சுனாமி கரைத்து - போர் தின்று - மீண்ட நண்பன் எல்ரனை - கடல் கொன்றது!

.
 தீபச்செல்வன்
சுனாமி கரைத்து - போர் தின்று - மீண்ட நண்பன் எல்ரனை - கடல் கொன்றது!
 நண்பன் எல்ரனை கடல் கொன்று விட்டது என்கிற செய்தி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. போருக்கு முகம் கொடுத்த வன்னியைச் சேர்ந்தவனாய், முன்னாள் போராளியாய், யாழ் பல்கலைக்கழக மணவனாய் என்று அவன் நடந்த தடத்தில் இணைந்திருந்த எல்லாரையும் இந்தச் செய்தி வருத்தக்கூடியது. எல்ரன் என்றாலே அவனின் பின்னாலுள்ள வறிய மீனவக் குடும்பம்தான் நினைவுக்கு வரும். குடும்பத்தைப் பற்றி வாழ்வைப் பற்றி எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு என்ன ஆனது என்பது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. வடமராட்சிக் கிழக்கில் கட்டைக்காட்டில் உள்ள கடலில் மூழ்கி இறந்து போயிருக்கிறான். 
2003 ஆம் உயர்தரம் படிக்கும் காலத்தில் அறிவமுது கல்வி நிலையத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பொழுதே எல்ரனை முதன் முதலில் பார்த்திருக்கிறேன். எல்ரனும் நானும் 2004 உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்றிருக்கிறோம். அப்பொழுது அவன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தன். அன்றைய காலத்தில் நடந்த வௌ;வேறு தனியார் கல்வி நிலையங்களில் எல்ரனுடன் படித்து பழகியிருக்கிறேன். படிக்க வேண்டும் படித்தாலே வாழ்க்கையிலே எதாவது செய்யலாம் என்று அவன் அந்த நாட்களில் சொல்லுவான். அவன் பேசும் பொழுது பேச்சிலும் முகத்திலும் மெல்லிதாக நடுக்கம் காணப்படும். படிப்பதற்கான துடிப்பு எப்பொழுது அவனில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். வகுப்பில் இருந்து படிக்கும் பொழுது அவனது கையெழுத்தைப் பார்த்த நினைவுகள் எனக்குள் இன்னும் நிற்கின்றன.

2004ஆம் ஆண்டின் சுனாமிப் பேரலை அடித்த பொழுது இழப்பை சந்தித்த மாணவர்களில் எல்ரனும் ஒருவன். தனியார் கல்வி நிலையம் செல்வதற்காக அவன் கிளிநொச்சியில் நின்ற பொழுதே சுனாமிப்பேரலை அவனது ஊரில் அடித்தது. அந்த சுனாமிப்பேரலையின் பொழுது அவனது ஒரு சகோதரி இறந்து போயிருந்தாள். அவனின் வீடு முதலிய சொத்துக்களும் அழிந்து போயிருந்தன. சுனாமிப் பேரலை ஏற்படுத்திய தாக்கமும் வலியும் அவனது முகத்தில் நிழல் போலப் படிந்திருந்தது. 
உயர்தரம் முதல் பரீட்சையில் பல்கலைக்கழத்திற்கு செல்லுவதற்கான போதிய புள்ளிகள் எல்ரனுக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவனுக்கு நல்ல பெறுபேறு கிடைத்ததது. தொடர்ந்தும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் எல்ரன் படிக்கத் தொடங்கினான். கிளிநொச்சி நகரத்தில் புத்தகங்களுடன் திரிந்து கொண்டு படித்தான். கிளிநொச்சி நகரத்தில் அவனை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். சைக்கிளில் கூடையிலும் கரியலிலும் புத்தகங்களை வைத்துக் கொண்டு போய்க்கொண்டிருப்பான். சைக்கிளை நிறுத்திக் கொண்டு வந்து பேசுவான். நானும் அவனும் தமிழ் பாடம் எடுத்திருந்தோம். தமிழ்ப்பாடம் பற்றி காண்கிற நேரத்தில் எல்லாம் பேசுவான். ஒருநாள் கிளிநொச்சி நகரத்தில் வைத்து 'மச்சான் நான் கம்பசுக்கு எடுபட்டிருக்கிறேன்' என்று அவன் சொல்லிய பொழுது அவனது நடுக்கத்தில் சிரிப்பு கலந்திருந்தது. 
அந்த வெற்றிக்காக படித்திருந்திருந்த எல்ரன் அதில் வெற்றி கண்ட மகிழச்சி அவனது முகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அவன் பெரும் மகிழ்ச்சியில் இருந்தான். அவனின் எல்லா துயரங்களுக்கும் முடிவு கிடைத்து விட்டது என்று அவன் நம்பிக்கை அடைந்திருந்தான்.
யாழ் பல்கலைக்ழகத்தில் மாணவர் ஒன்றியச் செயலாளராக இருந்த 2009ஆம் ஆண்டில் என்னை சந்திப்பாதற்காக ஒரு அருட்தந்தை வந்திருந்தார். அவரது கையில் ஒரு கடிதம் இருந்தது. அவர் தெல்லிப்பளையில் உள்ள முன்னாள் போராளிகளின் தடுப்புமுகாமிலிருந்து அந்தக் கடிதத்தை கொண்டு வந்திருந்தார். அந்தக் கடிதத்தை எல்ரனே எழுதியிருந்தான். எல்;ரன் எங்கிருக்கிறான்? எப்படியிருக்கிறான்? இருக்கிறானா? என்ற நிலையில் அவன் ஒரு முனனாள் போராளியாக தடுப்புமுகாமில் இருப்பது தெரிந்தது. தன்னை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அவன் எழுதியிருந்தான். 
அந்த தடுப்புமுகாமில் பல பல்கலைக்கழக மாணவ - முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். தெல்லிப்பளை தடுப்புமுகாமிலிருந்து அந்த மாணவர்களை மீட்பதற்கு அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் நடவடிக்கை எடுத்த பொழுது எல்ரனும் பல்கலைக்கழகம் திரும்பியிருந்தான். அது ஒரு கொடுமையான காலம். எப்படி மீளக் கலவியைத் தொடங்குவது? எப்படி வாழ்வை ஆரம்பித்தது என்று மாணவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். முகாமிலிருந்து மாணவர்கள் வெளியில்வரத் துடித்துக் கொண்டிருந்த காலம். எல்டனின் குடும்பத்தினர் தடுப்புமுகாமிலிருந்த பொழுது அவன் வெளியில் வந்திருந்தான். படிக்க வேண்டும் மிகவும் ஆர்வமாகவும் துடிப்பாகவும் இருந்தான். படிப்பதற்று எப்படியான உதவிகள் கிடைக்கின்றன அவற்றை எப்படி பெறுவது என்று கேட்பான்.  
முன்னாள் போராளிகளாக இருந்து பல்கலைக்கழகம் வந்த மாணவர்கள் இயல்பான கல்வி கற்கும் நிலைக்குச் செல்லுவது என்பது மிகவும் சிக்கலாக இருந்தது. பொருளாதாரப் பிரச்சினை அவர்களை பெரும் இடருக்கு முகம் கொடுக்கப் பண்ணியது. குடும்பத்தினர் தடுப்பு முகாம்களில் இருந்தது இன்னொரு பிரிவையும் மன நெருக்கடியையும் கொடுத்தது. தடுப்புமுகாம்களில் இருந்து காலத்தை வீணடித்ததும் மாணவர்களிடத்தில் மனச் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் போராளி, அகதி என்ற அடையாளங்கள் அவர்களை இவ்வாறான பல சிக்கலுக்குள் தள்ளியிருந்தன. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாதல், தற்கொலையில் ஈடுபடுதல் என்பன மிக சாதரணமாகியது. 
பல்கலைக்கழகத்தில் வன்னி மாணவர்களுக்கான மூன்று நேர உணவு அப்பொழுது வழங்கப்பட்டதுடன் சில தொண்டு நிறுவனங்கள் நிதி உதவியினை வழங்கின. பல்கலைக்கழமும் மாணவர்களுககு நிதி உதவியை செய்து வந்தது. போரால் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களின் நலனில் அப்போதைய துணைவேந்தர் சண்முகலிங்கன் கடுமையாக அக்கறை காட்டியிருந்தார். இவைகள் வைத்து கல்வியைத் தொடரும் போராட்டம் மிகுந்த வாழ்க்கைக்குள் மாணவர்கள் பயணித்தார்கள். 
யாழ் பல்கலைக்கழக நலச்சேவையில் பதிவாளராக இருந்த ஜெயக்குமார் ஒருநாள் என்னை அழைத்து எல்ரன் ஏன் சோகமாக இருக்கிறார் என்று கேட்டார். எல்ரன் தொடர்ச்சியாக எதிர்கொண்ட பல துயரங்களால் சோகம் படிந்தவானக இருந்தான். பொருளாதார ரீதியான பிரச்சினையும் குடும்பப் பிரிவும் அவனை சோகத்தில் தள்ளின. எல்ரனின் நிலவரத்தில் பல்கலைக்கழகம் முழுமையான அக்கறையெடுத்தது. 
சோர்வான நிலையில் இருந்த பல மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு உளவியல் ரீதியாக தன்னம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கிறார்கள். யாராலும் தளிர்க்கச் செய்ய முடியாத சில மாணவர்களை அன்றைய காலத்தில் பல்கலைக்கழகம் இழந்தது. யுத்தம் பாதித்த அந்த மாணவர்கள் அதன் வலியிருந்தும் தாக்கத்திலிருந்தும் மீளாமல் துடித்தார்கள். 
இந்தக் கட்டங்களை தாண்டி வெற்றிகரமாய் பயணித்து வந்தவனே எல்ரன். எல்ரனின் முகத்தில் ஒரு வருடம் கடந்த பொழுது பிரகாசம் பிறந்திருந்தது. எல்டன் ஒரு முன்னாள் போராளி. அவனிடம் அவனின் அனுபவங்களைத் குறித்து ஒரு பொழுதும் பேசியதில்லை. அவற்றை நினைவுபடுத்துவதும் இல்லை. போராளியாக இருந்த அவனை ஒரு மாணவனாக்குவதும் கல்வியிலே ஈடுபாடு கொள்ளச் செய்வதுமே அன்று அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அவன் பெரும் யுத்த ஆற்றைக் கடந்து வந்தவன். முட்களையும் சிறைகளையும் கடந்து வந்தவன். மிகவும் வறிய கடல் தொழில் செய்யும் அவனது குடும்பம் சுனாமியாலும் யுத்ததாலும் பாதிக்கப்பட்டிருந்தது. 
என்னை காணும் பொழுதெல்லாம் செய்திகளைக் குறித்தும் அரசியலைக் குறித்தும் பேசுவான். என்ன நடக்கிறது? எதற்காக நடக்கிறது என்ற கேள்வி அவனுக்குள் இருந்தது. எல்ரன் நல்ல ஆங்கில அறிவுள்ள மாணவன். பொதுக்கலை படித்த பொழுதும் முதல் வகுப்பில் ஆங்கிலப்பாடத்தில் சித்தியடைந்திருந்தான். யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளர் நேர்முகத் தேர்வுக்காக செல்ல இருந்தான். ஊரில் உள்ள சின்னப் பின்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பித்துள்ளான். ஊரில் பள்ளிக்கூடம் செல்லாமல் உள்ள குழந்தைகளை பள்ளிக்குச் செல்லுமாறு சொல்லுவான்.
இறுதியாக அவனைப் பார்க்கும் பொழுது தலை நிறைய முடி வளர்த்திருந்தான். அவனுக்கு அப்படி முடி வளர்ப்பது அழகாக இருந்தது. உயர்தரம் படித்த காலத்திலும் இடையிடை இப்படி முடி வளர்த்திருப்பான். பின்னர் வெட்டிக் கொள்ளுவான். 'தலைமுடியை வெட்டப்போறனடா' என்று சொல்லிக் கொண்டு சென்றான். 
அதிகமதிகமாக இழக்கும் ஒரு சமூகத்தில் உள்ள பல்கலைக்கழகம் இத்தனை இழப்புக்குகளுக்கு முகம் கொடுக்கிறது என்கிற பொழுது சக மாணவர்களையும் இந்த சமூகத்தையும் வலி கொள்ள வைக்கின்ற பெரும்துயரமாக வலிக்கின்றது. 
பெரும் அதிர்ச்சியைத் தரும் அவனது மரணம் இப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. தனது ஊரான வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு கடலில் தனது சகோதரியின் குழந்தைளை குளிப்பாட்டி கரையில் நிக்க விட்டுச்சென்று கடலில் மூழ்கியிருக்கிறான். அப்பொழுது அவனைக் காணவில்லை என்று அழுதபடி குழந்தை சொன்னதைக் கேட்டு கடலைச் சென்று பார்த்த பொழுது அவன் சடலமாய் கடலில் மிதந்து கொண்டிருந்தான். கடலோடு வாழ்ந்த அவனை கடல் எப்படி மூழ்கடித்துக் கொன்றது என்பதே எல்லோரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அவனைக் கடல் கொன்று விட்டது என்கிற பொழுது கடலின்மீது பெரும் கோபம் வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி கல்வியில் முன்னேறி வந்தவனைத்தான் கடல் கொன்றுவிட்டது. கடலில் தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த அவனையா கடல் கொன்றது? சுனாமிப்பேரலையால் சகோதரியைப் பலியெடுத்த கடலா அவனைக் கொன்றது? கடலுடன் வாழ்ந்து எப்பொழுதும் அதில் நீந்தியும் கடலின் மீது படகிலும் செல்லும் அவனையா கடல் கொன்றது? யுத்தத்தின் முடிவில் கடலில் நீந்திச் சென்ற அவனையா கடல் கொன்றது? 
இரக்கமற்ற கடல் எங்கள் நண்பனைக் கொன்று விட்டது. அதன் மூலம் ஒரு வறிய மீனவக் குடும்பத்தின் நம்பிக்கை வெள்ளிச்சத்தை அணைத்து விட்டது. கட்டைக்காடு என்கிற கிராமத்தின்மீது அக்கறை கொண்ட, அந்தக் கிராமத்தின் குழந்தைகளின் கல்விமீது அக்கறை கொண்ட துடிதுடிப்பான இளைஞனைக் கொன்றுவிட்டது. போரால் பாதிக்கப்பட்ட இனத்தில் தளைத்து வந்த மாணவனைக் கொன்றுவிட்டது. 
குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Nantri: குளோபல் தமிழ்ச் செய்தி

No comments: