தாயும், சேயும் - அ.முத்துலிங்கம்

.

நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரே கதையை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொடூரமான கதை உண்மையாகக்கூட இருக்கலாம். சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தை கடக்கிறார்கள். மணல் தணல் போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும்இ மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு அதன் மேல் ஏறி நிற்கிறாள். எத்தனை வலி என்றால் அந்தத் தாய் அப்படிச் செய்திருப்பாள் என்று நினைக்கும்போதே மனம் பதைக்கிறது.

இந்தக் கதையை கேட்டபோது எனக்கு பல வருடங்களுக்கு முன்னர் நான் சிறுவனாய் இருந்த சமயம் யாழ்ப்பாணத்தில்இ பரமேஸ்வராக் கல்லூரி வளாகத்தில் நடந்த தமிழ் விழா நினைவுக்கு வந்தது. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளைஇ பெரியசாமி தூரன்இ கல்கிஇ தவத்திரு தனிநாயகம் அடிகள் போன்ற பெரியோர்கள் அங்கே உரையாற்றினார்கள். விழாவில் வேலைசெய்த தொண்டர்களில் ஆக வயதில் குறைந்தது நான்தான். இரும்பினால் செய்த ராட்சத தண்ணீர் டாங்கை சுத்தம் செய்வதற்காக என்னை அதற்குள் இறக்கிவிட்டார்கள். அரைநாளாக சுத்தம் செய்தேன். அதுதான் நான் தமிழுக்கு ஆற்றிய ஆகச் சிறந்த தொண்டு. 100இ000 மக்கள் குடித்த நீர் என் பாதம் பட்டுத்தான் அங்கிருந்து வெளியேறியது.ரா.பி சேதுப்பிள்ளை பேசும்போது சிலேடையாகப் பேசி நிறைய கைதட்டல்கள் வாங்கினார். அவருடைய மாலையை யாரோ அவசரத்தில் மாற்றிப் போட்டுவிட்டார்கள். அதே சமயம் காலை நிகழ்ச்சி ஒன்று மாலை நிகழ்ச்சியாக மாறியதை அறிவிக்கவேண்டிய கட்டாயமும் அவருக்கு நேர்ந்தது. சொல்லின் செல்வர் எழுந்து ஒலிவாங்கியின் முன்னால் நின்று ‘மாலை மாறிவிட்டது’ என்று சுருக்கமாகச் சொன்னார். ரா.பி.சேதுப்பிள்ளை அன்று பேசும்போது பலதடவை ’தாய்நாடுஇ சேய்நாடு’ என்று குறிப்பிட்டார். தாய்நாடு இந்தியாஇ சேய்நாடு ஈழம். அப்பொழுதெல்லாம் நான் இந்தியா என்றால் அது முழுக்க முழுக்க தமிழர்களால் நிரம்பிய நாடு என நம்பிய காலம்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா செல்வதற்காக நானும் மனைவியும் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா விண்ணப்பம் செய்தோம். தூதரகத்தின் பூட்டிய கதவுகளுக்குமுன் நின்ற வரிசையில் நாங்களும் நின்றோம். விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம். தேனீக்கள் ஒன்றின்மேல் ஒன்று அமர்ந்திருப்பதுபோல ஆட்கள் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். மூன்று மணிநேரம் காத்திருந்த பின்னர் எங்கள் முறை வந்து கூப்பிட்டார்கள். யன்னலுக்கு போய் அதிகாரியிடம் பேசினோம். ’அவர் எத்தனை நாளைக்கு?’ என்றார். சொன்னேன். ’எதற்காக போகிறீர்கள்?’ என்றார். சுற்றுலாவுக்கு என்றேன். மீண்டும் ’எதற்காகப் போகிறீர்கள்?’ என்றார். மறுபடியும் சொன்னேன். பல் வைத்தியர் ’இன்னும் அகலமாக’இ ’இன்னும் அகலமாக’ என்பதுபோல அதே கேள்வியை திருப்பி திருப்பிக் கேட்டார். எல்லாம் முடிந்துவிட்டது என நான் நினைத்த நேரம் ஒரு நீண்ட பாரத்தை நீட்டி ’இதையும் நீங்கள் நிரப்பவேண்டும். உங்கள் விண்ணப்பத்தை இலங்கைக்கு அனுப்பி அவர்கள் அனுமதி பெற்ற பின்னர்தான் இந்திய விசா வழங்கப்படும்’ என்றார். ‘எங்களுடையது கனடா கடவுச் சீட்டு’ என்றேன். அவர் ‘ஆனால் நீங்கள் இலங்கையில் பிறந்திருக்கிறீர்கள். இலங்கையின் அனுமதி கிடைத்தால்தான் இந்தியாவுக்கு விசா தரமுடியும்.’ உட்கார்ந்துகொண்டு தொடங்கிய பதிலை நின்றுகொண்டு முடித்தார். ’கனடா கடவுச்சீட்டில் கனடிய குடிமகன் ஒருவர் இந்தியா போவதற்கு இலங்கையிடம் ஏன் அனுமதி கேட்கிறீர்கள்?’ என்று கோபமாகக் கேட்டேன். அதிகாரி செல்பேசியை மூடுவதுபோல முகத்தை மூடினார். அதே சமயம் யன்னலையும் மூடினார். ரா.பி.சேதுப்பிள்ளை வர்ணித்த ’தாய்நாடு சேய்நாடு’ உறவு இதுதான் எனப் புரிந்துகொண்டேன். ஒரு மாதம் சென்று எங்கள் இருவருக்கும் விசா கிடைத்தது. மனைவிமட்டும் இந்தியா போனார். நான் போகவில்லை.

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு காரணம் இரண்டு வாரம் முன்பு நிகழ்ந்த வேறொரு சம்பவம். இலங்கை நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து அவசரமாக எனது புத்தகம் இரண்டு வேண்டும் என்றார். கனடாவில் இருந்து அனுப்புவதென்றால் தபால் செலவு புத்தகத்தின் விலையிலும் மூன்று மடங்கு கூடிவிடும். சென்னை நண்பர் ஒருவரிடம் இரண்டு புத்தகங்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பும்படியும்இ நான் அதற்குரிய பணத்தை செலுத்திவிடுவேன் என்றும் சொன்னேன். ‘இலங்கையா? ஐயோ வேண்டாம்’ என்று அலறினார். ஏன் என்று கேட்டபோது அவர் சொன்ன விசயம் என்னை திடுக்கிடவைத்தது. ’இந்தியாவிலிருந்து உலகத்தின் எந்தப் பகுதிக்கும் பார்சல் அனுப்பலாம். ஆனால் இலங்கைக்கு அனுப்புவதானால் புத்தகத்தை அஞ்சல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று அவர்கள் முன்னிலையில் பார்சல் பண்ணவேண்டும். பெரும் தலையிடி பிடித்த வேலை’ என்றார். அப்பொழுது மறுபடியும் ரா.பி.சேதுப்பிள்ளை வர்ணித்த ’தாய்நாடுஇ சேய்நாடு’ உறவு நினைவுக்கு வந்தது. ஒரு தாய்தான் சேயிடம் இத்தனை அன்பு பாராட்டமுடியும். அந்தப் பார்சல் இலங்கைக்கு போனபோது கொழும்பு நண்பர் சுங்கப் பகுதிக்கு சென்று பார்சலை அவர்கள் முன்னிலையில் பிரித்துஇ புத்தகத்தை உதறிஇ அதில் உள்ள இரண்டு வரிகளை படித்துக் காட்டிவிட்டு நூலை பெற்றுக்கொண்டார். இந்த விசேட கவனிப்பு தமிழ் நூல்களுக்கு மட்டுமா அல்லது வேற்று மொழிகளுக்கும் உள்ளதா என்பது தெரியவில்லை. ஒருவரை துன்புறுத்துவது என்று தீர்மானித்துவிட்டால் எத்தனை வகையான சட்டங்களை எல்லாம் உருவாக்க முடிகிறது.

சமீபத்தில் ஒரு நண்பர்இ எண்பது வயது தாண்டிய தள்ளாத வயதில் இலங்கைக்கு போய்விட்டு கனடா திரும்பியிருந்தார். ’எதற்காக போனீர்கள்?’ என்று கேட்டேன். அவர் சொன்னார். ‘பரம்பரையாக வந்த காணி ஒன்று இருந்தது. எந்த நேரமும் கவுண்மேந்து அதை பிடுங்கிவிடக்கூடும். அதை விற்பதற்காகப் போய் வந்தேன்.’ ’போன வேலையை சுலபமாகச் செய்ய முடிந்ததா?’ என்று மறுபடியும் கேட்டேன். ‘எல்லாம் சுலபமாகத்தான் இருந்தது. ஒரேயொரு பிரச்சினைதான். பகலில் வெளியே தலைகாட்ட முடியாது. வெள்ளை வான் வந்து பிடித்துப் போய்விடும் என்ற பயம். இரவில்தான் எல்லா வேலைகளையும் ஒருவாறு முடித்துவிட்டுஇ வீட்டிலிருந்த ஆக நீண்ட கத்தியை தலையணையின் கீழ் வைத்துக்கொண்டு படுப்பேன்’ என்றார்.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் சமயம் ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை நிறைவேறியிருக்கிறது. தண்ணீர் ஊற்றிய தீர்மானம் என்றாலும் வெற்றி வெற்றிதான். மகிழ்ச்சியில்இ என் உடம்பிலிருந்த அத்தனை ரத்தமும் நாளை விடியாது என்பது போல சுழன்று ஓடியது. அதிசயத்திலும் அதிசயமாக இந்தியா பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தது. சோமாலியா தாய் செய்ததுபோல இந்தியா குழந்தைமேல் ஏறி நிற்கவில்லை. குழந்தை இன்னும் இடுப்பிலே தான் இருக்கிறது. பாலைவனமோ நீண்ட தூரம். எவ்வளவு தூரத்துக்கு இந்தியா குழந்தையை காவும்இ எப்பொழுது கீழே போடப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

Nantri:amuttu.net/

No comments: