குறளில் குறும்பு – கூழா அல்லது ஊழா?

.
வானொலி மாமா நா மகேசன் எழுதிய குட்டி நாடகம்
ஞானா: அப்பா......அப்பா.....இண்டைக்கு அப்பா.....அம்மாவக்கு ஒரு test வைக்கப் போறன் அப்பா.

அப்பா: உனக்கு ஞானா வேறை வேலை இல்லையே....அம்மாவை ஏன் குழப்பப் போறாய்.

ஞானா: சும்மா ஒரு கிழுகிழுப்புக்தான் அப்பா. திருக்குறளிலைதான் test பண்ணப் போறன்.

அப்பா: என்னவேன் செய் ஞானா. என்னை மாட்டிவிட்டிடாதை.

ஞானா: சும்மா எனக்குப் பின்னாலை வாருங்கோ அப்பா. பிறகு நடக்கிறதைப் பாருங்கோ.

அப்பா: சரி.....சரி.......நீ.....போ ஞானா ......நான் பிறகு வாறன்.

சுந்தரி: என்ன ஞானா....அப்பாவும் மகளும் என்கை போகப் போறியள்.

ஞானா: நாங்கள் ஒரு இடமும் போகேல்லை அம்மா. உங்களிட்டைத்தான் வாறம்.

அப்பா: சுந்தரி....இவள்பிள்ளை ஞானா உம்மிலை ஒரு டெஸ்ட் வைக்கப்போறாளாம். நானில்லை சந்தரி.

சுந்தரி: Test ஆமோ? என்ன test எண்டு கேக்கிறன்.

ஞானா: அம்மா....திருக்குறளிலை கூழ் என்ட சொல்லு இரண்டு இடத்திலை வருகுது. அது எங்கை எண்டு சொல்லுக்கோ பாப்பம்.

சுந்தரி: உது தெரியாதே ஞானா. திருக்குறளிலை 7வது அதிகாரம் மக்கட் பேறு. அதிலைஅமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அழாவிய கூழ்.   எண்டு வருகுதுதானே. தான் பெற்ற குழந்தைப் பிள்ளை கையாலை குழாம்பின கூழ் தேவாமிர்தம் போலை இருக்குமாம்.

அப்பா: ஆனால் நான் ஒண்டு சொல்லிறன் கேள் ஞானா. உனக்கு உன்ரை பிள்ளை கையாலை அழாம்பின கூழ் கிடையாது கண்டியோ.

ஞானா: ஏன் அப்பா அப்பிடிச் சொல்லிறியள்.

அப்பா: இந்தக்காலத்திலை ஆர்மேனை பிள்ளையளைக் கையாலை சாப்பாட்டை அழாம்ப விடுகினம். அது பெரிய அவமானம், சுகாதாரத்துக்குப் பழுது எண்டுதானே இந்தக் காலத்திலை நாங்கள் நினைக்கிறம்.

சுந்தரி: அப்பா...திருவள்ளுவற்றை காலத்திலை நடந்தினம் எண்டு இந்தக்காலத்திலை நாங்களும் நடக்க வேணுமே? காலத்துக்குத் தகுந்த மாதிரி நாங்களும் மாறத்தானே வேணும்.

அப்பா: மாறத்தான் வேணும் சுந்தரி. ஆனால் கையாலை உணவைப் பிசைஞ்சு விரல்களாலை எடுத்து வாயிலை வைச்சு உண்ணிறத்திலை ஒரு உடற்கூற்று விஞ்ஞானம் இருக்காம்.

ஞானா: அம்மா....அப்பா என்ன சொல்ல வாறார் என்டு தெரியுதே. கை விரல்களாலை உணவை எடுக்கேக்கை மூளைக்கும், உணவுக்கும் ஒருவகை உணர்வு ஏற்படுமாம். அந்த உணர்வு, உணவின் சுவையை அதிகப்படுத்துமாம்.

அப்பா: வேறை என்ன சுந்தரி. நாங்கள் கையாலை சாப்பாட்டைச் சாப்பிடேக்கை இருக்கிற ருசி கறன்டி முள்ளாலை சாப்பிடேக்கை இருக்கிறேல்லைத் தானே.

சுந்தரி: சும்மா போங்கோ அப்பா. எல்லாம் பழக்க தோசம்.

அப்பா: பழக்கந்தான் சுந்தரி..... பழக்கம் இல்லாத ஒரு ஆளைக் கையாலை சோத்தை அள்ளிச் சாப்பிடச் சொல்லுபாப்பம். சாப்பிடத் துவங்கினால் நல்ல வேடிக்கையாய் இருக்கும். தமிழரடைய பழக்கத்திலை, அதாவது கையாலை அள்ளிச் சாப்பிடுகிற பழக்கத்திலை ஒரு நுட்பம் இருக்குது என்டுதான் சொல்ல வாறன்.

ஞானா: அதை விடுங்கோ அப்பா......நீங்கள் சொல்லுங்கோ அம்மா இன்னும் கூழ் என்ட சொல்லு வாற மற்றக் குறளை.

சுந்தரி: எனக்கென்டால் ஞானா அப்பிடி ஒரு குறளும் இருக்கிறதாகத் தெரியேல்லை.

ஞானா: அப்பா நீங்கள் சொல்லுக்கே பாப்பம்.

அப்பா: ஞானா எனக்கும் அப்பிடிக் கூழ் எண்ட சொல்லு வாற வேறை குறள் தட்டுப்பட இல்லை.

ஞானா: நான் சொல்லட்டே அப்பா.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பெருள்

போகூழால் தோன்றும் மடி.

ஏண்டு ஒரு குறள் இருக்கெல்லே. இதிலை கூழ்என்ட சொல்லு இரண்டுதரம் வருகுது எல்லே.

அப்பா: உதுவந்து ஞானா நீ விடுகிற குறும்பு. தெரிஞ்சு கொண்டு கேக்கிறியோ அல்லது தெரியாமல்தான் கேக்கிறியோ எனக்குத் தெரியேல்லை.

சுந்தரி: ஏன் அப்பா சரியாத்தானே ஞானா செல்லிறாள்.

அப்பா: சுந்தரி....உந்தக் குறள் திருக்குறளிலை ஊழ் எண்ட 38ம் அதிகாரத்திலை இருக்கிற குறள். இவள் பிள்ளை சொல்லிற சொற்கள் கூழைக் குறிக்கேல்லை. ஊழ் எண்ட சொல்லைத்தான் குறிக்குது. ஆகூழ் எண்டதும் போகூழ் எண்டதும் இரண்டு வகையான கூழ் அல்ல. ஆகும் ஊழ்......போகும் ஊழ் எண்ட சொற்கள் புணர்த்தப்பட்டிருக்குது.

ஞானா: கோவியாதையுங்கே அப்பா இந்த ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. எண்ட குறளைப் படித்தபோது இந்தக் கூழ் எண்ட சொல்லின்ரை ஞாபகம் வந்திது. அம்மாவை பகிடியாய் மடக்குவம் எண்டுதான் கேட்டனான்.

சுந்தரி: என்னோடை உனக்குச் சேட்டையாய் இருக்கே ஞானா. எண்டாலும் போகட்டும். இப்பிடி எண்டாலும் திருக்குறளைப் படிப்பம். நீங்கள் உந்தக் குறளின்ரை கருத்தைச் சொல்லுங்கோ அப்பா.

அப்பா: சுந்தரி ஊழ் எண்டது பழந்தமிழ் நம்பிக்கைகளிலை ஒண்டு. அதாவது தமிழர்களுக்கு மறுபிறப்பிலே நம்பிக்கை இருந்தது. பிறவிகள் தோறும் மனிதர் செய்த நல்;வினை தீவினை களின் பயனை ஊழ் என்று சொன்னார்கள். அந்தக் கொள்கையை பற்றி ஊழ் என்ற அதிகாரத்தை வள்ளுவர் தந்திருக்கிறார்;. அதிலேதான் இந்தக் குறள் இருக்கிது. கைப்பொருள் ஆகு ஊழால் அசைவின்மை தோன்றும்:....போகு ஊழால்
தோன்றும் மடி எண்டு பதங்களைப் பிரிச்சுப் பாத்தீரே என்டால் கருத்து விளங்கும்.

ஞானா: அம்மா நான் சொல்லிறன் கேளுங்கோ. ஆதாவது செல்வம் சேரவேண்டிய நல்வினைப் பயன்கள் வரும்போது ஊக்கமும் உற்சாகமும் தாமாகவே வருமாம். உள்ள செல்வத்தை இழந்து விடவேண்டிய தீவினை வரும்போது சோம்பலும் தளர்ச்சியும் தாமாகவே வந்து விடுமாம் என்டதுதான் கருத்தம்மா.

சுந்தரி: அப்ப உதிலை ஒரு புத்திமதி இருக்கெண்டு சொல்லு ஞானா. அதாவது தீய செயல்களைச் செய்தால் கொட்டழிஞ்சு போவியள் நல்ல செயல்களைச் செய்தால் நல்லாய் வாழுவியள் எண்டதுதானே.

ஞானா: ஓமம்மா அப்பிடியும் எடுக்கலாம்.

அப்பா: கூழிலை துடங்கி ஊழிலை கொண்டுவந்து முடிச்சிருக்கிறாள் உம்மடை மகள். நாங்கள் ஆடிக்கூழையும் மறந்துபோனம். சும்மா எண்டாலும் ஒரு பனங்கட்டிக் கூழ் காச்சமாட்டீரே சுந்தரி.

ஞானா: எனக்கும் பனங்கட்டிக் கூழ் குடிக்க ஆசை அம்மா. இன்டைக்குக் காச்சுங்கோ அம்மா. நான் உதவி செய்து தாறன்...........வாருக்கோ அம்மா..........(இசை)



No comments: