உலகச் செய்திகள்


சியாசின் பனிப்பாறை சரிவில் பலியானவர்களை மீட்கும் பணி தீவிரம்

சிரியாவும் அனானின் சமாதான திட்டமும்

சிரியாவில் போர் நிறுத்தம் அமுல்: துப்பாக்கி, பீரங்கிகளின் சத்தம் ஓய்ந்தது

சியாசின் பனிப்பாறை சரிவில் பலியானவர்களை மீட்கும் பணி தீவிரம்

9/4/2012

சியாசின் பகுதியில் பனிப் பாறை சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன .

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாசின் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பனிச் சரிவு ஏற்பட்டதில், ஜியாரி என்ற இடத்தில் முகாமிட்டிருந்த பாகிஸ்தானிய வீரர்கள் 124 பேர் உள்ளிட்ட 135 பேர் பலியாயினர். 19 ஆயிரம் அடி உயரத்தில், ( - 50) பாகை செல்சியஸ் வெப்பநிலை கொண்ட இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு போதிய வெளிச்சம் இல்லாததால், மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.


பனிப் பாறையில் சிக்கியுள்ள சடலங்களை மீட்க மோப்ப நாய்களும், இயந்திரங்களும் நேற்று கொண்டு வரப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி, விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டார். பனிப் பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு கி.மீ., நீளத்துக்கு 80 அடி உயரத்துக்கு பனித் துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதன் அடியில் சிக்குண்ட சடலங்களை மீட்க, ராவல்பிண்டியில் இருந்து நவீன இயந்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளன.

பனிப் பாறையில் சிக்கி யாராவது உயிரோடு இருந்தால், அவர்களை உடனடியாக மீட்க ஹெலிகாப்டர்களும், கூடுதல் இராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பனிப் பொழிவு தொடர்வதால், மீட்புப் பணியில் தொய்வு காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி


சிரியாவும் அனானின் சமாதான திட்டமும்
சிரிய உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் மற்றும் அரபு லீக்கின் தூதுவராக செயற்பட்டுவரும் முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கோபி அனான் முன்வைத்த சமாதானத்திட்டத்தின் பிரகாரம் நேற்றைய தினம் அந்த நாட்டில் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நிகழவில்லை.
அசாத் அரசாங்கத்தின் படைகள் தொடர்ந்தும் நாட்டின் வட பகுதியிலுள்ள கிராமங்கள் மீது கடுமையான ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டவண்ணம் இருந்ததாக செய்திகள் தெரிவித்தன. மாஸ்கோவிற்கு விஜயம் செய்திருக்கும் சிரிய வெளியுறவு அமைச்சர் வாலித் மோலிம் குறிப்பிட்ட சில மாகாணங்களிலிருந்து படைகள் சிலவற்றை வாபஸ் பெறுவதன் மூலமாக அனானின் சமாதானத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணியை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். சிரிய நிலைவரம் தொடர்பில் நேற்றைய தினம் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கடிதமொன்றை அனான் அனுப்பவிருந்ததாக பிந்திய செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
அனானின் திட்டத்திற்கு சிரிய உள்நாட்டுப் போரில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒத்துழைப்பதாக அறிவித்த போதிலும் கூட நடைமுறையில் அவர்கள் விரோதமாகவே தொடர்ந்தும் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்தம் நேற்றைய தினம் நடைமுறைக்கு வரத்தவறியிருப்பதனால் மீண்டுமொரு காலஎல்லையை வகுப்பதற்கு மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனான் இருக்கிறார். ஆனால், அவர் அவ்வாறு செய்வதற்கான உடனடிச் சாத்தியங்கள் தோன்றுவதற்கு சாதகமானவையாக நிலைவரங்கள் இல்லை. தொடர்ந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டுப் போர் தணிவதற்குப் பதிலாக உக்கிரமடைந்துகொண்டிருக்கிறது. அசாத் அரசாங்கமும் கிளர்ச்சியாளர்களும் புதிய புதிய கோரிக்கைகளை முன்வைப்பதுடன், வன்முறையைத் தணிப்பதில் அக்கறை காட்டாததனாலேயே தற்போதைய கொடூரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பதாக எழுத்து மூல உத்தரவாதத்தைத் தரவேண்டுமென்றும் கட்டார், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு நிதியுதவி அளிப்பதில்லை என்ற உத்தரவாதத்தைத் தரவேண்டுமென்றும் அசாத் அரசாங்கம் கோரிக்கைவிடுத்திருக்கிறது. ஆனால், அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் தணிவைக் காணமுடியவில்லையென்பதால் ஆயுதங்களைக் கீழே வைப்பதற்குக் கிளர்ச்சியாளர்கள் மறுத்து நிற்கிறார்கள். கடந்த வார இறுதியில் மாத்திரம் 200 க்கும் அதிகமானவர்கள், பெரும்பாலானவர்கள் குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் துப்பாக்கிகள் மௌனமாகுமென்று எவருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், சமாதானத்திட்டத்தை முன்வைத்த அனான் ஏற்கெனவே கொண்டிருந்த நம்பிக்கையைத் தொடர்ந்தும் கொண்டிருப்பார் என்று நம்புவது இனிமேல் கஷ்டமானதாகவே இருக்கும்.
கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்த காலகட்டத்தை பயன்படுத்தி தங்களை மீண்டும் அணிதிரட்டி மேலும் ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டு கிளர்ச்சியைத் தீவிரப்படுத்துவார்கள் என்று அரசாங்கம் சந்தேகிக்கிறது. ஆனால், அரசாங்கப் படைகளில் படுமோசமான தாக்குதல்களில் பெருமளவில் கிளர்ச்சியாளர்களும் குடிமக்களும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஆயுதங்களைக் கீழே வைப்பதாகக் கிளர்ச்சியாளர்கள் எழுத்து மூலம் உத்தரவாதத்தைத் தரவேண்டுமென்று அசாத் அரசாங்கம் எதிர்பார்ப்பது யதார்த்தமானதல்ல. அத்துடன், கிளர்ச்சி இயக்கம் பல பிளவுகளைக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் பல குழுக்களை உள்ளடக்கியதாகும். இவற்றுக்கிடையே கருத்தொருமிப்பு என்பது எதிர்பார்க்கப்பட முடியாததாகும். கிளர்ச்சியாளர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டளைத் தலைமையும் கூட இல்லை. இந்த நிலையில், ஆயுதங்களைக் கீழே வைப்பதாக யாரிடமிருந்து உத்தரவாதத்தைப் பெறுவது என்பது சமாதானத்திட்டத்தை முன்வைத்தவர்களுக்கு பெரியதொரு சிக்கலாக அமைகிறது.
மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சிரியப் போரில் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரும் அக்கறை காட்டவில்லையென்பதால் அனானின் சமாதானத்திட்டம் தோல்வியிலேயே முடியக் கூடுமென்று ஏற்கனவே பல சர்வதேச அவதானிகள் எதிர்வு கூறியிருந்தனர். சிரிய நெருக்குடிக்குத் தீர்வு காண்பதற்கு ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சர்வதேச முயற்சிகள் சகலதையும் காட்டிலும் அனானின் திட்டம் பெருமளவுக்கு நடைமுறைச்சாத்தியமானது என்று நம்பப்பட்டது. இதற்கு அடிப்படைக் காரணம் அந்த நெருக்கடியில் இரு முகாம்களாக இருக்கும் சர்வதேச சக்திகள்ஒருபுறத்தில் ரஷ்யாவும் சீனாவும் மறுபுறத்தில் அமெரிக்காவும் சவுதியும் அனானின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதற்கான சம்மதத்தைத் தெரிவித்திருந்தன. ஆனால், அசாத் அரசாங்கத்தினதும் கிளர்ச்சி இயக்கத்தினதும் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவுமே நடைமுறைச் சாத்தியமாகப் போவதில்லை.
சிரியாவில் சர்வதேச இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்கு தற்போதைய சூழ்நிலையை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அத்தகைய தலையீடுகள் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொண்டுவருவதற்குப் பதிலாக புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்ததையே அண்மைக்காலத்தில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது. அதனால், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வொன்று காணப்படுவதே உகந்ததாகும். சிரியாவுக்கு ஆதரவாக நிற்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி அசாத்தை வழிக்குக்கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அனான் உடனடிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அவரது சமாதானத்திட்டத்தின் முதல் கட்டமே நம்பிக்கையீனமான சூழ்நிலைக்குள்ளாகியிருப்பதை சிரிய நெருக்கடியில் சமாதான முயற்சிகள் சாத்தியமற்றவை என்ற எண்ணத்தை எந்தத் தரப்புக்கும் தோற்றுவித்துவிடக்கூடாது.
நன்றி தினக்குரல்

சிரியாவில் போர் நிறுத்தம் அமுல்: துப்பாக்கி, பீரங்கிகளின் சத்தம் ஓய்ந்தது
syria_ceasefire_சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்த ஒரு வருடமாக நடந்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களை அரசு இராணுவத்தின் மூலம் ஒடுக்கி வந்தது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 9,000க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐ.நா அறிவித்துள்ளது.
எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா தீவிர முயற்சி மேற்கொண்டு, கோபி அனானை சமாதான தூதுவராக நியமித்தது.
இவர் சிரியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சிரியா நேற்று காலை 6 மணி முதல் இதனை அமுலுக்கு கொண்டு வந்தது. ஹோம்ஸ், ஹமா, இட்லிப் ஆகிய நகரங்களில் குவிக்கப்பட்டிருந்த இராணுவம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எனவே அங்கு தினசரி ஒலித்து கொண்டிருந்த துப்பாக்கி சத்தம் ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் போராட்டக்காரர்கள் கையெழுத்திடவில்லை. எனவே அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைய வேண்டும் என சிரியா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்ந்து கலவரம் நடந்ததால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி பக்கத்து நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் 25 ஆயிரம் பேரும், ஜோர்டானில் 8 ஆயிரம் பேரும், லெபனானில் 16 ஆயிரம் பேரும் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நாடு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர உள்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்களும் பயமின்றி தங்கள் வீடுகளில் தங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினக்குரல்




No comments: