வசந்த மாலை 2012 என் பார்வையில்...‏ - சக்தி -


 .
வசந்தமான மாலைப் பொழுது. வெய்யிலை சூரியன் தர குளிராய் தென்றல் வீச இயற்கை கொலுவீற்றிருக்கும் மலைப்பாங்கான இடத்தில் கச்சிதமாக வடிவமைக்கப் பட்டிருக்கும் மேடையோடு கூடிய மண்டபம். வரவேற்புப் பகுதியில் ஒரு புறம் பூரா பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிக் கதவின் திறந்திருந்த வாசல்வழி உள்நுழைகிறோம். மனித வலுவின் கைவண்ணம் வண்ணமின் விளக்குகளாலும் நவீன தொழில் நுட்பங்களாலும் வசீகரிக்கிறது; வரவேற்கிறது.
இந்த இடத்தை தெரிவு செய்ததற்குக் குறிப்பாக ஏதேனும் காரணம் இருக்கும் என்றால் அக்காரணம் தொடர்ந்து வாழட்டும்!
வரவேற்பு மண்டபத்தில் ரிக்கற்றை வாங்கி உள்நுழைகிறோம்.(குடும்பம் 35 டொலர்கள், தனி 15 டொலர்கள்) வழக்கமான சிட்னி ரிக்கற்றுக்களோடு ஒப்பிடும் இடத்து இதன் விலை மிகக் குறைவு. நேரம் 6 மணிக்கு 5 நிமிடங்கள் இருக்கின்றன. மக்கள் அதிகம் இல்லை.
6.10 மணி அளவில் நிகழ்ச்சி மங்கல குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது.10 நிமிட தாமதம் பொறுத்துக் கொள்ளத் தக்கதாகவே இருந்தது. நம் மக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் போலும். இப்போது மண்டபம் ஓரளவு நிறைந்திருந்தது. அது சரி, ஏன் நம்மக்கள் எப்போதும் தாமதமாகவே வந்து சேர்கிறார்கள்? வேலைக்கும் இப்படித்தான் போவார்களோ?


             
 


 

முதலாவதாக, தமிழ் மொழி வாழ்த்தும் தேசிய கீதமும் மெளன அஞ்சலியும் இடம் பெற்றது. ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலைய மாணவர்கள் தமிழ் மொழி வாழ்த்துப் பாடினார்கள். ’இசை கொண்டு வாழியவே!’ என்று வரவேண்டிய இடம் ’இசை கொன்று வாழியவே’ என வந்தது. ஒரு எழுத்துத் தானே பிழை; வெளி நாட்டில் பிறந்து வளர்ந்த பிள்ளை இப்படிப் பாடுகிறதே என்று பெருமைப் படுங்கள் என்று யாரும் போர் கொடி தூக்கிக் கொண்டு வந்து விடாதீர்கள். தவறு சொல்லப்பட வேண்டும். உண்மையெனில் தவறு திருத்தப்பட வேண்டும்! அது எவ்வித சமரசங்களுக்கும் உரியதல்ல. உரியவர்கள் கவனிப்பார்களாக!!
வரவேற்புரை தந்த தலைவர்.சிறீகணேஸ்வரன் அறிவகம் முருகன் கோயில் வளாகத்துக்கு இடம் மாறும் சாத்தியக் கூறுகள் இருப்பதாகப் பேசினார்.அடுத்து ’இராக தாள மாளிகை’ என்ற இசை நிகழ்ச்சியை கேதீஸ்வரி பகீரதனின் லக்ஷ்மி நுண்கலை மாணவர்கள் வழங்கினார்கள். பல குரல்கள் இணைந்து வழங்கிய சங்கீதம் அது! .சங்கீத நுணுக்கங்கள் எனக்கதிகம் தெரியாதென்பதால் அதுபற்றி எனக்குக் கருத்துச் சொல்ல முடியவில்லை. ஆனால் வாதாபி கணபதியையும் கூட்டாக பாடும் இந்த முறையையும் தவிர வேறு ஏதாவது புதிதாகத் தர இருக்கிறதா என இந்த திறமையான கலைஞர்கள் சற்றுச் சிந்திக்கலாம். நாம் வாழுகின்ற பிரதேசத்துக்கு பொருத்தமாக ஒரு பாடலை இயற்றி அதற்கு இசை நுட்பங்களால் அலங்காரம் செய்து அப்பாடலின் பொருளில் திளைத்து அதனை அனுபவித்து ஒரு கலைஞன் பாடும் போது சபையும் அனுபவித்து செல்லும் அல்லவா?
கடசிப் பாடலுக்கு முதலில் ஆசிரியர் சந்தர்ப்பம் தந்தவர்களுக்கும் பக்கவாத்தியம் ஒளி ஒலி அமைப்பைத் தந்தவர்களுக்கும் நன்றி கூறினார். அது அந்த ஆசிரியரைப்பற்றிய மரியாதையான எண்ணத்தை ஏற்படுத்தியது. கடசியாக ஒரு பாடலையேனும் ஆசிரியர் தனியாகப் பாடி இருக்கலாமோ எனத் தோன்றியது. அது சபைக்கு சற்றே வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருக்கக் கூடும்.


உண்மையில் கண்ணுக்குப் புலப்படும் காட்சிகளை விட திரை மறைவில் இருந்து செயற்படும் சில கரங்களுக்கு ஒரு நிகழ்ச்சியின் வெற்றியில் பெரும் பங்குண்டு. அதில் குறிப்பாக ஒலி ஒளி அமைப்பைக் குறிப்பிட வேண்டும். இரண்டும் இங்கு வெகு நேர்த்தியாகக் கையாளப் பட்டிருந்தது. அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
வெளியில் இடிமுழங்கும் சத்தம் மண்டபத்துக்குள்ளும் கேட்டது. மழைவரும் அறிகுறி இல்லாதிருந்த ஒரு பொழுதில் திடீரென மழை பொழியப் போகிறதெனத் தோன்றியது. திரை மூடிய வண்னமாக இருந்தது. இப்படியாக இடம் பெறும் நேர விரயத்தை ஏற்பாட்டாளர்கள் கொஞ்சம் கவனிக்கலாம். பசி நேரம் ஆயிற்றோ என்னவோ மக்கள் வெளியே சென்று சிற்றுண்டி பெற ஆரம்பித்து விட்டார்கள்.
இப்போது நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசரின் நெறியாழ்கையில் கிண்கிணி நாதம் நாட்டிய நிகழ்ச்சி இடம்பெற இருப்பதாக இரண்டு இளம் பெண்கள் தர்சனா. சிறீசந்திரபோஸ், நர்த்தனா பார்த்திபன் ஆகியோர் வந்து சொல்லிப் போனார்கள். அவர்களுடய தமிழ் நல்ல தமிழ்! கையில் வைத்திருந்த தாளைப் பார்க்காமலும் விடயத்தைச் சொல்லிப் போனார்கள். அது அவர்களின் மொழி ஆற்றலையும் மேடைப் பரீட்சயத்தையும் காட்டியது.
நாட்டிய நிகழ்ச்சி பலவிதமான சுவைகளை உள்ளடக்கி இருந்தது.குச்சுப்புடி நடனம்,சிவதாண்டவம், தில்லானா, கோபியருடன் கிருஷ்னர், குறத்தி நடனம்,அர்த்த நாரீஸ்வர நடனம் என பல்வேறு விதமான சுவைகளையும் சுவைஞர்களையும் திருப்திப் படுத்தும் விதத்தில் நடனங்கள் ஒழுங்கு படுத்தப் பட்டிருந்தன. அனிதா. கிறீஸ்டியின் தலையில் செம்பு வைத்து தாம்பாளத்தில் நின்றபடி ஆடிய குச்சுப்புடியும் இறுதியாக அவர் வந்து ஆடிய அர்த்த நாரீஸ்வரர் நடனமும் பலரையும் கவர்ந்திருந்ததை கரவொலிகள் சொல்லிச் சென்றன.


பாரசீகத்தில் இருந்து வந்தது தில்லானா என்ற செய்தியும் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கின்ற ஆண்பெண் இயல்புகளை சீன தத்துவமும் இந்து தத்துவமும் எப்படிச் சொல்கிறது என்று சொன்ன அர்த்தநாரீஸ்வர நடனக் காட்சியும் அதன் விளக்கமும் சிறப்பு.
நாட்டிய நிகழ்ச்சி நிறைவுற இடைவேளையும் அதனைத் தொடர்ந்து நன்றி உரையும் இடம் பெற்றது. இடைவேளைச் சிற்றுண்டியில் மோகன் குமார் அவர்களின் கைப்பதம்! வழமை போலவே வெகுருசி. நன்றி உரையை செயலாளர் திரு கருணாகரன் வழங்கினார்.அவர் சற்று வித்தியாசமாக; நன்றிகளை ஒரு கடைமை உணர்வோடு அள்ளி வழங்காமல் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் நட்பின் நெருக்கத்தையும் வெளிப்படுத்தி தன் நன்றி அறிதலைச் சொல்லி இருந்தமை நன்றியுரைத்தலுக்கு ஒரு புதிய வீரியத்தைக் கொடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து பாஸ்கரனுடய தயாரிப்பில் ’திருந்தாத ஜென்மங்கள்’ நகைச்சுவை நாடகம் இடம் பெற்றது. அரங்க அமைப்பு வெகு சிரத்தையுடன் செய்யப் பட்டிருந்தது. இரண்டு அறைகளும் கதவும் வரவேற்பறை அலங்காரங்களும் கன கச்சிதம். நடிகர்கள் தம்முடய பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகச் செய்திருந்தார்கள். குறிப்பாக அம்மம்மாவுக்கு நடித்தவர் (மதுரா.மகாதேவ்) பாத்திரத்துக்குப் பொருத்தமாய் அமைந்திருந்தார். இளம் பிள்ளைகளும் இயல்பான நடிப்போடு நன்றாகப் பாத்திரத்தோடு ஒன்றி தமிழ் பேசினார்கள். தமிழுக்கு ஒளிமயமான எதிர்காலம் கொண்ட இளஞ்சந்ததி ஒன்று வீரியத்தோடு முளை கொள்வது தெரிகிறது. கருப்பொருள் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் தன்மை மற்றும் பிள்ளைகளை உயர்கல்விக்கு குறிப்பிட்ட பாடத்தை எடுக்கச் சொல்லி வற்புறுத்தும் பெற்றோரியம் பற்றியது. கரு சிறியது. சொன்னபாங்கு அரியது.


அதிலும் குறிப்பாக இரு அறைகளில் இடம்  பெறும் நாடகம் அது.  பெற்ற பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான சம்பாசனையில் ஓர் அறையில் ஒருவர் விட்ட இடத்தில் இருந்து மற்ற அறையில் இருப்பவர் தொடங்கி கதைக்கும் வகையாக பேச்சினை ஆக்கி இருந்தமை வெகு சிறப்பு. அது பார்வையாளர் கண்ணை அங்கும் இங்கும் பரவலாய் பார்க்க வழி வகுத்தது.
இடையிடையே சிறு சிறு தூறலாக அன்றாட வாழ்வில் இடம் பெறும் விடயங்கள் வந்து போகின்றன. அதில் அம்மம்மாவும் தாத்தாவும் பேசும் இடம் ஒன்று வருகிறது. “நீங்கள் ஒரு ஆள் தான் தாலி கட்டி இருக்கிறியள், மற்ற ஆக்கள் எல்லாம் என்ன சுருக்குக் கயிறோ மாட்டி இருக்கினம்?...” நல்லதொரு சொல்லாடலாய் அது இருந்தது. ஆண்களுக்கு சில வேளைகளில் திருமணம் ஆயுள் தண்டனை போலவும் பெண்களுக்கு சில வேளை அது தூக்குக் கயிறு போலவும் ஆகி விடுவது உண்மைதானே.


நாடகத்தில் கதவு திறக்கின்ற இடம் சில இடங்களில் வருகிறது. அதில் ஒருவர் ஒரு புறமாக கதவின் குமிழியைத் திருப்ப மற்றவர் வேறொரு பக்கமாகக் கதவினைத் திறப்பதாக ஏற்பட்ட சைகை நாடக நெறியாளரின் கவனத்துக்குரியது. அந்த இடம் அத்தனை சிறப்பாகக் கையாளப் படவில்லை.
நாடகத் துறையில் நீண்டகால ஆர்வமும் அனுபவம் செயற்திறனும் உடையவர் பாஸ்கரன். நாடகத் துறையின் அனைத்துப் பரிமானங்களிலும் (எழுத்து, நடிப்பு, மேடை அமைப்பு, நெறியாழ்கை…) சிறப்பாக மிளிரக் கூடியவர். அவரினால் இன்னும் ஆழமும் நீளமும் உண்மையும் நவீன யுக்திகளும் கொண்ட நாடகங்களை வழங்க இயலும். வழங்க வேண்டும் என்பது நம் அவா.
அதனைத் தொடர்ந்து இதயம் புறொடக்‌ஷன் வழங்கிய ’Meeting கை சொதப்புவது எப்படி’ என்ற நகைச்சுவை நாடகம் இடம் பெற்றது. அது மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக அந்த நாடகப் பிரதியை எழுதி இருந்தவருக்கு பாராட்டுக்கள் நிறைய போய் சேர வேண்டும். மிக மிக இயல்பான கதையோட்டம்! எங்கு கதையின் போக்கு மாறுகிறது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சிறப்பான நாடக ஆக்கம்! நகைச்சுவையும் அங்கிருந்தது. சபை நிறைய சிரித்து ரசித்தது.
இந் நாடகத்தின் கரு எளிமையானதும் நேரடியானதும் தான். 3 வேறுபட்ட குண இயல்பு கொண்டவர்கள் ஒரு நிர்வாகக் கூட்டத்தில் என்ன செய்கிறார்கள் என்பது தான் கதை.அதில் எல்லா நடிகர்களுமே தம் கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார்கள். குறிப்பாக செயலாளருக்கு நடித்த இளைஞனின் நடிப்பை விதந்து சொல்லலாம்.அதில் ஒரு இடத்தைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். மற்ற இருவரின் பேச்சையும் கேட்டு செயலாளருக்குக் கோபம் வருகிறது. கதிரையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு எழுந்து வருகிறார்.அவர் வருகின்ற போது கதிரையில் இருந்த குஷன் விழுந்து விட்டது. மீண்டுமவர் அமரப் போகின்ற போது கீழே குனிந்து அதனை எடுத்து ஓங்கி கதிரை மீது போட்டு விட்டு அமர்கிறார். அதில் தொனித்திருந்த கோப வெளிப்பாடு இயல்பாய் அமைந்திருந்த ஒன்று. நிச்சயமாய் அது தாளில் எழுதப் பட்டிருந்திருக்காது. அந்த இடத்தை அந் நடிகன் சிறப்பாகவும் உடனடியாகவும் சரியான முறையிலும் கையாண்டிருந்தான். இத்தகைய நடிப்பியல்பில் ஒர் இயற்கையான நாடக் கலைஞன் தெரிகிறான்! மேடைக்கூச்சமற்ற; சொல்ல போகிற விடயத்திலும் தமிழ் சொல்லாடலிலும் நல்ல பாண்டித்தியம் கொண்ட இளந்தமிழர் கூட்டம்!! ஒளிமயமான எதிர்காலத்தைத் தமிழுக்கு விட்டுச் செல்கிறது.
ஒரு சிறு குறிப்பு மட்டும் சொல்ல ஆசை. ”மீற்றிங்கை சொதப்புவது எப்படி” என்று ஒரு தலைப்பை வைக்கின்ற போது அதிலேயே முழுக் கதைப் பொருளும் அடங்கி விடுகிறது. இதனையே ‘ஒரு கொமிட்டி மீட்டிங்’ என்று தலைப்பிட்டிருந்தால் பார்ப்பவர்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்ற ஆர்வத்தை இன்னும் அது கூட்டி இருக்குமோ என்று தோன்றுகிறது. இது ஒரு அபிப்பிராயம் மாத்திரம் தான்.இடைவேளைக்குப் பின் MC செய்தவர்கள் சிறப்பாக அதனைச் செய்யவில்லை என்பதையும் சொல்லியே ஆக வேண்டும். ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் மேடையேற்றுவது 30 நிமிடமோ 45 நிமிடமாகவோ தான் இருக்கும். ஆனால் அதற்குப் பின்னால் அந் நிகழ்ச்சிக்கென ஒதுக்கி இருந்திருக்கக் கூடிய நேரம் உழைப்பு, அர்ப்பணிப்பு,கருஉயிர்ப்பு, எல்லோரையும் ஒன்றிணைத்தல் ஒத்திகை பார்த்தல் என ஒரு பெரும் அர்ர்பணிப்பு அதன் பின்னால் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்குமான சன்மானம் ரசிகர்கள் அவர்களுக்குக் கொடுக்கின்ற கரவொலி மற்றும் அது பற்றிய நேர்மையான கருத்துக்கள், மற்றும் விமர்சனங்கள் தான். MC செய்ய வருபவர்களின் பெரும் பொறுப்பு அதனைப் பார்வையாளரிடம் இருந்து பெற்று அக்கலைஞர்களின் கையில் ஒப்படைப்பது தான். இந்த இளம் குருத்துக்கள் மறுமுறை MC செய்யும் போது முக்கியமாக இதனைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.தமிழ் அறிவக ஏற்பாட்டாளர்களுக்கும் ஒரு குறிப்பு; இப்படி ஒரு தரமான நிகழ்ச்சிக்காக மற்றும் அறிவகத்தின் வளர்ச்சிக்காக இதை விட பெரிய அளவிலான தொகை குறித்த ரிக்கற்றை தாராளமாக நீங்கள் விற்கலாம்.
மிகப் பிரகாசமான மேக்கூரி வண்ண விளக்கு வெளிச்சத்திலும் லட்சனமான மயிலின் முனை கொண்ட தங்க மயமான ஆளுயர குத்து விளக்கில் வெகு அடக்கமாய் அமானுஷ தன்மை பொருந்திய அழகோடு ஒரு தண்ணீர் துளி போல அக்கினியின் முத்துச்சுடர்! அறிவகத்தின் நிகழ்ச்சி முடியும் வரை அது நிலைத்திருந்தது.
மேக்கூரி வெளிச்சங்களுக்குள்ளும் ஒரு குத்துவிளக்குச் சுடராய் அறிவகமும்!
அரங்கை விட்டு வெளியே வந்த போது பெரு மழை பெய்து பூமியை அது குளிர்வித்திருந்தது.
நிகழ்ச்சிகளால் குளிர்ந்திருந்த நம் மனதிலும் ஒரு முத்துச் சுடர்! அது நெடு நேரம் வரை அது பிரகாசித்த படி இருந்தது.
 - சக்தி -
அடுத்தவாரம் இன்னொருவரின் பார்வையில் இன் நிகழ்வு வெளிவரும்.
2 comments:

kirrukan said...

[quote]அது சரி, ஏன் நம்மக்கள் எப்போதும் தாமதமாகவே வந்து சேர்கிறார்கள்? [quote]

நிகழ்ச்சிக்கு நேரத்துடன் வந்திருந்த எமக்கு என்ன நடந்தது என்பதையும் இங்கு அறியத்தருகிறேன்.நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பிள்ளைகளின் பெற்றோர் 5 மணிக்கே அங்கு வந்துவிட்டார்கள் .அவர்கள் உள்ளே அமர்ந்திருந்தார்கள்.நிகழ்ச்சி தொடங்குவதற்க்கு முதல் அங்கு அமர்ந்து இருந்தவர்கள் எல்லோரையும் வெளியேறும் படி அறிவித்தார்கள் . பின்பு வாசலில் நின்று டிக்கட் பரிசோதனை செய்த பின்பு உள்ளே திரும்பவும் அனுமதித்தார்கள்....

இதனால் சிலர் மனவருத்தப்பட்டார்கள்.
டிக்கட் வாங்காமல் களவாக வந்திருப்பதற்கு இது ஒரு பிரபலமான நிகழ்ச்சி அல்ல.தென்னிந்திய கலைஞர்கள் பங்கு பற்றியிருந்தால் சில நேரம் நீங்கள் செய்த விடயம் சரியாக இருந்திருக்க கூடும்.

மண்டபம் நிறைந்த சபையோர் அங்கு இருக்க வில்லை ...அப்படியிருந்தும் ஏன் இந்த செயல்?இன்னும் நாம் ஊரில் இருந்த மனப்பான்மையுடந்தான் இங்கும் வாழ்கிறோம் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு ...பாஸ்கரனின் ஸ்டைலில் சொல்வதென்றால்.....திருந்தாத ஜென்மங்கள்....
ஆகவே தான் மக்கள் தாமதமாக நிகழ்வுக்கு வருகிரார்களோ தெரியவில்லை மானஸ்தர்களாக இருக்ககூடும்

இளவயது நாடக நடிகர்கள் நன்றாகவும் மிகவும் சிறப்பாகவும் நடித்திருந்தார்கள் ,அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பாராட்ட பட வேண்டிய ஒன்று. நாம் எமது இளையவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்களை கொடுத்து மேலும் ஊக்கிவிக்க வேண்டும்...

மதுரா,மற்றும் பாஸ்கரன் போன்றோரையும் இந்த இளையவர்கள் பண்ணி விடுவார்கள் போல தெரிகின்றது...(சும்மா )

kirrukan said...

மதுரா,மற்றும் பாஸ்கரன் போன்றோரையும் இந்த இளையவர்கள் over take பண்ணி விடுவார்கள் போல தெரிகின்றது...(சும்மா )