இலங்கைச் செய்திகள்

.
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் நீடிக்கும் வாதப்பிரதிவாதங்கள்
அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன?
வவுனியாவில் கடும் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் நீடிக்கும் வாதப்பிரதிவாதங்கள்
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் தணிவதாக இல்லை. நாளையும் நாளை மறுதினமும் அத்தீர்மானம் தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவிருக்கிறது.
இந்தத் தீர்மானம் எந்தளவுக்கு அரசாங்கத்திற்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டு வரும் என்பது குறித்து மக்கள் மத்தியில் பூச்சாண்டி காட்டும் பிரசாரங்களை அரசாங்கம் முன்னெடுத்துக்கொண்டுவருகின்றது. உண்மையிலேயே இது தொடர்பில் இன்னமும் கூட அரசாங்கம் திட்டவட்டமான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தான்தோன்றித்தனமாக பேசுவதற்கு அனுமதித்துக்கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் நடைபெறப்போகும் விவாதம் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஒவ்வொரு கட்சியும் அதனதன் வியாக்கியானங்களை முன்வைப்பதற்கு வாய்ப்பைக் கொடுக்க முடியும். ஆனால், மக்களுக்கு உண்மையான நிலைவரத்தை தெளிவுபடுத்துவதற்கு அந்த விவாதம் உதவுமா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை
.

ஜெனீவாத் தீர்மானம் இலங்கை அரசாங்கத்திடம் கேட்பது என்ன? இது தொடர்பில் சாதாரண மக்களுக்கு எந்தளவுக்கு விளங்கக்கூடியதாக அரசாங்கத் தரப்பினரதும் பிரதான எதிரணியினரதும் வியாக்கியானங்கள் அமைந்திருக்கின்றன? ஜெனீவாவில் இலங்கை சார்பில் வாதாடுவதற்கு சென்ற வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூட தனது அறிவாற்றலுக்கும் அனுபவத்திற்கும் கிஞ்சித்தும் பொருத்தமில்லாத முறையில் பேசிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர் தெரிவித்த கருத்துகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகள் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரான அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன கடந்த வாரம் கூறியிருந்தார். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துவிட்ட ஆணைக்குழு தொடர்பில் வெளியுறவு அமைச்சர் சொல்கின்ற கருத்தை அவரது தனிப்பட்ட கருத்தென்று இன்னொரு அமைச்சர் கூறுவதற்கு கிஞ்சித்தும் தயங்காத துரதிர்ஷ்டவசமான நிலைவரத்தை நாம் காண்கிறோம். மேலும் நல்லிணக்க ஆணைக்குழு அதன் ஆணையை மீறிச் சென்றுவிட்டது என்று பல அமைச்சர்கள் செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி அறிவித்திருந்தார்கள். இந்த ஆணைக்குழு அதன் அறிக்கையை கடந்த நவம்பர் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளித்தது. அதை அரசாங்கம் பாராளுமன்றத்தில் டிசம்பர் மாத நடுப்பகுதியில் வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் ஒரு இடைக்கட்டத்தில் சமர்ப்பித்தது. தானே நேரடியாக பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கப்போவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்திருந்த போதிலும் கூட அவர் அதைச் செய்ய முன்வரவில்லை. சபை முதல்வரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவே அறிக்கையை சபையில் தாக்கல் செய்திருந்தார்.
அறிக்கையை சமர்ப்பித்த வேளையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் அவதானிப்புக்கள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் சபையில் தான் கூறியதை அமைச்சர் சில்வா நினைவில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆணைக்குழு அதன் ஆணையை மீறிச் செயற்பட்டுவிட்டதென்று அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் ஒரு சொல்லைக் கூட உச்சரிக்கவில்லை. இப்பொழுது மூன்றரை மாதங்கள் கழித்து அவ்வாறு ஆணைக்குழு எல்லைமீறி செயற்பட்டுவிட்டது என்று எந்த முகத்துடன் அவர் நாட்டு மக்களுக்கு கூற முன்வந்தார். அதுவும் ஆணைக்குழுவின் விதப்புரைகளில் ஆரோக்கியமானவற்றை நடைமுறைப்படுத்தி இலங்கைச் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைச் செய்யுமாறும் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்ட விதி மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறும் ஜெனீவாத் தீர்மானத்தின் மூலம் கேட்கப்பட்டதற்குப் பிறகு ஆணைமீறல் கதையைக் கூறுவதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கிறது.
இவ்வாறாக ஒவ்வொரு அமைச்சரும் தினமொரு கதை பேசிக்கொண்டு மக்களை தொடர்ந்தும் பிழையாக வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஜெனீவாத் தீர்மானத்திற்கு அடிபணியப் போவதில்லை என்று அமைச்சர்கள் பிரகடனம் செய்கின்ற போதிலும் கூட உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அத்தீர்மானத்தை நிராகரிப்பதாக வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் எதற்காக அமைச்சர்களை அவர்களின் மனம் போன போக்கில் பேசுவதற்கு அரசாங்கம் அனுமதித்துக்கொண்டிருக்கிறது. நாடு எதிர்நோக்குகின்ற முக்கியமான நெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசாங்கம் இத்தகைய பொறுப்பற்ற போக்கைக் கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். பாராளுமன்றத்தில் இவ்வாரம் நடைபெறவிருக்கும் விவாதத்தில் இறுதியில் அரசாங்கத் தரப்பில் அளிக்கப்படக்கூடிய பதிலாவது அதன் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக இருக்க முடியுமா?
நன்றி தினக்குரல்

அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன?
கடந்த மாதம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை அறிந்துகொள்வது என்பது உண்மையிலேயே ஒரு கஷ்டமான காரியமாக இருக்கிறது.
மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்கேற்ற இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமைதாங்கிய பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அங்கு ஆற்றிய உரையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமென்று சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்ததுடன் விதப்புரைகளை, நடைமுறைப்படுத்துவதை நோக்கிய பூர்வாங்கச் செயன்முறைகளை இலங்கை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது என்றும் கூறியிருந்தார்.
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்காக ஜெனீவா சென்று மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கிய இலங்கைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அங்கிருந்து திரும்பிய கையோடு"நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தம்மபதத்தைப் போன்றோ அல்லது பைபிளைப்போன்றோ புனிதமானது அல்ல. அந்த அறிக்கையின் விதப்புரைகள் சகலதையும் நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை. அவசியமானவை என்று அரசாங்கம் கருதுகின்ற விதப்புரைகள் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படும்' என்று பிரகடனஞ் செய்தார். ஜெனீவாவில் இருந்து திரும்பியதும் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எமக்குக் கவலையில்லை. ஏனென்றால் அத்தீர்மானம் இலங்கையைச் சட்ட ரீதியாகக் கட்டுப்படுத்தவில்லை’ என்று குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவையின் பதில் பேச்சாளரான அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் இன்னமுமொரு முடிவை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இவையெல்லாம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இடம்பெற்ற இரு நாள் விவாதத்திற்கு முன்னதாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களாகும். இவற்றில் எதையும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடாக எடுக்கமுடியவில்லை. இத்தகைய நிலையில் பாராளுமன்றத்தில் விவாதத்தின் இறுதியில் அரசாங்கத்தின் சார்பில் பதிலளித்து உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்த கருத்துக்களை நோக்குவது அவசியமானதாகும்.
"நல்லிணக்க ஆணைக்குழு மக்களின் ஆணையைப் பெற்றது அல்ல. அது பாராட்டுக்குரிய ஒரு பணியைச் செய்திருக்கிறது. ஆனால், அரசாங்கத்துக்கு விதப்புரைகளைச் செய்வதற்கே ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. உலகின் எந்தவொரு நாட்டிலுமே ஆணைக்குழுவொன்றில் சகல விதப்புரைகளுமே முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை. ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் வரவேற்று ஏற்றுக்கொண்டிருக்கிறோம். விதப்புரைகள் சகலதையும் முழுமையாக நாம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அதைக் கருதலாகாது. உலகில் எங்குமே முழுமையாக விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக வரலாறு இல்லை. நடைமுறையிலும் அது சாத்தியமானதல்ல' என்று சபையில் பேராசிரியர் அறிவித்தார். இதையாவது அரசாங்கத்தின் இறுதியானதும் உறுதியானதுமான நிலைப்பாடு என்று மக்கள் கருதமுடியுமா? அமைச்சர் பெருமக்கள் முன்னுக்குப் பின் முரணாகவும் தான்தோன்றித்தனமாகவும் ஜெனீவா விவகாரம் தொடர்பில் கருத்துகளைத் தெரிவித்து வருவதன் காரணமாக இக்கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது!
நன்றி தினக்குரல்

வவுனியாவில் கடும் காற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் _
சி.எல்.சிசில் / வீரகேசரி இணையம்
வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தை அண்மித்து நேற்று வீசிய கடும் காற்று காரணமாக 1,172 வீடுகள் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் 15 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
___



 

No comments: