முட்டாள் ஆவது ஏப்ரலில் மட்டுமா?

.
- நெல்லை சு. முத்து
செளராட்ரிய வழக்கப்படி "நவ ரோஸ்' (புது நாள்) என்பது மார்ச் 15 ஈரானியப் புத்தாண்டுப் பிறப்பு. அதன் பதின்மூன்றாம் நாள் குறும்பு விளையாட்டுத் தினம். கி.மு.536-ம் ஆண்டு தொடங்கிய சம்பிரதாயம். அதைத்தான் முட்டாள்கள் தினம் என்று உலகு எங்கும் திணித்துவிட்டார்கள்.
 இந்தியாவில் ஆலம் ஆரா, ஒளரங்கசீப், அர்த்ஷீர் கோத்ரெஜ், தாதாபாய் நௌரோஜி, ஃபெரோஸ் கான், ஹோமி ஜஹாங்கிர் பாபா, ஜஹாங்கிர் ரத்தன் டாடா, சொராப்ஜி, குர்ஷித், நாரிமன், குஷானா, வாடியா மேத்தா, நானி பல்கிவாலா போன்ற பாரசீகப் பூர்வீகத்தினர் வழக்கம் இது.
 பிரெஞ்சு மொழியில் "பாய்ஸன் டி ஏவ்(ப்)ரில்'. இத்தாலியில் "பிஸ்ழ்ஸ டி ஏப்ரிலே'. ஒன்றும் இல்லை, மீன்தினம் என்று பொருள். சூரியன் பங்குனி மீன ராசியில் இருந்து சித்திரை மேஷ ராசியில் நுழையும் நாள். பண்டை இந்தியர் வழக்கில் சந்திரன் மீனத்தில் முழுநிலாவாகத் தோன்றும் நாள்.



 1582-ம் ஆண்டுவாக்கில் இயேசு பிறப்பை ஒட்டிய ஜனவரி முதல் தேதிக்கு மாற்றி அறிவித்தார் மத குரு எட்டாம் கிரிகொரி போப்பாண்டவர். ஒரிஜினல் ஆங்கிலேயர்களே இங்கிலாந்தில் கூட 1752-ம் ஆண்டுக்கு மேல்தான் இந்தப் புதிய ஆண்டுப் பிறப்பை ஏற்றுக்கொண்டனர். அதை ஏற்க மறுத்தவர்கள் ஏப்ரல் முதல் தேதியையே கொண்டாடினர்.
 அப்புறம் என்ன, போங்கடா முட்டாள் பயல்களா என்ற அர்த்தத்தில் ஏப்ரல் முதல் நாளை அப்படியே அறிவித்து விட்டார்கள். சுரணை இல்லாமல் நாமும் கிறிஸ்தவ ஆண்டுப் பிறப்பை அப்படியே அங்கீகரித்து மகிழ்ந்தோம்.
 நாம் முட்டாள் ஆவது ஏப்ரலில் மட்டுமா என்று கேட்காதீர்கள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நமக்கு நாமே முட்டாள் ஆகிறோம்.  நம்மை ஆள்வதற்கு கிழவர்களையே தேர்ந்து எடுக்கிறோம். அவர்களில் பதினாறு பேரில் ஒருவரேனும் பத்தாம் வகுப்புகூட படிக்காதவர். சராசரி அலுவலக எடுபிடி வேலைக்குக்கூட தேறாதவர்.
 அதிலும் பணக்கார உறுப்பினர்கள் பத்துப் பேரில் ஒருவருக்கு 10 கோடிக்கும் அதிகச் சொத்து இருக்கிறதாம். அதனால்தான் கரை வேட்டியுடன் கை ஆட்டிக்கொண்டு மக்கள் தொண்டாற்ற வருகிறார்களோ?  அரசுப் பணி நியமனத்துக்கே போலீஸ் வழக்கு, வில்லங்கம் இருக்கிறதா என்று தகுதி பார்த்துத்தான் சேர்க்கிறார்கள். ஆனால், அரசை ஆளுவதற்கு அது எல்லாம் கொசுறு. ஐந்து பேரில் ஒருவரேனும் குற்றப் பின்னணி உடையவர்களாம். அதாவது, பஞ்ச பாண்டவரில் ஒருவர் அதர்மர் என்கிறது புள்ளிவிவரம்.
 அதிலும் அதர்மர்கள் விகிதாசாரத்தில் பிகார், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு முன்னணி. உ.பி. தான் ஊழல் பிரதேசமாம். 80-ல் 23 பேர் மீது குற்ற வழக்குகள், மகாராஷ்டிரம் (19), பிகார் (16) என்ற வரிசை தொடர்கிறது.
 அதிலும், ""அடே, காலையில் நீ டீச்சர் பையில் இருந்து பத்துப் பைசா திருடினாயே'' என்று கேட்டால், ""நீ மட்டும் யோக்கியமா?' நேத்தைக்கு நீயும்தான் எட்டு பைசா திருடினாயே. அதுக்கு இது சரியாப்போச்சு'' என்பதுதான் கட்டு அவிழ்த்து விடப்பட்ட இன்றைய ஊழல் அரசியல் விவேகிகளின் முடக்குவாதம்.
 சின்னச் சின்ன குற்றம் எல்லாம் குற்றம். பெரிய குற்றமே இவர்கள் லட்சியம். இன்றைக்கு இது ஓர் அரசியல் ஃபாஷன். இஷ்டப்படி கொள்ளை அடி. சிக்கினால் "சந்திப்போம் சட்டப்படி' என்று திருப்பி அடி. தண்டனை வராதபடி விசாரணை தவிடுபொடி.
 தான் செய்தது தவறு என்றால் தன்னைத் தூக்கில் போடுங்கள் என்ற துணிச்சல் எதனால் வருதாம்?
 (நாட்டை) ஆண்டவர்களுக்குத்தான் தெரியும், தூக்குத் தண்டனைக் கைதி ஆவதே சுகம்.
 இயற்கை மரணம் அடையும்வரை ராஜ மரியாதைகளுடன் பிரியாணிச் சாப்பாடும் குளிர்சாதன உல்லாசச் சிறையும் அனுபவிக்கலாம்.  இத்தனைக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மாதச் சம்பளம் ரூ. 12,000. தொகுதிச் சீரமைப்புக்கு 10,000. அலுவலகச் செலவு 14,000. காரில் பயணச் செலவு ஒரு கிலோமீட்டருக்கு 8 ரூபாய் வீதம் அதிகபட்சம் ரூபாய் 6,000.
 ரயில் பயணம் என்றால் முதல் வகுப்பு குளிர்வசதிப் பெட்டியில் எத்தனை தடவை வேண்டுமானாலும் செல்லலாம். விமானத்தில் மனைவி, துணைவி, இணைவி, உதவி என யாருடனும் ஆண்டுக்கு 40 முறை எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம்.  தலைநகரில் வாடகை இல்லா விடுதி வேறு. கட்டணம் இல்லா மின்சாரம் 50,000 யூனிட்டுகள். தொலைபேசியில் 1,70,000 இலவச அழைப்புகள். நாள்படி ரூ. 500.
 கணக்குப் போட்டுப் பார்த்தால் 5 ஆண்டுகளில் கணக்கில் வரும் ஆதாயம் மட்டுமே 1.60 கோடி தேறும்.  அப்படியானால் 60 ஆண்டுகள் கணக்கு ஆமணக்குத்தான். இதில் தேர்தல்தோறும் 5 முதல் 500 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு வாக்களித்த புத்திசாலி யார்?
 சுதந்திர இந்தியாவில் ஜீப் ஊழல் பிள்ளையார் சுழி. சைக்கிள், நீர்மூழ்கி, பீரங்கி என்று மெல்ல மெல்லத் தலையெடுத்த நச்சுப் பாம்பு கஜானாவுக்குள் புகுந்தது.
 பனை எண்ணெய், சமையல் எண்ணெய், ஐஸ் கிரீம், மாட்டுத்தீவனம், கூட்டுறவு வங்கி, சவப்பெட்டி, தியாகிகளுக்கான அடுக்ககம், முத்திரைத்தாள், சத்யம், நிலக்கரிச் சுரண்டல் என்று ஆண்டுக்கு ஒன்றாக விஷ வாயுவைக் கக்கியது. இன்றோ ஊழல் நவீனமயம் ஆகிவிட்டது. மாதம் ஓர் ஊழல் நம் மாண்புமிகுக்களின் குறிக்கோள்போல.
 ஆட்சி மன்றக் கோயிலுக்குள் கைபேசியில் ஆபாச சினிமா பார்ப்பதைக்கூட மன்னிக்கலாம். லஞ்சப் பணம் புழங்கிய விவகாரம் அதைக் காட்டிலும் ஆபாசம் ஆயிற்றே. தப்பு செய்வதும் தப்புவதும் அரசியலார்க்குக் கைவந்த கலை. நம்மை இளித்தவாயர்கள் ஆக்கிவிட்டு இன்றைக்கும் கோல்கேட் சிரிப்புடன் சுதந்திரமாக உலகம் சுற்றி வருகிறார்கள்.
 வழக்கு, நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் விமர்சனம் செய்யக்கூடாது என்று வாய்ப்பூட்டு.
 ஏதானாலும், ஆட்சியாளர் - அதிகாரி - நீதிபதி என்ற கூட்டமைப்பில் சிக்கிக் கொள்வது அதிகாரி மட்டும்தான். இங்கிலாந்து மகாராணிக் காலத்தில் இங்கே ஆட்சியும் நீதியும் அவரே வழங்குவார். அதுபோலத்தான் இன்றைக்கும் நடக்கிறதோ?  அமைச்சர் அலுவலகத்தில் கணிப்பொறி காணாமல் போகிறது. ராணுவ ரகசியக் கடிதங்கள் அம்பலம் ஆகிறது. விசாரணைக்குக் கிளம்பும் சாட்சிகள் தற்கொலையில் சாகிறார்கள். திருட்டைத் தடுப்போர் லாரி மோதி இறக்கிறார்கள்.
 முகம் தெரியாத ஒரு வியாபாரிக்கு முன்னுரிமை தருவதில் பெறப்படும் ஆதாயம் - லஞ்சம். அந்த வியாபாரியே தனக்கு வேண்டியவர் என்றால் ஊழல். அதுவும் உறவினர் என்றால் அந்த ஊழலுக்கு ஆங்கிலத்தில் "நெப்போட்டிசம்' என்று பெயர். லத்தீனில் "நெப்போஸ்' என்றால் பேரன் அல்லது மருமகன் என்று பொருள்.
 இன்னொரு பக்கம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கத் தொலைக்காட்சிகளில் உலகளாவிய சூதாட்டப் போட்டிகள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் விளம்பரதாரர் வங்கிக்கணக்கில் பல கோடிகள் கருக்கொள்ளும் என்று அறிய மாட்டீர்கள்.  கொளுத்தும் வெயிலில் கோமாளி நடிகர்களின் வறண்ட மனை விற்பனைகள் என்றுமே மாறாத விலை அச்சடித்துத் தொண்டை கட்டும் அளவுக்குப் புரட்சித் தங்க விற்பனைகள்.
 படிக்க வேண்டிய பருவத்தில் குழந்தைகளை ஆர்ப்பாட்டங்களிலும் ஆட்ட பாட்டங்களிலும் ஈடுபடுத்துவதும், குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக பிச்சை எடுக்கும்படி தூண்டப்படுவதும் மனித உரிமை மீறல்கள்.  ஏதாயினும், ""ஊழலை வீட்டில் உள்ள பெற்றோர்கள் தான் உருவாக்குகிறார்கள். நாட்டில் உள்ள இளைஞர்கள் இந்தச் சூழலில் வளரும்போது பாதிப்பு இருக்கத்தான் செய்யும்'' என்று குறைபடுகிறார் டாக்டர் அப்துல் கலாம்.
 அதனால் இனி ஒரு விதி செய்வோம். வேட்பாளர்களின் முதல் இருபது வயது வாழ்க்கைக் குறிப்பைத்தான் தேர்தல் படிவத்தில் முக்கிய இணைப்பாகக் கேட்க வேண்டும்.
 சிறுவயதில் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ கெட்ட சகவாசத்துடன் தரங்கெட்ட பணிகளில் ஈடுபட்ட ஆணோ, பெண்ணோ அவரவர் வாழ்க்கை விலாசங்களை ஆராய்ந்த பிறகே ஒருவரை வேட்பாளராக அனுமதிக்க வேண்டும்.
தினமணி

No comments: