் பயணத்திற்கு  ஏற்பாடு செய்தவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எனது நிறுவனத்தின் தலைவர் கூட எனது கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எவ்வாறு இந்தச் செய்தியைப் பெற்றாய் என வினவியிருந்தார்.
ஒரு பத்திரிகையாளனாக இவ்வாறான செய்திகளை பெற்றுக்கொள்வதும் உறுதிப்படுத்துவதும் சவாலான விடையங்களாகும். அன்றைய காலப்பகுதியில் சூரியனின் செய்தியாளர்கள் செய்தி ஆசிரியர்கள் மற்றும்  எம்மோடு இணைந்திருந்த மக்கள் என அனைவரது உழைப்பாலும் உருவாகியிருந்த ஒரு வலையமைப்பாலேயே அது சாத்தியமாகியிருந்தது. இவை தொடர்பாக பின்னர் வரும் தொடர்களில் பார்ப்போம்.
பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறிய கருணாவுக்கு இருந்த ஒரு தெரிவு இலங்கை அரச ராணுவத்தின் துணைக்குழுத் தலைவராக மாறுவதே. இலங்கை அரசின் தமிழர் விரோதநடவடிக்கைகளை நியாயப்படுத்துதல் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச புலனாய்வு மற்றும் இராணுவப் பிரிவுகளின் செயற்பாடுகளுக்கு உதவுதல் எனக் கிழக்கின் மைந்தனின் வேலைப்பழு அதிகரித்ததே அன்றிக் குறையவில்லை.  
2009 இல் நிகழ்ந்த நான்காம் ஈழப்போரில் கருணாபுலிகளின் பலம் தொடர்பாக இராணுவத்திற்கு வழங்கிய தகவல்களும் இராணுவத்தின் வெற்றிக்கு வழிவகுத்திருந்ததாகக் கூறப்பட்டது. 
கொழும்பிற்குச் சென்ற கருணா பின்னர் இலங்கை அரசின் முகாம்களில் இருந்து கொண்டு (பானாங்கொடை மற்றும் வேறு சில இரகசிய முகாம்களில் இருந்து) எஞ்சிய தனது போராளிகளை குழுக்களாக்கி வழிநடத்தி வந்தார். இந்தக் குழுக்களுக்கு தற்போதைய கிழக்குமாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் களத்தளபதியாக இருக்க மார்க்கன். இனியபாரதி போன்றோர் கீழ்நிலைத் தளபதிகளாகச் செயற்பட்டனர். கருணாவினால் வழிநடத்தப்பட்ட குழுக்களின் முகாம்கள் கிழக்கின் எல்லைப்புறங்களில் இலங்கை அரசின்  இராணுவ படைமுகாம்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மீதும் புலிகள் பலமுறை தாக்குதல்களை மேற்கொண்டு கருணா குழுவினரை அழித்துள்ளனர். 
வடக்கைச் சேர்ந்த அரசியல் வாதிகளும் பின்னாளில் வந்த போராளிக்குழுக்களும் குறிப்பாக விடுதலைப் புலிகளும்  கிழக்கின் போராளிகளையும் கிழக்கு மக்களையும்  தமது நலன்களுக்காக பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதும் அதில் பெருமளவு உண்மைகள் இருப்பதும் ஏற்கனவே எனது தொடர்களில் ஒப்புக்கொள்ளப்பட்டு அலசப்பட்டுள்ளன.  
மறுபுறத்தில்  வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க வாதத்தை விமர்சித்த பெரும்பாலான ஆரம்ப காலக் கிழக்கின் அரசியற் தலைமைகளும் பின்னாளிற் போராளித் தலைமைகளும் வடக்கின் தலைமைகளுடனோ அன்றி ஆளும் அரசாங்கங்களுடனோ தமது சொந்த நலன்களுக்காகவே ஒட்டிக்கொண்டிருந்தார்களே ஒழிய கிழக்கின் அபிவிருத்தி அல்லது விடுதலைபற்றி உண்மையான பற்றுறுதியுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் முந்தைய தொடரில் வெளிப்படுத்தியிருந்தேன். 
கருணாவின் பிளவை இந்தக்கண்ணோட்டத்தில் இன்னும் சற்று ஆழமாக ஆராய்வோம். 
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்த அனேகமான இளைஞர்களைப் போலவே பாடசாலைப் பருவத்திலேயே கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து விட்டார். இந்திய அமைதிப்படை இலங்கையில் கால்பதித்தவுடன் குமரப்பா புலெந்திரன் உள்ளிட்ட கிழக்கில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் 1987களில் வடக்கிற்கு அழைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் கருணா என்கிற வினாயகமூர்த்தி முரளீதரன் அவரது அயராத உழைப்பு அர்பணிப்புடன் கூடிய போராட்டத் திறன் தலைமை மீது கொண்ட அதீத விசுவாசம் என்பன காரணமாக மட்டக்களப்பிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டு பின் கிழக்கின் தளபதியாக உயர்த்தப்பட்டார்.
'சொல்லுறதைச் செய்யிறவனே எங்களுக்குத் தேவை'  என்பது புலிகளின் தலைமையினது பிரபல்யமான வாசகம்.  தலைமை எதனைக் கூறுகிறதோ அல்லது உத்தரவிடுகிறதோ அதனை கேளிவிகளுக்கு அப்பாற்பட்டு நிறைவேற்ற வேண்டுமென்பதே புலிகளுக்குள் நிலவிய அடிப்படைத்தாரக மந்திரம். இந்தக் கோட்பாட்டைக் கருணா அளவுக்குக் கடைப்பிடித்தவர்கள் புலிகள் அமைப்பில் எவருமில்லை என்னுமளவுக்கு கருணா விளங்கியிருந்தார்.  
வடக்கில் ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது இலங்கைப் படையினர் தமிழ்ப் பொதுமக்கள் மீது மேற்கொண்ட ஒரு தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என வன்னியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கருணாவிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டவுடனேயே தனது தொடர்பாடற் கருவி மூலம் மட்டக்களப்பில் இருந்த போராளிகளுக்கு சிங்களக் குடியேற்றமொன்றின் மீதான தாக்குதலுக்கான  உத்தரவைக் கருணா வழக்கிவிட்டார். கூட்டத்தின் போக்கில் சற்றுச் சிந்தித்த பின் புலிகளின் தலைவர் பிரபாகரன் கருணாவிடம் இப்போதைக்கு வேண்டாம்  அரசியல் சூழல் சரியில்லை பின்னொரு போது பார்க்கலாம் எனக்கூறியிருகிறார் உடனே கருணா கிழக்குப் போராளிகளைத் தொடர்புகொண்டு நிறுத்துங்கள் எனச் சொல்ல முன்பே கருணாவின் உத்தரவின் பேரில் சென்ற அணி எல்லையிற் பலரை வெட்டிச் சரித்தபின் மீண்டு வந்து கொண்டிருப்பதாக  கருணாவின் உதவியாளர் மறுமுனையில் பதிலளித்திருக்கிறார்.  புலிகளின் தலைமை மீது அன்று தான் கொண்டிருந்த  விசுவாசம் மற்றும் எந்த நேரத்திலும் தாம் தாக்குதல்களுக்கு தயாராக இருந்தநிலை போன்றவற்றை விளக்க இந்தக்கதையினை கருணாவே சிலரிடம் கூறியிருக்கிறார். எது எப்படியிருப்பினும் புலிகளின் தலைவர் பிரபாகரன் எள் என்றால் எண்ணையாக நின்ற கருணாவின் இயல்பு குறித்ததே இக்கதை.  
விடுதலைப்போராட்டம் எழுச்சியடைந்து வந்த காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் எல்லைப் புறக்கிராமங்களில்  அடிக்கடி நிகழ்ந்தன. புலிகளின் இராணுவக் கண்ணோட்டத்தில் கிழக்கின் எல்லைப்புறச் சிங்களக் கிராமங்களைத் தொடர்ச்சியாகத் தாக்கிப் பதட்டத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கை அரச இராணுவத்திற்கு தனது ஆள் மற்றும் படை உபகரண வலுவை பிரித்து எல்லைப் புறங்களுக்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்க முடியுமென்று கருதினார்கள். இதன் மூலம் அரச படைகளின் பலம் ஒரிடத்தில் திரள முடியாதென்பதுடன் ஆள் மற்றும் வளப்பற்றாக் குறைகளுக்கும்  இலங்கை அரசாங்கம் முகம் கொடுக்க நேரிடுமென்றும் கருதினார்கள். ஆனால் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் தமிழ் தேசிய விடுதலையின் அரசியல் பரிமாணத்தின் மீது இரத்தக்கறையைப் பூசியதைப்பற்றி அவர்கள் அன்று கவலைப்பட்டிருக்கவில்லை.  
பின்னாளில் உலக ஒழுங்கு மாறியபோது புலிகளைப்பயங்கரவாத இயக்கமாகக் காட்டுவதற்கான ஆதாரங்களாக இவையும் அமைந்தன.
இவ்வாறான அரசியற் சிந்தனையற்ற போர் விழுமியங்களுக்கு உட்படாத மனித்தன்மையற்ற   தாக்குதல்களை தொலை தூர அரசியற் சிந்தனை கொண்ட ஒரு விடுதலை அமைப்பு செய்ய முடியாதுசெய்யக்கூடாது. இவ்வாறான தாக்குதல்களை அனேகமான தமிழீழவிடுதலை அமைப்புக்களில் இருந்த போராளிகளும் குறிப்பாக விடுதலைப்புலிகளில் இருந்த போராளிகளும் (கருணா உட்பட) இலகுவான முறையில் செய்தே இருந்தனர்.
சிங்கள முஸ்லீம் மக்கள் மீதான கொலைகள் மட்டுமல்ல ஈழப் போராட்ட வரலாறு நெடுகிலும் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகள் மாற்றுக்கருத்தாளர்கள் மீதான கொலைகள்  மற்றும்  சித்திரவதைகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் செய்த விடுதலை இயக்கங்களில் இருந்தவர்கள் செய்திருந்தனர். 
ஆக விடுதலைப் போராட்டத்தின் இராணுவ உருவாக்கத்தில் அதன் கொள்கை உருவாக்கத்தில் ஏற்பட்ட அடிப்படையான தவறு காரணமாக தமிழ் ஈழ விடுதலை வீரர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மனிதத்துவத்துக்கெதிரான குணாம்சங்களை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது கண்கூடு.
1987ஆம்  ஆண்டின் பின்  கிழக்கில்   மேற் கொள்ளப்பட்ட  எல்லைப்புறக் கிராமங்கள்  மீதான  தாக்குதல்கள்  முஸ்லீம்  பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் யாவும் கருணாவின் நேரடி உத்தரவிற்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிழக்கில் புலிகள் மேற்கொள்ளும் எந்தத் தாக்குதல்களையும் குறிப்பாக இராணுவத்தின்மீது  மேற்கொள்ளப்போகும் தாக்குதல்களை முதலில் அவர்கள் புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்திய பின்பே மேற்கொள்ளும் வழமை இருந்த போதும்  எல்லைப்புறக் கிராமங்கள் மீதான தாக்குதல்கள் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பலவற்றைக் கருணா தன்னுடைய  முடிவிற் செயற்படுத்திவிட்டுப் பின்னர் அறிவித்த சந்தர்ப்பங்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
புலிகளின்  தலைமையோடு  முரண்பாடு முற்றிய ஒரு நிலையிலேயே  கிழக்கில் புலனாய்வுத் துறை தவிர்ந்த அனைத்து நடவடிக்கை களையும் தனது கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருந்த கருணா புலிகள்  அமைப்பின்  முக்கியமான  16 துறைகளுக்கான பொறுப்புகளில் வடக்கைச்   சேர்ந்தவர்களே   நியமிக்கப்பட்டு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். புலிகளுடன் பாலும் நீரும் போலச் சேர்ந்திருந்த காலத்தில் அவர் இதனை உணராதிருந்தது வியப்பானது.
(புதிதாக இணைக்கப்பட்ட போராளிகளுடன் கருணா)
கிழக்கின் முடி சூடாமன்னனாக விளங்கிய கருணா பற்றியும் அப்போது கிழக்கில் இருந்த போராளிகளுக்குள் விமர்சனங்கள் எழாமல் இல்லை ஆனால்   விடுதலைப் புலிகள் அமைப்பிற்குக் கிழக்கு மாகாணத்தில் போராளிகளை   உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் விசுவாசமான முகாமையாளனாகக் கருணா விளங்கியமையால் கருணா தொடர்பாக முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும்   விடுதலைப்புலிகளின்  தலைமை கண்டும் காணாமலும் விட்டிருந்தது.  விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணா தொடர்பான  குற்றச்சாட்டுகள் அல்லது விமர்சனங்கள் அடங்கிய பல கடிதங்களை விடுதலைப்புலிகளின் தலைமை கருணாவிடமே கையளித்துமிருக்கிறது. அதனால் அக்கடிதங்களை எழுதிய  போராளிகளைக் கருணா பழிவாங்கியும் உள்ளார். கருணா மீது குற்றசாட்டுக்களை முன்வைத்த முக்கியமான தளபதிகளான நிஸாம் ஜீவன் போன்றவர்கள் இந்தவடிப்படையில்  கருணாவால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கிழக்கின் போராளிகள் கூறியிருக்கிறார்கள்.  ஆனால் இது தொடர்பாக புலிகளின் தலைமை எந்த நடவடிக்கைகளையும் கருணா மீது எடுக்கவில்லை.
இந்திய அமைதிப்படை காலத்தில் இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஈ.பீ.ஆர்.எல்.எவ் மற்றும் ஈ.என்.டீ.எல்.எவ் அமைப்புகள் தமிழ்த்தேசிய இராணுவம் என்றவொரு கட்டமைப்பை உருவாக்கி அதற்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். அவ்வாறு வடக்கு கிழக்கில் இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுள் பல நூற்றுக்கணக்கான  கிழக்குமாகாணத்தைச் இளைஞர்களும் அடங்குவர். 
இந்திய ராணுவம் இலங்கையை விட்டு நீங்கிய போது இந்த இளைஞர்கள் அனாதரவாக விடப்பட்டனர். இவர்கள் அனைவரையும்  சுட்டுக் கொல்வதற்கான உத்தரவை எந்தவித அரசியற்சிந்தனையோ மனிதாபிமானமோவின்றிக் கருணா அன்று பிறப்பித்திருந்தார். இந்தக்கொலைச் செயலுக்கு 1990களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிப்போராளியான றேகன் என்பவர் தலைமை தாங்கியிருந்தார். தமிழ்த் தேசிய இராணுவத்தில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட தனது மகனை தேடித் திரிந்த தாய் ஒருவர் கிழக்குமாகாணத்தில் மாமாங்கம்புன்னைச் சோலைபார்றோட் கள்ளியங்காடுரெயில்வே ஸ்ரேசன் ஏரியா கள்ளியங்காடு போன்ற பகுதிகளில் அமைந்திருந்த தமிழ்த் தேசிய இராணுவ முகாம்களில் கைப்பற்றப்பட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தேசிய இராணுவத்தினர் கள்ளியங்காட்டில் அமைந்திருந்த ஒரு அரிசி ஆலையொன்றினுள் குவிக்கப்பட்டுள்ளனர் என அறிந்து அங்கு சென்று குவிந்திருந்த சடலங்களை ஒவ்வொன்றாக எண்ணி அழுதழுது புரட்டித் தனது மகனை தேடியிருந்தார். ஏறாத்தாள 843 சடலங்களை அவர் எண்ணியிருந்தார். இவர்களும் கிழக்கின் மைந்தர்கள்தான் என்பதனைக் கருணா அன்று அறியவில்லையோ?
புலிகளுக்கு ஆட்களை வழங்கிய போதும் சரிமற்ற இயக்கங்களில் இருந்த கிழக்குமாகாணப் போராளிகளை மனிதாபிமானமே இல்லாமல் கொன்ற போதும் சரி கிழக்குப்பற்றிய துளி உணர்வு கூட இந்தக்கிழக்கின் மைந்தனுக்கு ஏற்படவேயில்லையே?
(Col Karuna's faction has forced many children into its ranks
Page last updated at 15:15 GMT, Friday, 9 May 2008 16:15 BBC UK )
பாரிய படையெடுப்பை மேற்கொண்டு கிழக்கை இலங்கை இராணுவம் முழுமையாக விடுவித்தபோது கருணாவினது குழுவினர் கிழக்கில் மீண்டும் துணை இராணுவக் குழுவாகத்தானே மாற்றிச் செயற்பட ஆரம்பித்தனர்.  கருணாவினது இந்தக்குழுக்கள் பலவந்தமான முறையில் சிறுவர்களைத் தம்முடன் இணைத்திருந்தமை குறித்து மனித உரிமைக்குழுக்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தன. விடுதலைப்புலிகள் சிறுவர்களை  போராளிகளாக இணைகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சர்வதேச ரீதியில் வலுப்பெற்றுக் கொண்டு இருந்த போது அரசாங்க படைகளின் ஆதரவுடன் கருணாவின் முகாம்களிலும் சிறுவர்கள் துப்பாக்கிகளின் சுமைதாங்காது நின்றார்கள் இவர்களும் கிழக்கின் பிஞ்சுகள்தானே? 
பிரபாகரனிடமிருந்தும் வடக்குப் புலிகளிடமிருந்தும் கிழக்கை விடுவிக்கப் புறப்பட்ட விடிவெள்ளி, கிழக்குப் பிஞ்சுகளின்கையில் கையிலும் கொள்ளிக்கட்டையைக் கொடுத்ததேனோ? 
இங்குதான் கருணா அரசியல் ரீதியாக அம்பலப்படுகின்றார். கருணாவின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்து புலிகளின் தலைமை அவருக்கெதிராக திரும்பத் தொடங்கிய போதுதான் கிழக்கு பற்றிய அவரது அக்கறை விழித்துக்கொள்கிறது. 
அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் முரண்பட்டுக் கொண்டு தான் அதுவரை காலமும் அனுபவித்துவந்த உயர்நிலையை அனுபவிக்க முடியாது என்று வந்த போது இலங்கை அரசு கருணா என்ற தனிமனிதனுக்கு வழங்க முன்வந்த வசதிகளும் பாதுகாப்பும் சுகபோகமும் முக்கியமானதில் வியப்பேதுமில்லை.  கருணா விரும்பினால் அவரிடம் இருக்கும் பணத்துடன் வெளிநாடொன்றுக்குப் போக முடியும் எனப் புலிகள் கூறியிருந்த போதும் அந்தத் தெரிவு ஒரு போதும் தனது உயிருக்கு உத்தரவாதத்தை வழங்காது என்பதையும் அவர் அறிந்தே இருந்தார்.
ஆகத் தமிழ்த்தேசியவிடுதலைப் போராட்டமென்ற தளத்தில் நிலவிய    பிரதேசவாதம் என்னும் பேயை விரட்ட ஒரு வேப்பமிலையைக்கூட  எடுக்காத கருணாபுலிகள் கிழக்குமாகாணத்தின் போராளிகள் உற்பத்தித்தொழிற்சாலையின் கணக்கு வழக்குகளையும் நடைமுறைகளையும் கேட்ட போது பிரதேச வாதமென்ற ஒரு சொல்லையே பதிலாக எழுதிக்கொடுத்தது எடுபடவில்லை. 
இந்தக் கட்டத்தில் கருணாவின் வெளியேற்றத்தை ஈழ விடுதலைப் போராட்டத்தின் மறுமலர்ச்சிகிழக்கில் ஏற்பட்ட உதயம் என்றெல்லாம் வாயார வாழ்த்தி அதனை நியாயப்படுத்திப் போற்றித் துதித்த கிழக்கின் புத்திஜீவிகள்,சமூகப் பிரதிநிதிகள்அரசியல்வாதிகள்  யாவரும்மௌனித்துப்போயினர்.
கருணா அணியினர் கிழக்கில் செய்த அடாவடித்தனங்களைப் பார்த்த அதிர்ச்சியில் அவர்கள் வாயைமுடிக் கொண்டனர். இதனைவிடப் புலிகளின் தலைமையின் கீழேயே இருந்திருக்கலாம் என்றும் குறைந்தபட்சம் அரச படைகளின் அடாவடித் தனங்களில் இருந்தாவது புலிகள் தம்மைக் காத்திருப்பார்கள் என்ற எண்ண அலை கூட அன்று அவர்களிடம் ஏற்பட்டிருந்தது.
கருணாவினுடைய பிளவு மட்டுமல்ல அதற்கு முன்னர் நிக‌ழந்த தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் உட்பிளவுகள் பலவற்றையும் அவதானிக்கும் போது   தமிழ்த்தேசியவிடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்த அடிப்படையான தவறு புலப்படுகிற‌து.
விடுதலைப் புலிகளுடன் முரண்பட்ட எவருக்கும் மரணம் அல்லது இலங்கை அரசுடன் சேர்வதென்ற தெரிவே இருந்தது இது விடுதலைப்புலிகள் விட்ட‌ பாரதூரமான தவறாகும்.
மாற்றுக் கருத்துக்களுடன் உயிர் வாழவதற்கான உரிமையை மறுத்திருந்தமை தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு அளவுகடந்த எதிரிகளை உருவாக்கிவிட்டிருந்தது. இந்தத் தூர நோக்கற்ற நடத்தையினால்  வெற்று இராணுவக்கண்ணோட்டத்தினால் எதிரியின் ராணுவமே பயன்களைப்பெற்றுக் கொண்டது நான்காவது ஈழப்போரில் நிதர்சனமானது....
இது பற்றி அடுத்த தொடரில்...

No comments: