.
கேள்வி எழுப்பும் இந்துப்பத்திரிகை
புலிப் பூச்சாண்டியை மீண்டும் இலங்கை கிளப்புகின்றதா? என்று சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து” நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் பயிற்சி பெற்ற சுமார் 150 பயங்கரவாதிகள் மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கை கரையில் வந்திறங்கியிருப்பதாகவும் நாட்டை சீர் குலைய வைக்க அவர்கள் வந்திருப்பதாகவும் “ த ஐலண்ட்” பத்திரிகை நேற்று திங்கட்கிழமை இலங்கையின் புலனாய்வுத் துறையை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாகவே “ இந்து” இக்கேள்வியை எழுப்பியிருக்கிறது.
தமிழ் நாட்டில் மூன்று இரகசிய முகாம்களில் விஷேட ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 150 பயங்கரவாதிகள் இலங்கைக்கு திரும்பி வந்திருப்பதாகவும் நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வட, கிழக்குப் பகுதியில் மறைந்திருப்பதாகவும் அந்தப் பத்திரிகை ( த ஐலண்ட்) தெரிவித்திருந்தது. தற்போது இடம் பெற்று வரும் நல்லிணக்க நடவடிக்கைகளை குழப்பி நாசமாக்குவதே அவர்களின் இலக்காகும் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருமலையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் வெட்டிக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 3 புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதையடுத்தே அவர்களின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் இந்தியாவுக்கு சென்றதாகவும் இலங்கைக்கு திரும்புவதற்கு முன்னர் தமிழ் நாட்டிலுள்ள இரகசிய இடங்களில் விஷேட இராணுவப் பாடத்தினை கற்றதாகவும் இரகசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்கு திரும்பியதாகவும் அவர்கள் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்கள். வட, கிழக்கில் இடம் பெற்ற பல கொலைச் சம்பவங்களின் பின்னணியில் இவர்கள் இருந்திருக்கக் கூடும் என்று புலனாய்வுத் துறை சந்தேகிக்கிறது.
இந்த மூன்று சந்தேக நபர்களுக்கு புலிகளுடனான தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினரின் சடலம் அருகே துண்டுப் பிரசுரமொன்று விட்டுச் செல்லப்பட்டிருந்தது. “துரோகிகளுக்கு மரணம் நாங்கள் திரும்பி வருகிறோம் விடுல்லைப்புலிகள்” என்று அதில் எழுதப்பட்டிருந்ததாக பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.
இதே வேளை குச்சவெளியில் அண்மையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் கொலையுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தற்போது இடம் பெற்று வரும் விசாரணைகளில் உறுதிப்படுத்திக் கொள்வற்காக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மற்றொரு பத்திரிகையான “டெய்லி மிரர்” கூறியுள்ளது.
அத்துடன் 13+ அமுலாக்கம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ கலந்துரையாடியிருக்கவில்லை என்றும் இப்பத்திரிகை தெரிவித்துள்ளது. 2012 ஜனவரி 30 இல் நாட்டிலுள்ள பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின்போது “இந்தியாவுக்கு இதனைத் தான் ஒரு போதும் கூறியிருக்கவில்லை என்று ராஜபக்ஷ மறுத்திருந்ததாக ஜனவரி 31 இல் இப்பத்திரிகை தெரிவித்திருந்தது.
மீன் பிடிப்பதற்காக தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை கிரமமாக மீறி வருகின்றனர். அவர்களின் போர்வையிலேயே பயங்கரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர் என்று “ஐலண்ட்” பத்திரிகை குறிப்பிட்டது. ஏற்கனவே இலங்கைச் சிறையில் 8 மீனவர்கள் விடுதலைக்கான நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.
தமிழில் தினக்குரல்
No comments:
Post a Comment